அன்பு வழி இன்ப ஒளி -1
1. அன்பு என்பது சுயநலமா?
'அன்பு என்று எதுவுமில்லை! அவனவன் சுயநலத்திற்கு தந்து கொண்டுள்ள பெயர்தான் அன்பு!' காமத்தை தணித்துக்கொள்ளும் சுயநலத்திற்குத்தான் காதல், கல்யாணம், குடும்பம், கணவன் மனைவி அன்பு எல்லாம்! கஷ்ட நேரத்தில் உதவி பெருவதற்குத்தான் நட்பு! என்று ஒரு நண்பர் சொன்னார். 'தாய்மை அன்பு கூட சுயநலந்தானா?' என்று வினா எழுப்பியபோது, 'வயோதிக காலத்தில் காப்பாற்றுவார்கள் என்றுதான் குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள். அதுவும் சுயநலந்தான்!' என்றார் நண்பர். அந்த நண்பர் சொன்னதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? மறுப்பீர்களா?
ஏற்றுக்கொள்பவர்கள் என்ன சொல்வீர்கள்? ஒருவகையில் பார்த்தால் எல்லோரும் எதையாவது எதிர்பார்த்து, அல்லது எப்போதாவாது எதற்காவது பயன்படுவார் என்றுதான் யார்மீதும் அன்பு காட்டுகிறார்கள் என்பதால் அந்த நண்பரின் கூற்று சரிதான் என்று சொல்வீர்கள். மறுப்பவர் என்ன சொல்வீர்கள்? எதையாவது எதிர்பார்த்து காட்டப்படும் அன்பு, எப்போதாவது பயன்படும் என்ற எண்ணத்தில் கொள்ளும் அன்பு உண்மையான அன்பல்ல! எதையும் எதிர்பாராமல் அன்பு காட்டுவது என்பது இல்லாமல் இல்லை! அதுதான் உண்மையான அன்பு! என்ன, அத்தகைய அன்பு உலகில் குறைவாக உள்ளது!' என்று சொல்வீர்கள்.
அன்பு என்பது சுயநலமா? அல்லது எதையும் எதிர்பாராததா? என்ற வினாவிற்கு விடை காணும் முன்பாக அன்பு என்றால் என்ன என்று அறிய வேண்டுவது அவசியமில்லையா?
'அன்பு என்றால் என்ன?' என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்?
'அது ஒரு உணர்வு!' என்பீர்கள்.
'அது ஒரு தேவை!' என்பீர்கள்.
'அது ஒரு தெய்வம்' என்பீர்கள்.
'அது ஒரு சக்தி' என்பீர்கள்.
இவையெல்லாம் அன்பின் தன்மையை விளக்கக்கூடியவைதான். ஆனால், அன்பு என்பதற்கு சரியான முழுமையான ஒரு வரையறையைத் தரவில்லை. யானையைத் தொட்டுப்பார்த்த பார்வையற்றவர்கள் பலரும் பலவிதமாக சொன்னதுபோல் உள்ளன.
அன்பு என்பதற்கு நாம் ஒரு முழுமையான சரியான வரையறையை கண்டறிய இயலுமா?
தமிழ் விக்கிப்பீடியா அன்பு என்பது உணர்ச்சி மற்றும் மனநிலை சார்ந்த பல்வேறு வகையான உணர்வுகளையும் அனுபவத்தையும் குறிக்கிறது எனக் கூறியுள்ளது. ஒவ்வொருவரும் மற்றவரிடம் கொள்ளும் புரிதல் தான் அன்பு என்கிறார் ஒருவர். அன்பு என்பது உள்ளுணர்வு என்கிறார் இன்னொருவர். அன்பு என்பது தொடர்பு இல்லாத ஒன்றைத் தேடிக் கண்டுபிடித்து அதன்மீது அளவில்லாத பற்று வைப்பது என்கிறார் மற்றொருவர். இன்னொருவருக்கு கொடுத்து அதில் நிறைவு பெருவது அன்பு என்கிறார் வேறொருவர். அன்புதான் இந்த உலகத்தைச் செலுத்தும் சக்தி; மனிதனின் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு என்கிறார் இன்னுமொருவர்.
அன்பு என்பது உடம்பும், மனமும், அறிவும், அனுபவமுமான நான் என்பதைக் கடந்து வாழ்வின் இருப்பின் இயற்கையின் வேறொன்றில் பரவி விரிவதால் கிடைக்கும் ஆனந்தம் என்கிறார் ஓஷோ. வாழ்க்கையின் சர்வரோக நிவாரணி அன்பு; அன்பே வாழ்க்கை என்கிறார் ஜோஸப் ஜான்ஸன். பிறர் மகிழ்ச்சியாக இருக்க விரும்புவதும், அதற்கான காரணங்களாக கட்டமைப்பதுவே அன்பு என்கிறது புத்தம். பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் எல்லோரிடத்திலும் பாகுபாடில்லாது செலுத்தும் விருப்பம் அன்பு என்கிறார் யோங்ஜின் லிங் ரின்போச் என்பவர். அன்பும் தெய்வமுமொன்றென உண்மையை அறிந்தவர்கள் அன்பிலே தெய்வத்தைக் கண்டு அந்தப் பேரின்பத்திலே நிலை நிற்பர் என்கிறார் திருமூலர். இவ்வாறாக பலரும் பலவிதமாக அன்பைப்பற்றிக் கூறியுள்ளனர்.
மேற்படியாக பலரும் கூறியுள்ளதில் இருந்து அன்பு என்பது எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாது பிறரின் நலனை விரும்புவதின் மூலம் மகிழ்ச்சி அடையும் ஓர் உணர்வு என்று தெரிகிறது. ஒவ்வொரு உயிரும் இத்தகைய அன்பை சக உயிர்களிடமிருந்து பரஸ்பரம் தரவும் பெறவும் விரும்புமின்றன. அவ்வாறு பெறுகின்றபோது ஆனந்தமடைகின்றன. அன்பு என்பது இறை அம்சம்; அதனை கொடுப்பதிலும், பெருவதிலும் இன்பம் ஏற்படவேண்டும்.
அன்பின் வரையறையை அறிகின்றபோது, அன்பு என்பது சுயநலமா? அல்லது எதையும் எதிர்பாராததா? என்ற வினாவிற்கு விடை கிடைத்துவிட்டதுபோல் தோன்றுகிறது அல்லவா?
அன்பிற்கு பாசம், காதல், நட்பு, நன்றி, விசுவாசம் என்று பல வடிவங்கள் உள்ளன. சிவபுராணத்தில் மாணிக்கவாசகர் 'பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனே!' என்று சிவபெருமானைத் துதிக்கிறார். பாசத்தை அறுக்க வேண்டும் என்று கூறுவதால் பாசம் கெடுதலானதா என்ற கேள்வி எழுகின்றதல்லவா? மேலும், பாசத்திற்கும் அன்பிற்கும் வேறுபாடு உள்ளதா என்ற கேள்வியும் உடன் எழுகிறதல்லவா?
பாசம் என்பது எதிர்பார்ப்பு உள்ள சுயநல உணர்வு எனவும், அன்பு என்பது எதிர்பார்ப்பற்ற சுயநலமற்ற உணர்வு எனவும் வேறுபடுத்துகின்றனர். ஒருவர் தன் தேவைகளை பூர்த்தி செய்ய நினைத்து செயல்படுத்தும் அன்பால் அடுத்தவர்கள் பாதிக்கப்பட்டால் அது சுயநலம் எனவும், அடுத்தவர்கள் பாதிக்கப்படாமல் தன் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக செலுத்தும் அன்பு சுயநலமாகாது எனவும் கூறுபவரும் உள்ளனர்.
பாசந்தான் பந்தத்தில் சிக்க வைக்கிறது; பாசந்தான் பாவம் செய்யத் தூண்டுகிறது; பாசம்தான் கண்களை மறைக்கிறது; ஆனால், பாசம் இல்லாவிட்டால் உந்த உலகம் இயங்க முடியுமா? தாயின் பாசம் இல்லாவிட்டால் குழந்தை வளரமுடியாது. ஆதலால், பாசம் தேவைதான். ஆனால், அளவிற்கு மீறிய பாசம் பாசம் காட்டுபவரையும், பாசத்திற்கு ஆளானவர்களையும் ஒரு சேர அழித்து விடுகிறது. மகாபாரதத்தில் திருதராஷ்ட்ரன் தன் மகன் துரியோதனன் மீது வைத்த அளவு கடந்த பாசத்தால் அவன் செய்த தீய செயல்கள் அனைத்தையும் கண்டும் காணாமலும் இருந்ததால், அவன் தீயவனாகி தீய செயல்களைச் செய்து அவனும் அவன் வம்சமும் அழியக் காரணமாகிவிட்டான். இராமாயணத்தில் கைகேயி தன் மகன் பரதனிடம் வைத்த பாசத்தால் தன் கணவனையையும் இழந்து, தன் மகனின் அன்பையும் இழந்தாள். ஆதலால், சுயநலமான பாசம் தீங்கு பயப்பது என்ற கருத்தும் உள்ளது.
ஆதலால், அன்பு என்பது சுயநலமற்றது; எதிர்பார்ப்பு இல்லாதது என்பதுதான் பலரின் கருத்தாக உள்ளது என்பது விளங்குகிறது. ஆனால், இன்று சுயநலமான அன்புதான் மிகுந்து உள்ளது. அது உண்மையான அன்பல்ல. அது எதிர்பார்ப்பு இல்லாத உண்மையான அன்பு அல்லாததால்தான் எதிர்பார்ப்பு நிறைவேறாதபோது அது வெறுப்பு என்ற எதிர்நிலைக்கு மாறிவிடுகிறது. அன்பும் வெறுப்பும் எதிரெதிரானது. வெறுப்பாக மாறும் அன்பு உண்மையான அன்பு அல்ல. உண்மையான அன்பு என்பது எந்தநிலையிலும் வெறுப்பாக மாறாமல் அன்பு காட்டுவதாகவே இருக்கும்.
அன்பு எப்படி வெறுப்பாக மாறுகிறது? வெறுப்பு என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக