அன்பு வழி இன்ப ஒளி 14
14. வாழ்த்துக்கள் வாழ வைக்குமா?
இனிய காலை வணக்கம், இனிய இரவு வணக்கம், இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், இனிய திருமண வாழ்த்துக்கள், விரைவில் குணமடைய வாழ்த்துக்கள், தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன், வாழிய வையகம் என பலவிதமான வாழ்த்துக்களை எல்லோரும் தினமும் பிறருக்கு கூறிக்கொண்டிருக்கிறோம்.
'இந்த வாழ்த்துக்கள் எல்லாம் வாழ வைக்குமா?' என்ற ஒரு கேள்வியை எழுப்பினால் வாழ வைக்கும் என மெய்பித்துக்காட்டுதல் சற்று கடினமே! ஆனால், எல்லோரும் வாழ்த்திக்கொண்டே உள்ளனர். எல்லோரும் பிறர் வாழ்த்த வேண்டுமென வணங்கிக்கொண்டே உள்ளனர். வாழ்த்துக்கள் மீது மக்களுக்கு அபரிமிதமான நம்பிக்கை உள்ளது. அதனால்தானே காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை எல்லா காரியங்களிலும் வாழ்த்துக்களை எதிர்பார்க்கின்றினர்.
எல்லோருக்கும் எல்லா செயல்களிலும் வெற்றியே கிட்ட வேண்டுமென விருப்பம் உள்ளது. அந்த வெற்றியை அடைவதற்காக சக மனிதர்களிடமிருந்து வாழ்த்துக்களை எதிர்நோக்குகின்றனர். இறைவனிடமிருந்து அருளை எதிர்நோக்குகின்றனர். பிறரிடமிருந்து வாழ்த்துக்களை பெறுவதற்காக வணங்குகின்றனர். இறைவனிடமிருந்து அருளைப் பெறுவதற்காக வேண்டுகின்றனர். பிறர் வாழ்த்தும்போது மகிழ்ச்சியும் உற்சாகவும், ஊக்கமும் ஏற்படுகிறது. இறைவனை வேண்டும் போது நம்பிக்கை பிறக்கிறது. இந்த உற்சாக மனநிலையும், நம்பிக்கையும் பாதி வெற்றியை உருவாக்கிவிடுகின்றன. முழு வெற்றியை பெறுவதற்கு எஞ்சியுள்ளது எது தெரியுமா? தன்னம்பிக்கை, விடா முயற்சியுடன் கடினமாக பாடுபடுவதுதான்!
தன்னம்பிக்கை, விடா முயற்சியுடன் கடினமாக பாடுபடுவதுதான் ஒரு வெற்றிக்கு காரணமாக இருக்கிறது. ஆனால், அவ்வாறு பாடுபடுவதற்கு உந்து சக்தியாக இருப்பது பிறரின் வாழ்த்துக்களில் இருந்து கிடைக்கும் ஊக்கமும், தெய்வ பிராத்தனையில் இருந்து கிடைக்கும் நம்பிக்கையுந்தான்! இதுதான் தன்னம்பிக்கை, விடா முயற்சியுடன் கடினமாக பாடுபடுவதற்கான மனோபலத்தை தருகிறது. ஆதலால், வாழ்த்துக்கள் மற்றும் பிராத்தனைகளில் மக்களுக்கு அபரிவிதமான நம்பிக்கை உள்ளது. அதனால்தான் திருமணம் போன்ற அனைத்து விசேச நிகழ்வுகளுக்கும் உற்றம் சுற்றம் அனைவரையும் அழைக்கிறார்கள். அனைவரின் வாழ்த்துக்களையும் எதிர்நோக்குகின்றனர்.
எவ்வளவோ வாழ்த்துக்களுடன் திருமணம் நடந்தாலும், எல்லா திருமணங்களும் சிறப்பான வாழ்வை அளிக்கின்றனவா? அப்படி சிறப்பான வாழ்வை அளிப்பதாக இருந்தால் குடும்ப நீதிமன்றங்களில் கூட்டம் குவியாதே? இந்த நிலையைக் காணும் போது வாழ்த்துக்கள் வாழ வைக்கவில்லையா என்ற கேள்வி எழத்தானே செய்யும்! ஏன் வாழ்த்துக்கள் பயனளிக்கவில்லை?
வாழ்த்துக்கள் காற்று மாதிரி. வாழ்க்கை பலூன் மாதிரி. காற்று நிறைந்த பலூன் உயிர் பெற்று வானில் மிதக்கும். அதே சமயம் பலூன் வெடித்துவிட்டால், அல்லது ஓட்டை விழிந்துவிட்டால் காற்று அங்கு ஒருவினாடியும் இருக்காது. பலூன் தரையில் விழுந்துவிடும். பிறகு அதனால் எழவே முடியாது. இதில் இருந்து தெரிவது என்ன?
பலூன் பறக்க வேண்டுமென்றால், பலூன் நன்றாக இருக்க வேண்டும். பலூன் நன்றாக இல்லையென்றால், காற்றினால் எந்த பயனும் இல்லை. அதனால், காற்றுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லையென்று கூறமுடியுமா? காற்று புகுந்தால்தான் பலூன் எழமுடியும். ஆதலால், வாழ்த்துக்கள் வாழ உதவக்கூடியதே. ஆனால், வாழ்த்துக்கள்மட்டுமே வாழ வைத்துவிடாது. நன்கு வாழ்வதற்கான பொறுப்பு வாழக்கூடியவர்களுக்குத்தான் உள்ளது. பலூன் தயார் ஆகும்போதே நல்லபடியாக தயார் செய்யப்பட்டிருக்கவேண்டும். பலவீனமாக இருந்தால் அதன் ஆயுள் குறைவுதான். பலூன் கல்லு மேலும் முள்ளுமேலும் படாமல் நிதானமாக, பக்குவமாக செல்ல வேண்டும். அப்போதுதான் பாதுகாப்பான பயணம் செல்ல இயலும். பலூனுக்கு இத்தனை பிரச்சனை இருக்கும் போது காற்றை குறை சொல்லி என்ன பயன்?
வாழ்த்துக்களும் வேண்டுதலும் மனோவியல் பொருட்கள்; மனதை ஊக்கமுள்ளதாகவும், நம்பிக்கையுள்ளதாகவும் செய்யக்கூடியவை. மனதில் தாக்கம் ஏற்படுத்தக்கூடியவை. இவையாவும் எண்ணங்கள் சார்ந்தவை. எண்ணம் போல் வாழ்வு என்கிறார்கள் பெரியோர். 'வெள்ளத்தனைய மலர்நீட்டம்; மாந்தர்க்கு உள்ளத்தனைய உயர்வு' என்கிறார் திருவள்ளுவருங்கூட.
மின் காந்தத்தில் அலைகள் ஏற்படுவதுபோல் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கும் அலைகள் உள்ளனவாக உலகம் பரவலாக நம்புகிறது. எண்ண அலைகள் வான் வெளியில் பரவி பிரபஞ்சம் எங்கும் வியாபிப்பதாகவும், ஒத்த எண்ணங்களோடு ஒருங்கிணைவதாகவும், எதிர் எண்ணங்களோடு மோதுவதாகவும், அவைதான் நட்பாகவும், பகையாகவும் மனிதர்களின் வாழ்வில் வெளிப்படுவதாகவும், நல்லெண்ணங்கள் மேம்படும்போது நன்மையும், தீய எண்ணங்கள் மிகும்போது தீமையும் வாழ்வில் ஏற்படுவதாகவும் கூறப்படுகின்றன. கண்ணில் காணமுடியாத எண்ண அலைகள் உள்ளன என்பதை எப்படி நம்புவது என்பது பலரின் கேள்வியாக உள்ளது. ஆனால், கண்ணில் காண்பதைத்தான் உண்மையாக உள்ளது என நம்பமுடியும் என ஒருவர் கூறினால் இன்றைய உலகம் நகைக்கும். ஏனென்றால் இன்று கண்ணில் காண முடியாத பலவற்றை இன்றைய உலகமும், அறிவியலும் ஏற்றுக்கொண்டுவிட்டன. கண்ணுக்கு தெரியாத வைரஸ் மற்றும் பாக்டீரியா உள்ளது என்பதை இன்று யாரும் மறுக்கமாட்டார்கள். எக்ஸ்ரேஸ் எனப்படுவது கண்ணுக்கு தெரியாது. ஆனால், அதனைக்கொண்டு எடுக்கப்படும் படங்கள்தான் எலும்பு முறிவை எடுத்துக்காட்டுகின்றன. அல்ரா சவுண்ட் என்ற கண்ணுக்கு தெரியாத கதிர்வீச்சைக்கொண்டுதான் SCAN செய்யப்படுகின்றன. இன்று தொலைக்காட்சிபெட்டி, குளிர் சாதனப்பெட்டி போன்ற பல எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களும் Remote மற்றும் Wirelessல் செயல்பட்டுக்கொண்டுள்ளன. கண்ணுக்கு தெரியாத மின்காந்த அலைகளின் லீலைகள் தான் இன்று உலகை ஆண்டுகொண்டுள்ளன. ஆதலால், ஒரு பொருள் உள்ளது என்பதற்கு இன்று அது கண்ணுக்கு தெரிய வேண்டுமென்ற கட்டாயமில்லை.
அறிவியல் பூர்வமாகவும் வாழ்த்துக்கள், வேண்டுதல்களால் நற்பலன்கள் ஏற்படுகின்றனவா என்பதையும், எண்ண அலைகள் உள்ளனவா என்பதையும் கண்டறிய பலப்பல ஆய்வுகள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் உள்ளன. தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்கள் எல்லாவற்றிலும் வாழ்த்துக்கள், வேண்டுதல்கள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது பற்றிய ஆய்வுகளில் வாழ்த்துக்கள், வேண்டுதல்களால் நற்பலன்கள் ஏற்படுவதாகவே கண்டறியப்பட்டு வருகின்றன. வாழ்த்தப்படுகின்ற விதைகள் வாழ்த்தப்படாத விதைகளைவிட நன்றாக முளைக்கின்றன எனவும், வாழ்த்தப்படுகின்ற செடிகள் வாழ்த்தப்படாத செடிகளைவிட நன்றாக வளர்கின்றன எனவும், வாழ்த்தப்படுகின்ற விலங்குகள் வாழ்த்தப்படாத விலங்குகளைவிட நன்றாக பழகுகின்றன எனவும், வாழ்த்தப்படுகின்ற நோயாளிகள் வாழ்த்தப்படாத நோயாளிகளைவிட நன்றாக குணமடைகின்றனர் எனவும், வாழ்த்தப்படுகின்ற இளைஞர்கள் வாழ்த்தப்படாத இளைஞர்களைவிட நன்றாக வெற்றி பெறுகின்றனர் எனவும் கண்டறியப்பட்டுள்ளன.
இனிய வார்த்தைகள் நம் அனுதின வாழ்விற்கு ஏன், எப்படி பலனையும், சுகத்தையும் கொண்டு வருகின்றது என்பதை நாம் முற்றிலும் அறியமாட்டோம். ஆயினும், நம்முடைய பெற்றோர், பயிற்சியாளர்கள் மற்றும் நம்முடன் பணிபுரிபவர்கள் தரும் ஊக்கமும், வழிகாட்டலும் சோதனைகளைச் சகிக்க பலன் தருவதோடு, நம்மையும் வெற்றிக்கு நேராக வழிநடத்துகின்றன. நாம் சோதனைகளைச் சந்திக்கும் போது, நம்பிக்கை தரும் வார்த்தைகள் நமக்கு ஊக்கம் அழிப்பதோடு, சோதனைகளைச் சகிக்கவும், நாம் நினைக்க முடியாத சூழல்களையும் கூட கடந்து செல்லவும் நமக்கு பலனளிக்கின்றன.
எண்ண அலைகள் உள்ளன என்பதையும், அவை தொலை தூரங்களுக்கு பரவுகின்றன என்பதையும் அறிவியல் ஏற்கத்தான் செய்கின்றன. இதயத்தின் துடிப்பு எலக்ட்ரோகார்டியோகிராஃபி (ஈசிஜி) என்ற கருவி மூலம் அளக்கப்படுகின்றன. கோபம் வரும்போது, கவலை வரும்போது, நமது இதயத்துடிப்புகள் ஏற்ற இறக்கம் அடைவதை மேற்படி கருவி உறுதிப்படுத்துகின்றன. ஆதலால், நமது உணர்வுகளுக்கும், எண்ணங்களுக்கும் இதயத்துடிப்பிற்கும் தொடர்புடையதை அறியமுடிகிறது.
நாம் ஒருவரின் பேச்சு மற்றும் செயல்களைக்கொண்டுதான் அவரின் எண்ணம் என்ன என்பதை அறிகிறோம் அல்லது யூகிக்கிறோம். ஆனால், ஒருவரின் பேச்சையும், செயலையும் கேட்காமல், காணாமல் உள்ளபோதே அவரின் எண்ணம் என்ன என்பதை அறிய முடியுமா? இயலாது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், ஒரு சிலரை முன்பு பார்க்காத நிலையிலேயே, திடீரென்று பார்க்கும்போதே பிடித்து போகிறது. நீண்ட நாள் பழகியவர்போல் தோன்றுகிறது. அதே போல் தான் சிலர்மீது வெறுப்பும், நீண்டகால பகை உள்ளது போன்ற உணர்வும் வருகிறது. இவையெல்லாம் எண்ண அலைகளின் தாக்கம் என சொல்லப்பபடுகிறது. சில சமயம் திடீரென்று எதையாவது வாங்க வேண்டுமெனத் தோன்றும். எப்போதும் யாருக்கும் எதுவும் கொடுக்காத ஒருவருக்கு திடீரென்று யாருக்காவது ஏதாவது கொடுக்க வேண்டுமெனத் தோன்றும். இவையெல்லாம் பிறரின் எண்ண அலைகளினால் ஏற்படும் தாக்கம் எனக்கூறப்படுகிறது.
நடக்கப்போவதை முன்கூட்டியே உணர்ந்து கொள்ளும் அதீத உள்ளுணர்வுத் திறன், கூடுதல் புலனறிவு என பலவாறு அழைக்கப்படும் ESP (Extra Sensory Perception) வியப்பைத் தருவதாகவும் புரியாத புதிராகவும் இன்றும் இருந்து வருகிறது. நாம் ஆறறிவு கொண்டவர்கள். ஐம்புலன்களால் செயல்படுபவர்கள். ஆறாம் அறிவு மூலம் நாம் சிந்திக்கிறோம். முடிவுகள் எடுக்கிறோம். செயல்படுகிறோம். ஆனால் அதையும் மீறிய ஒன்றாக, புலன்களுக்கு அப்பாற்பட்டதாக, ஏழாம் அறிவாக விளங்குவதுதான் ESP. உலகெங்கிலும் பல்வேறு ESP சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல ESP மனிதர்கள், தங்களது ஆற்றல்களைக் கொண்டு பல்வேறு அதிசயச் செயல்களைச் செய்துள்ளனர். குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க உதவியுள்ளனர்.
இந்த ESPயில் பல வகைகள் உள்ளன. வேறு ஒருவருடைய எண்ணங்களை, மனதில் உள்ள செய்திகளைப் படிக்கும் ஆற்றல் – டெலிபதி எனப்படுகிறது. எதிர்காலத்தை அவதானித்து, மிகச் சரியாக அதை முன்கூட்டியே கூற முடிவதற்கு – Precognition எனப்படுகிறது. இருந்த இடத்தில் இருந்து கொண்டே வேறு ஒரு இடத்தில் நடக்கும் விஷயங்களை சரியாகக் கணித்துக் கூறுவதற்கு – Clairvoyance எனப்படுகிறது. ஒரு நபரது கடந்த காலத்தை, சம்பவங்களை, வாழ்க்கை நிகழ்ச்சிகளை மிகத் துல்லியமாகக் கூறுவதற்கு Retro cognition எனப்படுகிறது. ஒரு நபருக்குச் சொந்தமான பொருளை தொடுவதன் மூலமோ அல்லது அவர்கள் சம்பந்தப்பட்ட ஏதேனும் உடைமைப் பொருள் ஒன்றைக் கொண்டு அந்த நபர் பற்றி, அவர் இருக்கும் இடம், தன்மை, அவரது செயல்பாடுகள் பற்றிக் கூறும் திறனுக்கு Psychometric எனப்படுகிறது.
ESP ஆற்றல்கள் உண்மையானவை என்பதை தொடர்ந்து நடைபெற்றுவரும் அறிவியல் ஆய்வுகள் உறுதிபடுத்தி வருகின்றன. ESP ஆற்றல்கள் உண்மையென உறுதிப்படும்போது எண்ண அலைகள் கொள்கையும் உறுதிபடக்கூடியவையாக உள்ளன. மனித மூளையில் ஆலஃபா , பீட்டா , தீட்டா , டெல்டா என நான்கு விதமான அலைகள் ஏற்படுவதாக கூறப்படுகின்றன. அந்த அலைகளை C.P.S. (CYCLES PEF SECOND) என்ற அலகு முறையினால் அளவிடுகிறார்கள். அதை E.C.G. கருவி மூலம் அளக்கின்றனர். அந்த அலைகள்: 1 ஆல்பா நிலை(8முதல் 12 G.P.S.வேகம்) என்பது சாதாரண மனிதர்கள் சற்று தன்னை மறந்த நிலை . 2 பீட்டா நிலை(12 முதல் 15G.P.S. வேகம்) நம்முடைய சாதாரண விழிப்பு நிலை. 3 தீட்டா நிலை (4முதல்8 G.P.S வேகம்) இது மிக அதீத ஆழநிலைத் தியானம் சமாதி, வலிப்பு நோயினால் மயங்கும் நிலை. 4டெல்டா நிலை(4 G.P.S குறைவான வேகம்) மிக ஆழ்ந்த உறக்கம், கோமா நிலை. இதில் சாமான்யருக்கும் அனுபவத்தால் உணரக்கூடிய நிலை ஆல்ஃபா எனப்படுகின்றன. ஆல்ஃபா எனப்படும் ஆழ்மனநிலையில் எண்ணக்கூடிய எண்ணங்கள் பலிக்கக்கூடியதாகவும், பயன் அளிப்பதாகவும் அந்நிலையை அடைய தியானங்கள் துணைபுரிவதாகவும் கூறப்படுகின்றன.
ஒருவர் வாழ்த்தும்போது மனது அதனை விரும்புகிறது என்பதையும், அதனால் மனது மகிழ்ச்சி அடைகிறது என்பதையும் யாரும் மறுக்க முடியாது. அதேபோன்று இறைவனை வேண்டும்போது மனதில் உள்ள பாரம் இறங்கிவிட்டது போல் தோன்றுவதையும், எண்ணும் செயல் நன்றாக முடியுமென்று தம்மியல்பாக ஒரு நம்பிக்கை பிறப்பதையும் யாரும் மறுக்க இயலாது. வாழ்த்துதல், வேண்டுதல் போன்றவற்றால் நமது மனது மேற்படியான தாக்கங்களுக்கு உட்படுவது உண்மையென்கின்றநிலையில் அவைகளை வெறும் வார்த்தைகள், வெற்று எண்ணங்கள் என நாம் ஏன் கருத வேண்டும்? அவைகளால் நற்பலன்கள் உள்ளன எனவும், அவைகள் நல்வாழ்விற்கு தேவையானவை எனவும் எடுத்துக்கொள்வதில் தவறொன்றுமில்லையே?
நாம் மற்றவர்களுக்கு வாழ்த்துச் சொல்லும்போது, அவர்களுடைய மனதுக்கு அது இதமாக இருக்கிறது. நாம் சொல்லும் ஒருசில வார்த்தைகள், மற்றவர்களைத் தூக்கிநிறுத்தும்! நம்பிக்கை அவர்களுக்குப் பிறக்கும்! நாம் சொல்லும் வாழ்த்துக்கள் அதை உண்மை மனதோடும் அன்போடும் சொல்லும்போது, அதற்கு வலிமை சேருகிறது. வாழ்த்துச் சொல்லும்போது, பிறருடைய வாழ்க்கையையும் நம்முடைய வாழ்க்கையையும் வளமாக்குகிறோம். அதனால், வாழ்த்துக்கு இருக்கிற வலிமையை நாம் எப்போதும் குறைவாக எடைபோடக் கூடாது!
‘மனிதனின் எண்ணங்களே மனிதனை உருவாக்குகின்றன’ என்பது புத்தரின் பிரபலமான வாசகமாகும். உண்மைதான். எண்ணம்தான் எல்லாவற்றிற்கும் ஆணிவேர். எண்ணம் மகத்தான சக்தி கொண்டது. மாபெரும் சாதனைகளைப் புரிய வல்லது. எண்ணங்கள்தான் சக்தியாக உடலில் மாறுகின்றன. எண்ணம் ஒரு தீப்பொறி போல. தீப்பொறி விழுந்ததும் மெல்ல கனிந்து பின் புகைந்து பின் நன்கு கனன்று எரியும். அது நல்ல எண்ணமாக இருந்தாலும் சரி. எதிர்மறை எண்ணமாக இருந்தாலும் சரி. ஆதலால், இனிய வார்த்தையினால் சுகத்தையும், நம்பிக்கையையும், நாம் சந்திக்கின்றவர்களுக்கு வழங்கவும், இனிய வார்த்தைகளை மட்டுமே பேசுவோம் எனவும் ஆழ் மனதில் அழுத்தமாகப் பதிய வைத்து அதனையே எப்போதும் நடைமுறை ஆக்கி, நாமும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ்விப்போம்!
வாழ்த்து என்பது எல்லாக் காலத்திலும் எல்லா இடங்களிலும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். உதாரணமாக நாம் `ஹலோ` என்று சொல்வது, `நன்றி` சொல்வது போன்ற அனைத்தும் நம்மிடமிருந்து அலைகளாக வெளியேறுகின்றன. எல்லாம் மதங்களிலும் இதை செய்து கொண்டுதான் உள்ளார்கள். நாம் `வணக்கம்` என்பதும், `நமஸ்தே` என்பதும் அதுதான். `வாழ்க வளமுடன்` என்று சொல்லும்போது இயற்கையாகவே நமது மனம் ஒன்றி விடுகிறது. நமது மன அலைச் சுழல் வேகம் தானாகவே இந்த வார்த்தைகளைச் சொன்னவுடன் குறைந்து விடுகிறது. மனதிற்குள் இனிமை ஏற்படும். மனம் அமைதி நிலைக்கு வந்து விடுகிறது. இந்த விஞ்ஞான நுட்பத்தைக் கண்டுபிடித்தவர் வேதாத்திரி மகரிஷி அவர்கள். அந்த வார்த்தைகள் மந்திரச் சொற்கள். இந்த வார்த்தைகளைச் சொன்னால் எதிரிகள் கூட மனம் இறங்கி பார்ப்பதைக் காணலாம். மேலும் பிறர் நலமோடு வாழவேண்டும் என்று வாழ்த்தும் போது அந்த ஒலி நமக்கு ஒரு இன்பத்தை ஏற்படுத்துகிறது. `வாழ்க வளமுடன்` என்ற வார்த்தைகள் வாழ்வில் இனிமையைக் கொடுக்கும் வார்த்தைகள். வாழ்த்தின் மூலம் சினம் வருவதைத் தவிர்க்கலாம். பகைவர்களை நண்பர்களாக மாற்றி விடலாம். நமது உடலும் மனமும் நன்றாக இருக்க நம்மையே நாம் வாழ்த்திக்கொள்ளலாம். வாழ்க்கைத் துணையை வாழ்த்துவதால் இருவரிடயே மன ஒற்றுமை ஏற்பட்டு குடும்ப அமைதி ஏற்படுகிறது. குழந்தைகள், உடன் பிறந்தோர், உறவினர்கள், நண்பர்களை வாழ்த்துவதால் அவர்களுடன் இனிய நட்புறவு ஏற்படுகிறது. கடமையில் இணைந்தோரை வாழ்த்துவதால் நட்பு நலம், தொழில் வளம் ஏற்படுகிறது.
மேலும் நாம் ஒருவரை நினனத்து வாழ்த்தும் போது நம்மிடமிருந்து புறப்பட்ட அலை நாம் யாரை நினைத்து வாழ்த்தினோமோ அவர்களிடமிருந்து வருகின்ற அலைகள் மீது பட்டு நம்மிடமே திரும்பி வந்து நம்மை வாழ்த்துகிறது. எனவே நாம் யாரை நினைத்து வாழ்த்தினோமோ அவருக்கு கிடைக்கும் பலனை விட நமக்கு இரண்டு மடங்கு பலன் கிடைக்கிறது. வாழ்த்துக்களை மனதளவில் கூட சொல்லி வாழ்த்தலாம். அந்த வாழ்த்துக்களுக்கு ஆற்றல் அதிகம். எங்கோ இருக்கும் ஒருவருக்கு நாம் இங்கிருந்தே வாழ்த்தலாம். அலை இயக்கம் மூலம் அது பரவி பலனை உண்டாக்கும். நம்பிக்கையோடு வாழ்த்த வேண்டும். இதுதான் முக்கியம். நமது வாகனங்களிலும் வீடுகளிலும் ஒட்டி வைத்து இருக்கும் `வாழ்க வளமுடன்` என்ற ஸ்டிக்கரை பார்ப்பவர், படிப்பவர் எல்லாம் அதனால் பயன் அடைகின்றனர். நாளை நாம் நன்றாக வாழ்வோம் என்ற நம்பிக்கையில் தான் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எனவே எல்லோரையும் வாழ்த்தி வாழ்த்தி வாழ்க்கையை பயனுள்ளதாக மாற்றிக் கொள்வோம்.
வாழ்த்துக்களைப்போன்றே பிராத்தனைகளும் பயனளிக்கக்கூடியவையே! அன்பு ஒன்றைத் தவிர வேறு எதுவுமே அங்கே இல்லாதவாறு உள்ளத்தூய்மையுடன் இருதயத்திலிருந்து எழும் பிராத்தனை சோதனைகள் நேர்ந்த சமயங்களிலெல்லாம் தன்னைக் காப்பாற்றியதாகச் சொல்ல முடியும் என்கிறார் மகாத்மா காந்தியடிகள். பிரார்த்தனைக்குப் பேச்சு தேவையில்லை எனவும், புலன்களின் முயற்சி எதுவும் அதற்கு வேண்டியதில்லை எனவும், அன்பும், உள்ளத்தூய்மையும், முழுமையான அடக்கமும் அமைந்திருந்தால் போதும் எனவும் கூறுகிறார் மாத்மா காந்தியடிகள்.
அன்பான வாழ்விற்கு நல்ல எண்ணம், நல்ல சொல் அவசியம் என்பதை இதுவரை பார்த்து வந்தோம். அடுத்த நல்ல செயல் பற்றி பார்க்க வேண்டும். நல்ல எண்ணம், நல்ல சொல் வந்துவிட்டால், அதனைத் தொடர்ந்து நல்ல செயல் தானாக வந்துவிடும் அல்லவா? நல்ல செயல் என்ன செய்யும்? அதற்கு என்ன தேவை என்பதை இனி அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
(இன்னும் பரவும்...)
------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக