அன்புவழி இன்ப ஒளி 8
8. அன்பு வழி போராட்டங்கள்
அன்பு வழி போராட்டங்கள் என்பது அற வழிப் போராட்டங்கள் எனவும், அகிம்சை போராட்டங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. அன்பு வழி போராட்டத்தை பெருமளவு முன்னெடுத்து பரிசோதித்தவர் நமது மகாத்மா காந்தி அவர்கள் தான் என்றால் அது மிகையாகாது. அன்பு வழி போராட்டத்தின்மூலம் இந்தியா சுதந்திரம் அடைவதை சாத்தியமாக்கி அவர் வெற்றியும் கண்டார் என்பதுதான் உண்மையாகும். அவருக்கு பிறகு உலகில் அதனை பலப்பல தலைவர்கள் பின்பற்றியுள்ளார்கள். சிலர் வெற்றியும் பெற்றுள்ளார்கள்.
ஆனால், "காந்தியின் அகிம்சை வழியிலான இந்திய விடுதலைப் போராட்டம்தான், சுதந்திரத்தில் ஏற்பட்ட காலதாமதத்திற்கான காரணம் எனவும், இந்தியா, நேதாஜியின் வழியைத் தேர்ந்தெடுத்திருந்தால் அதன் சுதந்திர வாசத்தை எப்போதோ முகர்ந்திருப்போம்" எனவும், 'அகிம்சைக் கொள்கை காலாவதியாகிவிட்டது எனவும், ஏதோ ஒரு வரலாற்று காலகட்டத்தில் வாழ்ந்த இளகிய மனம் கொண்ட இளிச்சவாய் எதிர் தரப்பினருக்கு எதிராக அது வேலை செய்துள்ளதே தவிர, அதை இன்றும் சுமந்துகொண்டு செல்வது அபத்தம் எனவும், மேலும் அது வீரர்களின் வழியல்ல, உண்மையில் அது ஆண்மையற்ற போராட்ட முறை எனவும், ஆகவே அதை கொண்டு எந்த பிரச்சனையையும் தீர்த்திட முடியாது எனவும் அவ்வப்போது சிலர் கூறிக்கொண்டுள்ளனர்.
ஆனால், 1893 முதல் 1914 வரை மகாத்மா காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்த காலத்தில் நேட்டாலிலும், டிரான்ஸ்வாலிலும் ஆரம்பித்த போராட்டங்கள்தான் அந்தக் காலத்தில் உலகின் பாதியை ஆட்சி செய்துவந்த பிரிட்டனையே அதிர்வடையச் செய்தன. 1915 முதல் இந்தியா சுதந்திரமடையும் வரையில் அவர் நடத்திய சத்தியாகிரகம் பிரிட்டிஷாரின் பீரங்கிக் குண்டுகளைவிட வலிமையானவை. மகாத்மா காந்தி பின்பற்றிய அகிம்சையும் அக்கொள்கையின் தாக்கமும் இந்தியாவின் எல்லைகளுக்குள் நின்றுவிடவில்லை. மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரைப் போல், உலகெங்கும் சமூக மாற்றங்களைக் கொண்டுவர அயராது போராடிய பல மாபெரும் தலைவர்களுக்கு பெரும் உந்துதலாக இருந்துள்ளது. உலக அரசியல் வரலாற்றில் பின்னாட்களில் மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, ஆங்சன் சூகி என உலகப் புகழ்பெற்ற தலைவர்கள் எல்லாம் தங்களின் வழிகாட்டியாக அறிவித்தது மகாத்மா காந்தியைத்தான்.
‘இயேசு கிறிஸ்து நமக்கான பாதையைக் காட்டினார். காந்தி அந்தப் பாதையை வெற்றிகரமாக நமக்குச் செயல்படுத்திக் காட்டினார்’ என்றார் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர். காந்தியும் கூட அகிம்சையை ஏதோ தனது கண்டுபிடிப்பாக முன்வைக்கவில்லை. “இந்த உலகத்துக்கு போதிக்க புதிதாக என்னிடம் ஏதுமில்லை. சத்தியமும் அகிம்சையும் மலைகளைப் போலவே அவ்வளவு தொன்மையானவை” என்று அவரே சொல்லியிருக்கிறார்.
எரிக்கா செனோவெத் மற்றும் மரியா ஜெ ஸ்டீபன் என்ற இரு சமூக ஆய்வாளர்கள் 'Why Civil Resistance Works? The Strategic Logic of Nonviolent Conflict' எனும் நூலில் 1900 ஆம் ஆண்டு முதல் 2006 ஆண்டு வரை உலகெங்கிலும் நடைபெற்ற 323 சமூக போராட்டங்களை ஆய்வு செய்து சில முக்கியமான முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளனர். வன்முறை போராட்டங்களை காட்டிலும் அகிம்சை இருமடங்கு பலனளிக்கக்கூடியது எனும் முக்கியமான கண்டறிதலை முன்வைக்கின்றனர். அகிம்சைப் போராட்டங்களில் பொதுவாக வன்முறைப் போராட்டங்களை காட்டிலும் நான்கு மடங்கு அதிக மக்கள் பங்கேற்கின்றனர் எனவும், மேலும் வன்முறைப் போராட்டங்களைக் காட்டிலும் அகிம்சைப் போராட்டங்களில் பங்கெடுப்பவர்கள் அதிக முனைப்புடன் செயலாற்றுவதையும் எரிக்காவின் ஆய்வு பதிவு செய்கிறது.
மேலும், அகிம்சைப் போராட்டத்தின் வழயே அடையப்படும் அரசாங்கங்கள் பெரும்பாலும் ஜனநாயகத் தன்மை கொண்டதாகவே இருக்கின்றன எனவும், மேலும், அங்கு மீண்டும் ஓர் உள்நாட்டுப் போர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவே எனவும், மக்களின் அகிம்சை வழிப்போராட்டங்களின் மிக முக்கியமான இயங்கு முறை ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் பரவலான மக்கள் சம்மதத்தை பெறுவதுதான் எனவும், ஆகவே அத்தகைய வழிமுறைகளில் அடையப்படும் அரசும் அதே வழிமுறைகளையே, மக்களின் சம்மதத்தை நாடிப் பெறுவதையே ஆட்சி முறையாகக் கையாளும் எனவும், ஆனால் ஒரு வன்முறைப் போராட்டத்தின்போது விதிமுறைகள் கத்தி முனையிலேயே உருவாக்கப்படுகின்றன எனவும், ஆகவே ஆயுதப் போராட்டத்தின் விளைவாக அமையப்பெறும் அரசாங்கம் ஆயுதங்களைக் கைவிடுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை எனவும் கூறுகிறார். எந்த சூழலிலும் அகிம்சைப் போராட்டம் சாத்தியமே என்பதையும், எந்த சூழலிலும் ஆயுத போராட்டம் தவிர்க்க முடியாதது அல்ல என்பதையும் தங்கள் ஆய்வு உறுதியாக உலகிற்குக் காட்டுவதாகக் கூறுகிறார் எரிக்கா.
அன்பு வழி போராட்டங்கள் வெற்றி பெறக்கூடியவை என்பதை ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டுவதோடு, சில அன்பு வழி போராட்டங்கள் என்னென்ன தவறுகளால் தோல்வியடைந்தன என்பதையும் எடுத்துக்காட்டுகின்றனர். ஒரு அகிம்சைப் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற மூன்று அடிப்படைகள் அவசியமென முன்வைக்கிறார். ஒற்றுமை, திட்டமிடல், கட்டுப்பாடு ஆகியவையே அகிம்சை போராட்டத்தின் வெற்றியை தீர்மானிப்பதாக கூறுகிறார். மேற்படியான நூல் அகிம்சை வழி போராட்டம் வலிமையற்றது எனவும், எல்லா இடத்திலும் அது பயன் தராது எனவும் எண்ணப்படும் கருத்து தவறானது என்பதை எடுத்துக்காட்டுவதோடு, சரியாக முன்னெடுக்கப்படும் அகிம்சை வழி போராட்டங்கள் வெற்றிபெறக்கூடியவை என்பதை தெளிவாக்கியுள்ளது.
மகாத்மா காந்தியடிகள் 'சத்தியாகிரகம்' என்ற போராட்ட முறையை உலகுக்கு தந்தார். 'சத்தியாகிரகம்' என்பது ஒரு சொல் அல்ல. ஒரு தத்துவம். சத்தியம் அகிம்சை, அன்பு, அரவணைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது அது. 'சத்தியம்' என்ற சொல்லில் அன்பும் உண்மையும் அடங்கும். 'ஆக்ரஹா' என்ற சொல்லின் உறுதியான நிலைப்பாடு உள்ளடக்கம். சத்தியத்தில் இருந்தும், அகிம்சையில் இருந்து பிறக்கும் சக்தியே சத்தியாகிரகம்.
சத்தியாகிரகம் என்பது அமைதியான நுட்பமான போராட்ட அணுகுமுறை. ஒரு சத்தியாகிரகி ஆரம்பத்திலேயே அதனை கையாளக் கூடாது. முதலில் எதிராளியிடம் பேசவேண்டும். அன்பால் அவரை கவரவேண்டும். தான் அவருக்கு எதிரானவன் அல்ல என்பதை உணரச் செய்யவேண்டும். எதிராளியை வீழ்த்துவது நோக்கமல்ல. தவறுகளில் இருந்து அவரை விலக்கி வைக்க முயல வேண்டும். அழிப்பதல்ல நோக்கம். மன மாற்றத்தை ஏற்படுத்துவதே நோக்கம். அன்பாலும், அறிவுபூர்வமான பேச்சாலும், மனித இதயத்தின் நல் உணர்வுகளை தட்டி எழுப்புவதாலும், நம்பிக்கை தரும் நடத்தையாலும் அனைத்து ஆரம்ப வழிமுறைகளாலும் தோல்வி கண்டால் தான் சத்தியாகிரக வழிமுறையை கடைசி ஆயுதமாக கையாளவேண்டும். சத்யாகிரகி பயம் அச்சத்தை தூக்கி எறிய வேண்டும். எதிராளியை நம்ப வேண்டும். மனிதனின் இயற்கையான நல்லியல்புகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அவனுக்கு சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் இருக்கக் கூடாது.
இந்தியா போன்ற பெரும் மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டில், பெரும்பாலானோர் ஏழைகளாக இருக்கும் ஒரு நாட்டில் வன்முறை மூலம் சுதந்திரப் போராட்டம் நடத்தியிருந்தால் நிச்சயமாக இந்தியா பேரழிவையே சந்தித்திருக்கும். இங்கிலாந்து சிறு நாடாக இருந்தாலும் ஆங்கிலேயே சாம்ராஜ்யம் ஒட்டுமொத்த உலகத்தையும் சுற்றிவளைத்திருந்தது. அப்படிப்பட்ட வலிமை மிக்கவர்களை எதிர்கொள்ளும் வலிமை, பசியால் மெலிந்துகிடக்கும் இந்தியர்களுக்கு இல்லை. வலிமையை வலிமையால் வீழ்த்துவது சிறந்த உத்தியல்ல. வலிமையை மென்மையால் வீழ்த்துவதே சிறப்பான உத்தி. இந்த உத்தியைக் கண்டுகொண்ட காந்தி அதையே அகிம்சையாக மக்களுக்கு போதித்தார். உலக மக்களின் பரிவு இந்தியாவுக்குக் கிடைத்ததற்குக் காரணமே அகிம்சை வழிப் போராட்டம் என்பதால்தான்.
மகாத்மா காந்தி நடத்திய அகிம்சை போராட்டங்களின்போது அவர் கைது செய்யப்பட்டபிறகும் கூட தொண்டர்கள் போலீஸ்காரர்கள் அடித்தாலும்கூட பதில் வன்முறையில் ஈடுபடாமல் சகிப்புதன்மையுடன் போராடினார்கள். தொண்டர்களை அடித்து நொறுக்கப் பெரும் படை தயாராக நின்றபோதிலும், தொண்டர்கள் அஞ்சாமல் முன்சென்றார்கள். முன்சென்றவர்கள் அடித்து நொறுக்கப்பட்டபோதிலும், தொடர்ந்து தொண்டர்கள் முன்சென்றார்கள். அவர்களும் அடித்து நொறுக்கப்பட்டார்கள். ஒரு கட்டத்தில் அடிப்பவர்களுக்குக் கை நடுங்க ஆரம்பிக்கிறது. ஆனால், காந்தியின் தொண்டர்கள் நடுங்கவில்லை. அடிப்பவர்களை, எதிர்ப்பில்லாமல் அடிவாங்குபவர்கள் நடுங்கவைக்கும் நிகழ்வு வேறேதும் உண்டா? இது புரட்சி அல்லவா?
மகாத்மா காந்தியின் கைதுக்கெதிராக தொண்டர்களிடம் வன்முறை, சலசலப்பு எதுவும் இல்லை. எப்படிப்பட்ட ஒரு மனச்சமநிலையையும் மனஉறுதியையும் தெளிவையும் அந்த மக்களுக்கு காந்தி வழங்கியிருந்தார் என்பதை நினைத்துப் பார்க்கவே வியப்பாக இருக்கிறது. தென்னாப்பிரிக்காவிலும் சரி, இந்தியாவிலும் சரி, போராட்டங்களின் போது காந்தி கைது செய்யப்பட்டால் போராட்டம் அப்படியே நின்றுவிடாது. அத்தனை பேருக்கு அவர் பயிற்சி கொடுத்திருந்தார். காந்தி இல்லாவிட்டாலும் போராட்டம் சற்றும் தீவிரம் குறையாமல் நடக்கும். ஏனெனில் ‘காந்தி’ என்றால் அவர்களைப் பொறுத்தவரை காந்தி என்ற மனிதரின் உடலை மட்டுமல்ல அதற்கும் அதிகமாக அந்த மனிதரின் உணர்வையே குறிக்கும். காந்தியின் உடல் அவர்களுடன் இல்லையென்றாலும் அவரது உணர்வு அவரது தொண்டர்களை வழிநடத்தும். காந்தி கைதானாலும் அவரது தொண்டர்கள் கலங்காமல் முன்சென்றதற்குக் காரணம் இதுதான்.
தொண்டர்களுக்கு எங்கிருந்து வந்தது இந்த சக்தி?
எப்படிப்பட்டப் போராட்டத்தையும் வன்முறையையும் எதிர்கொள்ளும் துணிவு, நீண்ட காலப் போராட்ட வாழ்வின் விளைவாலும் அசாத்தியமான மனப்பக்குவத்தாலும் காந்திக்கு இயல்பாகவே இருந்தது. ஆனால், அந்தத் தொண்டர்களுக்கு இவ்வளவு சக்தி, மன உறுதி எங்கிருந்து வந்தது? அதுதான் காந்தியின் சக்தி. எல்லோருக்குமான மன உறுதியைக் கதிர்வீச்சுபோல் பரப்பும் சக்தி அது. அந்த சக்தியைக் கண்டுதான் ஆங்கிலேயர் அதிகம் அஞ்சினார்களே தவிர, ஆயுதங்களையோ ஆயுதப் போராட்டங்களையோ கண்டு அல்ல.
அமைதி வழியில் சமுதாய முன்னேற்றத்திற்காகவும் சமத்துவத்திற்காகவும் போராடும் அகிம்சையில் ஆழ்ந்த நம்பிக்கையைக் கொண்டதோடு, அந்த நம்பிக்கையை இழக்காமல் தனது இறுதி மூச்சுவரை கடைப்பிடித்து வந்தார் மகாத்மா காந்தி. அகிம்சையின் வழியில் அவர் சென்றது, சுமார் நூறு ஆண்டுகளாக பிரிட்டனின் காலனித்துவ ஆட்சியின் கீழிருந்த இந்தியாவிற்கு சுதந்திரத்தைப் பெற்று தரும் போராட்டத்தில் வெற்றியையும் ஈட்டித் தந்தது.
காந்தியின் கொள்கைகளை ஆராயும்போது, அவற்றுக்குப் பின்னால் அடிப்படையாக இருந்தது சமத்துவமும் மனிதநேயமும்தான் என்பதை மறுப்பதற்கில்லை. இவ்விரு முக்கியமான விழுமியங்களும் அவருடைய தனி மனித நடத்தையிலும், அரசியல் நகர்வுகளிலும் தொடர்ந்து வெளிப்பட்டுக்கொண்டே இருந்தன. சமுதாயம் பெருமளவில் முன்னேற வேண்டுமென்றால் ஏழை எளியவர்களின் வாழ்வும் மேம்படவேண்டும் என்பதை நன்கறிந்ததால்தான் நாட்டு மக்களிடையேயான சமத்துவத்தை தானும் உணர்ந்ததோடு, பிறருக்கும் அவர் போதித்தார்.
ஒரு நாடு தன்னுடைய சுயதேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருளாதார அமைப்பைக் கொண்டிருந்தால் மக்களிடைய ஏழை பணக்காரன் என்ற பாகுபாடுகள் ஒழியும் என்று எண்ணிய அவர், கைத்தறி, பருத்தி விளைவிப்பது, விவசாயம் போன்ற கிராமப்புற தொழில்துறைகளின் வளர்ச்சிக்கு குரல்கொடுத்தார். அதோடு, அவரே கைத்தறி ஆடைகளை உடுத்திக்கொள்வேன் என்று உறுதிபூண்டார். மகாத்மா காந்தி இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய காலகட்டத்திலும், பிறர் மீது காட்டும் மனிதநேயத்தையும் பொதுநலத்தையும் முக்கியமாகக் கருதினார்.
அன்பு வழி போராட்டங்கள் சரியானபடி முன்னெடுத்தால் வெற்றி பெறக்கூடியவையே என்பதை இதுவரையிலான விளக்கங்கள் தெளிவுபடுத்தியிருக்கும் என்று கருதுகின்றேன். அன்பு வழி போராட்டங்கள் வெற்றி பெறக்கூடியவை என்பது தெளிவாகின்றநிலையில், அன்பு வழியில் நடை போட தயக்க வேண்டிய அவசியமில்லையே? அன்பு வழியாக மட்டுமல்ல; வாழ்வாகவும் இருக்க வேண்டும். அன்பை மகாத்மா காந்தி வாழ்க்கை நெறியாக எடுத்துக்காட்டியுள்ளார். அன்பு எல்லோர் உள்ளத்திலும் ஆட்சி செய்ய வேண்டும். அக வாழ்விலும், புற வாழ்விலும் அன்பின் ஆட்சி என்ன செய்யும் என்று இனி காண்போம்!
(இன்னும் பரவும்...)
------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக