அன்பு வழி இன்ப ஒளி 10

 10. பொறாமை தவிர்!


தீமைக்கெல்லாம் முதல் காரணமாக இருப்பது தீய எண்ணங்களே. ஆதலால் அன்பு செலுத்துவதற்கு முதல் தேவை தீய எண்ணங்கள் ஏற்படாமல் இருப்பதே.


'மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்

ஆகுல நீர பிற.'


ஒருவன் தன் மனத்தில் குற்றமற்றவனாக இருக்க வேண்டும். அறம் என்பது அவ்வளவே; மனத்தூய்மை இல்லாத மற்றவையெல்லாம் ஆரவாரத் தன்மை உடையவை என்கிறார் திருவள்ளுவர்.


அறம் என்பது சமுதாயம் முழுவதும் நலமாக இருக்க வேண்டுமெ என்ற பேரன்பு என ஏற்கனவே பார்த்துள்ளோம். ஆதலால், பேரன்பாகிய அற உணர்வு  நிலைக்க முதலில் மனதில் தீய எண்ணங்கள் ஏற்படாமல் இருக்க வேண்டும். தீய எண்ணங்கள் எதனால் ஏற்படுகின்றன என்று அடுத்த கேள்வி எழுகிறது. அதற்கும் திருவள்ளுவரே பதில் சொல்கிறார்.


'அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்.'


பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றை தவிர்த்து ஒழுகுவதே அறமாகும் என்கிறார். 


பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் இருப்பது என்பது அறம் என்பது மட்டுமல்ல. அதுவே தீய எண்ணங்கள் ஏற்படாமல் இருப்பதற்கும் அதனால் தீய செயல்கள் ஏற்படாமல் இருப்பதற்கும் அடிப்படையாகும். அதுவே ஒருவர் அன்பு வழியில் வாழ்கிறார் என்பதற்கு முதல் அடையாளமாகும்.


நாம் அன்புடன் வாழ அடுத்தவர் வாழ்வையும் முன்னேற்றத்தையும் கண்டு பொறாமைப்படாத மனநிலை வேண்டும். நமக்கென்று ஒரு உடலையும் உயிரையும் உறவையும் படைக்கின்ற இறைவன் நமக்கென்று ஒரு தனித்துவமான வாழ்க்கையையும் படைத்துள்ளார். அவர் நாம் அடுத்தவர் வாழ்க்கையை பார்த்து ஆதங்க படவேண்டிய அவசியமில்லை மற்றவர்களோடு நம்மை தான் ஒப்பிட்டுப் பார்த்து வருத்தப் படவேண்டிய தேவையில்லை. எப்படி பொறாமை பட்டாலும் வருத்தப்பட்டாலும் நாம் அடுத்தவரின் வாழ்வை வாழ முடியாது. நமது வாழ்வை மட்டுமே வாழ முடியும். பிறகு ஏன் நாம் அடுத்தவர் வாழ்வை பார்த்து ஆதங்கப் படவேண்டும்! அனாவசியமானது! அதனை விட்டொழியுங்கள்! அதனை ஒழித்து விட்டால் அன்பும் மகிழ்ச்சியும் மனதில் நிறைய முதல் தகுதி வந்துவிடும்.


பிறர் வளர்ச்சியைக் கண்டு பொறாமையால் பேசுவது, ஏற்கனவே பெற்றுள்ள செல்வத்தையும் அழித்துவிடும் என்பதை 'ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு' என்று  ஔவையார் கொன்றை வேந்தனில் எடுத்துக் கூறுகிறார். 


அழுக்காறு உடையார்க்கு அது சாலுமொன்னார்

வழுக்கியும் கேடீண்பது. – குறள் 165


பொறாமை உடையார்க்கு அழிவினைத் தருவதற்கு வேறு எதிரியே தேவை இல்லை. அவன் கொண்டுள்ள பொறாமையே அந்த ஆளை அழித்துவிடும் என்கிறார் திருவள்ளுவர். 

ஒருவன் பக்கத்துவீட்டுக்காரர் அவரது மாடு தரும் நிறைய பாலைக்கொண்டு நிறைய பணம் சம்பாதிப்பதை பொறுக்காமல், பொறாமை கொண்டு, ஒரு நாள் இரவு அந்த மாட்டுக்கு விசம் கொடுத்து கொன்றுவிட முயன்றபோது, அந்த மாடு முட்டி தூக்கி கீழே போட்டதால் கை கால் முறிந்து பெரும் துன்பம் அடைந்ததாக சிறுவயதில் ஒரு பாட்டி கதை கேட்டதுண்டு. 

அப்படிதான் பொறாமை கேடு தரும். கெடுவான் கேடு நினைப்பான் என்பது பொறாமை படுபவருக்கு பொறுந்தக்கூடியதாகும். பொறாமை ஏற்படுவதுதான் அடுத்தடுத்த பேராசை, வெகுளி, இன்னாச்சொல் போன்ற குற்றங்களையும் உருவாக்கக்கூடியதாகும். ஆதலால், பொறாமை படுவதை விட்டொழிக்க வேண்டும். பொறாமை குணம் நீங்கினால், நமக்கு வரக்கூடிய பல துன்பங்கள் நீங்கிவிடும். 

பொறாமைக்கு அடுத்து நமது அன்பு வழியில் இடையூறாக நிற்பது ஆசை ஆகும். அதனைப்பற்றி அடுத்து பரிசீலிப்போம்!

(இன்னும் பரவும்...)

------------------------------------------------------------------------------------------------


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பு வழி இன்ப ஒளி 15

தமிழ்நாடு அன்புவழி அறப்பணி மன்றம்

அன்பு வழி இன்ப ஒளி -1