அன்பு வழியில் செல்வோம்!

 அன்பு வழியில் செல்வோம்!         ஆனந்த வாழ்வு பெறுவோம்!

நாம் எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படவும், குறை படவும் கோபப்படவும், கடுஞ்சொல் பேசவும் பழக்கப்பட்ட அளவிற்கு அறிவுப்பூர்வமாக பொறுப்புணர்வோடு கோபப்படாமல் நிதானமாக திறந்த மனதோடு சிந்திக்கவும், ஆத்திரப்படாமல் ஆக்கபூர்வமாக பேசவும் பழக்கப் படவில்லை என்றே கூறலாம். ஆதலால் நாம் எதற்கெடுத்தாலும் சட்டு சட்டென்று உணர்ச்சிவசப்பட்டு திரும்பப்பெற முடியாத வார்த்தைகளை கொட்டி உறவுகளை சீர்குலைத்து துன்ப துயரங்களுக்கும் ஆளாகிறோம்.

அன்பில் சிற்றன்பு, பேரன்பு என இரு வகை உண்டு. சிற்றன்பு என்பது குறுகியது - சுயநலமானது. பேரன்பு என்பது பரந்துபட்டது - பொதுநலம் ஆனது. நமது உள்ளங்களில் சிற்றன்பைத்தான் நாம் நிறைய வைத்துள்ளோம். பேரன்பை மிகச்சிறியதாக வைத்துள்ளோம். ஆதலால் நாம் சமுதாயத்தில் காணப்படும் அநீதிகளை காணும்போது அதற்கு சின்ன வருத்தப் படுவதோடு வாய் சப்பலோடு நமது பொது நல விருப்பத்தை நிறைவு செய்து கொள்கின்றோம். அதற்குமேல் நாம் செய்ய என்ன உள்ளது என்று எண்ணிக் கொள்கிறோம். நமக்கு பேரன்பு இல்லை என்பதால்தான்அதை சரி செய்வதற்கான முயற்சி மேற் கொள்ளாமல் இருந்து விடுகிறோம்.

சிலர் வீடுகளில் எப்போது பார்த்தாலும் சண்டை சச்சரவுகளாகவே இருக்கும். அங்கு ஒவ்வொருவருக்கும் சுயநலமே மிகுந்திருக்கும். அன்பும் பரஸ்பர நம்பிக்கையும் குன்றி இருக்கும். எதிர்க்கட்சி என்றால் எப்போதும் எதையும் எதிர்ப்பது என்று எண்ணிக் கொள்வது போல் ஒருவர் மீது ஒருவர் எப்போதும் குற்றப்பத்திரிக்கை வாசிக்கவே சமயம் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அங்கு அன்போ அமைதியோ, வெற்றியோ, ஆனந்தமோ இருக்காது. ஒருவர் ஒரு தவறு செய்துவிட்டால் அதை திரும்பத் திரும்ப குத்திக்காட்டுவதோ, சுட்டிக் காட்டுவதோ கூடாது. தவறு செய்தவர் அதை தவறு என்று உணர்ந்தாலும் கூட திரும்பத்திரும்ப குத்திக்காட்டும் போது, 'நான் அப்படித்தான் நீ என்ன வேணாலும் செய்துகொள்!' என்று எதிர்த்துக்கொள்ளும் மனநிலைக்கு சென்றுவிடுவார். இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்கிறார் வள்ளுவர். அவ்வாறு செய்வதுதான் தவறை திருத்துவதற்கான சரியான வழியாகும்.  ஆணும் பெண்ணும் சமம் அனுசரித்து வாழ்ந்தால் சுகம் என்பதுபோல அன்புடன் வாழ்ந்தால்தான் ஆனந்தம் இருக்கும். அன்பை வார்த்தைகளால் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அன்பை செயல்களால் உணர்த்த வேண்டும். ஆயிரம் வார்த்தைகள்பேசுவதை ஒரு செயல் உணர்த்திவிடும். வண்டி வண்டியாக அன்பு உள்ளது போல் பேசிவிட்டு அன்பில்லாத செயல்களை செய்தால் பேசிய வார்த்தைகள் எந்தப் பயனையும் அளிக்காது என்பதோடு அது அவநம்பிக்கையை தான் ஏற்படுத்தும்!

அன்பிற்கான வரையறை:

தீங்கு நினையா மனமே அன்பு!

தீயது சொல்லா சொல்லே அன்பு!

தீமை செய்யா செயலே அன்பு!

உதவ நினைக்கும் மனமே அன்பு!

ஆறுதல் தரும் வார்த்தைகள் அன்பு!

சேவை புரியும் செயலே அன்பு!

அன்பின் வடிவே ஆண்டவன்!

அதற்கே தினமும் வேண்டவும்!

இந்த வகையில் அன்பைப் புரிந்துகொண்டு வீட்டிற்கும் நாட்டிற்கும் அன்பை காட்ட முற்பட்டால், வீடும் நாடும் நலமாக இருக்கும். இந்த எண்ணங்கள் புதுப் புனல் போல் தோன்றியபோதிலும், இவையாவும் புதிய விஷயங்கள் ஒன்றும் அல்ல. ஏற்கனவே எண்ணற்ற அறிஞர்கள் சொல்லி விட்டுச் சென்றுள்ளவைத்தான்! இதைப் போல் யார் யார் சொல்லியுள்ளார்கள் என்று  தேடுகின்ற போது எவ்வளவோ பேர் முன்னால் வருகின்றார்கள்.  காரல்மார்க்ஸ் முதற்கொண்டு  காந்தி வரை, வள்ளுவர் முதற்கொண்டு வள்ளலார் வரை, புத்தர் முதல் கொண்டு பெரியார் வரை, அசோகன் முதல் கொண்டு அம்பேத்கர் வரை வருகிறார்கள். சொல்லப்போனால் சமூக நலனை பொதுமக்கள் நலனை நாடிய எல்லோரும் அன்பைத்தான் பேசியுள்ளார்கள்! சமயவாதிகள் பகுத்தறிவாதிகள் என்று யாரை கவனித்தாலும் அவர்கள் அவரவர் மொழியில், அவர்களுக்கு தெரிந்த விதத்தில் அன்பைத்தான் போதித்துள்ளார்கள் என்பது தெரியவரும்.

அன்பின் ஆட்சி வீட்டுக்கு சரி நாட்டுக்கு சரியாகுமா என்று பலரும் எண்ணுகிறார்கள். நாட்டில் நடக்கும் எண்ணற்ற அநீதிகளை காணுகின்ற போது அதனை அன்பு வழியினால் திருத்த முடியுமா என்று கேள்வி எழுப்புகின்றனர். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்ட முடியுமா என்று வினவுகின்றார்கள்! கத்தியை காட்டுபவனுக்கு கத்தியால் தான் பதில் சொல்ல வேண்டும், துப்பாக்கியை காட்டுபவனுக்கு துப்பாக்கியால் தான் பதில் சொல்ல வேண்டும் என்ற கருத்துதான் நம்மிடையே ஓங்கி உள்ளது. இக்கருத்து உண்மை என்பது போல் தோன்றும். ஆனால் வன்முறை எந்தப் பிரச்சினைக்கும் சரியான தீர்வைத் தருவதில்லை. வன்முறை என்பது பலத்தின் வெளிப்பாடு அல்ல. அது பலவீனத்தின் வெளிப்பாடு தான்! அன்புவழி போராட்டம் வெல்லும் என்பதற்கு மகாத்மா காந்தி தலைமையிலான இந்திய சுதந்திரப் போராட்டமே சரியான எடுத்துக்காட்டாகும்.

இன்று எங்கு பார்த்தாலும் லஞ்சம் ஊழல் எந்தக் கட்சி ஆட்சி என்றாலும் அதுவே காட்சியாக உள்ளது என்று மக்கள் வெதும்புகிறார்கள். இவையெல்லாம் அன்பு இல்லாததன் விளைவுதான்! பொதுமக்கள் மீது பொது நலத்தின் மீது பரந்துபட்ட அன்பு இருக்குமானால் மனிதநேயம் இருக்குமானால் அதில் உறுதி இருக்குமானால் இத்தகைய தவறுகள் நடக்காது. காமராஜரும் கம்யூனிச தோழர்களும் ஊழலற்ற ஆட்சி செய்து மக்களுக்கு நன்மை செய்தார்கள் என்றால் அது அவர்களின் அன்பின் உறுதிப்பாட்டை தான் காட்டுகின்றன. அவர்கள் சமூகத்தின் மீதும் மக்களின் மீதும் வைத்திருந்த நேர்மையான அன்பு சுயநலத்தோடு செயல்பட விடாமல் மக்கள் நலனில் அக்கறையோடு செயல்பட வைத்துள்ளன. அத்தகைய நேர்மையான உறுதிமிக்க சமூக அன்பைத்தான் நாம் நமது குணாம்சம் ஆக மாற்றிக்கொள்ள கடும் தவம் செய்ய முற்பட்டு உள்ளோம். நான் நீண்ட காலமாக ஊழல் மயமான சமூகத்தில் வாழ்ந்து பழக்கப்பட்டு விட்டோம். இதிலிருந்து மீண்டு புதிய கலாச்சாரத்தை உருவாக்குவது கடினமான பணிதான். அதற்கு நமக்கு கடினமான புதிய பயிற்சிகள் அவசியமாகின்றன. நாம் நமது உள்ளத்தை நன்கு திருத்தி உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது.

அன்பு வழி என்றால் வழியும் அன்புதான். வாழ்வும் அன்புதான்!  அன்பில்லாத கொள்கையையோ திட்டத்தையோ வைத்துக்கொள்ள முடியாது. கொள்கையையும் திட்டத்தையும் சரியானதா என்பதை அளப்பதற்கான அளவுகோல் சமூகத்தின் பால் கொண்ட மக்களின் பால் கொண்ட உறுதியான நேர்மையான பரந்துபட்ட அன்புதான்! மக்களுக்கும் சமூகத்திற்கும் ஒரு செயல் துன்பம் தருமானால் அச்செயல் தவறானது என்பதையே சுட்டிக் காட்டக் கூடியதாகும். அன்பு வழியில் செல்வதற்கு முன்மாதிரிகள் இல்லையே என்று சிலர் நினைக்கலாம். ஆனால் அசோகர் முதல் கொண்டு  மகாத்மா காந்தி வரை அன்புவழி ஆட்சிக்கு முன்னுதாரணங்கள் பலப்பல உள்ளன. மதங்களிலும் தத்துவங்களிலும் அது ஏராளமாய் இருக்கின்றன. ஆதலால் அன்பு வழி இன்ப ஒளி தரும் என்பது திண்ணம். அதற்கு வேண்டும் நேர்நிலை எண்ணம்! நம்பிக்கையுடன் அன்பு வழி பயணத்தை தொடங்க வேண்டும்.

இருட்டு இருட்டு என்று கூறிக் கொண்டிருப்பதை விட ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது சிறப்பு என்று கூறுவார்கள் சான்றோர். நம்மைச் சுற்றிலும் சமூக அநீதிகள் பலவும் நடக்கின்றன. தனி மனிதர்களாக நாம் அதனை தடுப்பதற்கோ,  மாற்றுவதற்கோ சக்தியற்று இருக்கிறோம். ஆதலால், நாம் மௌன சாட்சிகளாக வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளோம்.

தேடிச் சோறு நிதந்தின்று-பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்

வாடித் துன்பமிக உழன்று - பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து - நரை

கூடிக் கிழப்பருவம் எய்தி-கொடுங்

கூற்றுக் கிரையெனப்பின் மாயும்-பல

வேடிக்கை மனிதரைப் போலே -நான்

வீழ்வே னென்று நினைத்தாயோ? என்று பாடுகிறார் மகாகவி பாரதி.  ஆனால், நாம் அப்படித்தான் விழுந்து கொண்டு இருக்கிறோம்.

நமது சமுதாயம் நல்லவர்களும் கெட்டவர்களும் நிறைந்து காணப்படுகின்றது. நல்லவர்களும் முழு நல்லவர்கள் இல்லை. கெட்டவர்களும் முழு கெட்டவர்கள் இல்லை. மனிதர்களே கடவுள் பாதி மிருகம் பாதி என கலந்து செய்த கலவையாக தான் உள்ளார்கள். எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே! அவர்கள் நல்லவர்கள் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே! என்றொரு பாடல் உண்டு. ஆனால் ஒருவர் தீயவர் ஆவதற்கு அன்னை மட்டுமல்ல. அவரைச் சூழ்ந்துள்ள இந்த சமுதாயமும் பொறுப்புதான்!

'வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்; என்கிறார் கவிச்சக்கரவர்த்தி கம்பர். இல்லாமை இல்லாத எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கின்ற ஒரு நல்லதொரு சமுதாயம் அமைந்தால் அங்கு கெட்டவர்கள்  உருவாக மாட்டார்கள்.

எல்லோர் உள்ளும் கொஞ்சமாவது நல்ல அம்சம் இருக்கும்! அன்பு இல்லாதார், அன்பை விரும்பாதார் யாரும் இருக்க மாட்டார்கள். மனிதர்கள் விரும்பும் அன்பு என்பது இறை அம்சம். அன்புதான் இறைவனின் சக்தி. அன்புதான் இவ்வுலகின் வெளிச்சம்! அன்பு தான் பாசம் ஆகிறது; நட்பா ஆகிறது; காதலாகிறது; விசுவாசம் ஆகிறது; சேவையாகிறது; பக்தி ஆகிறது; கருணை ஆகிறது; மனிதநேயம் ஆகிறது; அறம் ஆகிறது. பாசம், நட்பு, காதல், விசுவாசம், பக்தி, கருணை, சேவை, மனிதநேயம், அறம், அனைத்துக்கும் அடிப்படை அன்பு.

இந்த அடிப்படை அம்சம் இல்லாமல் எந்த உயிரும் பிறந்திருக்க முடியாது. ஆதலால் எல்லோர் உள்ளும் இருக்கக்கூடிய நல்ல அம்சமாகிய அன்பை ஒருங்கு திரட்டி ஒரு பெரும் சக்தியாக வளர்த்து அதன்மூலம் எல்லோரும் எல்லாம் பெற்று இன்புறும் நல்லதொரு சமுதாயம் அமைத்திடுவோம். தனிமரம் தோப்பாகாது. தனி மரமாக நின்று குமைந்து குமைந்து உருக்குலைந்து போனது போதும். நாமும் நல்ல சக்திக்கு கைகொடுப்போம். நம்மால் ஒரு பெரும் சக்தி உருவாக நாமும் துணையாய் இருப்போம். அன்பு வழியில்  இணைவோம்! அன்பு வழியில் நாம் செல்லும் புதிய பயணம் நாளைய உலகை அன்பு நிறைந்த இன்ப உலகமாக  உருமாற்றம் செய்யும்! 

அறம் என்றால் தர்மம். கோயில் சென்று தர்ம காரியங்கள் செய்வது மட்டும் தான் அறம் என்று எண்ணி விடக்கூடாது. ஏழையின் சிரிப்பில் தான் இறைவன் இருக்கிறான். ஏழைகளை சிரிக்க வைக்க நாம் அவர்களுக்கு தொண்டு செய்ய வேண்டும். அவர்களின் வாழ்வு மலர்வதற்கு இயன்ற நற்காரியங்களை நாம் செய்ய வேண்டும். மக்களின் வாழ்நிலையை மேம்படுத்துவதற்கு நாம் செய்யும் காரியங்கள் எல்லாம் அறப்பணிகள் தான்! 

'பிரார்த்தனை செய்யுங்கள் கடவுள் அருகே நீங்கள் போகலாம்! பிரார்த்தனை செய்ய முடியவில்லையா? அதற்குப் பதிலாகச் சேவை செய்யுங்கள் கடவுள் உங்கள் அருகே வருவார்…' எனவும், 'இரு கை கூப்பி கடவுளை வணங்குவதை விட ஒரு கை நீட்டி உதவி செய்.' எனவும் கூறுகிறார் அன்னை தெரசா. 'ஏழைகளும் வறியவர்களும் படும் துன்பத்தையும் துயரத்தையும் கண்டு யார் உள்ளம் கசிந்து உருகுகிறதோ, யாருக்கு அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உடனடியாக ஏற்படுகிறதோ அவர்களே உண்மையான தேச பக்தர்கள். தேச சேவை செய்வதற்குத் தகுதியானவர்கள். அவர்களே மகாத்மாக்கள்.' எனவும், 'கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் இருக்கிறார். இதைத் தவிர தனியாக வேறு ஒரு கடவுள் இல்லை. மக்களுக்கு ஒருவன் செய்யும் சேவை அந்த மகேசனுக்கே செய்யும் சேவையாகும்.' என்கிறார் சுவாமி விவேகானந்தர். இவைகள் சேவையின் அருமையை நமக்கு தெளிவாக கூடியவையாகும். ஆதலால் தான் பொது மக்களுக்கு சேவை செய்யவேண்டும்!

பொதுமக்களுக்கு பொதுவாக தேவைப்படக்கூடியவை என்ன? நல்ல சாலை வசதி, நல்ல சுகாதார வசதி, பொது குடிநீர் வசதி, பொது மின்சார வசதி, சீரான உணவுப் பொருள் விநியோகம், நல்ல வேலைவாய்ப்புகள் போன்றனவாகும். இவற்றுக்கு நாம் எவ்வாறு உதவி செய்ய முடியும் என்று நாம் பார்க்க வேண்டும்! மேற்படியானவற்றில் குறைபாடுகள் காணப்படின் அவற்றை நீக்கி சரி செய்வதற்கு நாம் பாடுபட வேண்டும். உள்ளாட்சி உட்பட அரசு எந்திரங்கள் உடன் மோதிக் கொள்வது என்பது நமது நோக்கமல்ல. மேற்படியான வசதி வாய்ப்புகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டிய கடப்பாடு கொண்டுள்ள மேற்படியான அரசு எந்திரங்கள் சரியாக வேலை செய்து மக்கள் தேவைகளை நிறைவு செய்ய நாம் அவர்களுக்கு துணையாக நிற்க வேண்டும். அவர்களோடு நேர்மையான முறையில் நல்ல நட்புறவு கொள்ள வேண்டும். 

கிராமம் ஆயினும் நகரம் ஆயினும் எல்லா வசிப்பிடங்களிலும் கழிவு மேலாண்மையும் நீர் மேலாண்மையும் சிறப்பாக இருக்க வேண்டியது அவசியமானதாகும். அரசை மேற்படி பணிகளை சிறப்பாக செய்வதற்கு நாம் தூண்டுதலாக இருக்க வேண்டும் என்பதோடு அதற்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில் பொதுமக்களும் நடந்துகொள்ள அவர்களுக்கு நாம் பயிற்றுவிக்க வேண்டும். கழிவு மேலாண்மை மற்றும் நீர் மேலாண்மை பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அரசினால் மட்டும் சிறப்பாக செய்து விட இயலாது. பொதுமக்கள் போதுமான பொறுப்புணர்வு மற்றும் விழிப்புணர்வு இல்லாமல் நடந்து கொள்ளும்  நிலையில் அரசு மட்டும் மேற்படி பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்ற இயலாது. அதனால் அரசை  செய்விக்க கோரும் அதே நேரத்தில் பொதுமக்களும் பொறுப்புணர்வுடனும் விழிப்புணர்வுடனும் செயல்படுவதற்கு நாம் கற்பிக்க வேண்டும். 

இயற்கை சமநிலையை பாதுகாப்பதற்கு எவ்வளவு அதிகமாக இயலுமோ அவ்வளவு அதிகமாக மரங்களை நட வேண்டியது இன்றைய காலகட்டத்தின் கட்டாயமாகும். ஆதலால் நாம் நமது வருங்கால பணியில் நகரம் ஆயினும் கிராமம் ஆயினும் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் நல்ல மரக்கன்றுகளை நடுவதற்கு முன் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். அதுமட்டுமல்லாமல் நீர் மேலாண்மையில் முக்கியமானது ஏரி குளங்களை தூர் வருவதாகும். அதனை அரசு எந்திரங்கள் சிறப்பாக செய்வதற்கு நாம் கவனம் செலுத்த வேண்டும் என்பதோடு நமது அன்பர்களும் அதற்கான கர சேவையை செய்வதற்கு முனைய வேண்டும். நீரை சிக்கனமாக பயன் படுத்துவதற்கும் நாம் பொதுமக்களுக்கு கற்பிக்க வேண்டும்.

அந்தந்த கிராமங்களில் நமது அன்பர்கள் இயற்கை விவசாயம் பெருமளவு கடைபிடிக்க செய்வதற்கும், அந்தந்த கிராமங்களில் வாய்ப்புள்ள சிறு தொழில்களை ஏற்படுத்துவதற்கும் அதன்மூலம் உழைப்பை மட்டுமே மூலதனமாக நம்பி இருக்கக்கூடிய தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுவதற்கும் நாம் கவனம் செலுத்த வேண்டும். அதுமட்டுமன்றி சிறு குறு விவசாயிகளின்  விளை பொருட்கள் மற்றும் சிறு தொழில் குடிசை தொழில் செய்யும் தொழில் புரிபவர்களின் உற்பத்திப் பொருட்களும் நல்ல விலை பெறும் பொருட்டு அவைகளை சந்தைப்படுத்துவதற்கும் நாம் உபாயங்களை செய்ய முனைய வேண்டும். 

கிராமம் ஆயினும் நகரம் ஆயினும் ஏழை மக்களை வறுமையில் தள்ளுவதில், குடும்பங்களில் அமைதியின்மையை ஏற்படுத்துவதில் முக்கியமான  காரணமாக இருப்பது  மதுப்பழக்கம் ஆகும். மக்களை மதுப் பழக்கத்திலிருந்து விடுவிப்பதற்கு நாம் பெருவாரியான விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ள வேண்டும். மேலும் மகளிர் மற்றும் குழந்தைகள் கொடுமை படுத்தபடும் நிலை ஏற்படாமல் இருப்பதற்கு மிகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் மாணவர்கள் உடல் வலிவும் மனவளமும் பெறக் கூடிய அளவிற்கு கலை இலக்கிய அறிவு விளையாட்டு திறன் பயிற்சிகள் அளித்து  போட்டிகள் நடத்திட நாம் முனைய வேண்டும். இளைஞர்களின் பலவித சேவைகளில் ஈடுபடுத்தி அவர்களிடம் நேர்மை உணர்வையும் சேவை உணர்வையும் வளர்த்திட வேண்டும். கலை குழுக்களையும் ஆங்காங்கே ஏற்படுத்திட கவனம் செலுத்த வேண்டும். திறமையுள்ள நல்ல கலைஞர்கள் வளர்ச்சி அடைய நாம் உறுதுணையாக இருக்க வேண்டும்!

எல்லாவற்றுக்கும் மேலாக கிராமப்புறங்களில் அவ்வப்போது ஜாதி மத மோதல்கள் ஏற்பட்டு மக்களிடையே பிரிவினை ஏற்படவும், மக்களின் ஒற்றுமை சீர்குலையவும் நேரிடுவது கடந்தகால யதார்த்தமாக உள்ளது. அவ்வாறான நிலை ஏற்படாதவாறு எச்சரிக்கையாகவும் ஏற்புடைய வகையிலும் நாம் செயல்படுவது அவசியமானதாகும். எக்காரணம் கொண்டும் மக்களின்  ஒற்றுமை பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள நாம் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும்.

இப்படிப்பட்ட அறப்பணிகளை மக்களுக்கு நாம் செய்வதற்கு நாம் ஒரு அமைப்பாக ஒருங்கு திரண்டு இருக்க வேண்டியது அவசியமானதாகும். நாம் அடிக்கடி ஊருக்கு பத்து பேரை சேர்க்க வேண்டுமென்று சொல்லி வருகிறோம். அப்படி என்றால் ஊருக்கு பத்து பேரைத் தான் சேர்க்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. குறைந்தபட்சம் 10 பேர் என்பது ஓர் அடையாளம். அதுக்கு மேல் எவ்வளவு பேர் வேண்டுமானாலும் சேர்க்கலாம். அமைப்பு ரீதியாக நாம் ஒருங்கு திரளாவிட்டால் நாம் எத்தகைய நற்பணிகளையும் செய்ய இயலாது. ஆதலால்  குறைந்தபட்சம் ஊருக்கு பத்து பேர் என்ற இலக்குடன் நாம் இயன்ற விரைவில் இயன்ற அளவிற்கு கிராமிய நகர கிளைகளை ஏற்படுத்த வேண்டியது நமது முதன்மையான பணியாகும்! அதற்காக நமது ஒவ்வொரு அன்பர்களும் முழுமூச்சோடு பாடுபடவேண்டும்.

மன்றத்தின் கொள்கை மற்றும் திட்டங்கள்:

அ. கொள்கைகள்:

இது ஒரு சமூக வாழ்வியல் அமைப்பு; சாதி, மதம் மற்றும் அரசியலுக்கு அப்பாற்பட்டது. தமிழ்நாடு அன்பு வழி அறப்பணி மன்றம் காந்திய வழியில் ஓர் புதிய பயணம்; மக்கள் மீது அன்பு கொண்ட தேசத் தலைவர்கள், மகான்கள் மற்றும் சான்றோர் பெரியோர்களின் நல்ல கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டு, அன்பு வழியில் வாழ்வதற்கு போதனையும், பயிற்சியும் வழங்கி, சமுதாயத்தில் வறுமையை போக்க, வேலையின்மையை நீக்க,  கிராம வளர்ச்சியை ஏற்படுத்த, நிலம் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாக்க திட்டமிட்டு நற்பணிகள்  பற்பல புரிய வேண்டும் என்பது இச்சங்கத்தின் நோக்கமாகும். வாழ்வையும் வழியையும் அன்பானதாக அமைத்துக்கொள்ளும் அனைவரின் அக வாழ்வும் புற வாழ்வும் இன்பமயமாகும் என்பது இச்சங்கத்தின் கொள்கையாகும். இயன்றளவு சமுதாய சேவையில் ஈடுபட வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் கடமை என்பதும், நேர்மையான உண்மையான சமூக சேவையால்தான் அன்பும் அமைதியும் ஆனந்தமும் சமுதாயத்தில் நிலை பெறும் என்பதும் இச்சங்கத்தின் கொள்கையாகும்.

ஆ. திட்டங்கள்:

அ. மக்களுக்கு அன்பின் சிறப்பை விளக்குதல்;

ஆ. அன்பாக வாழ்வும் அன்பு வழியில் நடக்கவும் பயிற்சி அளித்தல்; அகவாழ்வும், புறவாழ்வும் அன்பு நிறைந்ததாக இருக்க அக புற உலகின் நல்ல மாறுதலுக்காக பாடுபடுதல்;

இ. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற ஆன்மீக ஒளியை ஏற்றுதல்; சமூக நீதியையும், மதச்சார்பின்மையையும் ஆதரித்தல்;

ஈ. மதுவின் தீமையை விளக்குதல்;

உ. எல்லோருக்கும் நல்ல கல்வி, எல்லோருக்கும் தகுதியான வேலை கிடைக்க சேவை புரிதல்;

ஊ. தாய்மொழி வளர்ச்சிக்கு பாடுபடுதல்;

எ. அனைவருக்கும் நல்ல மருத்துவ வசதி கிடைக்க உதவுதல்;

ஏ. பெண் கொடுமை நீங்கவும், பெண் முன்னேற்றம் ஏற்படவும் பாடுபடுதல்;

ஐ. இயற்கை விவசாயம் மற்றும் சுய சிறு தொழில்களை அடிப்படையாகக்கொண்ட தற்சார்பு கிராம வளர்ச்சிக்கு பாடுபடுதல்;

ஒ. தற்சார்பு கிராம வளர்ச்சிக்கு  வலுவான கிராம சுயாட்சி அவசியம் என்பதை விளக்கி வலியுறுத்துதல்; 

ஓ. இயற்கைச் சூழலையும், வளங்களையும் பாதுகாக்க பாடுபடுதல்;

ஒள. நல்ல நீர் மேலாண்மை மற்றும் கழிவு மேலாண்மை ஏற்பட பாடுபடுதல்;

மன்ற உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள்: 

அ. மது அருந்தக்கூடாது;

ஆ. லஞ்சம் வாங்கக் கூடாது;  கொடுக்கக்கூடாது.

இ. வரதட்சணை வாங்கக்கூடாது; கொடுக்கக்கூடாது.

ஈ. ஜாதிமத பாகுபாடு பார்க்கக்கூடாது.

உ. மனிதநேயம் உள்ளவர்களாக இருக்கவேண்டும். 

ஊ. இயற்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு துணை புரிபவர்களாக இருக்க வேண்டும்;

எ. அன்பு வழி அறவழிப் போராட்டத்தில் மட்டும் நம்பிக்கை உள்ளவராக  இருக்கவேண்டும்.

ஏ.  அனைவரிடமும் அன்பு கொள்ள வேண்டும்; 

ஐ. பெண்களை சமமாக மதிக்க வேண்டும். 

ஒ. கொலை, கொள்ளை, வன்புணர்வு, ஏமாற்றுதல், மோசடி செய்தல் போன்ற குற்றங்களை செய்யாதவர்கள் ஆக இருக்க வேண்டும்.

நாம் நமது சுய தரிசனத்தில் சமுதாயத்துக்கு ஏற்புடைய நல்ல பணிகளை உணர்ந்து கிராம பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் கிராம மக்களின் வாழ்நிலையை மேம்படுத்தும்  வகையிலும் நாம் உறுதியுடனும் நேர்மையுடனும் செயல்பட வேண்டும். நாம் கிராமங்களை  நன்கு படித்து கிராம வளர்ச்சிக்கு உரிய நற்பணிகளை புரிந்தே தீர வேண்டும். அதற்கான தீரமும் வீரமும் நமக்கு இருந்தால் நாம் செய்ய வேண்டிய பணிகளுக்கு நிச்சயமாக இயற்கையின்   வழிகாட்டுதல் கிடைக்கும்! அத்தகைய வழிகாட்டுதல் மற்றும் நமது சுய தரிசனத்தில் மக்களுக்கு ஏற்புடைய நற்பணிகளை நாம் அறிந்து உணர்ந்து செய்கின்ற நிலையில், நிச்சயமாக நாம் மக்கள் மனதில் நீங்காத இடம் பெறுவோம் என்பது திண்ணம்.

ஆதலால் அன்பு வழி செல்வோம்! 

அறப்பணிகள் செய்வோம்! 

அன்பு செய்து அகம் மகிழ்வோம்!

தொண்டு செய்து புறம் உயர்வோம்!

ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்!

இயற்கையை காத்து இன்புற்று வாழ்வோம்!

அன்பு வழியில் செல்வோம்!

ஆனந்த வாழ்வு பெறுவோம்! 

வாருங்கள் அன்பு வழி!

காணுங்கள் இன்ப ஒளி!

        --------------------------------------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பு வழி இன்ப ஒளி 15

தமிழ்நாடு அன்புவழி அறப்பணி மன்றம்

அன்பு வழி இன்ப ஒளி -1