அன்பு வழி இன்ப ஒளி 6
6. அன்பின் தன்மைகள்
மீண்டும் அதே கேள்வி!
அன்பு என்றால் என்ன?
பதில் என்ன சொல்வீர்கள்?
அது ஒரு உணர்வு!
ஒரு ஈர்ப்பு!
ஒரு தேவை!
அதுதான் எல்லாம்!
இப்படி பல பதில்கள் சொல்வோம்!
ஆனால், அவையெல்லாம் அன்பின் சரியான பொருளைத் தரக்கூடியதாக உள்ளனவா? இல்லை என்றுதான் சொல்லவேண்டும்!
அப்படியானால் சரியான பதில்தான் என்ன?
அன்பை அதன் தன்மைக்கொண்டுதான் வரையறை செய்ய வேண்டும்!
அன்பு மனதில் இருந்தால் என்ன செய்யும்?
அன்பு இல்லையென்றால் என்ன நடக்கும்?
அன்பு கொண்ட ஒருவன் தனது அன்பிற்குரியவருக்கு தீங்கு நினைப்பானா? தீயது சொல்வானா? தீமை செய்வானா?
இதற்கெல்லாம் இல்லை என்று பதில் கிடைத்தால் அதுதான் உண்மையான அன்பு! ஆதலால், அன்பு என்றால் என்ன?
தீங்கு நினையா மனமே அன்பு!
தீயது சொல்லா சொல்லே அன்பு!
தீமை செய்யா செயலே அன்பு!
உதவ நினைக்கும் மனமே அன்பு!
ஆறுதல் தரும் வார்த்தை அன்பு!
அன்பின் வடிவே ஆண்டவன்!
அதற்கே தினமும் வேண்டவும்!
'பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறார்!
அவன் கருணை உள்ள நெஞ்சினிலே கோவில் கொள்கிறார்!
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே!
ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே!' என்று கடவுளின் வடிவை, தனமையை எடுத்துக்காட்டுகிறது ஒரு திரைப்பாடல்.
அன்பு உள்ள மனதைப்பற்றி பார்த்தோம்!
அன்பு இல்லா மனம் என்ன செய்கிறது?
'ஆசை கோபம் களவு செய்பவன் பேசத்தெரிந்த மிருகம்!
அன்பு கருணை நன்றி உள்ளவன் மனித வடிவில் தெய்வம்!' என்கிறது ஒரு பழைய திரைப்பாடல்.
மனதில் தோன்றும் தீய எண்ணங்களுக்கெல்லாம் காரணம் அன்பு இன்மையும், அன்பு குறைவுந்தான்! கொலை கொள்ளை கற்பழிப்பு என்னும் மாபாதகங்கள் எல்லாம் அன்பின் குறைவால் ஏற்படும் தீமைகள்தானே!
மனதில் அன்பு நிறைந்தால், நேசம் வளர்ந்தால் இந்த தீமைகள் எல்லாம் மறைந்துவிடும் அல்லவா?
அன்பை விதைத்தால் அன்பே விளையும்!
நேசத்தால் மனம் குளிரும்!
நேசத்தால் முகம் மலரும்!
நேசத்தால் கண்கள் ஒளிரும்!
நேசத்தால் வெறுப்பு தொலையும்!
நேசத்தால் வன்மம் மறையும்!
நேசத்தால் யுத்தம் விலகும்!
யாதும் ஊரே யாவரும் கேளிர் அன்பே எங்கள் உலகத்தத்துவம் என சங்கத்தமிழ் ஓங்கி ஒலிக்கிறது!
அன்பு மனதில் நிறைந்திருந்தால், அமைதி ஏற்படும்! மனதில் அமைதி குடியேறினால், மன அழுத்தம் இல்லை! மன உளைச்சல் இல்லை! உடல் பாதிப்பும் இல்லை! ஆதலால், எப்போதும் மனதில் அன்பு நிறைந்திருக்க செய்ய வேண்டும்!
எப்போதும் மனதில் அன்பு நிறைந்திருக்க என்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறையை நாம் அறிய வேண்டும்! அதனை நாம் கற்க வேண்டும்! அதுதான் நாம் மகிழ்வுடன் வாழ்வதற்கான உபாயம்! நமது சமுதாயம் அமைதியுடன் வாழ்வதற்கான வழிமுறை! நமது பூமி மண்ணுலகில் சொர்க்கமாவதற்கான மந்திரம்! நமது உலகம் நீடித்து வாழ்வதற்கான உபாயம்!
அதைதான் நாம் கண்டறிய கற்றுக்கொள்ள நமது சமுதாயத்திற்கு வழங்க வேண்டும்.
மகாத்மா காந்தி அடிகள் அன்பு வழியில், அஹிம்சை வழியில் நமது நாட்டிற்கு சுதந்திரமே பெற்றுத் தந்துள்ளார்! அன்பினால் எதையும் சாதிக்க முடியும் என வாழ்ந்து காட்டிச்சென்றுள்ளார்.
அன்பு வழியில் செல்லக்கூடியவர்கள் செய்யக்கூடிய பணிகள் எல்லாம் அறப்பணிகளாகத்தான் இருக்கும் என விவரித்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை!
'பிரார்த்தனை செய்யுங்கள்! கடவுள் அருகே நீங்கள் போகலாம்!
பிரார்த்தனை செய்ய முடியவில்லையா? அதற்குப் பதிலாகச் சேவை செய்யுங்கள்! கடவுள் உங்கள் அருகே வருவார்…' எனவும்,
'இரு கை கூப்பி கடவுளை வணங்குவதை விட ஒரு கை நீட்டி உதவி செய்.' எனவும் கூறியுள்ளார் அன்னை தெரசா அவர்கள்;
'ஏழைகளும் வறியவர்களும் படும் துன்பத்தையும் துயரத்தையும் கண்டு யார் உள்ளம் கசிந்து உருகுகிறதோ, யாருக்கு அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உடனடியாக ஏற்படுகிறதோ, அவர்களே உண்மையான தேச பக்தர்கள்! தேச சேவை செய்வதற்குத் தகுதியானவர்கள்! அவர்களே மகாத்மாக்கள்!' எனவும்,
கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் இருக்கிறார்; இதைத் தவிர தனியாக வேறு ஒரு கடவுள் இல்லை; மக்களுக்கு ஒருவன் செய்யும் சேவை அந்த மகேசனுக்கே செய்யும் சேவை!' எனவும் சுவாமி விவேகானந்தா கூறுகிறார்.
இவர்களின் பொன்மொழிகள் சேவையின் சிறப்பை நமக்கு உணர்த்தக்கூடியவை!
இதுவரை அன்பின் சிறப்பை, தன்மையை, அன்பு வழியில் அறப்பணிகளை செய்வதைப்பற்றி பார்த்தோம். இனி அன்பிற்கும் அறத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? வேறுபாடு என்ன என்பதைக் காண்போம்.
------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக