அன்பு வழி இன்ப ஒளி 12

 12. கோபத்தை மாற்றிவிடு!


கோபம் என்பது ஓர் எதிர்வினை! 


ஒரு சிறுவன் இன்னொரு சிறுவனைப் பார்த்து “கழுதை” என்று திட்டினால், அந்த இன்னொரு சிறுவன் முதல் சிறுவனைப் பார்த்து “குரங்கு” என்று பதிலுக்குத் திட்டுவான். அந்தச் செயல்தான் எதிர்வினை!


கோபம் வரும்போது சிலர் அழுவார்கள்; சிலர் முறைத்துப் பார்ப்பார்கள்; சிலர் மீசையை முறுக்குவார்கள்; சிலர் பல்லைக்கடிப்பார்கள்; சிலர் கையை பிசைவார்கள்; சிலர் கையை ஓங்கிக்குத்துவார்கள்; சிலர் காச் … மூச் … என கூச்சல் போடுவார்கள்; சிலர் கிடைத்ததையெல்லாம் உடைப்பார்கள்; சிலர் கண்டபடி வசைபாடுவார்கள். இதுபோல கோபத்தின் அறிகுறிகள் நீண்டுகொண்டே செல்கிறது. சில மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் கோபமாகவே இருப்பார்கள். பேச ஆரம்பித்தால் அவர்களின் வாயில் இருந்து சுடுசொல் தான் வெளிவரும். இது அவர்களுக்கு சாதகத்தை ஏற்படுத்துவதை விட பாதகத்தையே ஏற்படுத்தும். இது குறைந்த பட்சம் சிடுமூஞ்சி என்ற கெட்ட பெயரையாவது அவருக்குப் பெற்றுத் தரும். 


‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்ற தமிழ் பழமொழி அனைவரும் அறிந்ததே.  ஒருவருடைய எண்ணத்திற்கும், ஆசைகளுக்கும் தடை வரும் நிலையில் சினம் தீவிரமாக உருவெடுக்கும். சினம் என்பது தீ போன்றது. சாதக பாதகங்களை நினையாது உடனே பற்றிக் கொள்ளும். பலர் கோபத்தில் செல்போனை வீசி உடைப்பதாக சொல்கிறார்கள். கோபத்தில் சிக்கி சீரழிவது பொருட்கள் மட்டுமல்ல, மனிதர்களும் தான். 'சினம் என்பது சேர்ந்தாரை கொல்லி' என்பதுண்டு. சினம் தன்னையும் அழித்து சார்ந்தவர்களையும் அழித்து விடும். 


கோபம் ஒரு பலவீனமான உணர்ச்சி. இயலாமையின் வெளிப்பாடுதான் கோபம். எரிச்சல், ஆத்திரம், கொந்தளிப்பு என எந்த உருவத்தில் வந்தாலும் கோபம் ஒரு வலிமையில்லாதவர்களின் ஆயுதம். ஆனால், நாம் கோபத்தை வீரமாகப் பார்க்க பழகியிருக்கிறோம். நமது ஆக்ஷன் ஹூரோக்கள் அனைவரும் கோபப்படுவார்கள். அதனால் கோபத்தை நாயக அடையாளமாக பார்க்க ஆரம்பித்தோம். வீட்டிலும் கோபப்படும் பெற்றோரைக் கண்டு அதிகம் பயந்தோம். கோபப்பட்டால்தான் காரியம் ஆகும் என்று அர்த்தப்படுத்திக்கொண்டோம். மீட்டிங்கில் பாஸ் கோபப்பட்டு கடிந்து கொண்டால், அதுதான் அதிகார தோரணை என்று வியந்தோம். போட்டியும் பொறாமையும் இயல்பு என்று ஆகிவிட்ட புது உலக நியதியில் கோபத்தை சகஜமாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டோம்.


கோபம் நமக்குள் நாமே பொத்தி வைத்திருக்கும் ரகசிய வெடிகுண்டு. தூர ( யார் மீதும் படாது) எறிந்துவிடுதல்தான் உடல் நலத்துக்கு நல்லது. கோபத்தினால் ஏற்படும் வியாதிகளின் பட்டியல் மிக நீண்டது. உடலின் உள்ளே காலகாலமாய் அழுத்தி வைக்கப்படும் கோபம்தான் புற்று நோயாக மாறுகிறது என்பது லூயிஸ் ஹேயின் கூற்று. தேவையற்ற முறையில் ஒரு மனிதர் கோபப்பட்டால் அவருக்கு ரத்தக் கொதிப்பு அதிகரிக்கும். ரத்தக் கொதிப்பு மாரடைப்புக்கு வழி வகுக்கும். அதனால் ஒரு மனிதனின் கோபம் மற்றவர்களை பாதிக்கிறதோ இல்லையோ, நிச்சயம் கோபம் கொண்ட மனிதனின் உயிரையும் போக்கும் வல்லமை படைத்தது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும். பிறகென்ன மாரடைப்பு தான். இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல் களும் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் தான். மூளையை தாக்கும் பக்கவாதத்துக்கு கூட கோபம் காரணமாக அமைவதுண்டு. கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், மூக்கு விடைத்துக் கொள்தல், தூக்கமின்மை, ஓய்வின்மை, நெஞ்சுவலி, மாரடைப்பு, ரத்த அழுத்தம் விர்ரென அதிகரித்தல், எரிச்சல், தசைகள் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன. ஆக, கோபம் உங்களை எரிப்பதற்கு முன் நீங்கள் அதை எரித்து விட வேண்டியது முக்கியம். 


சினத்தினால் ஏற்படும் உராய்வு வாழ்வில் பேராபத்தை உருவாக்கும். உறவுகள் எனும் விழுதை வேரறுத்து விடும். கூட்டுக்குடும்பத்தில் பெரியவர்கள் இருப்பதால், பிடிக்காத கருத்தை மற்றவர்கள் திணித்தாலும் இல்லத்தில் உள்ளவர்கள் மரியாதையின் பொருட்டு

மவுனமாக இருப்பர். அதுவே பல இடையூறுகளுக்கு விடுதலை அளிக்கும். அதைக் கண்டு வளரும் குழந்தைகள் இல்லத்திலும், சமுதாயத்திலும் தேவையற்ற விவாதத்தில் ஈடுபட மாட்டார்கள். சிலர் சுதந்திரம் என்ற பெயரில் அர்த்தமற்ற காரணங்களுக்கு கோபம் கொண்டு சண்டையிட்டு தன்னையும், தன்னை சார்ந்தவர்களையும் நிம்மதி இழக்க வைப்பர். இதைக் கண்டு வாழ்வில் மலர வேண்டிய குழந்தைகளின் மனமும் சிதறி விடுகிறது. விட்டுக் கொடுக்கும் எண்ணம் இல்லாமல் போய்விடுகிறது. உறவுகளில் வரும் கோபம், எதிர்பார்ப்புகள் பொய்ப்பதினால் வருபவை. சுய நலமான கோபம். எல்லாவற்றையும், எல்லாரையும் தன் கட்டுக்குள் கொண்டு வர நினைப்பவர்கள் அதிகம் கோபப்படுவார்கள். வாழ்க்கையை அதன் இயல்பில் ஏற்று வாழ்பவர்கள் கோபத்தைக் கரைத்துக்கொள்கிறார்கள்.


தன்மானத்திற்கு இடையூறு வந்தால், நினைப்பது தடைப்பட்டால், ஆசைகள் நிராகரிக்கப் பட்டால், அடக்கி வைக்கப்பட்டால், நேர்மறை எண்ணங்கள் மறைந்து, எதிர்மறை

எண்ணங்கள் வளர்ந்து சினமாக உருவெடுக்கும். சமுதாயத்தில் உருவாகும் சினம் காட்டுத்தீயை

போன்றது. எங்கும் பற்றி எரியும். வாய் சண்டை, வாய்க்கால் சண்டையாக முடியும். வீட்டுத் தகராறு, வீதித்தகராறாக மாறி விடும். சமுதாயத்தில் உணர்வுகளை மறைத்து வெற்று வார்த்தைகளை பிடித்து கொண்டு சினம் கொள்வதால் கலகமும், கலவரமும் ஏற்படலாம். 


ஒருவருக்கு பகைவன் சினமே. பாதகமான சினத்தை மாற்றினால் சாதகமான மனம் உருவாகும். மவுனம் தீவிரப்படும்போது சினத்தின் தாக்கம் குறையும். மன்னிக்கும் பண்பிருந்தால் சினம் தோன்றாது. கொதி நிலையில் இருக்கும் மனதை அமைதியாக்க வேண்டும். அடக்கி வைக்கும் சினமும், உடலில் பல நோய்களை உருவாக்கும். ஹார்மோன் அதிகளவில் சுரந்து முக்கியமாக சிறுநீரகம், இதயம் இரண்டையும் பாதிக்கும். இதயத்தில் படபடப்பும், உடலில் நடுக்கமும் தோன்றும்.


“ரௌத்திரம் பழகு” என்றானே மகாகவி பாரதி? என்று சிலர் கேள்வி எழுப்புவார்கள். அவன் சொல்ல விரும்பியது இதுதான்: “சமூக அநீதிகளைக் கண்டால் தைரியமாகத் தட்டிக்கேள்!” கண்டவர்களிடம் எல்லாம் எரிந்து விழுவது ரௌத்திரம் அல்ல. சமூக கொடுமைகளை எதிர்க்கும் உணர்வு மனதில் கனல் போல் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; அதனை களைவதற்கான போராட்டத்தை தவத்தைப்போல் விடாப்பிடியாக தொடர வேண்டும். அதற்காக பிறர்மீது ஆத்திரம் கொள்ளவோ, கடும்சொல் கூற வேண்டிய அவசியமில்லை. அதனைத்தான் நமது முன்னோர் வீரியம் பெரிதல்ல; காரியந்தான் பெரியது என்று கூறுவர். ஆதலால், நியாயமான கோபங்களை சினமாக வெளிப்படுத்துவதைத் தவிர்த்து, ஆக்கப்பூர்வமான காரியங்களில் திருப்பவேண்டும். கருத்தில் எதிர்நிலையில் இருந்தாலும், நடப்பவைக்கு சம்மதம் இல்லாவிட்டாலும், அதற்கு எதிராக போராடினாலும் அதை பக்குவமாகக் கையாளத் தெரிந்தவர்கள்தான் நிஜமான வெற்றியாளர்கள். இரயில் பெட்டியிலிருந்து தன்னை வெளியே தள்ளிய வெள்ளை அதிகாரியை எட்டி உதைக்கவில்லை காந்தி! அந்த கோபத்தை கனலாய் தன்னுள் தாங்கி இந்திய சுதந்திரத்துக்கே வழிவகுத்தார்! காந்தி மகானுக்கு கடைசிவரை ஆங்கிலேயர்களிடம் பகையில்லை. அவர்களிடம் பேசுகையிலும் நகைச் சுவை உணர்வுக்கு குறைவில்லை.


'ஆறுவது சினம்!' என்கிறார் ஒளவை. சினம் என்றால் அது ஆறுவது. மணிக் கணக்கில், நாள் கணக்கில், மாதக் கணக்கில் இருக்காது. ஆறிவிடும். ஆறுவது தான் சினம். ஒரு இளைஞனுக்கு அதிகமாக கோபம் வந்து கொண்டே இருந்தது. கோபம் வரும்போது அவன் கத்தி தீர்த்து விடுவான் மேலும் அவன் இயல்பு தன்மைக்கு மாறாக நடந்து கொள்கிறான். ஒரு நாள் அவன் அப்பா அவனிடம் சுத்தியலும் நிறைய ஆணிகளையும் கொடுத்தார். "இனிமேல் கோபம் வரும் போது எல்லாம் வீட்டின் பின் சுவரில் ஆணி அடி" என்று கூறினார்”. முதல்நாள் 10 ஆணி, மறுநாள் 7, பின்பு 5, 2 என படிப்படியாக ஆணி அடிக்க கோபம் குறைந்தது. ஒரு நாள் ஒரே ஒரு ஆணி அடித்தான், மொத்தமாக 45 ஆணிகள் அடித்து உள்ளேன். “இனி கோபம் வராது” என அவன் அப்பாவிடம் கூறினான். இனிமேல் கோபம் வராத நாளில் ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கி விடு என்றார். 45 நாளில் அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன என பெருமையுடன் அப்பாவை அழைத்து காட்டினான். உடனே அப்பா சொன்னார் “ஆணிகளை பிடுங்கிவிட்டாய், சுவற்றில் உள்ள ஓட்டைகளை என்ன செய்வாய்? உன் கோபம் இது போல பலரை காயப்படுத்தி இருக்கும் அல்லவா? ” அந்த இளைஞன் வெட்கித் தலை குனிந்தான். சினம் ஆறுவதுதான்! ஆனால், சினம் ஆறுவதற்குள் என்னென்ன தீங்கையெல்லாம் செய்துவிடுகிறது? பல தீங்குகளை செய்துவிட்டு ஆறக்கூடிய சினத்தை எழாமலே கட்டுப்படுத்திக்கொண்டால் நல்லது என்றே  'ஆறுவது சினம்' என ஔவை கூறியுள்ளார் எனக் கருதலாம்!


சினத்திற்க்கான காரணங்கள் என்ன? 


இயலாமை, ஆற்றாமை, தனிமை, வெறுமை, தாழ்வு மனப்பான்மை, ஏமாற்றம், கழிவிரக்கம், புறக்கணிப்பு, மன அழுத்தம் என இவையனைத்தும் சினம் ஏற்படுவதற்கான  காரணங்களாக அமைகின்றன. 


1. நாம் சொல்வதை (நம்மைவிட எளியவர்கள் என்று நாம் நினைக்கும்) மற்றவர்கள் மதிக்காத போது…


2. நம்முடைய பிரச்சனைகளை உரியவர்கள் உடனே நிவர்த்தி செய்யாத போது…


3. நாம் சொல்வது (தவறாகவே இருந்தாலும்) தவறு என்று பலர் முன்னிலையில் விமர்சிக்கப்படும் போது…


4. எதிர்பார்த்த மரியாதை கிடைக்காத போது …

இப்படியே பல காரணங்கள் உள்ளன.


சினம் என்னும் கோபத்தால் உடலுக்கும், மனதிற்கும், உயிருக்கும், சமூகத்திற்கும்  பலப்பல  கெடுதல் ஏற்படுகிறது என்பது வெள்ளிடை மலை. ஆதலால், சினத்தை தவிர்ப்பது அல்லது தணிப்பது  அல்லது மடை மாற்றுவது அவசியமானது என்பதில் அனைவரும் உடன்படுவர் என்றே கருதுகிறேன். 


ஆறுவது சினம் அல்லவா? சினத்தை எப்படி ஆற்றுவது? 


பாலோ காபியோ சூடாக இருந்தால் என்ன செய்வோம் ? அதை இன்னொரு கிளாசிலோ பாத்திரத்திலோ மாற்றி மாற்றி ஊத்துவோம். அதை ஆத்துவோம் அல்லவா ? அது போல், சினம் வந்தால் இடத்தை மாற்றினால் போதும். சினம் மாறி விடும். யார் மீதாவது கோவம் வந்தால், முதலில் அந்த இடத்தை விட்டு நீங்கி விடுங்கள். கோவம் ஆறும். இரண்டாவது, பால் பாத்திரம் சூடாக இருந்தால், அதை குளிர்ந்த நீரில் உள்ள பாத்திரத்தில் வைத்தால் அதன் சூடு குறைந்து விடும். அது போல், கோவம் வரும் போது இடத்தை மாற்றி அமைதியான சூழ்நிலைக்கு சென்று தண்ணீர் குடித்தால் கோவம் ஆறி விடும். உங்களில் யாரேனும் ஒருவருக்குக் கோபம் வந்தபோது, அவர் நின்று கொண்டிருந்தால் உட்கார்ந்து கொள்ளவும், கோபம் நீங்கிவிட்டால் சரி; இல்லையெனில் படுத்துக்கொள்ளவும். நிற்பதைவிட உட்கார்வதாலும், உட்கார்வதைவிட படுப்பதாலும் கோபம் குறைய வாய்ப்புள்ளது. 


கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கின்ற உறுதி முதலில் வர வேண்டும். நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களுக்காக கோபப்படுவது தவறு என்று உணர வேண்டும். கோபம் இயலாமையின் வடிவம் என்பதைத் திரும்ப திரும்பச் சொல்லிக்கொள்ளுங்கள். முடிந்ததைச் செய்யலாம். முடியாததை ஏற்றுக்கொள்ளலாம். இயலாமை உணர்வை நேரடியாக எதிர்கொள்ளும் போது கோபம் கரைந்து போகும். எல்லாவற்றையும் மாற்ற நினைப்பதை விட எல்லாவற்றையும் ஏற்க நினைப்பது தான் மனநலத்தை பேணும். உங்கள் வாழ்க்கையை, உங்கள் உறவுகளை, உங்களை முழுமையாக ஏற்றுக்கொள்ளுங்கள். கோபம் இடம் தெரியாமல் காணாமல் போகும்.


“கோபத்தால் என் உடலில் ஏற்பட் டுள்ள அனைத்து பாதிப்புகளையும் வெளியேற்றுகிறேன்” என்று சுய உறுதி கூறுங்கள். உங்களை முதலில் மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள். பிறகு மற்றவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளுங்கள். எல்லாவிதமான கோபங்களும் காலத்தால் அடித்துச் செல்லப்படுபவை என்று புரிந்து கொள்ளுங்கள். கோபம் உடல் நலத்தையும், மன நலத்தையும் பாதிக்கும் என்பதை உணர்ந்தால் கோபம் வராது. கோபத்தை தவிர்க்கவேண்டுமென இறைவனை தொடர்ந்து தியானித்து வந்தால் கோபம் குறையும்.


சொற்களுக்கு உயிர் உண்டு. இனிய சொற்கள் உயிராய் நின்று இரு மனங்களை ஒன்றிணைக்கும். சினம் கொண்டு வரும் சொற்கள், விவாதத்தை ஏற்படுத்தி

வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைத்து விடும். சினம் ஏற்படும் போது சிறிது நேரம் பொறுமை காத்து காரணத்தை விளக்கினால் மனம் மாறுபடும். 'மனத்து விளக்கினை மான்பட ஏற்றிச் சினத்து விளக்கினை செல்ல நெருக்கினால் மனமானது மாயா விளக்காய் மாறும்' என

திருமந்திரம் கூறுகிறது. மழை வேண்டுமானால், கடல்நீர் ஆவியாகாது வான் சென்று பொழிய வேண்டும். பழம் வேண்டுமெனில் விதை முளைத்து, மரமாகி கனி கொடுக்க வேண்டும். அனைத்திற்குமே கால இடைவெளி தேவைப்படும். அதுபோல சினம்கொள்ளும் போது கால இடைவெளி கொடுத்தால் மனம் அமைதியுறும். சினம் கொண்டு உடனே தீர்வு காண நினைப்பது, இடையூறை வரவழைக்கும். 


ஒருவருக்கு பகைவன் சினமே. பாதகமான சினத்தை மாற்றினால் சாதகமான மனம் உருவாகும். மவுனம் தீவிரப்படும்போது சினத்தின் தாக்கம் குறையும். மன்னிக்கும் பண்பிருந்தால் சினம் தோன்றாது. கொதி நிலையில் இருக்கும் மனதை அமைதியாக்க வேண்டும். அடக்கி வைக்கும் சினமும், உடலில் பல நோய்களை உருவாக்கும். ஒருவர் அதிகமாக பேசாமல் அமைதியாகவே இருப்பார். அவர் சாந்தமாக இருக்கிறார் என்று எண்ணிவிட முடியாது. திடீரென்று ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெடித்து கன்னாபின்னா என்று கண்மூடித்தனமாக மிகக்கடினமாக பேசிவிடுவார். அவர் அப்படி செய்தால், அவர் தனது கோபங்களை, உணர்வுகளை அடக்கி அடக்கி மன அழுத்தத்துடன், மன இறுக்கத்துடன் இருந்துள்ளார் என்று பொருள். ஆதலால், மனதை அடக்கிக்கொண்டு அமைதியாக இருப்பது உண்மையான அமைதி அல்ல.  மனதில் ஏற்படும் வேண்டாத கோபத்தை உணர்வை  மடை மாற்றி மனதை லேசாக்கவேண்டும். அதுதான் மனதை வளப்படுத்துவது என்பதாகும். மனதை மிகவும் அடக்கிக்கொண்டிருந்தால், ஹார்மோன் அதிகளவில் சுரந்து இதயத்தில் படபடப்பும், உடலில் நடுக்கமும் தோன்றும். அது முக்கியமாக சிறுநீரகம், இதயம் இரண்டையும் பாதிக்கும். 


சினம் ஏற்பட்டால் அதை அடக்காது, மாற்றும் வழியை

திறமையுடன் கையாளலாம். பொறுமையுடன் இருக்க பயில வேண்டும். இப்பயிற்சியே,

முயற்சியின் முதல் படி. அதை அயர்ச்சி அடையாது தொடர வேண்டும். பேசாதிருப்பது தீர்வல்ல; தீர்வு காண அமைதியான முறையில் சொற்களை தேர்ந்தெடுத்து பேச வேண்டும். சினத்தால் என்ன விளைவு ஏற்பட்டது என்பதை பொறுமையுடன் சிந்தித்து சீர் செய்ய வேண்டும். எங்கு சினம் உருவாகியதோ அந்த இடத்தை விட்டு அகன்று, பிடித்த செயலில் கவனத்தை திருப்ப வேண்டும். ஆழ்ந்த மூச்சால் சினம் கட்டுப்படும். சினத்தை தணிப்பதற்கு குறிப்பிட்ட யோகப் பயிற்சிகள் உள்ளது. வேதாத்திரி மகரிஷி அவர்கள் சினத்தை தவிர்ப்பதற்கு அகத்தாய்வு பயிற்சி முறையை ஏற்படுத்தியுள்ளார். அப்பயிற்சி சினத்தை தவிர்ப்பதற்கான முயற்சிக்கு நல்ல பயன் தரக்கூடியதாகும். அன்பு என்னும் இலக்கை நோக்கி பயணிக்கும் போது அதற்கு எதிரான சினத்தைத் தவிர்க்க அதனை ஆக்கப்பூர்வமாக மடை மாற்றி மன உறுதியோடு எடுத்த காரியத்தில் செயல்படுவோம். அதற்கு உதவக்கூடிய நல்ல பயிற்சியை மேற்கொள்வோம்.


சினம் எழுந்தால் தீங்கு விளைவது உறுதி எனப்பார்த்தோம். அதன் ஒரு விளைவு அல்லது  ஒரு தீங்கு என்னவென்றால், கடுஞ்சொல், கொடுஞ்சொல் பேசுவதாகும்.  கடுஞ்சொல், கொடுஞ்சொல் பேசுவதால் எத்தகைய தீமைகள் விளைகின்றன என்பதை அடுத்த அத்தியாயத்தில் காண்போம். 

      (இன்னும் பரவும்....!)

-----------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பு வழி இன்ப ஒளி 15

தமிழ்நாடு அன்புவழி அறப்பணி மன்றம்

அன்பு வழி இன்ப ஒளி -1