அன்பு வழி இன்ப ஒளி 2
2. வெறுப்பு ஒரு சங்கலித்தொடர்
சிலர் எப்போதும் எரிந்து எரிந்து விழுவார்கள். ஒரு சிலர் அலுவலக தலைவராக இருக்கும்போது அவர் அமைதியாக பணி புரிவார். யார் மீதும் எவ்வித கோபமும் பட மாட்டார். அவரது அலுவலகம் அமைதியாக சிறப்பாக செயல்படும். அலுவலக பணியாளர்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் அன்பாக இருப்பார்கள். ஆனால், அந்த அலுவலகத் தலைவர் மாறி இன்னொருவர் வந்து எப்போதும் எரிந்து எரிந்து விழுகிறார் என்றால், அந்த அலுவலகமே ஒருவருக்கொருவர் வெறுப்பு நிறைந்ததாக ஆகி அங்கு எப்போதும் சண்டை சச்சரவாய் மாறும். முன்பு இருந்தவர்களும் அதே பணியாளர்கள்தான்! தற்போது உள்ளவர்களும் அதே பணியாளர்கள்தான்! முன்பு அன்பு நிறைந்தவர்களாக இருந்தார்கள்! தற்போது வெறுப்பு நிறைந்தவர்கள் ஆகிவிட்டார்கள்! ஏன் இந்த மாற்றம்?
அலுவலகத் தலைவரின் குணாம்சந்தான் இந்த மாற்றத்திற்கு காரணம். அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள வெறுப்பு அலுவலகத்தோடு நின்று விடாது. அந்த அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் செல்லும் இடமெல்லாம் அதே நிலைமை ஏற்படும். அவர்கள் வீட்டிற்கு வெறுப்போடு போவார்கள். வீட்டில் உள்ளவர்களுடனெல்லாம் சண்டை சச்சரவு செய்வார்கள். வெளியில் நண்பர், உறவினர், மூன்றாம் நபர் எவரிடமும் அவர்கள் அதே போன்று அநாவசியமாக சண்டை சச்சரவு செய்வார்கள். ஏனென்றால் வெறுப்பு ஒரு தொற்றுநோய்! அது சுற்றியுள்ள அனைவரிடமும் பரவிக்கொண்டே இருக்கும்! சக்கரம் போல் திரும்பி வரும்! கால் பந்தாட்டத்தில் பந்து எப்படி பலருடைய கால்களில் பட்டு திரும்பத் திரும்ப உருள்கிறதோ, அதுபோல் வெறுப்பும் திரும்பத் திரும்ப எழும்பி எல்லா இடங்களிலும் சங்கிலித்தொடராக பரவிவிடும்! அப்படித்தான் இன்றைய உலகம் வெறுப்பு அலைகளால் எங்கும் சூழப்பட்டுள்ளது.
வெறுப்பின் முதல் வெளிப்பாடு கோபம்; கோபம் பிறகு பலப்பல வடிவங்களை எடுக்கும். கொலை செய்யும் அளவிற்கும் கூடப்போகும். "கர்வப்படுபவன் கடவுளை இழக்கிறான். பொறாமைப்படுபவன் நண்பனை இழக்கிறான்; கோபப்படுபவன் தன்னையே இழக்கிறான்" என்று இது ஒரு அருமையான வாசகம் உள்ளது. இன்று பெரும்பாலானோர் கோபத்தால் தன்னைத்தானே இழந்து கொண்டிருக்கிற பரிதாப நிலையை பார்க்கிறோம். பொதுவாக ஒருவரிடம் மூக்கின் மேல் என்ன இருக்கிறது என்று கேட்டால் கண்கள் இருக்கிறது என்பார்கள். ஆனால் எல்லோருக்கும் மூக்கின் மேல் கோபம் தான் இருக்கிறது. அதுதான் பல பிரச்சனைகளுக்குக் காரணமாகிறது! 'கோபமும், பொறுமையின்மையும், புரிந்துணர்வின் எதிரிகள்,' என்கிறார் நம் தேசத் தந்தை. தனி மனித கோபத்தினால் இந்த மண்ணில் எத்தனையோ குடும்பங்கள் அழிந்திருக்கின்றன. சில அரசர்கள், தலைவர்களின் கோபத்தினால் நாடுகள்கூட சீரழிந்திருக்கின்றன.
'தன்னைத்தானே காக்கின் சினம் காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்' என்கிறார் திருவள்ளுவர். கோபம் என்பது கொள்பவனையே அழித்து விடும் என திருக்குறள் எச்சரிக்கிறது. கோபத்தில் முடிவு சொல்லாதீர்கள் என்கிறார்கள். ஏனெனில் ஒரு கவனக்குறைவான வார்த்தை சர்ச்சையில் முடியும். ஒரு கடுமையான வார்த்தை வாழ்க்கையை முறிக்கும். ஒரு கசப்பான வார்த்தை வெறுப்பை வளர்க்கும். 'யார் மாவீரன்?' என நபிகள் நாயகம் தனது தோழர்களுடன் கேட்டபோது, அவர்கள் "எவன் எவராலும் வீழ்த்த முடியாதவனாக, பலசாலியாக திகழ்கிறானோ அவனே மாவீரன்," என்றனர். உடனே நபிகள் நாயகம் "வீரம் என்பது அதுவல்ல, யார் கோபத்தில் தன்னை கட்டுப்படுத்தி அமைதியாக கோபத்துக்கு தன்னை ஆட்படுத்தாமல் இருக்கிறார்களோ அவர்களே மாவீரன்," என்றார். கோபம் சைத்தானின் ஆயுதம். கோபத்தில் சுரக்கும் ஹார்மோன் இதயத்தை படபடப்பாக்கி வாழ்நாளை குறைத்து விடுகிறது. குடும்பத்தில் ஒவ்வொருவரும் படிக்க கூடிய முதல் பாடம் மற்றும் வெற்றி பாடம், கோபப்படாமல் இருப்பது தான். நம்முடைய தேசத்தின் அச்சாணியாக விளங்குகிற குடும்பம் என்னும் கோட்டையே துளைப்பது கோபம் எனும் குண்டுகள் தான்.
கணவன் கோபம் கொள்ளும் போது மனைவியும், மனைவி கோபம்கொள்ளும்போது கணவனும் விட்டுக் கொடுப்பது மேலானது. அவ்வாறு விட்டுக்கொடுப்பது அடங்கி போய் விட்டதான இழிநிலை அல்ல. மனத்தை அடக்க கற்றுக்கொண்டது என்னும் உயர்நிலைதான் அது. வெளியில் சென்ற கணவன், வீட்டுக்குள் நுழையும் போது காலணியை கழற்றி வைப்பது போல் கோபத்தையும் கழற்றி வைக்க வேண்டும். அதேபோல் மனைவியும் 'சந்திரமுகியாக' மாறாமல் 'சந்திரமதியாக' இருக்க வேண்டும்.
குடும்பங்களில் குழந்தைகளை கோபப்பட்டு திட்டக் கூடாது. குழந்தை பருவத்தில் இருந்து 20 வயது இளைஞராகும் வரை ஒருவன் பெற்றோர், ஆசிரியர், நண்பர், உறவினர் போன்றோரிடமிருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் முறை எதிர்மறை வார்த்தைகளை கேட்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. பிறகு எப்படி இளைஞர்கள் நல்லவர்களாக உருவாவார்கள்? அனைவரும் தங்கள் இதயங்களை முட்களாக வைத்துக்கொண்டால், அனைவருக்கும் ஒவ்வொரு நாள் நிகழ்வும் முள்மீது நடப்பதாகத்தான் இருக்கும்! அதே சமயம் அனைவரும் தங்கள் இதயங்களை ரோஜாவாக வைத்துக்கொண்டால், அனைவருக்கும் ஒவ்வொரு நாள் நிகழ்வுகளும் நறுமணமாக இருக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். வெறுப்பின் எதிர்நிலை அன்பு! ஆனால், அன்பு என்பது எதிர்நிலை என்ற ஒன்று ஏற்படாமல், அனைத்தையும் மாற்றி அமைப்பதாகும்! அன்பு எத்தகையது என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
------------------------------------------------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக