அன்பு வழி இன்ப ஒளி 11
11. அவாவை கட்டுப்படுத்து!
தீய எண்ணங்கள் ஏற்படுவதற்கு அவா எனப்படும் ஆசை ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.
ஆசையே துன்பத்திற்கு காரணம் என்கிறார் புத்தர். திருவள்ளுவர் கூட அவா அறுத்தல் என்பதற்கு ஒரு அதிகாரமே வைத்துள்ளார்.
'அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து'. என்கிறார்.
ஆசையை, எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதை என்று கூறலாம் என்பது அதன் பொருள்.
ஆதலால் ஆசை என்பது மனிதர்களுக்கு இயல்பாக இருக்கின்ற ஒன்று என தெரிய வருகிறது. ஆசை என்பது இயல்பாக இருக்கின்ற போதிலும் அது நல்லதா தீயதா அல்லது எந்த அளவுக்கு இருந்தால் நல்லது எதனை விஞ்சினால் தீயது என்பது நாம் ஆராய வேண்டியதாகும்.
ஆசைகளை சின்ன ஆசை பெரிய ஆசை என்று பிரிக்கிறார்கள். சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை என்று கவிஞர் வைரமுத்து அவர்கள் இயற்றிய பாடலை ஆசையோடு கேட்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டும் என்று விரும்பிய ஒருவரின் பேராசை பெரு நஷ்டம் என்ற கதையை சிறுவயதில் படித்துள்ளோம். ஆதலால் ஆசைகளை சிற்றாசை பேராசை என்ற இரு பிரிவாக்கலாம் என்று தோன்றுகிறது. சிற்றாசை என்றால்இருக்கலாம் எனவும் பேராசை என்றால் இருக்கக் கூடாது எனவும் கூறுவதாகக் கொள்ளலாம் என்று எடுத்துக் கொள்ள இயலுமா? சிலருக்கு சிற்றாசையே பேராசையாக இருக்கும். அதனால் அப்படி எல்லாம் வரையறை படுத்தி சொல்ல இயலாது.
அவா அறுத்தல் பற்றி திருவள்ளுவர் மேலும் சொல்லும் கருத்துக்களை காண்பது அவசியமாகும்.
'அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.' என்கிறார்.
ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை. ஆசை உண்டானால், அதைத் தொடர்ந்து துன்பமும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும் என்பது அதன் பொருளாகும். மேலும்
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.' என்கிறார்.
பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால், வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும் என்பது அதன் பொருளாகும். மேலும்,
'ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.' என்கிறார்.
இயல்பாகவே எழும் அடங்காத பேராசையை அகற்றி வாழும் நிலை, நீங்காத இன்பத்தை இயல்பாகவே தரக்கூடியதாகும் என்பது அதன் பொருளாகும். இப்படியாக திருவள்ளுவர் சொல்வதிலிருந்து இயல்பாக இருக்கக்கூடிய ஆசையை கட்டுப்படுத்தி வாழ்ந்தால் இன்பம் இயற்கையாக ஏற்படும் என்பதாக தெரியவருகிறது.
ஆனால் ஆசை இல்லாமல் மனிதன் வாழ முடியுமா? வாழ்வதற்கு கூட வாழ வேண்டும் என்ற ஆசை இருக்க வேண்டும் அல்லவா? மண்ணில் பிறந்த மனிதர்கள் ஆசை இல்லை என்றால் வாழ்வதில் என்ன பயன் என்றெல்லாம் கேள்விகள் எழுகிறது அல்லவா? இக்கால சத்குரு ஜக்கி வாசுதேவ் அத்தனைக்கும் ஆசைப்படு என்கிறார். ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று சொல்லப்படுகின்ற நிலையில் இவர் அத்தனைக்கும் ஆசைப்படு என்று சொல்வது முரண்பாடாக உள்ளது அல்லவா?
அவரின் அத்தனைக்கும் ஆசைப்படு என்ற நூலை படிக்கின்ற போது ஆசை என்பது இயற்கையானது; அதனை துறப்பது இயற்கைக்கு மாறானது; ஆதலால் அத்தனைக்கும் ஆசைப்படுங்கள் என்கிறார். ஆசைப்பட்டால் தான் அதனை அடைவதற்காக உழைக்கத் தோன்றும்! அப்போதுதான் வாழ்வில் வெற்றி அடைய முடியும்; சாதிக்க முடியும் என்கிறார். நியாயமான ஆசைகளை வாழ்வில் எவ்வாறு அடையலாம் என்பதற்கு நடைமுறைச் சாத்தியமான பல வழிமுறைகளை அதில் கூறியுள்ளார்.
வேதாத்திரி மகரிஷி அவர்களும் ஆசை இயல்பானது அதனை துறப்பது இயற்கைக்கு மாறானது என்றே கூறுகிறார். ஆனால் அதே சமயம் ஆசைகளை பேராசைகளாக வளர்த்துக் கொள்ளக் கூடாது எனவும், நியாயமான ஆசைகளை மட்டும் நிறைவேற்ற முயல வேண்டும் எனவும், நிறைவேறாத நியாயமற்ற ஆசைகளை கைவிட வேண்டும் எனவும் கூறி ஆசைகளை சீர் அமைப்பதற்கு விரிவான வழிமுறைகளையும் கூறியுள்ளார்.
ஆசையிலிருந்து தான் ஒவ்வொரு உயிரும் பிறக்கின்றன. ஆசைகளைத் துறக்க வேண்டும் என்று கூறுவது விதிவிலக்கு இல்லாதது என்று கருதினால் வாழ்வது கூட தவறான செயல் ஆகிவிடும். ஆசை இல்லை என்றால் மூச்சு விடுவதற்குக் கூட ஒருவருக்கும் முயற்சி இல்லாமல் போய்விடும். அதேசமயம் ஆசைகளினால் தவறான செயல்களில் ஈடுபட்டு அளவில்லா துன்பங்களை அடைபவர்களும் இருக்கிறார்கள். ஏன் இந்த வாழ்க்கை என்று வாழ்வைவெறுத்து போனவர்களும் இருக்கிறார்கள். ஆதலால் ஆசைகளால் தான் நாம் வாழ்கிறோம் முன்னேறுகிறோம் என்பது எவ்வளவு உண்மையாக இருக்கிறதோ அதே அளவிற்கு ஆசைகளால் அளவிடமுடியாத துன்பங்களும் ஏற்படுகின்றன என்பதும் உண்மையாக இருக்கின்றன.
ஆற்றில் எவ்வளவோ தண்ணீர் போகும். எல்லாத் தண்ணீரும் எனக்குத்தான் என்று அள்ளி அள்ளிப் பருகினால் வயிறு முட்டி சாக வேண்டியதுதான்! உலகில் நமக்குப் பிடித்தமானவை விருப்பமானவை எவ்வளவோ இருக்கலாம். எல்லாமும் எனக்கு வேண்டும் எனக்கு வேண்டும் என்று பேயாக அலைந்தால், அது வாழ்வில் நிம்மதியை பறிக்கும் நோயாக, துன்பத்தைத் தரும் தீயாக மாறிவிடும்! ஆதலால் நாம் சரியான ஆசைகள் எது? நியாயமான ஆசைகள் எது? நமக்கும் மற்றவர்களுக்கும் துன்பம் தராத ஆசைகள் எது? என ஆராய்ந்து அவற்றை மட்டும் இலட்சிய ஆசைகள் ஆக ஏந்திக்கொண்டு நியாயமற்ற ஆசைகள் பேராசைகள் நிறைவேறாத ஆசைகள் போன்றவற்றை களைவதும் கைவிடுவதும் அவசியமானது என்றே நாம் கருதலாம். ஆதலால் வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஆசைகளை சீர்படுத்துவது பற்றி கூறுகின்ற வழிமுறைகளை பின்பற்ற முயலலாம். அதன்மூலம் வேண்டாத ஆசைகளை விடுத்து இன்பத்திற்கு ஏணியாக இருக்கும் நல்ல ஆசைகளை நாம் வளர்த்துக் கொள்ளலாம். ஆசைகளை சீர்படுத்திக் கொள்வதும், ஞாயமான சரியான ஆசைகளை மட்டும் மனதில் இலட்சியமாக நிலைநிறுத்திக் கொண்டு அதற்காக பாடுபடுவது என்ற நற்குணத்தை வளர்த்துக்கொண்டால் தீங்கு நினையும் மனம் ஏற்படாது. தீங்கு நினையா மனம் ஏற்படும்போதுதான் அன்பு வழியில் நடை போடுதல் சாத்தியமாகும்.
அறத்திற்கு எதிரான அடுத்த குணமாக வள்ளுவர் தெரிவிப்பது வெகுளியாகும். அதாவது கோபம் ஆகும். கோபம் என்னென்ன செய்கிறது; கோபத்தை எப்படி தவிர்ப்பது என்பதைப்பற்றி அடுத்து பரிசீலிப்போம்.
(இன்னும் பரவும்...)
------------------------------------------------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக