அன்பு வழி என்பது ஒளி 7
7. அன்பும் அறமும்
'அமைதிக்கு தேவை அன்பா? அறமா?' என ஒரு பட்டிமன்றத்தை அண்மையில் யூடுயூபில் கண்டேன். 'அறத்திற்கு அன்புதான் அடிப்படை; அன்பு செய்தால் அறம் தானாக அமைந்துவிடும்' என அன்பு தரப்பில் வாதிட்டனர். ஆனால், 'அன்பில் சிலசமயம் சுயநலத்தால் தீமை வரும்; ஆனால், அறத்தில் எப்போதும் நன்மையே ஏற்படும்' என அறத்தின் தரப்பில் வாதிட்டனர்.
அன்பு அறத்திற்கு அடிப்படையா?
அன்பு செய்தால் அறம் தானாக அமைந்துவிடுமா?
அன்பில் சிலசமயம் சுயநலத்தால் தீமை வருமா?
அறத்தில் எப்போதும் நன்மையே ஏற்படுமா?
இப்படி பல கேள்விகள் தோன்றக்கூடியதாக இருக்கின்றன.
அன்பு தாய்மையாக, பாசமாக, காதலாக, நட்பாக, கருணையாக, விசுவாசமாக, நன்றியாக, மனித நேயமாக பல வடிவங்கள் கொண்டது எனவும், எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் மற்றவரிவன் நலனை நாடுவது உண்மையான அன்பு எனவும் நாம் ஏற்கனவே கண்டுள்ளோம். சமுதாயம் முழுவதும் முரண்பாடுகளின்றி, சமாதான சகவாழ்வு வாழ்வதற்காக ஏற்படுத்தப்பட்டதுதான் தர்மம் எனப்படும் அறநெறிகள். அறம் ஏற்படுவதற்கு அன்புதான் அடிப்படை என்பதை காட்ட பெரிய விளக்கம் ஒன்றும் தேவையில்லை.
ஆனால், அறம் என்பது அன்பிலிருந்து எவ்விதத்தில் விலகி செல்கிறது; அல்லது வேறுபடுகிறது? என்பதுதான் சற்று ஆய வேண்டியதாக உள்ளது.
அன்பு சிறிய அளவிலிருந்து பெரிய அளவு வரை விரிவடைய கூடியதாக இருக்கலாம். ஒருவர்மீது கொண்டதாக இருக்கும் போது சிறிய அளவிலான அன்பாக உள்ளது. ஒரு குடும்பத்தின் மீது கொண்டதாகும் போது சற்று விரிவடைந்ததாக மாறுகிறது. ஒரு ஊரின் மீது கொண்டதாகும்போது அது இன்னும் விரிவடைகிறது. ஒரு நாட்டின் மீது, உலக முழுவதின் மீது என அன்பு விரிவடைந்துகொண்டே செல்கிறது.
'தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு
சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டேன்போன்
சின்னதொரு கடுகு போல் உள்ளங் கொண்டோன்!
தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்!
கன்னலடா என் சிற்றூர் என் போனுள்ளம்
கடுகுக்கு நேர் மூத்த துவரை உள்ளம்!
தொன்னையுள்ளம் ஒன்றுண்டு தனது நாட்டுச்
சுதந்திரத்தால் பிற நாட்டைத் துன்புறுத்தல்!
ஆயுதங்கள் பரிகரிப்பார், அமைதி காப்பார்,
அவரவர் தம் வீடு நகர் நாடு காக்க
வாயடியும், கையடியும் வளரச் செய்வார்
மாம் பிஞ்சின் உள்ளத்தின் விளைவும் கண்டோம்!
தூய உள்ளம் அன்புள்ளம் சமத்துவ உள்ளம்
தொல்லுலக மக்களெல்லாம் ‘ ஒன்றே ‘ எனும்
தாயுள்ளம் தனிலன்றோ இன்பம்! ஆங்கே
சண்டையில்லை தன்னலந்தான் தீர்ந்ததாலே!'
என்று அன்பு கடுகு அளவிலிருந்து துவரை, தொன்னை, மாம்பிஞ்சி என பெரிதாகி உலகையெல்லாம் நேசிக்கும் தாயுள்ளமாக விரிவாவதை அருமையாக பாராடியுள்ளார் புரட்சிக்கவி பாரதிதாசன். தாயுள்ளம் என்பதைதான் தூய உள்ளம், அன்புள்ளம், சமத்துவ உள்ளம் என விவரிக்கின்றார்.
சமுதாயம் முழுவதும் நலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணுவதுதான் தாயுள்ளமெனப்படும் பேரன்பாகிறது. சமுதாயம் முழுவதும் நலமாக இருக்க வேண்டுமென்றால் சமுதாயத்தில் உள்ள அனைவரும் ஒருவருக்கொருவர் இடையூறாக இல்லாமல் இணக்கமாக வாழவேண்டும். அவ்வாறு அனைவரும் ஒருவருக்கொருவர் இடையூறாக இல்லாமல் இணக்கமாக வாழ சமுதாய ஒழுங்கு, நெறிமுறை அவசியமாகிறது. அவ்வாறான ஒழுக்க நெறிமுறைதான் தர்மம் எனவும், அறம் எனவும் கூறப்படுகின்றன. ஆதலால், அறம் என்பதற்கு சமுதாயம் முழுவதும் நலமாக இருக்க வேண்டும் என்ற பேரன்புதான் அடிப்படையாக அமைந்துள்ளது என்பது தெளிவானது. ஆதலால், அறம் என்பது வேறு எதுவும் இல்லை; பேரன்புதான்!
அன்பில் சிலசமயம் சுயநலத்தால் தீமை வருமா? என்பதை எடுத்து அடுத்து பார்ப்போம்!
கடுகு உள்ளம், துவரை உள்ளம், தொன்னை உள்ளம் என்றெல்லாம் பாவேந்தர் சொல்கின்றேரே, அவையெல்லாம் சுயநலமான சிற்றன்பு வடிவங்களாகும். தனக்காக, தனது குடும்பத்திற்காக, தனது ஊருக்காக, தனது சாதிக்காக, தனது மதத்திற்காக என பஞ்சமா பாதகம் செய்கிறார்களே? அவர்களின் பாவ செயல்களுக்கு மேற்படி சிற்றன்புகள்தான் நியாயம் கற்பிக்க கூடியவையாக உள்ளன. ஆதலால், சிலசமயம் சுயநலமான சிற்றன்புகளால் தீமை ஏற்படுகிறது என்பது ஏற்கத்தக்கதாகதான் உள்ளது. மனிதர்களுக்கு உள்ள சிற்றன்பு தீமை செய்யும் அளவிற்கு செல்லாமல் காக்க வேண்டியது அவசியமானதுதான்! அந்த இடத்தில்தான் அறம் வந்து கைகொடுக்கிறது. சிற்றன்பின் காரணமாக தீமை ஏற்படுவதை தடுக்க கூடிய கருவியாக அறம் செயல்படுகிறது. அறத்தினால் தீமை தடுக்கப்படுவதால் அறம் அன்பைக்காட்டிலும் உயர்வான இடத்தை எட்டுகிறது.
ஆனால், அறம் என்பது எல்லா காலத்திற்கும், எல்லா இடத்திற்கும், எல்லா சமுதாயத்திற்கும் ஒரே மாதிரியானதாக இல்லை எனவும், ஒரு காலத்தில் தவறானதாக எண்ணப்பட்டவை இன்னொரு காலத்தில் சரியானதாக எண்ணப்படுகின்றன எனவும், ஒரு இடத்தில் தவறானதாக எண்ணப்படுபவை இன்னொரு இடத்தில் சரியானதாக எண்ணப்படுகின்றன எனவும், ஒரு சமுதாயத்தில் தவறானதாக எண்ணப்படுபவை இன்னொரு காலத்தில் சரியானதாக எண்ணப்படுகின்றன எனவும், ஆனால், அன்பு என்பது எல்லாக் காலத்திலும், எல்லா இடத்திலும், எல்லா சமுதாயத்திலும் மாறாமல் ஒரே மாதிரியானதாக உள்ளன எனவும், ஆதலால், அன்பு தான் நிலையானது எனவும், அறம் என்பது நிலையற்றது எனவும் வாதிடுபவர் உள்ளனர்.
சமுதாயம் எல்லா காலத்திலும் ஒரே மாதிரியானதாக இருக்கவில்லை. ஆண்டான் அடிமை சமுதாயம், நிலபுரபுத்துவ சமுதாயம், முதலாளித்துவ சமுதாயம், ஜனநாயக சமுதாயம், பொதுவுடமை சமுதாயம் எனப் பல பல வடிவங்களை சமுதாயம் எடுத்துள்ளது. சமுதாயங்களின் கலாச்சாரங்கள் நாட்டிற்கு நாடு மாறுகின்றன. ஆதலால், சமுதாயம் முழுவதற்குமாக நல்லது கெட்டதை வரையறுக்கும் ஒழுக்க நெறிமுறைகள் காலத்திற்கு காலம், இடத்திற்கு இடம் மாறுவது இயல்பானதுதான்!
சிற்றன்பால் ஏற்படும் தீமைகளை கட்டுப்படுத்தும் கடிவாளமாகத்தான் அறம் எனப்படும் பேரன்பு விளங்குகிறது. ஆதலால், அன்பு சிறப்பானதே. அது சிற்றன்பாக இல்லாமல் பேரன்பாக, அறவுணர்வோடு கூடிய அன்பாக வளர்த்துக்கொண்டால் தீமை ஏற்படாது.
எல்லாக்காலங்களிலும், சமுதாயத்தில் அன்பும் இருக்கிறது. அதே அளவிற்கு வெறுப்பும் இருக்கிறது. நல்லதும் கெட்டதும் கலந்தே நடந்து வருகின்றன. உலகில் சமாதானத்திற்கு எவ்வளவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், யுத்த அபாயங்களும் தொடர்ந்துகொண்டேதான் உள்ளன.
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்ட வேண்டுமெனவும், பகைவருக்கும் அன்பு காட்ட வேண்டுமெனவும் பெரியவர்கள் கூறுகின்றனர். ஆனால், அன்புக்கு அன்பு காட்டலாம்; வெறுப்புக்கு வெறுப்பைத்தானே காட்டமுடியும் என கூறுபவர்தான் அதிகம் உள்ளனர்.
ஒரு நாடு போர் தொடுத்தால், அதை எதிர்த்து இன்னொரு நாடும் போராடித்தானே ஆக வேண்டும்? ஒரு நாடு இன்னொரு நாட்டை அடிமை ஆக்கி அட்டூழியங்கள் செய்து வந்தால், அந்த நாட்டிற்கு எதிராக சுதந்தர போராட்டத்தை நடத்ததானே வேண்டும்.
இங்கிலாந்து இந்தியாவை அடிமைப்படுத்தி சுமார் 200 ஆண்டுகள் ஆண்டது. 1857ல் முதல் சுதந்திர போர் நடந்தது. அது அவ்வப்போது பல வடிவங்களில் 1947 வரை தொடர்ந்தது. பலப்பல ஆயுதப் போராட்டங்கள் நடந்தபோதிலும், இந்திய சுதந்திரப் போராட்டத்தை மகாத்மா காந்தி அவர்கள் அன்பு வழியில் அறவழியில் முன்னெடுத்தார்?
மகாத்மா காந்தியின் அன்பு வழி அறவழி போராட்டந்தான் பெருந்திரளான மக்களை சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ள வைத்தது. ஆங்கிலேயர் சட்ட நீதி நெறிகளை கடைபிடித்தனர். ஆதலால், மகாத்மாவின் அன்பு வழி அறவழி போராட்டங்கள் வெற்றி பெற்றன. ஆங்கிலேயர்கள் சட்ட நீதி நெறிகளை கடைபிடிக்காத கொடுங்கோல் ஆட்சி புரிபவர்களாக இருந்திருந்தால், மகாத்மாவையும் கொன்று அவரது அன்பு வழி அறவழி போராட்டத்தையும் ஒரே நாளில் நசுக்கி இருப்பார்கள் என சிலர் கூறுகிறார்கள். அன்பு வழி அறவழி போராட்டங்கள் உண்மையிலேயே பெரும் வல்லமை உடையவைதானா? இன்றைய காலகட்டத்தில் இது சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒன்றுதான்! அடுத்த அத்தியாயத்தில் சிந்திப்போம்.
(இன்னும் பரவும்...)
-----------------------------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக