புத்தர் காட்டிய போரற்ற உலகம்
புத்தர் காட்டிய போரற்ற உலகம்
புத்தர் வகுத்த பஞ்ச சீலங்களென்பன:
(1) கொல்லாமை
(2)கள்ளாமை (நினைவிலும்செயலிலும் களவாடாதிருத்தல்)
(3) பிறர் மனை நயவாமை
(4) பொய்யாமை
(5) கள்ளுண்ணாமை
ஆகியவை ஆகும்.பௌத்தம் உயர்ந்த கருத்துக்களிலும் உன்னதமான ஒழுக்கத்திலும் தத்துவ ஞானத்திலும் மட்டுமே அக்கறை காட்டுகிறது. மக்களின் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றி அது அக்கறை கொள்வதில்லையென்று சிலர் நினைப்பதுண்டு. அது தவறு. மனிதருடைய நலங்களிலே தான் புத்தர் கருத்துடையவராயிருந்தார். தார்மீகக் கொள்கைகளையும் ஆன்மீகக் கோட்பாடுகளையும் அடிப்படையாகக் கொள்ளாது தூய வாழ்வு வாழ முடியாது. தூய வாழ்வில்லாவிட்டால் மனிதன் சுகமடைய முடியாது என்று புத்தர் கருதினார். ஆனால் வாய்ப்பான சமூகச் சூழலும் பொருள் வளமும் இல்லாமல் தூய வாழ்க்கை நடத்துவது சிரமம் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.
உலகியல் இன்பம் தான் வாழ்வின் இலட்சியம் எனப் பௌத்தம் கொள்ளவில்லை. அது இலட்சியத்துக்கு ஒரு சாதனமாயுள்ளது. மனிதன் மேலான சுகத்தைப் பெறுவதற்கு பொருள் இன்றியமையாத சாதனமே. அதனால் ஆன்ம ஈடேற்றம் பெறுவதற்குக் குறைந்த பட்சம் பொருள் வளம் அவசியமென்பதை பௌத்தம் ஏற்றுக் கொள்ளுகிறது.
உயிர்வாழ்தல் என்பது சமூகப் பொருளாதாரச் சூழ்நிலையில் தான் நிகழும். புத்தர் இதைப் பிரித்துவிட விரும்பவில்லை. சமூகப் பொருளாதார அரசியல் பின்னணியில் தான் அவர் வாழ்வை வைத்து முழுநோக்காகக் கண்டார். தார்மீக, ஆன்மீக, தத்துவப் பிரச்சினைகள் சம்பந்தமாக அவர் செய்த போதனை பிரசித்தமானது. ஆனால் சமூக பொருளாதார அரசியல் சம்பந்தமாக அவர் செய்த போதனையைப் பற்றிய அறிவு குறைவு.
வறுமையே ஒழுக்கக் கேட்டுக்கும், களவு, பொய், இம்சை, துவேஷம், கொடுமை முதலிய குற்றங்களுக்கும் காரணமெனக் கூறபடுகிறது. இன்றைய அரசாங்கங்களைப் போலவே புராதன காலத்திலும், அரசர்கள் தண்டனையால் குற்றங்களைத் தடுக்க முயன்றனர். அது பயனற்றதெனவும், அந்த முறை ஒரு போதும் கருதிய பலனைக் கொடுக்கமாட்டாதென்று புத்தர் கூறுகிறார்.
குற்றத்தைத் தடுப்பதானால் மக்களின் பொருளாதார நிலையை அபிவிருத்தி செய்ய வேண்டுமென புத்தர் கூறுகிறார். விவசாயிகளுக்கு விதை நெல்லும், ஏனைய சகாயங்களுஞ் செய்து கொடுக்க வேண்டுமென்றும், வியாபாரத்திலீடுபட்டவர்க்கும், வணிகர்க்கும் முதல் வழங்க வேண்டுமென்றும், தொழில் செய்வோருக்குத் தகுந்த ஊதியம் வழங்கப்படவேண்டுமென்றும் கூறுகிறார். போதிய வருமானத்தைச் சம்பாதிப்பதற்கு மக்களுக்கு வசதிகளை உண்டாக்கிக் கொடுத்தால் அவர்கள் திருப்தியடைவார்கள். பயமோ கவலையோ இன்றி வாழ்வர். நாட்டிலே குற்றச் செயல்கள் அருகிச், சமாதானம் நிலவும் என எடுத்துக் காட்டியுள்ளார்.
இதனால் புத்தர் இல்லற வாழ்வில் ஈடுபடுவோருக்கு போதனை செய்த போது பொருளாதார நிலைமையை அபிவிருத்தி செய்வதன் முக்கியத்தை வலியுறுத்தினார். ஆசையினாலும், பற்றினாலும் பணத்தைப் பதுக்கிவைக்க வேண்டுமென அவர் கூறவில்லை. அது அவருடைய அடிப்படைப் போதனைக்கு மாறானதாகும். அன்றியும் எந்த முறையிலும் ஒருவர் ஆயுதங்களை உற்பத்தி செய்வதும் அவற்றை விற்பதும் உயிர் வாழ்தலுக்கான தீய வழி எனக் கண்டித்தார்.
இவ்வுலக வாழ்வில் சுகம் பெறுவதற்கு நாலு காரியங்களுண்டு எனப் புத்தர் கூறினார். அவற்றில் முதலாவது ஒருவன் தன் தொழிலில் திறமையும் அறிவும், ஊக்கமும், ஆர்வமும் உடையவனாயிருக்க வேண்டும். தொழிலை நன்கு அறிந்திருக்க வேண்டும் என்றார். இரண்டாவதாக வியர்வை சிந்தி நல்லவழியில் சம்பாதித்த பணத்தைப் பாதுகாக்க வேண்டும். மூன்றாவது, உண்மையும் கல்வி ஒழுக்கங்களும் கண்ணியமும் விவேகமுள்ள நண்பர்கள் வேண்டும். அவர்கள் அவனை நல்வழியில் இட்டுச் செல்லக் கூடியவராயிருக்க வேண்டும். நாலாவது வரவுக் கேற்ற வகையில் செலவு செய்ய வேண்டும். மிக அதிகமாகவோ மிகக் குறைவாகவோ செலவு செய்யக்கூடாது. அதாவது செல்வத்தைப் பேராசையால் சேர்த்து வைக்கவுங் கூடாது. வீணாகச் செலவு செய்யவுங் கூடாது. சுருக்கமாகச் சொல்வதானால் வரவுக்கேற்ற செலவு செய்ய வேண்டும்.
பணத்தைச் சேமிக்கும் முறையைப் பற்றியும், செலவு செய்யும் முறையைப் பற்றியும் கூடப் புத்தர் விரிவாகக் கூறுகிறார். வருமானத்தில் காற்பகுதியைத் தன் தினசரிச் செலவுக்கு வைத்துக் கொள்ள வேண்டுமென்றும், அரைவாசியைத் தொழிலில் முதலீடு செய்ய வேண்டுமென்றும், அவசர காலச் செலவுக்குகாகக் காற்பங்கைச் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டுமென்றும் கூறுகிறார்.
புத்தர் ஒருமுறை சாதாரண குடும்பத்தனாய் இல்லறம் நடத்தும் ஒருவனுக்கு நாலு வகையான சுகமுண்டென விளக்கினார். முதலாவது சுகம் அத்திசுகம். அதாவது நல் வழியில் தேடிய செல்வம். இது பொருளாதாரப் பாதுகாப்பு. இரண்டாவது போகசுகம். அதாவது அந்தப் பணத்தைத் தானும், சுற்றமித்திரரும், குடும்பத்தவரும், அனுபவிப்பதோடு புண்ணியங்களைச் செய்வதிலும் செலவு செய்தல். மூன்றாவது சுகம் அனணசுகம். அதாவது கடனில்லாது வாழ்தல். நாலாவது குற்றமற்ற பழியில்லாத தூய வாழ்க்கை வாழ்தல். மனம், வாக்கு, காயங்களினால் தீமை செய்யாமை. இங்கே மூன்று சுகங்கள் பொருளாதார அடிப்படையில் உண்டானவை ஆகும்.
பொருளாதார அபிவிருத்தி மனிதனுடைய சுகத்துக்கு அவசியம். ஆனால் ஆன்மீகமில்லாத அறத்தில் நிலை கொள்ளாத முன்னேற்றம் உண்மையான முன்னேற்றமன்று என அவர் எடுத்துக் காட்டத் தவறவில்லை. சுகமும் சமாதானமும் திருப்தியுள்ள ஒரு சமூகத்தை அமைப்பதானால் ஒழுக்கமும், ஆன்மீகமும், அபிவிருத்தியடைய வேண்டுமென்பதைப் பௌத்தம் எப்பொழுதும் வலியுறுத்தி வந்திருக்கிறது. அது பொருளாதார முன்னேற்றத்தை ஊக்கப்படுத்துவதில் தயங்கவில்லை.
அரசியல், யுத்தம், சமதானம் என்பவற்றைப் பற்றிப் புத்தர் தெளிவான கருத்துடையவராயிருந்தார். அஹிம்சையும் சமாதானமுமே பௌத்தம் உலகுக்கு விடுக்கும் செய்தி. இது எல்லாராலும் நன்கு அறியப்பட்டதொரு விஷயம். எந்தவிதமான பலாத்காரத்தையும் அது ஏற்றுக்கொள்வதில்லை. கொல்லாமையே அதன் மூலாதாரமான கொள்கை. 'நீதியான யுத்தம்' என்று சொல்லக் கூடியது ஒன்றுமில்லை. இது ஒரு போலிப் பெயர். துவேஷம், கொடுமை, இம்சை, கொலை என்பவை நேர்மையானவையெனக் காட்டும் நோக்கமாக ஆக்கப்பட்டதொரு அர்த்தமற்ற வார்த்தை. பௌத்த மதத்தின்படி 'நீதியான யுத்தம்' என்று ஒன்றுமில்லை. 'இது நீதி, இது அநீதி' என்று தீர்மானிப்பது யார்? நாங்கள் துவங்கும் யுத்தம் எப்பொழுதும் நீதியானது. மற்றவர்கள் துவங்கும் யுத்தம் அநீதியானது. பௌத்தம் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொள்வதில்லை. ரோஹினி ஆற்று நீர்ப் பிரச்சினை சம்பந்தமாகச் சாக்கியரும், கோலியரும் பிணங்கிக் கொண்டு சண்டை செய்ய முற்பட்டபோது புத்தர் யுத்தகளத்துக்குப் போய் பிணக்கைத் தீர்த்துச் சண்டையை நிறுத்தினார். அஹிம்சையை அவர் போதித்தது மாத்திரமன்றி, சமாதானத்தை நிலை நாட்டக் காரிய பூர்வமான நடவடிக்கையை எடுத்தார். பகவானுடைய அறிவுரையைக் கேட்டு அஜாதசத்து என்ற மன்னன் வஜ்ஜிராச்சியத்தோடு உண்டான சண்டையை நிறுத்தினான்.
நல்லாட்சி எப்படியிருக்க வேண்டுமென்பதைப் பற்றி புத்தர் ஆராய்ந்தார். ஆட்சித்தலைவனான அரசனும் மந்திரிகளும் நிர்வாக உத்தியோகத்தரும் ஊழல் நிறைந்தவராய், நீதியற்றவராயிருந்தால் நாடு முழுவதுமே ஊழல் நிறைந்து, வளர்ச்சிகுன்றி, துன்பப்படும் என்பதை எடுத்துக்காட்டியுள்ளார். நாடு மகிழ்ச்சி மிக்கதாயிருக்க வேண்டுமானால் நீதி நிலவ வேண்டும், இவ்வாறு நீதியான அரசாட்சியை எவ்வாறு நிறுவலாமென்பதை அரசர்களுக்கான பத்துக் கடமைகள் என ஜாதக கதைகளில் கூறியுள்ளார்.
அரசர்களுக்கான பத்துக் கடமைகளில், முதலாவது தானம், அதாவது கொடை, செல்வம், பொருள், பண்டம் என்பவற்றில் அரசன் பற்றுடையவனாயிருக்கக் கூடாது. மக்களின் நன்மைக்காக அவற்றை அவன் தானம் செய்ய வேன்டும்.
இரண்டாவது கட்டளை, கொல்லாமை, கள்ளாமை, பிறரை வஞ்சியாமை, பிறரை சூறையாடாமை, பிறர் மனை நயவாமை, பொய்யாமை, கள்ளுண்ணாமை என்பன இச்சீலங்களாகும். இவை பஞ்ச சீலங்கள். இவற்றையாவது அரசன் மேற்கொள்ளவேண்டும்.
மூன்றாவது, மக்கள் நன்மை குறித்து எல்லாவற்றையும் தியாகஞ் செய்தல். மக்கள் நன்மையை உத்தேசித்து அரசன் தன் சௌகரியங்களைத் தியாகஞ் செய்யத் தயாராயிருக்க வேண்டும். பெயர் புகழ் என்பவற்றையும் தன் உயிரையுமே தியாகஞ் செய்ய வேண்டும்.
நாலாவது, நேர்மை (அஜ்ஜவ). தன் கடமையைக் செய்யும் விஷயத்தில் அவன் பயமின்றிப் பக்கஞ்சாராது இருக்க வேண்டும்.. நோக்கத்தில் உண்மையுடையவனாயிருக்க வேண்டும். பொது மக்களை ஏமற்றக் கூடாது.
ஐந்தாவது, கருணையும் மேன்மையுமுடையவனாயிருக்க வேண்டும். நல்லிசைவான சுபாவமுடையனாயிருக்க வேண்டும்.
ஆறாவது, தன்னை ஒறுக்கும் சுபாவமுடையனாயிருக்க வேண்டும். டாம்பீகமான வாழ்வு வாழாது எளிய வாழ்வு வாழ வேண்டும். தன்னடக்கமுடையவனாயிருக்க வேண்டும்.
ஏழாவது: துவேஷ மற்றவனாய் குரோதமில்லாதவனாய் (அக்கோத) பகைமை எண்ணமற்றவனாயிருக்க வேண்டும். எவரிடத்தும் வன்மம் இல்லாதவனாயிருக்க வேண்டும்.
எட்டாவது அஹிம்சை. அதாவது இம்சை செய்யாதவனாயிருப்பது மாத்திரமன்று யுத்தங்களைத் தவிர்த்துச் சமாதானத்தை நிலவச் செய்ய வேண்டும். கொலை, பலாத்காரம் என்பவற்றை எங்கே கண்டாலும் தவிர்க்க வேண்டும்.
ஒன்பதாவது: பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். சகிப்புத் தன்மை, நல்லெண்ணம் என்பவற்றைக் கொண்டவனாயிருக்க வேண்டும். இடுக்கண், கஷ்டம், அவமானம் என்பவற்றைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். கோபத்தைத் தவிர்க்க வேண்டும்.
பத்தாவது: எதிர்ப்பில்லாதிருத்தல் மக்களுடைய விருப்பதுக்கு மாறாக நிற்கக் கூடாது. மக்கள் நன்மைக்கு உகந்த நடவடிக்கைகளை எதிர்க்கக் கூடாது. அதாவது மக்கள் விருப்பத்துக்கு இணங்க ஆட்சி நடத்த வேண்டும்.
இத்தகைய 10 அரச தர்மம் நிரம்பியவர்களால் ஆளப்படும் நாடு சுபீட்ச முடையதாயிருக்குமென்பதில் ஐயமில்லை. ஆனால் இது ஒரு கற்பனை ராச்சியமன்று, வாய் வேதாந்தமன்று. இந்தியாவிலே அசோகச் சக்கரவர்த்தி போன்ற பேரரசர்கள் இந்த 10 அரசு கட்டளை க்கேற்ப அரசமைத்து ஆண்டு வந்ததை நாம் அறிவோம்.
இன்று உலகம் இடையறாத பயமும், சம்சயமும், அமைதியின்மையுமுடைய தாயிருக்கிறது. மனத்தால் கற்பனை செய்ய முடியாத அழிவை உண்டாக்கக் கூடிய ஆயுதங்களை விஞ்ஞானம் இன்று உற்பத்தி செய்து வருகிறது. இப்புதிய மாறாக ஆயுதங்களை எடுத்துச் சுழற்றிக் கொண்டு, வல்லரசுகள் ஒன்றை யொன்று போருக்கழைக்கின்றன. எதிரியைவிடத் தாமே உலகுக்கு அதிக அழிவையும் இன்னலையும் விளைக்கும் திறமையுடையவரென வீம்புபேசிக் கொண்டிருக்கின்றன. இந்தப் பைத்தியகாரத் தனத்தின் எல்லையை அவர்கள் அடைந்து விட்டார்கள். இத்திசையில் மேலும் ஓரடி எடுத்து வைப்பார்களானால் ஒருவரை ஒருவர் அழித்து விடுவது மாத்திரமன்றி மனித இனமே அழிந்து விடும்.
தாமே உருவாக்கிய இந்த நிலையிலிருந்து தப்புவதற்காக மன்பதை ஒருவழியைக் காண விரும்புகிறது. இதற்கு ஒரு பரிகாரந்தேட முயல்கிறது. இதற்கு ஒரே வழி புத்த பகவான் காட்டிய வழிதான். அவர் கூறிய வழி அஹிம்சைவழி. சமாதானம், அன்பு, கருணை, சகிப்புத்தன்மை, நல் லெண்ணம், சத்தியம், ஞானம், எல்லா உயிர்களையும் மதித்துப் போற்றுதல், தன்னலத்தைத் துறத்தல், துவேஷம், பலாத்காரம் என்பவற்றைக் கைவிடுதல் என்ற வழி. 'இவ்வுலகில் எக்காலத்தும் பகைமை, பகைமையால் தணிவதில்லை. அன்பினாலே தான் அது தணியும். இதுவே காலங் கடந்த கோட்பாடு, 'சமாதான தர்மம்' என்று புத்த பகவான் கூறியிருக்கிறார்.
'வெகுளியை அன்பால் வெல்லுக. தீமையை நன்மையால் வெல்க. கோபத்தைக் கொடையால் வெல்க. பொய்யைச் சத்தியத்தால் வெல்லுக. ஒருவன் அயல்நாட்டை வென்று அடிமையாக்க ஆசையும் வேட்கையும் கொள்வானானால் அவனுக்குச் சமாதானமோ சுகமோ கிடையாது என புத்தர் கூறுகிறார்: 'வெற்றி துவேஷத்தை வளர்க்கிறது. தோல்வி யடைந்தோர் துயரமடைகின்றனர். சமாதானத்தை விரும்புவோர் வெற்றி தோல்வியிரண்டையும் விட்டுச் சுகமாக வாழ்கின்றனர்.'
தன்னை வென்றவனே சமாதானமும் சுகமும் அடைகிறான். 'போர்க் களத்தில் ஆயிரமாயிரம் மக்களை வெற்றி கொள்பவனிலும் பார்க்கத் தன்னைத் தானே அடக்கி ஆள்பவன் மேலான வெற்றி வீரனாவான்.'
இவையெல்லாம் ரொம்ப அழகாகத்தானிருக்கின்றன. உயர்ந்தவை மாண்பு மிக்கவை. ஆனால் யார் இவற்றை நடைமுறைக்குக் கொண்டுவரப்போகிறார்கள்? இவை திண்ணை வேதாந்தம் என்று நீங்கள் சொல்லக்கூடும். அப்படியானால் ஒருவரை ஒருவர் பகைத்துக் கொள்ளுதல் காரிய பூர்வமான செயலா? ஒருவரை ஒருவர் கொல்வது பயனுடையதா? சதா பயமும் சம்சயமும் கொண்டு காட்டு மிருகங்கள் போல வாழ்வது பயனுள்ள செயலா? சௌகரியமானதா? காரிய பூர்வமானதா? பகையை எப்போதாவது பகையினால் வென்றிருக்கிறீர்களா? கொடுமையைக் கொடுமையினால் வென்றிருக்கிறீர்களா? ஆனால் தனிப்பட்ட முறையிலே பகையை அன்பினால் வென்ற வரலாறுகள் உண்டு. தீமையை நன்மையால் வென்ற சந்தர்ப்பங்களுண்டு. தனிப்பட்டவர் விஷயத்தில் இது சாத்தியமாகலாம், தேசங்களைப் பொறுத்தவரையில் சர்வதேசப் பிரச்சினைகளைப் பொறுத்தவரையில் இது சாத்தியமில்லையென்று கூறுவீர்கள். 'தேசம்', 'நாடு', சர்வதேசம்' என்ற பிரசாரப் போக்குடைய அரசியல் மயமான சொற்களைக் கேட்டு மக்கள் உள்ளம் மயக்கமடைகிறது. தன்வச மழிகிறது. குருடாகிறது. ஏமாற்றமடைகிறது. தேசமென்றாலென்ன? மக்களின் கூட்டமல்லாது தேசமோ, நாடோ செயல்புரிகிறதா? தனிப்பட்டவர் தான் செயல்புரிகிறார்கள். தனிப்பட்டவர் நினைப்பதையும் செய்வதையுமே தேசம் நினைக்கிறது, செய்கிறது. தனிப்பட்டவர்க்குப் பொருத்தமானதே நாட்டுக்கும் பொருத்தமாகிறது. பகையை அன்பினாலும் கருணையினாலும் தனிப்பட்ட முறையில் தணிக்க முடியுமானால் தேசரீதியிலும் சர்வதேச ரீதியிலும் தணிப்பதற்கு ஏன் முடியாது? தனிப்பட்டவர்கூட பகையை அன்பினால் தணிப்பதானால் ஒருவரிடம் எல்லையற்ற தைரியமும், வீரமும், சிரத்தையும், ஆன்மபலத்தில் நம்பிக்கையும் வேண்டும். அப்படியானால் சர்வதேச விஷயங்களில் இப்பண்புகள் எவ்வளவு அதிகம் தேவைப்படுகின்றன? அது உண்மையில் அத்துணைச்சுலபமானதன்று தான். ஆனால் அதை முயன்று பார்க்க வேண்டும். அது அபாயம் மிக்கதானால் அணு ஆயுத யுத்தத்தை விட ஆபத்துள்ளதா?
சரித்திரப் பிரசித்தி பெற்ற ஒரு பேரரசன் இந்தியாவில் இருந்தான். அவன் பௌத்த சக்கரவர்த்தியாக கி. மு. மூன்றாம் நூற்றாண்டிலே அஹிம்சை, சமாதானம், கருணை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு பெரிய ராச்சியத்தை ஆண்டான். அசோகன் உள்நாட்டு விவகாரங்களிலும் வெளிநாட்டு விவகாரங்களிலும் இக்கொள்கைகளையே மேற்கொண்டான். அவனிடம் அவ்வாறு செய்யத் தைரியமும், சிரத்தையும் காட்சியும் இருந்தன. அவனுக்கு 'தேவர்களுக்குப் பிரியமானவன்' என்ற பெயர் வழங்கப்பட்டது. இன்று இவற்றை நினைக்கும் போது பெரிய ஆறுதலும் மனத்திலே எத்துணை அருட் சிளர்ச்சியும் உண்டாகிறது!
முதலிலே அப்பேரரசன் தன் தந்தையான பிந்துசாரனும், தாத்தாவான சந்திரகுப்தனும் காட்டிய வழியிற் சென்று இந்தியத்துணைக் கண்டம் முழுவதையும் வென்று வெற்றிவாகை சூட எண்ணினான். கலிங்கத்தின் மீது படையெடுத்து அதை வென்று தன் ராச்சியத்தோடு சேர்ந்துக் கொண்டான். இலட்சக்கணக்கானவர் இந்த யுத்தத்தில் கொல்லப்பட்டும், காயமுற்றும், சிறைப் படுத்தப் பட்டும் சித்திரவதை செய்யப்பட்டுமிருந்தனர். பின்னர் அவன் புத்த மதத்தைத் தழுவியதும் புத்தரின் அறநெறி அவனை முற்றாக மாற்றிவிட்டது. கற்பாறையில் அவன் செதுக்கு வித்த பிரசித்தி பெற்ற சிலாசாசன மொன்றிலே (இது 13 ஆவது சிலாசாசனம் எனப்படும். இதனை இன்றும் காணலாம்.) இதில் கலிங்க வெற்றியைப் பற்றி அவன் பகிரங்கமாகத் தன் பச்சாத்தாபத்தைத் தெரிவிக்கிறான். அந்த உயிர்க் கொலையை நினைக்கும் போது 'தன்னெஞ்சம் வெடிக்கிறதெனக் கூறி இனிமேல் போருக்கென்று வாள் வீசுவதில்லை யெனவும் எல்லா உயிர்களும் இம்சையடையாது தன்னடக்கமும், அமைதியும், மென்மையுமுடையவனாய் வாழ வேண்டுமென்றும் பகிரங்கமாகப் பிரசித்தப்படுத்தினான். தேவானாம் பிரியனான அசோகன் இதையே மேலான வெற்றியாகக் கருதினான். தர்மத்தின் வெற்றியையே பெரிய வெற்றியாக கருதினான். அது இம்மைக்கும் மறுமைக்கு நன்மை பயக்குமெனக் கருதினான்.
உலக சரித்திரத்திலே தன் அதிகாரத்தின் உச்சநிலையிலேயிருந்த ஓர் வெற்றி வேந்தன் மேலும் நாடுகளைக் கைப்பற்றும் வல்லமை பெற்றிருந்த ஒருவன், போர் வேண்டாம் இம்சை வேண்டாம், சமாதானமும் அஹிம்சையுமே வேண்டுமென்று கூறி யுத்தத்தைக் கைவிட்ட ஒரே சந்தர்ப்பம் இதுவே.
வல்லரசுகளின் பலத்தைச் சமன்படுத்துவதாலோ, அணு ஆயுதங்களைக் கொண்டு வெருட்டுவதாலோ, சாமாதானத்தை ஏற்படுத்தலாமென்று பேசுவது மடமை. ஆயுதப் பெருக்கம் பயத்தை உண்டாக்குமேயன்றி சமாதானத்தை உண்டாக்காது. பயத்தினால் உண்மையான சமாதானத்தை நிலை நாட்டலாம் என்று நினைப்பதும் முடியாத காரியம். பயத்தினால் துவேஷமும், பகைமையும், குரோதமுமேயுண்டாகும். தற்காலிகமாக அவை அடங்கியிருக்கும். ஆனால் தருணம் ஏற்பட்டதும் எந்நேரமும் வெடித்துச் சீறி வெளிவரும். இருதரப்பிலும் நல்லெண்ணம் நிலவவேண்டும். பயம், சம்சயம், ஆபத்து என்பன அற்ற சூழ்நிலையில் தான் உண்மையான சமாதானம் நிலவும்.
அதிகாரப் போட்டியில்லாத, வெற்றி தோல்விகளில்லாத சாந்தியும் சமாதானமுமுள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்குவதே பௌத்தத்தின் நோக்கம். இங்கே பாவம் பழி அறியாதர் இம்சிக்கப்பட மாட்டார்கள். ராணுவ பலத்தாலும் பொருளாதார யுத்தத்தினாலும் கோடிக்கணக்கான மக்களை வெற்றி கொள்பவனை விடத் தன்னைத்தான் அடக்கி வென்றவனையே மக்கள் மதிப்பர். பகையை அன்பினால் வெல்வார்கள். நன்மையினால் தீமையை வெல்வார்கள். அழுக்காறு, குரோதம், பகை எண்ணம், பேராசை என்பன மனிதனுடைய மனதைக் களங்கப் படுத்த மாட்டா. மக்கள் கருணையினால் தம் தொழிலெல்லாவற்றையும் செய்வர், எல்லோரும் நீதியோடும், மதிப்போடும் அன்போடும் நடத்தப்படுவர். வாழ்வு ஆனந்தம் நிறைந்ததாய் சமாதானமும் நல்லிணக்கமும் உடையதாய் விளங்கும்.
-------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக