அன்பு வழி இன்ப ஒளி 5

 5. அன்பு தெய்வீகமானது!

இந்த பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் எவ்வளவோ நட்சத்திரங்கள், கிரகங்கள் உள்ளன. ஆனால், இதுவரை பூமியைத்தவிர வேறு எங்கும் உயிரினங்கள் உள்ளதாக தகவலில்லை. 

இந்த புமியைப் படைத்தது இறைவன் என்றாலும் சரி! 

இயற்கை என்றாலும் சரி! 

இந்த அழகான பூமிக்கு அளவற்ற கருணையை, அருளை, அன்பை வழங்கி இத்தனை உயிர்களும் பிறந்து வாழ வழி வகையை ஏற்படுத்தியுள்ளது. இறைவன் படைத்துள்ள சொர்க்கம் இந்த மண்ணுலகாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் இந்த மண்ணுலகைத்தவிர வேறெந்த உலகிலும் உயிரினங்கள் உள்ளதற்கான எந்த சுவடும் கிடைக்கவில்லையே! 


இந்த மண்ணுலகில் ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான உயிரினங்கள் வாழ்ந்துகொண்டுள்ளன. ஆறறிவு படைத்த மனிதன் உலகை தலைமை தாங்கி முன்னெடுத்து செல்கின்றான். உயினங்களின் ஜீவன் காற்று; காற்று மட்டுமின்றி நீர் நிலம், நெருப்பு, ஆகாயம் எல்லாம் உயிர் வாழ்தலுக்கு அவசியமாக உள்ளது. இந்த பஞ்ச பூதங்களும் மிகுந்தாலும் குறைந்தாலும் எந்த உயிரினமும் உயிர் வாழ்தல் இயலாது. எல்லா உயிரினங்களும் உயிர் வாழும்படி இவை அனைத்தையும் அளவாக இறைவன் படைத்துள்ளான். இவை மட்டுமின்றி உயிர் வாழ்வதற்கு அவசியமான உணவையும் எல்லா உயிர்களுக்கும் படைத்துள்ளான். மேலும் உயிரினங்கள் வாழையடி வாழையாக தழைத்து வளர்வதற்காக இனப்பெருக்க ஈடுபாட்டை இயல்பான ஆனந்த உந்துதலாக அமைத்துள்ளான். இவ்வளவையும் படைத்ததுடன் இறைவன் போதும் என்று விட்டு விடவில்லை. 


இவ்வளவும் இருந்தாலும் உலகம் தொடர்ந்து ஜீவித்து வாழ்வதற்கு இன்னும் உயர்வான ஒன்று வேண்டும் என்று ஒன்றைப் படைத்துள்ளான். 

அது என்ன தெரியுமா? 


அதுதான் அன்பு! 

அன்பு மட்டும் இல்லையென்றால் உயிரினங்கள் ஒரு நிமிடங்கூட உயிர் வாழ்ந்திருக்க முடியாது. அன்பு இல்லையென்றால் காதல் இல்லை! கருணை இல்லை! பாசம் இல்லை! பரிவு இல்லை! நட்பு இல்லை! இவையெல்லாம் இல்லை என்றால் வாழ முடியுமா? அதனால்தான் அன்பை தெய்வீகமானது என்கிறார்கள். 


அன்புதான் உலகத்திற்கு அடிப்படையானது; இந்த உலகம் அன்பை ஆதாரமாகக் கொண்டுதான் இயங்கி வருகிறது; இந்த அன்பு எங்கு துவங்குகிறது? மனிதனுக்குள் எப்படி வருகிறது? எல்லோருடைய வாழ்வும் எங்கிருந்து துவங்குகிறதோ அங்கிருந்துதான் அன்பும் துவங்குகிறது!


எல்லோருடைய வாழ்வும் எங்கிருந்து துவங்குகிறது? 

தாயின் கருவறையிலிருந்து துவங்குகிறது!


தாயின் கருவறையில் குழந்தைக்கு தேவையான உணவு, காற்று கிடைக்கிறது. இதமாக பாதுகாப்பாக படுத்திருக்க கூடிய சுகமான அறையாக அது இருக்கிறது. கருவறையில் இருக்கும்போது குழந்தைக்கு எவ்வளவு அரவணைப்பும், பாதுகாப்பும் இருக்கிறது? குழந்தை கருவறையில் இருந்து வெளியே வந்தபிறகும் அந்த அரவணைப்பையும் பாதுகாப்பையுந்தான் எப்போதும் நாடுகிறது. அந்த அரவணைப்பும் பாதுகாப்புந்தான் அன்பின் மூலம்! ஒவ்வொரு மனிதனும் அதைத்தான் எப்போதும் தன்னோடு இருக்க தனக்கு கிடைக்க விரும்பிக்கொண்டே இருக்கிறான். அதை தேடிக்கொண்டே இருக்கிறான். அது கிடைக்காதபோது ஏங்குகிறான். வாழ்வில் வெறுப்பு கொள்கின்றான். சிலர் வாழ்வைக்கூட துறந்துவிடுகின்றனர். 


அன்பிற்காக ஒவ்வொரு மனமும் கடலலை போல் ஓலமிட்டுக் கொண்டே உள்ளது! நெஞ்சம் பள்ளம் விழுந்து பசியோடு கிடக்கிறது! அன்பு கிடைக்கும்போதுதான் மனதைக் கவ்விக்கிடக்கும் இருட்டு விலகுகிறது. ஐம்புலன்களும் பழுது நீங்குகின்றன. மனிதனாகவும், மரணத்திலிருந்து மீளவும் அன்பு தேவையாக உள்ளது. இளம் வயதில் காதலுக்காக ஏங்கும் மனம்  எல்லா வயதிலும் அன்பிற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது! அன்பிற்குரியவர் அருகில் உள்ள போது நமக்கு அவர்களின் அருமை தெரியாது! அவர்கள் இல்லாதபோதுதான் அவர்களின் அருமையும் பெருமையும் தெரியவரும்! அவர்கள் இல்லாத போது நமது மனதில் ஏற்படும் ஏக்கமும் வருத்தமும் சோகமும் புரியவரும்!


ஒவ்வொருவருக்கும் அன்பு தான் வாழ்வின் அர்த்தம் ஆகிறது! ஒருவனுக்கு அன்பு செலுத்த ஆள் இல்லை எனில் அவன் வாழ்வதில் எந்தவித அர்த்தமும் இல்லை! ஒருவனுக்கு அன்பான வாழ்வு அமைந்து விட்டால் அது அவனுக்கு சொர்க்கம்! அதுதான் மண்ணுலக சொர்க்கம்! பூலோகம் ஆனந்தத்தின் எல்லை! இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை!


"பச்சைக் கிளிகள் தோளோடு

பாட்டுக் குயிலோ மடியோடு!

பூலோகம் ஆனந்தத்தின் எல்லை!

இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை! 

சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு!

 அட சின்னச் சின்ன அன்பில்தானே 

ஜீவன் இன்னும் இருக்கு!

பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு? 

 அட பாசம் மட்டும் போதும் கண்ணே 

காசு பணம் என்னத்துக்கு?"


இறைவன் ஒவ்வொருவர் வாழ்விலும் நேரடியாக வரமுடியாது என்பதால்தான் அவரின் பிரதிநிதியாக தாய் தந்தையை, சகோதர சகோதரிகளை, உற்றத்தார் சுற்றத்தார்களை, காதலர்களை,  துணைவர் குழந்தைகளை, ஆசிரியர்களை, நண்பர்களை, ரசிகர்கள் தொண்டர்களை அனுப்பி வைக்கிறார். அவர்கள் மூலமாக நமக்கு அவரின் அன்பை அருள்கின்றார். அவர்கள் தரும் அன்பெல்லாம் இறைவன் நமக்கு தரும் முத்தங்கள்! நாமும் பிறருக்கு செலுத்தும் அன்புதான் நாம் கடவுளுக்கு செலுத்தும் உண்மையான காணிக்கையாகும். அதனால்தான் அன்பை தெய்வீகமானது எனவும், அன்பே தெய்வம் எனவும் சொல்லுகிறார்கள்.  'கடவுள் அன்பாக இருக்கிறார்! எல்லோருக்கும் அன்பை வழங்குகிறார். அன்பு காட்டுவோர் வடிவில் காட்சி தருகிறார்' என்பதுதான் எல்லா மதங்களின் நம்பிக்கையாக உள்ளன. எல்லா மகான்களின் போதனையாகவும் உள்ளன.


அன்பு தெய்வீகமானது என்பது இப்போது ஓரளவு தெளிவாகி இருக்கும் எனக்கருதுகின்றேன். அன்பின் தெய்வீகத்தன்மை என்ன? எதை எல்லாம் அன்பின் தன்மையாக காணலாம் என்பதை அடுத்து பார்ப்போம்! 


------------------------------------------------------------------------------------------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பு வழி இன்ப ஒளி 15

தமிழ்நாடு அன்புவழி அறப்பணி மன்றம்

அன்பு வழி இன்ப ஒளி -1