அன்பு வழி இன்ப ஒளி 15

 15. தீயசெயல் செய்யற்க!


தீய செயல் செய்யாமல் இருப்பதை வலியுறுத்துவதற்கு மகாத்மா காந்தியடிகள் மூன்று குரங்கு பொம்மையை வழங்கினார்; முதல் குரங்கு கண்ணை பொத்தியிருக்கும். இரண்டாவது  குரங்கு காதை பொத்தியிருக்கும்; மூன்றாவது குரங்கு வாயை பொத்தியிருக்கும். அதற்கு பொருள்:  தீயதை காணாதே; தீயதை கேளாதே; தீயதை பேசாதே என்பதாகும்.  தீயதை காணாமல், கேளாமல், பேசாமல் இருந்தால் போதுமா? தீயதை எண்ணாமல் இருந்தால் அல்லவா தீய செயல் ஏற்படாமல் இருக்கும்? எண்ணம் தானே செயலுக்கு மூலம்? தீய செயல் எண்ணாதே என்பதை ஏன் மகாத்மா வலியுறுத்த இன்னொரு இன்னொரு குரங்கை வைக்கவில்லை என்ற கேள்வி எழுவது நியாயமானதே! அதற்கு ஒரு குரங்கு பொம்மை கிடைக்கவில்லையா? அல்லது அதனை வைக்க இடமில்லையா? அல்லது தீயதை எண்ணிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டாரா?  என்றெல்லாம் கேள்வி எழலாம். 


ஆனால், தீயதை பார்க்காமல், கேளாமல், பேசாமல் இருந்தாலே எண்ணம் ஏற்படாது என்பதால் மகாத்மா அதற்கொரு பொம்மையை வைக்காமல் விட்டுவிட்டார் என்பதுதான் உண்மையான காரணமாக இருக்கும் என நினைக்கிறேன். பொதுவாக ஐம்புல நுகர்வுதான் எண்ணங்களுக்கு அடிப்படை. அதிலும் பார்ப்பது, கேட்பது, பேசுவதுதான் பெரும்பகுதி எண்ணங்களுக்கு மூலமாகிறது. ஆதலால், மகாத்மா மேற்படி மூன்றோடு நிறுத்திக்கொண்டார் போலும்!


தீய செயல் பற்றி பேச வரும் போது எல்லோரும் தீய செயல் செய்யக்கூடாது என்று தான் கூறுவர். ஆனால், சமுதாயத்தில் நாளும் எவ்வளவு தீய செயல்கள் நடந்துகொண்டுள்ளன. தீய செயல்கள் செய்யக்கூடாது என வலியுறுத்துவதற்கு எவ்வளவோ அறநூல்கள், மதநூல்கள், காவியங்கள், இலக்கியங்கள், சட்டம் எல்லாம் இருக்கின்றன. ஆனால், அவைகளையும் மீறித்தான் இவ்வளவு தீய செயல்களும் நடந்துவருகின்றன. அவைகளை புறக்கணித்துவிட்டு, அவற்றைப்பற்றி கவலைப்படாமல் தீய செயலகள் அரங்கேற்றப்படுகின்றன. ஏன் அவ்வாறு நடக்கின்றன  என்ற கேள்விக்கான பதில்தான் புரியாத புதிராக உள்ளது.   


தீய செயல்கள் பற்றி பேச வரும்போது திருக்குறளைப் புறக்கணித்துவிட்டு எதுவும் கூறமுடியாது. அறக்கருத்துக்களைக் கூற வரும் போது திருக்குறள்தான் அதற்கு சரியான விடைதரும் சிறந்த நூலாக உள்ளது. உலகிலேயே அறக்கருத்துக்களை சிறப்பாகக் கூறியுள்ள நூல் எது என்றால்  அது திருக்குறளாகத்தான் இருக்க முடியும்! தமிழின் பெருமை பேசுவதற்காக இதனைக் கூறவில்லை. அதன் உண்மையான சிறப்பைக் கருத்தில் கொண்டே இதனைக் கூறுகின்றேன். அதனால், உலகம் முழுவதிலும் திருக்குறள் மொழிபெயர்த்து படிக்கப்பட்டு கொண்டாடப்படுகின்றது. திருக்குறளுக்கு பாராட்டுரை வழங்குவது இக்கட்டுரையின் நோக்கமல்ல.  ஆனால், திருவள்ளுவர் இன்னா செய்யாமை மற்றும் தீவினை அச்சம் என்ற அதிகாரங்களில் சொல்லி உள்ளவற்றை எடுத்துக்காட்டவில்லையென்றால் இந்த அத்தியாயத்தின் நோக்கம் நிறைவு பெறுதல் இயலாது. 


இன்னா செய்யாமை என்பது என்றும் எதற்காகவும் எங்கும் எவர்க்கும் எத்துயரும் செய்யாமை ஆகும். பிற உயிர்கள்-மாந்தரோ, விலங்கோ பறவையோ- எதுவும் துயருறும் காட்சியைக் காணும்போது இரக்கம் கொள்வது மனித இயல்பு. இன்னாசெய்யாமை அதிகாரம் எல்லா உயிரையும் தம் உயிர்போல் கருதி அதற்குத் தீங்கு இழைத்தல் கூடாது எனச் சொல்கிறது. இன்னா செய்யாமையை மனம், மொழி, மெய் சார்ந்த அறமாக வள்ளுவர் கருதுகிறார். பிறர் துன்பத்தைத் தன் துன்பமாகப் போற்றல், யார்க்கும் மனத்தாலும் துன்பம் செய்யாமை, உயிர்களுக்கு ஊறு செய்யாமை, வேண்டுமென்றே கெடுதல் செய்தார்க்குப் பதிலுக்குக் கெடுதல் செய்யாமை முதலிய பண்பட்ட அறங்களை இன்னா செய்யாமை அதிகாரத்தில்  எடுத்துக்காட்டுகிறார் திருவள்ளுவர். நமது சிந்தனை, பேச்சு, செயல் அனைத்தும் தூயவைகளாக இருத்தல் வேண்டும். கோபம், சாபம், மூர்க்கம், பரிகாசப் பேச்சுக்கள் அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்த தீயகுணங்கள். கோபம், உலகில் எத்தனை பேரழிவை ஏற்படுத்தியது என்பதை உலகப் போர்களின் வாயிலாக அறியலாம். இன்றும் நமது கோபம் மூர்க்கம் போன்ற தீயகுணங்களால் குடும்பத்தில், ஊரில், நாட்டில் ஏற்படும் தீமைகளை நாமே அறிவோம். தீயவற்றைச் செய்ய அஞ்சவேண்டும் என்றும் அப்படித் தீயவை தொடர்பான அச்சத்தோடு வாழ்ந்தால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்றும் அறை கூவுகிறார் வள்ளுவப் பெருந்தகை. இந்தக் கருத்தை வலியுறுத்துவதற்காகவே `தீவினை அச்சம்` என்ற ஒரு தனி அதிகாரத்தைப் படைத்திருக்கிறார்.


சிறப்பைத் தரும் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலுங்கூட, அடுத்தவர்க்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை என்பதை 'சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா செய்யாமை மாசற்றார் கோள்.' (311) என்கிறார் திருவள்ளுவர். நம்மீது கோபம் கொண்டு தீமை செய்தாலும், பதிலுக்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை என்பதை   'கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள்.'  (312) என்கிறார் திருவள்ளுவர்.  நாம் ஒரு தீமையும் செய்யாதிருக்க, கோபம் கொண்டு நமக்குத் தீமை செய்தவர்க்கு, நாம் தீமை செய்தால், தப்பிக்க முடியாத அளவு துன்பத்தை அது நமக்குத் தரும்  என்பதை  'செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமந் தரும்.'  (313) என்கிறார் திருவள்ளுவர். நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான் என்பதை 'இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்.' (314) என்கிறார் திருவள்ளுவர். பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை என்பதை 'அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போற் போற்றாக் கடை.' (315) என்கிறார் திருவள்ளுவர். தீச்செயல்களைச் செய்ய அஞ்சவேண்டும் எனக் கூறும்;


ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் துன்பமானவை என்று அனுபவித்து அறிந்தவற்றை, மற்றவர்க்குச் செய்யாமலிருக்க வேண்டும் என்பதை 'இன்னா எனத்தா னுணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கட் செயல்'(316) என்கிறார் திருவள்ளுவர். எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனதால் எண்ணி உண்டாகின்ற துன்பச்செயலைச் செய்யாதிருத்தலே நல்லது' என்பதை 'எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை.' (317) என்கிறார் திருவள்ளுவர். பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாது என்பதை 'தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க் கின்னா செயல். (318) என்கிறார் திருவள்ளுவர். அடுத்தவர்க்குத் தீமையைக் காலையில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத் தேடி மாலையில் தானாக வரும்' என்பதை பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்.'(319) என்கிறார் திருவள்ளுவர். தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது என்பதை 'நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர்.'320 என்கிறார் திருவள்ளுவர்.


தீய செயல்கள் நமக்கும் மற்றவர்களுக்கும் ஒருங்கே தீமையைச் செய்வதால், அத்தகைய தீய செயல்களைச் செய்வதற்கு நெருப்புக்கு அஞ்சுவதைக் காட்டிலும் கூடுதலாக நாம் அச்சப்பட வேண்டும்  என்பதை `தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்.` (202) என்கிறார் திருவள்ளுவர். தமக்குக் கெடுதலைச் செய்தவர்களுக்கும் தாம் பதிலுக்குக் கெடுதலைச் செய்யாது மன்னித்து விடுவதை அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பதை  `அறிவினுள் எல்லாம் தலையென்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல்.’ (203) என்கிறார் திருவள்ளுவர். பிறருக்குக் கேடு செய்வதனைப் பற்றி மறந்தும் நினைக்கக் கூடாது. நினைத்தால் அப்படி நினைத்தவனுக்குக் கேடு செய்ய அறமே நினைக்கும் என்பதை `மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.’ (204) என்கிறார் திருவள்ளுவர். இவன் எந்தத் துணையும் இல்லாதவன் என்று எண்ணி ஒருவனுக்குத் தீமை செய்தால்,  தீமை செய்தவனே துணையேதும் இல்லாதவன் ஆவான் என்பதை `இலன் என்று தீயவை செய்யற்க செய்யின் இலன்ஆகும் மற்றும் பெயர்த்து.’ ( 205) என்கிறார் திருவள்ளுவர். 


துன்பம் தரக்கூடிய தீவினைகள் தன்னைத் தொடர்ந்து வருத்துதலை விரும்பாதவன், தீய செயல்களைத் தான் பிறரிடம் ஒருபோதும் செய்யாதிருப்பான் என்பதை `தீப்பால தான்பிறர்கட் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல் வேண்டாதான்.’ (206)  என்கிறார் திருவள்ளுவர். எத்தகைய பகைமை உடையவரும் தப்பிப் பிழைப்பர் என்றாலும், தீவினையாகிய பகையோ ஒருவனை எப்போதும் விடாமல் பின்பற்றிச் சென்று அவனுக்குத் துன்பத்தைச் செய்யும் என்பதை `எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென்று அடும்.’ (207) என்கிறார் திருவள்ளுவர். நிழல் தன்னை விடாமல் வந்து தன் காலடியிலேயே தங்கி இருத்தலைப் போன்று  தீய செயல்கள் கெடுப்பது உறுதி என்பதை 'தீவினை செய்தார் கெடுதல் நிழல்தன்னை  வீயாது அடிஉறைந்து அற்று.’ ( 208)  என்கிறார் திருவள்ளுவர். ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவன் என்றால், அவன் எத்தகையதொரு தீய செயலிலும் ஒருபோதும் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்பதை `தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்

துன்னற்க அடிஉறைந்து அற்று.’ (குறள் எண் 209) என்கிறார் திருவள்ளுவர். ஒருவன் தவறான வழியில் சென்று தீய செயல்களைச் செய்யாதிருப்பானானால் அவன் கேடற்றவன் ஆவான் என்று தெளிவாக அறியலாம் என்பதை 'அருங்கேடன் என்பது அறிக மருங்கு ஓடித்தீவினை செய்யான் எனின்.’ (210) என்கிறார் திருவள்ளுவர். 


`கெடுவான் கேடு நினைப்பான்’ என்றொரு பழமொழி தமிழில் உண்டு. பிறருக்குக் கேடு நினைப்பவன் தனக்கே கேடு வருவித்துக் கொள்கிறான். எனவே அடுத்தவர்க்குக் கெட்டது செய்யக் கருதாதே என்கிறது அந்தப் பழமொழி. நம் மனத்தை எச்சரிக்கையாகக் கண்காணிக்க வேண்டும். பிறருக்குத் தீமை செய்யும் நினைப்பு அணுவளவும் நம் மனத்தில் புக நாம் இடம்கொடுக்கலாகாது. அடுத்தவர்களுக்குக் கெடுதல் நினைக்காத வகையில் மனதைப் பழக்கப் பழக்க நம் வாழ்வில் ஓர் ஆச்சரியம் நிகழ்வதை நாம் பார்ப்போம். நமக்கு அடுத்தவர்களால் அடுத்தடுத்து நல்லது நடக்கத் தொடங்கும். வள்ளுவம் காட்டும் நெறி சாதாரணமானதல்ல. அது அற்புதமான ஓர் உளவியல் விஞ்ஞானம். பெளதிகத்தில் நியூட்டனின் மூன்றாம் விதி 'For every action there is an equal and opposite reaction' என்பதாகும்.   அதாவது ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் அதற்குச் சமமான எதிர்ச் செயல்பாடு உண்டு என்பதாகும். யோசித்துப் பார்த்தால் இது பெளதிகம் சார்ந்த விஞ்ஞான விதி மட்டுமல்ல. இது நம் அனைவரது வாழ்விலும் ஊடுருவியிருக்கும் நமது வாழ்வியல் சார்ந்த விதியும் கூட. நாம் எதைச் செய்கிறோமோ அதுவே நமக்குத் திரும்ப வருகிறது. நாம் கெட்டதைச் செய்தால் கெட்டது வரும். நல்லதைச் செய்தால் நல்லது வரும். நம் செயல்கள் அனைத்தும் சுவரில் எறிந்த பந்தைப் போன்றவை. அவை நம்மை நோக்கிய திரும்பி வரும். நம் செயல்களின் விளைவுகளிலிருந்து நாம் ஒருபோதும் தப்பவே இயலாது.



`வினை விதைத்தவன் வினையறுப்பான், தினை விதைத்தவன் தினையறுப்பான்!’ என்று பெரியவர்கள் சொல்வது இந்த விதியைப் பற்றியதுதான். ஆனால் இந்த விதி உடனே செயல்படுவதில்லை. இன்று பிறர்க்குக் கெடுதலைச் செய்து வாழ்வதில் ஒருவர் ஆனந்தம் காணலாம். கொஞ்ச காலத்திற்குப் பிறகு அத்தகைய கெடுதல் அதைச் செய்தவருக்கே திரும்ப வந்துசேரும் என்பது உறுதி. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது இதைத்தான். கெடுதல் செய்தவர்களுக்குக் கெடுதலே வரும் என்பது சட்ட நியதி அல்ல. அது தெய்வ நியதி. சட்டம் உடனே செயல்பட்டுத் தண்டனை கொடுக்கும். அது அரசின் பொறுப்பு. தெய்வம் உடனே தண்டிப்பதில்லை. ஆனால் காலப்போக்கில் கெடுதல் செய்தவன் தெய்வம் தரும் தண்டனையிலிருந்து கண்டிப்பாய்த் தப்பவே முடியாது. `அரசன் அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்’ என்று சொன்னது இந்தக் கண்ணோட்டத்தில் தான்.


இன்றைய சூழலில் சட்டம் சார்ந்த தண்டனைகளிலிருந்து ஒருவன் சாமர்த்தியமான வழக்கறிஞரை வைத்துத் தப்பித்து விட முடியலாம். ஆனால் தெய்வத்தின் தீர்ப்பு துலாக்கோல் போன்றது. அதன் சரியான தீர்ப்பிலிருந்தும் அது வழங்கும் தண்டனையிலிருந்தும் யாரும் தப்ப இயலாது. நாம் எந்த வகையான வினையைச் செய்தாலும் உண்மையில் அந்த வினையை விதையாக விதைக்கிறோம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கொஞ்ச காலத்திற்குப் பிறகு, நாம் எதை விதைத்தோமோ அதைத்தான் நாம் அறுவடை செய்யமுடியும். விரையொன்று போடச் சுரையொன்று முளைக்காது. எனவே தீவினை செய்வதில் அச்சத்தோடு இருந்து விலகிவிட்டால், எதிர்காலத்தில் தீயவை நமக்கு ஒருபோதும் வரவே வராது. ....


தீவினை அச்சம் என்பதை எல்லாக் கெட்ட பழக்கங்களில் ஈடுபடுவதிலும் இருக்க வேண்டிய அச்ச உணர்வைக் குறித்ததாகவும் கொள்ளலாம். புகையிலையை அதிகம் பயன்படுத்தினால் புற்று நோய் வரும் என்று இன்று மருத்துவ விஞ்ஞானம் அறைகூவி எச்சரிக்கிறது. எனவே புகையிலை குறித்த அச்ச உணர்வோடு அதிலிருந்து நாம் விலகியிருக்க வேண்டும். மது அருந்தினால் அந்தப் பழக்கம் எதிர்காலத்தில் நம் உடல் நலத்தை பாதிக்கும் என்பதை மருத்துவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள். எனவே மதுப்பழக்கம் ஏற்படாமல் அச்சத்தோடு மதுவிலிருந்து விலகி வாழக் கற்க வேண்டும். 


ஒன்றைப் பழகுவது எளிது. பழகியபின் அதிலிருந்து விடுபடுவது கடினம். எனவேதான் தீவினை அச்சத்தோடு இருக்க வேண்டும் என வள்ளுவர் அறிவுறுத்துகிறார். `எதையும் ஒருமுறை செய்து பார்ப்போம்’ என்பது வீரமல்ல. எதையும் ஒருமுறை கூடச் செய்யாமல் இருப்பதே வீரம். தீயவற்றில் அச்சம் கொள்ளாது ஒருமுறை செய்துபார்ப்போம் என அந்தப் பழக்கத்தில் ஈடுபட்டவர்கள் முற்றிலுமாக அந்தப் பழக்கத்திற்கு ஆட்பட்டு அழிந்து போவதைப் பார்க்கிறோம்.`குடியால் குடை சாய்ந்த கோபுரங்கள்` என்றொரு நூலை எழுதினார் பிரபல எழுத்தாளர் அறந்தை நாராயணன். அந்த நூலில் பிரபலமானவர்கள் பலர் எப்படிக் குடிப்பழக்கத்தால் கெட்டு அழிந்தார்கள் என்கிற வரலாற்றை விரிவாக எழுதினார். அந்த நூலின் முன்னுரையில் தானும் அந்தப் பழக்கத்தால் அழிந்தவன் தான் என்ற உண்மையை ஒப்புக்கொண்டு இளைஞர்கள் குடிப்பழக்கத்திற்கு ஆட்படாமல் இருக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.


மூதுரையில் அவ்வைப் பாட்டி தீயவற்றிலிருந்து எவ்விதமெல்லாம் விலகியிருக்க வேண்டும் என்று அழகாக அறிவுறுத்துகிறார்:


`தீயாரைக் காண்பதுவும் தீதே! திருஅற்ற

தீயார் சொல் கேட்பதுவும் தீதே! - தீயார்

குணங்கள் உரைப்பதுவும் தீதே, அவரோடு

இணங்கி இருப்பதுவும் தீது!


தீவினை அச்சம் என்பது தீயவற்றின்பால் கொண்ட அச்சம் மட்டுமல்ல, தீயவர்களிடம் முற்றிலுமாக விலகியிருப்பதும் கூட அதில் அடங்கும். தீயவர்களின் கூட்டுறவே தீவினையை  ஏற்படுத்துகிறது. மது அருந்தும் பழக்கமுள்ளவர்களிடமிருந்து முற்றிலுமாக விலகியிருந்தால் தான் மதுப் பழக்கத்திலிலிருந்து ஒருவன் விடுபட முடியும். `தீய நண்பர்களோடு நட்புறவு வைத்துக் கொள்வேன், ஆனால் தீயவற்றில் ஈடுபடாமல் இருப்பேன்’ என நினைப்பது நடைமுறை சாத்தியமல்ல. அத்தகைய போக்கு தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதுதான். இன்றைய இளைஞர்கள் வள்ளுவரின் நூற்றி முப்பத்து மூன்று அதிகாரங்களையும் படித்துப் பின்பற்றலாம். என்றாலும் அவர்கள் தொடக்கத்தில் இந்தத் தீவினை அச்சம் என்ற அதிகாரத்தில் உள்ள குறட்பாக்களைப் பயின்று அவை சொல்லும் கருத்தைப் பின்பற்றத் தொடங்கிவிட்டால், அவர்கள் வாழ்வில் எல்லா வெற்றிகளையும் அடைய முடியும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஏனெனில் வள்ளுவர் வாக்கு என்றும் பொய்க்காத சத்திய வாக்கு. குறள் கூறும் குற்றங்களையும், நற்பண்புகளையும் அறிந்து அவர் காட்டும் வழியில் நடந்தால் அன்பான வாழ்க்கை வாய்த்திடும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பதால் அவற்றைப்பற்றி அடுத்தடுத்து இனி காண்போம்.   


           (இனியும் பரவும்...) 

------------------------------------------------------------------------------------------------------------------------


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு அன்புவழி அறப்பணி மன்றம்

அன்பு வழி இன்ப ஒளி -1