அன்பு வழி இன்ப ஒளி 4
4. புன்னகை அன்பின் இளவரசி
தொட்டால் சில நோய் ஒட்டிக்கொள்ளும்!
கண்பட்டால் சிலநோய் தொற்றிக்கொள்ளும்!
இதுவும் பார்த்தாலே தொற்றிக்கொள்ளும்!
ஆனால் நோய் அல்ல!
இது அழகிற்கு அழகு சேர்க்கும் நகைதான்!
ஆனால் தங்கநகையல்ல.
அது அன்பான புன்னகை!
ஒரு புன்னகை ஓராயிரம் புன்னகையை பிறப்பிக்கும்!
புன்னகைக்கு புன்னகையே பதிலாகும்!
புன்னகைக்கு புன்னகையே பரிசாகும்!
புன்னகைக்கு புன்னகையே நோயாகும்!
புன்னகைக்கு புன்னகையே மருந்தாகும்!
--------------------
"ஒருவர் விடும் கொட்டாவி பலருக்கும் கொட்டாவியை தரும்!
ஒருவரின் கோபம் அவ்விடத்தில் உள்ள அனைவருள்ளும் கொப்பளிக்கும்!
ஒருவரின் கவலை எல்லோருக்கும் வருத்தத்தை வரவழைக்கும்!
ஆனால்,
ஒருவரின் புன்சிரிப்பு ஓராயிரம் முகத்தில் புன்சிரிப்பை வரவழைக்கும்!
நீங்கள் எதை மற்றவருக்கு தர விரும்புகிறீர்கள்?
நீங்கள் கடுகடுவென்று முகத்தை வைத்துக்கொண்டு
என் முன்னே அமர்ந்திருந்தால்
நான் கலகலப்பாக பேச முடியுமா?
ஆதலால், புன்சிரிப்போடு கைதட்டி மகிழ்ந்து
பாராட்டி உற்சாகப்படுத்துங்கள்!"
என்றார் ஒரு மேடைப் பேச்சாளர். அரங்கமே புன்னகையால் அழகாக ஒளி வீசியது. அதுதான் புன்னகையின் மகிமை!
புன்னகையை சிரிப்பின் இளவரசி என்பார்கள். சிரிப்பிற்கு மட்டமல்ல. அன்பிற்கும் இளவரசி என்றால் அதில் தவறு ஒன்றும் இல்லை. பழகிய ஒருத்தரை நீண்ட நாள் கழித்து பார்த்தவுடன் பளிச்சென்று புன்னகை வந்துவிடும். ஆனால், அவருடன் அதற்கு முந்தைய கடைசி சந்திப்பில் ஏற்பட்ட மன வருத்தம் அதன் பிறகுதான் ஞாபகம் வரும். அதன் பிறகு அந்த புன்னகை மௌனமாகிவிடும். இப்படிப்பட்ட அனுபவம் எனக்கு பலமுறை ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து நான் பலருடன் பலமுறை மன வருத்தம் கொண்டுள்ளேன் என்பதை சொல்ல வரவில்லை. மன வருத்தம் முன்பு ஏற்பட்டிருந்தாலும், பழகிய நண்பரைப் பார்த்தவுடன் பழைய நினைவு வருவதற்கு முன்பாகவே அனிச்சையாக புன்னகை வந்துவிடும். அதாவது நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், புன்னகை அனிச்சையானது; இயல்பானது; இயற்கையானது என்பதைத்தான்.
பழகிய ஒருவரை பார்த்தவுடன் மனதில் மகிழ்ச்சி பிறக்கிறது. அந்த மகிழ்ச்சியின் அடையாளந்தான் புன்னகை. பழகாத ஒருவரைப் பார்க்கும்போது மகிழ்ச்சியும், புன்னகையும் வருவதில்லை. ஒருவரிடம் ஏற்படும் பழக்கத்திற்கும் மகிழ்ச்சிக்கும் இடையே ஏதோ ஒன்று உள்ளது. அதுதான் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அது என்ன? அதுதான் அன்பு. ஆதலால் புன்னகைக்கு அன்புதான் அடிப்படை. அதனால்தான் புன்னகையை அன்பின் ஆரம்ப மொழி என்கிறார்கள்.
ஒரு கவிதை புன்னகையை எப்படி விவரிக்கிறது தெரியுமா? இதோ அந்த கவிதை:
"இதழ்களின் இளம்பிறை! இன்பத்தின் வளர்பிறை!
பளிச்சிடும் புன்னகை! தோற்றிடும் பொன்னகை!
சிரிப்பிற்கு இளவரசி! பார்வைக்கு பச்சரிசி!
முகத்திற்கு மின்மினி! மனசுக்கு பௌர்ணமி!
இனிய உறவிற்கு வரவேற்பு! இதயம் இயற்றும் புதுவார்ப்பு!
இணையும் உள்ளத்தில் எழும்நட்பு! இதுதான் புன்னகை பூந்தோப்பு!"
எந்த விலங்குகளுக்கும் கிடைத்திராத மனிதர்களுக்கு கிடைத்த மிகப்பெரும் வரப்பிரசாதம் புன்னகை. மனிதர்களால் மிகவும் எளிதாக செய்யக்கூடிய காரியம் புன்னகை. இறைவன் மனிதர்களுக்கு அன்பு பரிசாக புன்னகையை வழங்கியுள்ளார். புன்னகை என்பது பழகியவரிடம் மட்டுமல்ல. மனதில் மகிழ்ச்சி தரும் எதனிடமும் புன்னகை ஊற்றெடுக்கும். பேருந்து பயணத்தின் போது தாயின் மடியில் அமர்ந்து குழந்தை விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டால், நமக்கு உடனடியாக புன்னகை ஏற்படுவது இயற்கையே. மழை, வானவில், பௌர்ணமி நிலவு, இரவின் மடியில் தவழும் விண்மீன்கள் ஆகியவற்றை காணும்போதும் மகிழ்ச்சி ஊற்று பெருக்கெடுத்து புன்னகை நதியாக பாய்கிறது. மகிழ்ச்சியும் புன்னகையும் தவழும் இடமெல்லாம் அன்பின் வாசலெனலாம்.
புன்னகைக்கும்போது மூளையில் எண்டார்பின் நொதி சுரப்பதால் முகம் மலர்கிறதெனவும், புன்னகைப்பதால் புத்துணர்வு ஏற்படுகிறதெனவும், புன்னகைக்கும்போது இறுகியுள்ள முகதசைகள் இயல்பாகிறதெனவும் அறிவியல் கூறுகிறது. புன்னகை செய்வதன் வாயிலாக மன அமைதியும் தெளிவான சிந்தனை ஓட்டமும் கிடைக்கிறது எனவும், மனது ஒருமுகம் அடைவதற்கு புன்னகை துணை புரிகிறது எனவும், யோகப்பயிற்சிகள் மூச்சுப் பயிற்சிகள் ஆகியவற்றின் மூலமாக மனதை ஒரு புள்ளியில் குவித்து ஒருமுகப்படுத்ததுவதுபோல், புன்னகை செய்வதின் மூலமாகவும் மன ஒருமை ஏற்படுத்த முடியுமெனவும் சில நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சுற்றி இருக்கும் அனைத்தையும் மறந்து புன்னகை செய்யும் போது வேறு எந்தவித எண்ண அலைகளும் மனக்கோட்டைகளும் சஞ்சரிப்பது இல்லை எனவும், ஆகையால் மனம் ஆழ்கடல்போல் அமைதி அடைகிறது எனவும், உடலுக்கும் மனதுக்கும் எந்தவித மருந்துகளாலும் தர முடியாத பல நன்மைகளை புன்னகை எனும் அற்புத மருந்து தந்து விடுகிறது எனவும் கூறுகிறார்கள்.
புன்னகை யாருக்கு நன்மை செய்கிறது? புன்னகைப்பவருக்கா? அல்லது புன்னகையை பெறுபவருக்காக? ஒருவர் புன்னகைக்கும்போது அதைப்பார்த்த மற்றவரும் உடனே மகிழ்ச்சியுற்று புன்னகைக்கிறார். புன்னகைப்பவரும், புன்னகையைப் பெறுபவரும் மகிழ்ந்துதான் புன்னகைக்கின்றனர். ஆதலால், இருவருக்கும் மகிழ்ச்சி என்ற நன்மை ஏற்படுவது வெளிப்படை.
புன்னகை மனிதர்களுக்கு இறைவன் தந்தது. எல்லோருக்கும் புன்னகைக்கத் தெரியும். மக்கள் சிரிக்கும்போது மிகவும் அழகாக இருப்பார்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி வெளிப்படையாக இருக்கும்போது, அது மற்றவர்கள் மீது ஒட்டிக் கொள்கிறது. ஆனால் மகிழ்ச்சியை மனதிற்குள் பூட்டி வைத்துக் கொண்டு, அதை முகத்தில் காட்டாதபோது, சுற்றியுள்ளவர்களுக்கு இனிமையான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் அனுபவம் கிடைக்காமல் போகிறது. இறைவனின் அன்பளிப்பு வீணாகிறது. அப்படிச் செய்வது மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டிய மகிழ்ச்சியை தடுப்பதோடு, நமது மகிழ்ச்சியையும் பறித்துவிடுகிறது. ஆதலால், புன்னகையை பிறருக்கு வள்ளல் தன்மையோடு தாராளமாக வழங்கி, பரஸ்பரம் அன்பையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்ளவேண்டும்.
புன்னகை புரிவது இயற்கையாகவே ஏற்பட வேண்டியது. மனதை எப்போதும் லேசாக வைத்துக் கொண்டாலே போதும். இயற்கையின் மகிழ்ச்சியான தருணங்களையும், நம்மைச் சுற்றிலும் நாள்தோறும் நடந்தேறும் மகிழ்ச்சி நிறைந்த விஷயங்களையும் கவனிக்க தொடங்கிவிட்டாலே புன்னகை புரிவது சாதாரணம் ஆகி விடும். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அலுவலகத்தில் சக ஊழியர்கள் உள்ளிட்டோர் இடம் மகிழ்ச்சியாக பழகுவதன் மூலமாக புன்னகை புரிவதை நமக்குள் கொண்டு வந்துவிட முடியும். நாம் புன்னகை புரிவதால் நமக்கு மட்டும் அதன் பலன் கிடைக்காமல் நம்மை சுற்றி பலருக்கும் கிடைக்கிறது. ஒவ்வொரு நாள் நிறைவடையும் போதும் நமது வாழ்வு குறைந்து கொண்டே போகிறது என்பதை தெளிவுபடுத்திக் கொண்டால் கவலைப்படுவதை விடுத்து புன்னகையோடு மகிழ்ச்சியாக வாழவதற்கான உத்வேகம் ஏற்படும்.
நீங்கள் புன்னகை பூக்க வேண்டுமானால்,
உங்கள் மனசு சுகமாக இருக்க வேண்டும்!
உங்கள் மனசு சுகமாக இருக்க வேண்டுமானால்,
கவலை இல்லாமல் இருக்க வேண்டும்!
கவலை இல்லாமல் இருக்க வேண்டுமானால்,
கஷ்டம் இல்லாமல் இருக்க வேண்டும்!
கஷ்டம் இல்லாமல் இருக்க வேண்டுமானால்,
இஷ்டமாய் வாழ வேண்டும்!
இஷ்டமாய் நீங்கள் வாழ வேண்டுமானால்,
உங்கள் மனதில் அன்பு நிறைந்திருக்க வேண்டும்!
ஆதலால், அன்பும் புன்னகையுந்தான்
ஆனந்தத்தின் மார்க்கம் என்பேன்!
புன்னகை மனிதர்களுக்கு மட்டுந்தான் இருக்கிறது. ஆனால், அன்பு எல்லா உயிரினங்களுக்கும் இருக்கிறது. அன்பை தெய்வீகமானது என்கிறார்கள். அன்பை ஏன் தெய்வீகமானது என்கிறார்கள் என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்!
------------------------------------------------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக