அன்பு வழி இன்ப ஒளி 13

 13. இன்சொல் பேசு!


வார்த்தைகள் மனிதன் கண்டறிந்த, மனிதனுக்கு வாய்த்த அரிய வரம். பல நேரங்களில் அதுவே சாபமாய் முடிவது பரிதாபமானது. செய்கைகள், ஒற்றை சப்தங்கள் மூலம் மட்டுமே, மனிதன் தன் எண்ணத்தை சொன்னவன், மொழியை கண்டறிந்து வார்த்தைகளை பிரயோகித்த போது, மனிதன் அடுத்த தளத்திற்கு தன்னை உயர்த்தி சந்தோசம், துக்கம் போன்ற உணர்வுகளை வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்த துவங்கினான். 

அன்பு மனதில் ஊற்றெடுக்கும்போது அன்பாக இனிய வார்த்தைகளைப் பேசுகிறோம். ஆனால், கோபம் ஏற்படும்போது குத்திக் கிழிக்கும் கடுஞ்சொற்களை பேசுகிறோம். நாம் பேசும் கடுஞ்சொற்கள் எவ்வளவு தீமையானது தெரியுமா? 

வாளால் ஏற்படும் காயத்தைவிட வார்த்தைகள் ஏற்படுத்தும் வலி கொடூரமானது. அடிப்படையில் "நாம் விரும்பும்படி காரியங்கள் நடக்கவில்லை" எனில் கோபம் ஏற்படுகிறது. கடும் சொற்கள் முக மலர்ச்சியையும் அக மலர்ச்சியையும் கொல்லும். கோபம் ஒரு  நெருப்பு. அதைச் சரியாகக் கையாளாவிட்டால் சினமுற்றவரையே அழித்துவிடும். கட்டுப்படுத்தாத கோபம் கடுஞ் சொற்களாக வெளிப்படும். அந்த விஷச் சொற்கள் உள்ளத்தை ஊடுருவிச்சென்று கொல்லும்! மனதில் வாழ்நாள் வடுவாகத் தங்கும். எத்தனை காலங்கள் கடந்தாலும் அது மறையாது. உறவுகளில் அது என்றும் நெருடலாகவே இருக்கும். 

“தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு.” என்கிறது திருக்குறள். தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும். ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது என்கிறார் திருவள்ளுவர். நாக்கு, கலைமகள் அமரும் இடம். சுடு சொற்களை உபயோகித்தால், கலைமகள் நிரந்தரமாய் விலகி விடுவாள் என்கிறார்கள் பெரியவர்கள்.  மனிதன் உடம்பில் இருந்து வெளிப்படும் ரத்தம், வியர்வை, கண்ணீர், அனைத்தும், உவர்ப்பு சுவை உடையவையே! மனிதனால், வெளிப்படுத்த முடிந்த தித்திப்பான விஷயம் என்றால் அது நல்ல பேச்சு மட்டுந்தான்.  ஆதலால், நல்ல சொற்களையே பேச வேண்டும். 

'இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.' என்கிறது திருக்குறள். இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது  என்கிறார் திருவள்ளுவர். இன்சொற்கள் தேன்கூடு போன்றவை; மனத்திற்கு இனிமையானவை, உடலுக்கு நலம் தருபவை. மனிதனின் பேச்சு என்பது மற்றவர்களை பண்படுத்தாவிட்டாலும் கூட புண்படுத்தாத வகையில் அமைந்திருக்க வேண்டும்.

அரசர் ஒருவர் தன் நாட்டு மக்கள் இன்பமாகவும், விவேகமுள்ளவர்களாகவும் வாழ என்ன செய்ய வேண்டும் என்று அறிய ஆசைப்பட்டார். அவர் ஒரு பொருட்காட்சி அமைத்து, நாட்டிலுள்ள அறிஞர்கள் அனைவரையும் வரவழைத்து, ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக வாழ்வதற்குத் தேவையான பொருட்களைக் கொண்டு வர அவர்களிடம் சொன்னார். பொருட்காட்சிக்கு வந்த அரசர், அங்கு வரிசையாக அடுக்கியிருந்த மலர்கள், பழங்கள், அழகிய செடிகள், இனிப்புகள், உடைகள், புத்தகங்கள், இசைக் கருவிகள், தங்க ஆபரணங்கள் மற்றும் அழகிய கைவினைப் பொருட்கள் ஆகியவற்றைப் பார்த்தார். ஆனால் இவை அனைத்தும் எல்லோரையும் மகிழ்வூட்டும் பொருட்களாக அவருக்குத் தென்படவில்லை. கடைசியாக களிமண்ணால் செய்த ஒரு வண்ணமயமான பொம்மையை அவர் கண்டார். அது ஒரு மனிதனின் நாவு – ஏழ்மையான, மெலிந்த, முதியவரிடம் பேசுவது போல் அமைந்திருந்தது. அந்த பொம்மையின் கீழே “இனிய சொற்களை பேசும் நாவு” என்று எழுதியிருந்தது.

இதைப் பற்றி மேலும் அறிய, அரசர் அந்த பொம்மையை செய்த சிற்பியை வரவழைத்தார். சிற்பி, “அரசே! பொருட்காட்சியிலுள்ள எல்லாப் பொருட்களும், மனிதனை சில காலத்திற்கு மகிழ்ச்சியாக வைத்திருக்கும். ஆனால் இனிய சொற்களைப் பேசும் நாவு, பரிவையும், அன்பையும் வெளிப்படுத்தி, கேட்பவரை வெகுகாலம் மகிழிச்சியடையச் செய்யும்; துன்பப்படுபவர்களுக்கு நம்பிக்கையையும், உற்சாகத்தையும், வலுவுற்றவர்களுக்கு மனோபலத்தையும், தன்னம்பிக்கையையும், அனாதைகளுக்குப் பரிவையும், பாசத்தையும் அளிக்கும். இனிய சொற்கள் மட்டுமே மனிதக் குலத்தை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்”. என்றான். பேரின்பம் அடைந்த மன்னன், பரிசாக அந்த சிற்பிக்குப் பெட்டகம் நிறைய தங்க ஆபரணங்களை வழங்கினார்.

சில நாட்களுக்குப் பிறகு, மனிதர்களைத் துயரத்தில் ஆழ்த்துபவை எவை என அறிய அரசர் ஆவலுற்றார். அவர் மறுபடியும் நாட்டிலுள்ள எல்லா அறிஞர்களையும் அழைத்து, மனிதர்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தும் பொருட்கள் அனைத்தையும் பொருட்காட்சியில் வைக்கச் சொன்னார். இந்த முறை, பொருட்காட்சியில் கத்தி, வாள், கம்பு, சாட்டை, மதுபானம், குரைக்கும் நாய் போன்ற பொருட்கள் நிறைந்திருந்தன. ஆனால் இவை அனைத்தும் அரசருக்கு மன நிறைவை அளிக்க வில்லை. கடைசியில் முன்பு பார்த்தது போல, இம்முறையும் ஒரு களிமண் பொம்மையைக் கண்டார். ஆனால் இந்த பொம்மையின் கண்கள் சிவந்து, நாவு கரிய நிறத்தில் இருந்தது; அது ஏழ்மையான, உடல் மெலிந்த, பசியால் தவிக்கும் ஒரு முதியவரிடம் கடும் சொற்களை உச்சரித்துக் கொண்டிருந்தது. பொம்மையின் கீழே, “தீய சொற்களைப் பேசும் நாவு” என்று எழுதப்பட்டிருந்தது. மறுபடியும் அந்தச் சிற்பி அழைக்கப்பட்டான். அவன் தனது படைப்பைப் பற்றி கீழ்வருமாறு கூறினான் – “அரசே! தீய நாவிலிருந்து வரும் சொற்கள், ஒரு மனிதனின் சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் கொன்றுவிடும்; நம்பிக்கையையும், துணிச்சலையும் நாசமாக்கும். மனிதனை துன்பக்கடலில் மூழ்கடிக்கும். மனது புண்பட்டு, அந்தக் காயம் பல வருடங்களுக்குப் பிறகும் ஆறாதிருக்கும். தீய சொற்களே மனிதனின் மிகப் பெரிய எதிரி”. என்றான். பேரின்பம் அடைந்த மன்னன், பரிசாக அந்த சிற்பிக்குப் மீண்டும் பரிசுகள் வழங்கினார். இனிமையாகப் பேசுவதே நிரந்தர இன்பம் எனவும், கடுமையாக பேசுவதே என்றென்றும் துன்பம் எனவும் அரசன் உணர்ந்தான். 

சக்ரவர்த்தி திருமகன் திரைப்படத்தில் எம்.ஜி.ஆரும், என்.எஸ்.கே.வும் பாடும் போட்டி  பாடலில்  உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது? என்று என்.எஸ்.கே. கேட்கும் கேள்விக்கு எம்.ஜி.ஆர் தரும் பதில் என்ன தெரியுமா? 'நிலைக்கெட்டுப் போன நயவஞ்சகரின் நாக்குத்தான்!' என்பது ஆகும்.  நிலைக்கெட்டுப்போன நாக்குதான் உலகத்திலே பயங்கரமான ஆயுதம் என்பதை விரும்பமற்ற செயல் ஏற்படும் சமயத்தில் நினைவில் கொண்டால், அவ்வாறான கடுஞ்சொல் பேசுவதைக் கட்டுப்படுத்திக்கொள்ளத் தோன்றும். 

இனிய சொற்கள் பேசுவதின் சிறப்பை உணர்த்த ஒரு மகாபாரதக்கதை இருக்கிறது. அது  தெரியுமா? அதையும் காண்போம்: 

பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்தபோது ஒருமுறை கர்ணன் கிருஷ்ணரைச் சந்திக்க நேர்ந்தது. "கண்ணா எனக்கு ஒரு சந்தேகம்!" என்றான் கர்ணன். "கேள்!" என்றார் கிருஷ்ணர். "நீ என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய்?" எனக்கேட்டான் கர்ணன். "நீ ஒரு பெரிய வீரன். வில்வித்தையில் சிறந்தவன்." என்றார் கிருஷ்ணர். "அவ்வளவுதானா?" என்றான் கர்ணன். "வாள் வீச்சு போன்ற பிற போர்க்கலைகளிலும் வல்லமை பெற்றவன்." என்றார் கிருஷ்ணர். "நான் என் வீரத்தைப் பற்றிக் கேட்கவில்லை.." என்றான் கர்ணன். "வேறு எதைப் பற்றிக் கேட்கிறாய்?" எனக் கேட்டார் கிருஷ்ணர். "என்னை ஒரு கொடைவள்ளல் என்று எல்லோரும் சொல்கிறார்களே!"என்றான் கர்ணன். ஓ! அதுவா? நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். நேரில் பார்த்ததில்லை."என்றார் கிருஷ்ணர். "அப்படியானால் நான் ஒரு வள்ளல் என்று நீ ஒப்புக்கொள்ள மாட்டாயா?"என்றான் கர்ணன். "நான் எங்கே அப்படிச் சொன்னேன்? நீ கேட்டவர்களுக்குக் கேட்ட பொருட்களை வழங்குபவன் என்று எல்லோரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். யார் எது கேட்டாலும் அதைக் கொடுப்பது என்ற ஒரு விரதத்தையே நீ பின்பற்றுவது கூட எனக்குத் தெரியும்."என்றார் கிருஷ்ணர். 

கர்ணன் மௌனமாக இருந்தான். "கர்ணா? உன் குறை என்ன? அதைச் சொல்" என்றார் கிருஷ்ணர். "நான் அங்க தேசத்து அரசனாக இருக்கிறேன். என்னிடம் தினம் எத்தனையோ பேர் வந்து பொருட்களைக் கேட்டு வாங்கிச் செல்கிறார்கள். என்னை வள்ளல் என்றும் சொல்கிறார்கள்.....ஆனால் எங்கேயோ காட்டில் இருக்கும் தர்மனைத் தேடி தினமும் பலர் தொலைதூரம் நடந்து போகிறார்களே, அது ஏன்? எனக்கேட்டான் கர்ணன். 


"எனக்குத் தெரிந்து தர்மன் அதிகம் பொருட்களை வழங்கியதாகத் தெரியவில்லை. கொடுப்பதற்கு இப்போது அவனிடம் பொருள் எதுவும் இல்லை என்பது உண்மைதான். ஆனால் அவன் ஹஸ்தினாபுரத்தில் இளவரசனாக இருந்தபோதும், இந்திரப்பிரஸ்தத்தின் அரசனாக இருந்தபோதும் கூட அப்படி ஒன்றும் யாருக்கும் வாரி வழங்கியதாகத் தெரியவில்லை. பின் ஏன் அவனைத் தேடி இத்தனை பேர் போகிறார்கள்? உன் கேள்விக்கு நீயே பதில் சொல்லி விட்டாயே கர்ணா!" என்றார் கிருஷ்ணர் சிரித்தபடி. "புரியவில்லையே கிருஷ்ணா!" என்றான் கர்ணன்.


"தர்மனைத் தேடித் போகிறவர்கள் அவனிடம் பொருட்களை எதிர்பார்த்துப் போகவில்லை." என்றார் கிருஷ்ணர். "பின் எதற்குப் போகிறார்கள் என்பதுதானே என் கேள்வி?" என்றான் கர்ணன். "அவனுடைய இனிய சொற்களைக் கேட்பதற்காகப் போகிறார்கள்!" என்றார் கிருஷ்ணர். "என்ன சொல்கிறாய் கண்ணா?" என்றான் கர்ணன். 


"கேட்டவர்களுக்கு கேட்டதைக் கொடுப்பது என்ற விரதத்தை நீ கடைப்பிடித்து வருவதுபோல், தர்மனும் ஒரு தர்மத்தைக் கடைப்பிடித்து வருகிறான். யார் மனதையும் புண்படுத்தாமல் பேச வேண்டும் என்ற தர்மம்தான் அது. அதனால் அவனிடமிருந்து இனிய சொற்கள் மட்டும்தான் வரும். அந்த இனிய சொற்களைக் கேட்பதற்காகத்தான், இங்கே நகரத்தில் வசிக்கும் மக்கள் அவனைத் தேடிப் போகிறார்கள்." என்றார் கிருஷ்ணர். 


"நானும் இனிய சொற்களைத்தானே பேசுகிறேன்?" எனக் கேட்டான் கர்ணன். 


"அப்படியா? சூதாட்டத்தில் பாண்டவர்கள் தோற்றபின், கௌரவர் சபையில், பாண்டவர்களையம், திரௌபதியையும் நீ இழிவாகப் பேசியதெல்லாம் இன்சொற்களா? மாறாக, தர்மன் தனக்குக் கொடுமைகள் செய்த துரியோதனனைப் பற்றிக் கூடக் கடிய சொற்களைப் பயன்படுத்த மாட்டான்." என்றார் கிருஷ்ணர். கர்ணன் மௌனமாக இருந்தான்.


"நீ கடைப்பிடிக்கும் கொடை தர்மத்தை விட, இனிய சொற்களை மட்டுமே பேசுவது என்று உறுதி பூண்டிருக்கும் தர்மனின் தர்மம் உயர்ந்தது." என்றார் கிருஷ்ணர். அதைத்தான் திருக்குறளும்,


'அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து

இன்சொலன் ஆகப் பெறின்.'


என்று கூறுகிறது. மனமகிழ்ச்சியுடன் பிறருக்குப் பொருள் ஈவதைக் காட்டிலும், முகமகிழ்ச்சியுடன் இனிய சொற்களைப் பேசுவது சிறந்தது என்கிறார் திருவள்ளுவர். 


இனிய சொற்கள் பிறருக்கு நம்பிக்கை ஊட்டும். நமது வார்த்தைகள் உயிரூட்டுவதாக அமைய வேண்டும். சில நேரங்களில் கோபத்தோடு சொல்லும் வார்த்தைகள் பிறரை புண்படுத்தி அவர்கள் வாழ்க்கையையே அழித்து விட கூடும். 'யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.' என்கிறது திருக்குறள். எதைக் காக்க முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர் என்கிறார் திருவள்ளுவர். வாய்க்கு காவல் வைப்பதென்பது என்னவென்றால், எரிச்சலடையும்பொழுது வாயை மூடிக்கொண்டு சரியான வார்த்தைகளை, சரியான தொனியில் பேசுவது அல்லது பேசாமலிருக்க முயற்சி செய்வது ஆகும். பேசும்முன் நம்முடைய  வார்த்தைகள் நல்ல வார்த்தைகளா? பயன் தரும் வார்த்தைகளா? என ஒரு நொடி சிந்தித்து பேசுவது சிறப்புடையதாகும். இனிய சொற்கள் பேசும் போது நம்பிக்கை பெருக்கெடுக்கும்; உறவுகள் மேலும் வலுப்பெறும்.


மருத்துவர் தரும் உற்சாகமளிக்கும் வார்த்தைகள், நோயாளிகள் வேகமாக குணமடைய உதவியாயிருக்கின்றது என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. "இனிய சொற்கள் தேன் கூடு போல் ஆத்துமாவுக்கு இனிமையும், எலும்புகளுக்கு மருந்துமாகும்” என்கிறது நீதிமொழிகள். நேர் முகச்சிந்தனையுள்ள வார்த்தைகள் நமது உடல் நலத்திற்கு உதவுவது மட்டுமல்ல, ஞானமுள்ள வார்த்தைகளுக்கு நாம் செவிகொடுக்கும் போது, அது நற்செயல்களுக்கு வாய்ப்பளிக்கும்.  நம் வாழ்வின் சவால்களைச் சந்திக்க, அவை ஊக்கமளிப்பதோடு, நம் எதிர்காலத்தையும் சந்திக்க உதவியாயிருக்கும்.


'இனிய காலை வணக்கம்', 'இனிய நல்வாழ்த்துக்கள்', 'இந்த நாள் இனிய நாளாகட்டும்', 'வாழ்க வளமுடன்!, வாழிய வையகம்!' என சிலர் பிறரை எப்போதும் வாழ்த்திக்கொண்டே இருக்கிறார்கள். 'அவ்வாறு வாழ்த்துவதால் பிறர் வாழ்கிறார்களா?', 'வாழ்த்துக்கள் பயன் அளிக்கின்றனவா?' என்பது நமக்கு அவ்வப்போது தோன்றும் கேள்விகள். இந்த கேள்விக்கு அடுத்த அத்தியாயத்திற்கு வாருங்கள்! பதில் தேடுவோம்!

------------------------------------------------------------------------------------------------------------------------ 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பு வழி இன்ப ஒளி 15

தமிழ்நாடு அன்புவழி அறப்பணி மன்றம்

அன்பு வழி இன்ப ஒளி -1