அன்பு வழி இன்ப ஒளி 3
3. அன்பும் ஒரு சங்கிலித்தொடர்
வெறுப்பு ஒரு சங்கிலித்தொடர் என்று முந்தைய அத்தியாயத்தில் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் அன்பு எப்படி சங்கிலித்தொடர் ஆகிறது என்பதைப் பார்ப்போம்! யூடுயூப்பில் 'cycle of kindness', kindness cycle, மற்றும் kindness boomerang' என்ற தலைப்பில் நிறைய வீடியோக்கள் உள்ளன. அவைகளில் அன்பு எப்படி சங்கிலித்தொடராக விரிவடைகிறது என்பதையும், சக்கரம் போல் சுழன்று வருகிறது என்பதையும், பூமராங்போல் புறப்பட்ட இடத்திற்கே சுழன்று வருகிறது என்பதையும் எடுத்துக்காட்டுகிறார்கள். உதாரணத்திற்கு அதில் ஒன்றை இங்கு காண்போம்:
காலையில் ஒரு மாணவி தேர்வெழுதப்போகும் போது ஹால் டிக்கெட்டை கிழே தவற விட்டு விட்டு போகிறாள்; அதனை பார்த்த ஒரு மாணவன் அதனை எடுத்து அந்த மாணவிக்கு கொடுக்கிறான்; அவள் நன்றி சொல்லிவிட்டு செல்கிறாள்; அவள் செல்லும் வழியில் கர்ச்சீப்பை எடுக்கும் வேகத்தில் பர்ஸை கீழே விட்டுவிட்டு பார்க்காமல் செல்கிறான் இரண்டாவது மாணவன். அதனைக் கவனித்த அந்த மாணவி அதனை எடுத்து அந்த இரண்டாவது மாணவனிடம் தருகிறாள்; நன்றி சொல்லிவிட்டு செல்லும் அந்த இரண்டாவது மாணவன் புத்தகங்களை கைதவறி போட்டுவிடும் இரண்டாவது மாணவிக்கு புத்தகங்களை எடுத்துத் தந்து உதவி செய்கின்றான். நன்றி சொல்லிவிட்டு செல்லும் இரண்டாவது மாணவி சாப்பிடாமல் பரிதாபமாக இருந்த மூன்றாவது மாணவனுக்கு மதிய நேரத்தில் தனது உணவை பகிர்ந்து கொள்கிறாள்; அதற்கு நன்றி சொல்லும் மூன்றாவது மாணவன் கேள்விக்கு பதில் தெரியாமல் விழித்த மூன்றாவது மாணவிக்கு பதில் சொல்லித்தந்து காக்கிறான். அதற்கு நன்றி சொல்லும் மூன்றாவது மாணவி மாலையில் வழியில் கிடந்த பைக் சாவியை எடுக்கிறாள். அப்போது பைக் சாவியை தொலைத்து விட்டு முதலாவது மாணவன் தேடிக்கொண்டு வருகிறான். 'என்ன தேடுகிறீர்கள்?' என்று கேட்ட மூன்றாவது மாணவி பைக் சாவியை முதலாவது மாணவனிடம் கொடுக்கிறாள்; முதலாவது மாணவன் மூன்றாவது மாணவிக்கு நன்றி கூறுகின்றான். அந்த முதலாவது மாணவன் காலையில் அன்பு காட்டி நன்றியை பெற்றுக்கொண்டான். அதே மாணவன் மாலையில் அன்பைப் பெற்று நன்றியை தருகின்றான். அன்பும் நன்றியும் சங்கிலித்தொடராக தொடர்ந்து சக்கரம் போல் சுழல்கிறது. இதுதான் அன்பின் சிறப்பு!
இந்த கதையில் மாணவர்கள் மாணவிகளுக்கு உதவுகிறார்கள். மாணவிகள் மாணவர்களுக்கு உதவுகிறார்கள். அன்பு சங்கிலித்தொடராக தொடர்கின்றது. இது வெளிநாட்டுக்கதை. நம்ம நாட்டு கதை வேறு மாதிரியாகி விடுகிறது. ஒரு மாணவன் ஒரு மாணவிக்கு உதவினால், அல்லது ஒரு மாணவி ஒரு மாணவனுக்கு உதவினால், உடனே அங்கு காதல் அரும்பிவிடும். ஊரார் உறவினரெல்லாம் ஒரு மாதிரியாக பார்க்க ஆரம்பித்துவிடுகின்றனர். இப்படிதான் நமது சினிமாக்கள் காட்டிக்கொண்டு உள்ளன. ஆண் பெண் நட்பு நமது நாட்டில் இன்னும் ஆரோக்கியமாகவில்லை என்பதின் வெளிப்பாடுகள் இவை. இயல்பான மனித நேயத்தைக்கூட விகாரமாக எண்ணும் எண்ணத்தால் இந்த நிலை! இந்த எதிர்நிலை மனப்பான்மையைக் கொண்டு அன்பின் தன்மையை மதிப்பிடக்கூடாது. நமது சமுதாயத்தின் குறுகிய எண்ணங்களும், பார்வைகளும் மாறவேண்டும். அதே சமயம் நல்ல நட்பிற்கு ஆண் பெண் பேதமில்லை என்பதை இளைய சமுதாயம் உறுதிபடுத்தும் வகையில் உயர வேண்டும்.
யூடுயூப்பில் 'Simple Act of kindness' என்ற ஒரு வீடியோ உள்ளது. 3.05 நிமிடம் ஓடும் ஒரு குறும்படம். அதில் வசனமெல்லாம் கிடையாது. ஒரு இளைஞன் நடந்து வரும் வழியில் மாடியிலிருந்து ஊற்றும் தண்ணீருக்கு ஏற்ப ஒரு பூந்தொட்டியை நகர்த்தி வைப்பான். கணமான பொருட்களை தள்ளுவண்டியில் ஏற்றிக்கொண்டு கஷ்டப்பட்டு தள்ளிச் செல்லும் ஒரு வயதான பெண்மணிக்கு அந்த தள்ளுவண்டியை தள்ளுவதற்கு உதவுவான். தெருவோர ஓட்டல் கடையில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது அருகில் நின்று நன்றி காட்டும் நாய்க்கு ஒரு கோழிக்கால் துண்டை ஓட்டல் கடைக்காரர் வியந்து பார்க்க அப்படியே எடுத்து கொடுப்பான். தெருவோரத்தில் அமர்ந்து தாயும் மகளுமாக பிச்சையெடுத்துக்கொண்டிருப்பவர்களுக்கு பக்கத்தில் உள்ள கடைக்காரர் வியக்கும் படி பர்ஸில் உள்ள பணத்தை எடுத்து அப்படியே தருவான். வயதான மூதாட்டி ஒருவரின் வீட்டுக்கதவில் ஒரு வாழைப்பழ சீப்பை மாட்டி விட்டுபோவான். இவை அவனின் வழக்கமான பணிகள். அவன் வசதியானவன் ஒன்றும் இல்லை. அவன் ஒரு அனாதை. ஆனால், பிறருக்கு உதவுவது, அன்பு காட்டுவது என்பது அவனின் பிறவிக்குணமாகிவிட்டது. இதன் விளைவுகள் என்ன தெரியுமா?
அவன் தண்ணீர் விழுவதற்கு ஏதுவாக நகர்த்திவிட்ட பூந்தொட்டியில் செடி நன்கு வளர்ந்து அவனுக்கு அழகான மலர்களை தினமும் பூத்தன. தள்ளுவண்டிக்காரம்மா அவனை தொழிலுக்கு பங்குதாரராக்கிக்கொண்டதோடு அவனுக்கு தாய்போல் ஆகிவிட்டார். நன்றி உள்ள நாய் அவனுடனே வந்துவிட்டது. பிச்சைக்காரம்மா அவனுக்கு மூத்த சகோதரி போலாகிவிட்டார். அவரின் மகள் பிச்சையெடுப்பதை விட்டு தினமும் பள்ளிக்கூடம் செல்பவளாகிவிட்டாள். தினமும் வாழைப்பழ சீப்பை பெற்ற மூதாட்டி அவனை ஒருநாள் கண்டுபிடித்து அவனுக்கு பாட்டிபோலாகிவிட்டார். அவன் எதையும் எதிர்பார்த்து செய்யவில்லை. ஆனால், அவனின் அன்பான உதவிகள் அனாதையாக இருந்த அவனுக்கு ஒரு குடும்பத்தையையே கொடுத்துவிட்டது. இதுதான் அன்பின் மகிமை. அன்பு காட்டினால் அன்பே திரும்பி வரும். ஒன்றுக்கு பத்தாக திரும்பி வரும். அன்பிற்கு அன்பே பதிலாகும்.
அன்பை விதைத்தால் அன்பே விளையும்!
அன்பால் அகம் குளிரும்!
அன்பால் முகம் மலரும்!
அன்பால் கண்கள் ஒளிரும்!
அன்பால் வெறுப்பு தொலையும்!
அன்பால் வன்மம் விலகும்!
அன்பால் யுத்தம் மறையும்!
அன்பு சுவறில் பட்ட பந்தாக திரும்பி வரும்!
அன்பு தண்ணீரில் மூழ்கடித்த பந்தாக மேலே வரும்!
அன்பு சக்கரம் போல் சுழன்று வரும்!
அன்பு பூமராங் போல் திரும்ப வரும்!
அன்பு சங்கிலித்தொடராக சமுதாயம் எல்லாம் பரவிச் செல்லும்!
சமுதாயம் எல்லாம் பரவி எங்கும் அன்பு நிறைந்துவிட்டால்
மண்ணுலகே சொர்க்கமாகும் என்பதை சொல்லவும் வேண்டுமோ?
அப்படியான ஒரு நிலையை எண்ணிப்பார்க்கும்போதே,
மனசு இந்த பாட்டுப் பாடுவதை மறைக்க முடியுமா?
"பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு!
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை!
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை!
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு!
அட சின்னச் சின்ன அன்பில்தானே
ஜீவன் இன்னும் இருக்கு!
பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு?
அட பாசம் மட்டும் போதும் கண்ணே
காசு பணம் என்னத்துக்கு?"
இந்த பாடலைக்கேட்கும் போது எல்லோர் மனதிலும் மகிழ்ச்சிப் பூக்கள் மலர்கிறதல்லவா?மனதில் மகிழ்ச்சி பூத்தால் இதழில் உடனே பளிச்சிடுவது புன்னகை அல்லவா? அந்தப் புன்னகைக்கும் அன்பிற்கும் என்ன உறவு என்பதை அடுத்த அத்தியாயத்தில் ஆராய்வோம்!
------------------------------------------------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக