சாதியம் மறையுமா? - 5

சாதியம்  மறையுமா? - 5

காந்தியும் சாதியும்

மகாத்மா காந்தி அவர்கள் சாதிகள் சம்பந்தமாக கொண்டிருந்த நிலைப்பாட்டை பற்றி எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்கள் கூறியுள்ள கருத்துக்களை இயன்ற அளவிற்கு நான் இங்கு சுருக்கி வழங்குகிறேன்: 

காந்தியின் தனித்தன்மை

'காந்தியின் மனம் என்பது ஒரு நவீன மேற்கத்திய மனம். கிட்டத்தட்ட ஓர் அறிவியலறிஞனின் மனம். காந்தி எல்லாவற்றையும் ‘சோதனை- விளைவுகளை அவதானித்தல்- பிழை திருத்தல்- மீண்டும் முயல்தல்’ என்ற தூய அறிவியல் நோக்கிலேயே செய்தார். இந்திய விடுதலைப்போராட்டம் முதல் தன் சொந்த மலக்குடலை சுத்தம்செய்வதுவரை. காந்தி எப்போதும் எதையும் நடைமுறை சார்ந்துதான் புரிந்துகொள்ள முயன்றார். அவரே இந்திய கிராமங்கள் தோறும் அலைந்தார். மக்களின் வாழ்க்கையை அவரே கண்டார். அந்த வேறுபாடு அவரை பிற காங்கிரஸ், கம்யூனிஸ்டு தலைவர்கள் மற்றும் அறிவுஜீவிகளிடம் இருந்து பிரித்தது. அவர்கள் கட்சி ,அமைப்பு சார்ந்து பயணம் செய்திருப்பார்களே ஒழிய மக்களிடையே கருத்தறிய சென்றவர்கள் அல்ல. அக்கால இந்திய அரசியல்வாதிகள் மற்றும் அறிவுஜீவிகளில் உள்ளூர வெள்ளையன்மீது தாழ்வுணர்ச்சி இல்லாத ஒரே மனிதரும் அவர்தான்.  காந்தியைத்தவிர பிறருக்கு வெள்ளையர்களின் பழக்கவழக்கங்களில், உடைகளில், அவர்களின் மொழியில், சிந்தனைகளில் இருந்த வெளிப்படையான பக்தியை நாம் சாதாரணமாகவே காணலாம். காந்தி அவற்றுக்கு அப்பாற்பட்டவர். அதனால்தான் பிற எவரையும் விட அவர் மேலைநாட்டினரைக் கவர்ந்தார்.

இந்தியாவை வெள்ளையரின் கண்ணால் பார்த்தல் என்பதையே நவீன நோக்காக கொள்ளுதல் என்பதை நாம் ஜவகர்லால் நேரு வரை மீண்டும் மீண்டும் காணலாம். அந்த நோக்கே அம்பேத்காரிலும் ஆரம்பத்தில் இருந்தது என்றாலும் தன் அபாரமான கல்வியால் சுயமான சிந்தனைக் கட்டுமானங்களை உருவாக்கிக் கொண்டு அம்பேத்கார் பின்னர் விலகிச்சென்று வளர்ந்தார். இவ்வாறு  ஐரோப்பியரின் நோக்கை கடன்வாங்கித்தான் இந்தியாவின் தனித்தன்மைகளான சாதியமைப்பு, மத ஆசாரங்கள், பண்டைய இலக்கியங்கள், இந்திய மெய்யியல்மரபுகள் அனைத்தையும் நம் அறிவுஜீவிகள் ஆராய்ந்தார்கள். கோட்பாடுகளை மட்டுமல்ல தரவுகளைக்கூட ஐரோப்பியரின் நூல்களில் இருந்தே பெற்றுக்கொண்டார்கள். நேருவின் புகழ்பெற்ற நூல்களில் இவ்வியல்பைக் காணலாம். இன்றுவரை  இந்திய அறிவுத்தளத்தில் நிகழ்ந்து கொண்டிருப்பதும் இதுவே. இதன் விளைவாக ஓர் வியக்கத்தக்க நிகழ்வை நாம் இந்திய மறுமலர்ச்சிக் காலகட்டத்துச் சிந்தனைகளில் காணலாம். நூற்றாண்டுகளாக உருவாகிவந்து கோடானுகோடி மக்களின் வாழ்க்கையின் பகுதியாக இருந்துவந்த பல விஷயங்கள் அந்த மக்களின் அறிவுஜீவிகள் நடுவே எந்தவகையான விவாதமும் இல்லாமல் உடனடி நிராகரிப்புக்கு உள்ளாயின. சாதிமுறை அதில் ஒன்று.

சாதியம் பற்றிய ஆங்கிலேயர்களின் பார்வை

சாதி என்ற அமைப்பு இந்திய சமூகத்தின் முக்கியமான ஒரு கூறு. அதன் வரலாற்றுப் பரிணாமம், சென்றகாலத்தில் அதன் சமூகப்பயன்பாடு, அதன் நிகழ்காலப்பணி எதைப்பற்றியும் எந்த ஆய்வும் இந்தியாவில் நடக்கவில்லை. இந்தியாவை நோக்கிய ஆங்கிலேயர் அதை இந்திய சமூகத்தைப் பீடித்திருக்கும் ஒரு நோய் என்று சொன்னார்கள். இந்திய படித்த வர்க்கம் அப்படியே ஏற்றுக்கொண்டு சொல்ல ஆரம்பித்தது. வெள்ளையனே சொல்லிவிட்டான் என்ற தாழ்வுமனப்பான்மையே காரணம். ஆனால் உண்மையில் இந்த நிராகரிப்பு என்பது நம் படித்த வர்க்கத்தின் நாக்குகளில் மட்டுமே இருந்தது. நெஞ்சில் நிகழவில்லை. இக்கணம் வரை அப்படித்தான். ஏன் என்றால் அவனுக்குள் சாதியைப்பற்றிய எந்த விவாதமும் நிகழவில்லை. அவ்வாறு விவாதம் நிகழ்ந்திருந்தால் சாதியின் சமூகப்பங்களிப்பு குறித்து அவன் சிந்தனை செய்திருப்பான். இப்போதும் சாதியைச் சுமக்க அவனுக்கு என்ன காரணங்கள், கட்டாயங்கள் உள்ளனவோ அந்தக் காரணங்கள் எல்லாமே விவாதத்துக்கு வந்திருக்கும். அவற்றை வேறு எவ்வகையில் தாண்டிச்செல்ல முடியும் என்று பார்த்திருப்பான். அந்த வழிமுறைகள் அவனுக்கு உதவியிருக்கும். காந்தியைப் பொறுத்தவரை அவர் அந்த தாழ்வுணர்ச்சி முற்றிலும் இல்லாதவர். இந்தியாவைப்பற்றிய மேலைநாட்டு நோக்கை அவர் எவ்வகையிலும் கடன் பெற்றவர் அல்ல. 

காந்தியின் தனித்தன்மை அவர் தன் சிந்தனைகளை நூல்களில் இருந்து பெறவில்லை என்பதே. அவர் தன் சொந்தச் சிந்தனைகளுக்கு  தேவையான அளவுக்கு மட்டும் நூல்களை பயன்படுத்திக்கொண்டார்.  அவர் நடைமுறைவாதி. சமூகம் குறித்த தன் தரவுகளை தன் சொந்த அவதானிப்புகளில் இருந்தே அவர் பெற்றுக்கொண்டார். தன் பகுத்தறிவுக்கு ஒரு விஷயம் உண்மையிலேயே திருப்தி அளிக்காத வரை அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. தன் தரப்பு முற்போக்காக, நவீனமாகக் கருதப்படுமா இல்லையா என்பதைப்பற்றி ஒருபோதும் கவலைப்பட்டவரல்ல காந்தி. எளிதாக ஒரு முற்போக்குக் கருத்தை வாயளவில் ஏற்றுக்கொண்டு  அதைப்பற்றி சொந்தவாழ்க்கையில் கவலையே இல்லாமல் முன்னால்செல்வதும் அவருக்கு உடன்பாடான விஷயம் அல்ல. அவர் ஒருபோதும் தன் கருத்தில் பிடிவாதமாக இருக்கவில்லை. தன் கருத்துக்களை பிறர் மாற்றும்பொருட்டு எப்போதுமே திறந்துவைத்திருந்தார். தன் பகுத்தறிவு எப்போது திருப்தி அடைகிறதோ அப்போது ஒரு முன்னுதாரண அறிவியலாளன் போல தன்னை அவர் மாற்றிக்கொண்டார். இந்தக் கோணத்தில்தான் நாம் காந்தி சாதியைப் பற்றி என்ன நினைத்திருந்தார் என்று பார்க்க வேண்டும். காந்தி அக்காலத்தில் ஒரு இந்து சாதியைப்பற்றி இயல்பாக என்ன நம்பிக்கை கொண்டிருந்தாரோ  அந்த நம்பிக்கையையே தானும் கொண்டிருந்தார். அவர் காலத்தில் ஐரோப்பியரை வழிமொழிந்து சாதிக்கு எதிராகப் பேசியவர்கள் அந்தரங்கத்தில் கொண்டிருந்த நம்பிக்கைதான் அது. காந்தியின் உண்மையுணர்ச்சியே அவரை அதை நேர்மையாக பதிவுசெய்ய வைத்தது.

காந்தியின் ஆரம்பகால எண்ணங்கள்

காந்தியின் ஆரம்பகால எண்ணங்கள் இவை: வருணப்பிரிவு என்பது சமூகத்தில் ஓர் ஒழுங்கை உருவாக்கும்பொருட்டு இயல்பாக பரிணாமம் அடைந்து வந்த ஒன்று. அது சமூகத்தின் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறது. தந்தையரின் தொழிலை மகன் செய்யும்போது இயல்பாகவே அவனுக்கு அதில் திறமை உருவாகி வருகிறது. இந்திய சமூகம் உள்மோதல்களினால் அழியாமல் ஆக்கபூர்வமாகச் செயல்பட அது பலநூற்றாண்டுகளாக உதவி வந்திருக்கிறது. இந்திய சமூகம் மீது நெடுங்காலமாக நிகழ்ந்த பல அன்னியத் தாக்குதல்களை வெல்லவும் தாக்குபிடிக்கவும் அது உதவியிருக்கிறது. மக்கள் பிறப்பின் அடிப்படையில் ஒரு தொழில்குழுவாகத் திரண்டு தங்களுக்கு வாழ்க்கை விடுத்த கடுமையான சவால்களை சமாளிக்க சாதியமைப்பு வழியமைக்கிறது. ஆகவே மையப்படுத்தப்பட்ட அரச அதிகாரத்தின் உதவி இல்லாமலேயே மக்கள் தங்களை சிறிய சுயநிர்வாக அமைப்புகளாக தொகுத்துக்கொண்டு தங்கள் வாழ்க்கையை தாங்களே அமைத்துக்கொள்ள சாதி உதவியிருக்கிறது. ஆகவே வர்ண அமைப்பும் அதில் இருந்து உருவாகி வந்த சாதியும் முழுக்க நிராகரிக்கத்தக்கவை அல்ல. அவை காலப்போக்கில் பல சிதைவுகளையும் திரிபுகளையும் அடைந்திருக்கலாம். அந்தத் திரிபுகளைக் களைந்து சாதி என்ற அமைப்பை தக்கவைத்துக்கொள்வதே முறை. சாதி உருவாக்கும் ஏற்றத்தாழ்வுகளைக் களையலாம். சாதிமோதல்களை இல்லாமல் ஆக்கலாம். ஆனால் இந்தியாவில் அதிகாரப் பரவலாக்கத்துக்குச் சாதி இன்றியமையாதது. சாதி என்பது மைய அதிகாரங்களுக்கு எதிராக மக்கள் தங்களை தாங்களே நிர்வகித்துக்கொள்ள உதவுகிறது– இவையெல்லாம்தான் காந்தியின் ஆரம்பகால எண்ணங்கள். காந்தி   1908ல் அவரது இளமைப்பருவத்தில் தென்னாப்ரிக்காவில் இருக்கும்போதே எழுதிய ‘ஹிந்த் ஸ்வராஜ்’ என்ற சிறிய நூலில் இந்தக் கருத்துக்களை முதலில் வெளிப்படுத்தியிருந்தார். 

அந்த முதல்நூலை காந்தி தன் தாய்மொழியான குஜராத்தியிலேயே எழுதியிருந்தார். அந்நூலில் காந்தி ஐரோப்பாவில் உருவாகி வந்த தொழில்புரட்சியையும் அதன் விளைவான நவீனத்துவத்தையும் ஆழமாக சந்தேகப்படுகிறார். அவை உலக வளங்களைச் சுரண்டி தேவையற்ற போட்டியை உருவாக்கி அழிவுக்கே வழிவகுக்கும் என்கிறார். வலிமையான மைய அதிகாரம் அற்ற ஒரு தேசத்தை உருவகிக்கிறார். அது சுயநிர்வாகம் செய்துகொள்ளும்  தன்னிறைவுகொண்ட தொழில் கிராமங்களினால் ஆனதாக இருக்கும் என்றார். அதில் சொல்லியிருந்த சாதி குறித்த தன் அவதானிப்பை  காந்தி தன் நேரடியான இந்திய அனுபவத்தில் இருந்தே பெற்றுக்கொண்டிருக்க வேண்டும். இயல்பாக அவருக்கு அவரது சூழல் அளித்த புரிதலை அவர் தன் அவதானிப்புகள் மூலம் நிறுவிக்கொண்டார். வெள்ளையர் சாதியமைப்பை இந்தியாவின் நோய் என்று சொல்லி வந்தாலும் நடைமுறையில் அது அப்படி இருக்கவில்லை என்று காந்தி கண்டறிந்த்திருப்பார். சாதியமைப்புக்கு இந்திய சமூகத்தில் மிக ஆக்கபூர்வமான ஒரு பங்களிப்பு இருப்பதை அவர் உணர்ந்திருப்பார். அந்த நடைமுறை அறிவையே அவர் முன்வைத்தார்.

சாதியத்தின் எதார்த்த நிலைமை

இன்றைய இந்தியாவை வைத்தே அவர் கண்டதென்ன என்று நாம் ஊகிக்க முடியும். உயர்சாதியினர் மட்டுமல்ல. ஏழை அடித்தள மக்களும்கூட தங்கள் சாதியடையாளத்தை மிகுந்த உணச்சிகரத்துடன் முன்னிறுத்துவதைக் காந்தி கண்டிருப்பார். அந்தச் சாதி அடையாளம் அவர்கள்மேல் திணிக்கப்பட்டதாக, அவர்கள் மேல் வைக்கப்பட்ட நுகமாக, இருந்திருந்தால் அவர்கள் அதை அவ்வாறு தழுவிக்கொண்டிருக்க மாட்டார்கள். மாறாக அது அவர்களின் தனித்தன்மையின் சின்னமாக, அவர்களுக்கு பாதுகாப்பளிக்கும் குழு அடையாளமாக உள்ளது. சாதி என்பது மக்களை திரட்டி இயல்பான ஒரு கிராம சமூக அமைப்பை உருவாக்குகிறது என காந்தி அறிந்தார். அது அவர்களுக்கு சேர்ந்து பணியாற்றவும் சேர்ந்து போராடவும் இன்றியமையாததாக இருந்தது. சாதி பெரும்பாலும் இந்திய சமூகத்தில் தொழிற்குழுக்களாகவே இருந்தது. தொழிலில் உள்ள சவால்களை மக்கள் சாதியின்மூலமே சேர்ந்து எதிர்கொண்டார்கள். போர் காரணமாகவோ பஞ்சம் காரணமாகவோ இடம்பெயரும்போதுகூட ஒருசாதியாக, கூட்டமாகவே அவர்கள் இடம்பெயர்ந்தார்கள். சென்ற இடங்களில் போராடி வேரூன்ற சாதியின் ஒற்றுமையே உதவியது.

இன்றும்கூட நவீன இந்தியாவில் சாதி மக்களை இயல்பான, வலிமையான, குழுவாக திரட்டி அவர்களின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கிறது. தொழில்களில் வணிகங்களில் ஈடுபடுவதற்கும் உரிமைகளுக்காக போராடுவதற்கும் ஜாதியாகத் திரள்வது அவர்களுக்கு உதவுகிறது.  உதாரணமாக தமிழ்நாட்டில் கொங்குவேளாளரையும் நாடாரையும் சொல்லலாம். சுதந்திரத்துக்குப் பின் வந்த கல்வியும் நவீனமயமும் சாதியை மேலும் வலுவடையச்செய்தன. காரணம் சாதிக்கு சமூகத்தின் முன்னேற்றத்தில் மிகப்பெரிய  பங்களிப்பு இருக்கிறது. அந்த பங்களிப்பு இருப்பது வரை சாதி அழியாது. ஆகவே சாதி வெள்ளையர் சொன்னதுபோல இந்திய சமூகத்தில் ஒரு முற்றிலும் எதிர்மறையான ஒரு கூறு அல்ல. மிக ஆக்கபூர்வமான பங்களிப்பை ஆற்றிய, ஆற்றி வருகிற ஓர் அமைப்பு. ஆகவேதான் சாமானிய இந்தியன் சாதியைக் கைவிடத் தயாராக இல்லை. இதுவே இன்றும் இந்தியாவின் யதார்த்தம் என்பதை வழக்கமான கோஷங்களை கொஞ்சம் ஒத்திவைத்துவிட்டு கொஞ்சம் திறந்தமனத்துடன் நோக்கினால் புரிந்துகொள்ள முடியும்.

கிராம சுயராஜ்யத்தைப் பற்றிப் பேசிய காந்தி இந்திய மக்கள் அவர்களின் நெருக்கடிகளை எல்லாம் தாண்டிவர உதவிய சாதி என்ற அமைப்பை தக்கவைத்துக்கொள்ள எண்ணியதில் என்ன பிழை இருக்கிறது? இன்று கொங்குவேளாளரும் நாடாரும் எப்படி ஒருங்கிணைந்து முன்னேறினார்களோ அப்படி எல்லா சாதியும் திரண்டு உழைத்து முன்னேறவேண்டும் என்றே அவர் கனவு கண்டார். காந்தி மக்களுக்குக் கற்றுக்கொடுக்க முற்பட்டவர் மட்டும் அல்ல, மக்களிடமிருந்தும் கற்றுக்கொண்டவர். சாதி அவர்களுக்கு உயிர்போன்றது என அவர் அறிந்திருந்தார். ஐரோப்பிய சிந்தனையை கடன்வாங்கிக்கொண்டு, இந்திய யதார்த்தத்தைப் பற்றி கொஞ்சம்கூட பிரக்ஞை இல்லாமல், தன்னிடம் விவாதிக்க வந்த அன்றைய ஆங்கில கற்ற முற்போக்கு வர்க்கத்திடம் காந்தி மீண்டும் மீண்டும் விவாதித்தார். மக்களிடம் சென்று அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பார்க்கச் சொன்னார். சாதியின் வரலாற்றுப்பங்களிப்பை, நடைமுறைத் தேவையை விளக்கினார்.

சாதியம்  பற்றிய அறிவியல் பார்வை

காந்தி சாதியைப்பற்றி பேசிய அந்நாட்களில் இந்திய சமூகத்தில் சாதி உருவாகி வந்த விதத்தைப் பற்றிய ஓர் அறிவியல்பூர்வமான ஆய்வே நடக்கவில்லை. இந்தியாவை மதவிழிப்பற்ற காட்டுமிராண்டி நாடாகச் சித்தரித்த கிறித்தவ மதப்பரப்புநர்கள் உருவாக்கிய சித்திரமே பிரபலமாக இருந்தது. அதன்படி, சாதி என்பது இந்திய சமூகத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான கொடிய வழக்கங்களில் ஒன்று.  அது இந்து மதத்தாலும் பிராமணர்களாலும் அவர்களின் ஆதிக்கத்துக்காக ஒரு சதிவேலையாக உருவாக்கப்பட்டது. ஆகவே வேருடன் கெல்லி எறியப்பட வேண்டியது…

இன்றுவரை தமிழ்நாட்டில் அறிவுஜீவிகள் என்பவர்களிடையே பிரபலமாக இருப்பது இந்த ஒற்றைவரிப் புரிதல் மட்டுமே. இந்த மேலோட்டமான புரிதலை மக்களிடையே கொண்டுசெல்ல முடியாது, ஏனென்றால் அடிப்படையான ஒரு பயன்பாடு இருப்பதனால்தான் அவர்கள் சாதியை ஆரத்தழுவிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே சாதிநிராகரிப்பு என்பது மேடையில் செய்யப்படும் வெற்றுபாவனையாக நின்றுவிடுகிறது. நடைமுறை யதார்த்தத்துக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இருப்பதில்லை. தமிழ்நாட்டு யதார்த்ததையே பார்ப்போம். இங்கே கொஞ்சமாவது சாதியை விட்டு வெளியே வந்தவர்கள் ‘உயர்மட்ட’ சாதியினரே. இன்றும் ‘கீழ்மட்ட’ சாதியினரிடம் சாதிப்பற்று என்பது ஆழமாக வேரோடி இருக்கிறது. சாதிமறுப்பை மேடையில் கக்குபவர்கள், சாதியை உருவாக்கிய உயர்சாதிச்சதியை எதிர்த்து பொங்குகிறவர்கள் அனைவருமே சாதிக்குள்தான் வசதியாக இருந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்திய நிலப்பகுதி வரலாற்றுக்கு முற்பட்ட காலகட்டத்தில் முற்றிலும் மாறுபட்ட வளர்ச்சிப்படிகளில் நின்ற பலவகையான மக்கள்கூட்டங்களினால் ஆனதாக இருந்தது. அந்நிலையில் நிலவளம் நீர்வளம் போன்ற காரணங்களினால் வளர்ச்சிபெற்ற மக்கள்கூட்டங்கள் பிற கூட்டங்களை வென்று தனக்குள் இழுத்துக்கொள்ள ஆரம்பித்தன. இவ்வாறு உள்ளிழுக்கும் போக்கின் விளைவாக உருவானதே சாதி என்ற அமைப்பு. வெற்றிபெற்ற மக்கள்கூட்டமான ஆரியர்கள்  தங்களை தொழிலின் அடிப்படையில் நான்கு வருணங்களாக பிரித்துக்கொண்டிருந்தார்கள்.  தன்னுடன் இணைத்துக்கொண்ட மக்கள்கூட்டங்களை அவர்களின் தொழில் மற்றும் வளர்ச்சியின் அடிப்படையில் தங்களில் ஏதேனும் ஒரு வர்ணத்துடன் இணைத்துக்கொண்டார்கள். இவ்வாறுதான் வர்ண அமைப்பு பலநூறு சாதிகளால் ஆனதாக மாறியது. சாதி என்பது பழங்குடி இனக்குழுக்களே.

ஆக, சாதிகள் என்பவை உண்மையில் ஒரு சமூகம் சிலரால் ஆதிக்க நோக்குடன் திட்டமிட்டு பலவாக பகுக்கப்பட்டு உருவானவை அல்ல. மாறாக, பலநூறு சிறிய இனக்குழுக்கள், பழங்குடிச்சமூகங்கள் ஒரு பொது சமூகமாக தொகுக்கப்பட்டதன் விளைவாக உருவானவை. ஒருசாதிக்குள் உபசாதிகள், உபசாதிக்குள் சிறிய குலக்குழுக்கள், குலக்குழுவுக்குள் கூட்டங்கள் என உள்பிரிவினைகள் இருப்பதை இவ்வாறுதான் புரிந்துகொள்ள முடியும். பல்வேறு மக்கள்கூட்டங்களை ஒன்றாகத் தொகுத்து ஒரே அமைப்புக்குள் கொண்டுவருவதன் வழியாகவே அரசுகள் உருவாயின. மேலும் மேலும் அதிக மக்கள் அந்தச் சமூக அமைப்புக்குள் வருவதன் விளைவாகவே அரசுகள் பேரரசுகள் ஆக முடியும். ஆகவே அந்த உள்ளிழுக்கும் போக்கு மன்னர்களால் ஊக்குவிக்கப்பட்டது. அந்தச் சாதித்தொகுப்புக்கு தத்துவ விளக்கமும் புனிதத்தன்மையும் அளிக்கப்பட்டது. அவ்வாறாக அச்சமூகத்தில் அனைவரும் அந்த சமூக அடுக்கை ஏற்றுக்கொள்ள வைக்கப்பட்டார்கள். கண்டிப்பாக இந்த அமைப்பு ஆதிக்க நோக்கம் கொண்டதே. நிலப்பிரபுத்துவ காலத்தில் உருவான இந்த அமைப்பு சமூகக் கூறுகளை கீழ் கீழாக அடுக்கி ஒரு ஆதிக்க கட்டுமானத்தை உருவாக்கியது. நிலப்பிரபுத்துவத்தின் அமைப்பு இது என்பதனால் யாரிடம் நிலம் இருக்கிறதோ அவர்கள் மேலே இருந்தார்கள். யார் நிலமில்லாதவர்களோ அவர்கள் கீழே சென்றார்கள். நிலத்தை அடைந்த கீழ்சாதிகள் மேலே சென்றமைக்கும் நிலமிழந்த மேல்சாதி கீழே வந்தமைக்கும் இந்தியாவில் உதாரணங்கள் பல உள்ளன. இந்த சித்திரம் இந்தியாவின் எளிய மக்கள் ஏன் சாதியடையாளத்தை விட மறுக்கிறார்கள் என்பதற்கான விளக்கத்தை அளிக்கிறது. சாதி என்பது அம்மக்களின் புராதனமான குல அடையாளம்.  அது அவர்களுக்கு தனித்தன்மையை அளிக்கிறது. ஒரு குழுவாக உணரச்செய்கிறது. ஆகவே எந்நிலையிலும் அதை அவர்கள் இழக்க முடியாது. இன்று வரை இந்தியாவில் அது சாத்தியப்படவும் இல்லை.

காந்தியின் கண்ணோட்டம்

இந்தக் கோணத்தில் பார்த்தால் காந்தி அவருக்கே உரிய நுண் அவதானிப்பால் சாதியின் சமூக முக்கியத்துவத்தையும் பங்களிப்பையும் கிட்டத்தட்ட இதே அளவுக்கு  உணர்ந்துகொண்டிருப்பதை காணலாம். அவர் அக்காலத்தில் சாதியை தூக்கிப்பிடித்த இந்து சனாதனிகளின் குரலை எதிரொலிக்கவில்லை. பழைமைவாதத்தை பேசவும் இல்லை. அவர் மிக அறிவியல்பூர்வமாகவே சாதியை அணுகியிருக்கிறார். காந்தியின் காலகட்டத்தில் அறிவுஜீவிகள் சாதியமைப்பை உதறிவிட்டு ஐரோப்பாவில் இருந்ததுபோல வர்க்க அமைப்பை கொண்டுவரலாம் என்ற எண்ணம் கொண்டிருந்தார்கள். நேருகூட சாதி அமைப்பு பழையது, வர்க்க அமைப்பே நவீனமானது தவிர்க்கமுடியாதது என்று எண்ணினார். ஆனால் காந்தி அதை ஏற்கவில்லை. வர்க்க அமைப்புக்குச் சாதியமைப்பு எவ்வளவோ மேல் என்றார். காந்தியின் நோக்கில், வர்க்க அமைப்பு மக்களை தனியர்களாக்குகிறது. சாதியமைப்பு மனிதர்களுக்கு அளிக்கும் இயல்பான குழுத்தன்மையும் அதன் பாதுகாப்பும் இல்லாமல் ஆகிறது. பொருளாதார அளவீடு மட்டுமே மனிதர்களை மதிப்பிட பயன்படுவதனால் செல்வத்துக்கான கழுத்தறுக்கும் போட்டியே வாழ்க்கையாக ஆகிவிடும். அதன்மூலம் நெறிகள் இல்லாமலாகி  மானுட உறவுகள் சீரழியும் என்றார் காந்தி. ஐரோப்பிய வர்க்கப்பிரிவினை சாதிப்பிரிவினையை விட சுரண்டல் மிக்கது என நேரில் கண்டவர் அவர். இன்றும் இந்த நிலை உள்ளதை நாம் காணலாம். நமது நகரங்களில் வர்க்க அடிப்படையில் பகுக்கப்பட்ட மனிதர்கள் வாழ்கிறார்கள். கிராமங்களில் சாதியடிப்படையில் பகுக்கப்பட்ட மனிதர்கள். நமது நகர மனிதனுக்கு இல்லாத சமூகப்பாதுகாப்பும்  நாம் என்ற தன்னம்பிக்கையும்  கிராமத்து மனிதனுக்கு இருக்கிறது. மேலும் காந்தி உருவகித்த கிராமராஜ்யத்தில் பெரும் தொழில்நகரங்கள் இல்லை. ஆகவே அங்கே வர்க்க அடிபப்டையில் பிரிக்கப்பட்ட மக்களுக்கு இடமில்லை. மக்களுக்கிடையேயான பிரிவினை சாதியாகவே இருக்க இயலும்.

தான் உருவகித்த கிராமசுயராஜ்யத்தில் காந்தி ஏற்றதாழ்வு இல்லாத சாதியமைப்பு இருக்கலாம் என்று எண்ணினார். சாதி அந்தக் கிராம அமைப்பில் மக்கள் இயல்பான குழுக்களாக இயங்க உதவும் என நினைத்தார். இந்தியாவின் புராதனமான வளர்ச்சிப்போக்கு சாதியால் ஆனது என்பதனாலேயே அவர் அந்த முடிவுக்கு வந்தார். காந்தியின் அந்த முதல் நூல் எழுதப்பட்டு நூறுவருடம் ஆகிறது. ஆனால் அவரை அவர் சொல்வதென்ன என்று நோக்கி ஆராயும் போக்கு நம் நாட்டில் உருவாகவில்லை. அவரை ஐரோப்பியர்களின் கண்ணால் நோக்கி சாதிவெறியன் என்றோ மதவெறியன் என்றோ முத்திரை குத்தவே நாம் முயந்றிருக்கிறோம்.  நமது சாதிப்பற்றை அப்போது சட்டைப்பைக்குள் உள்ளே தள்ளிக்கொள்கிறோம். இன்று,  அவர் சொன்னதென்ன என்று அவரது நூல்கள் வழியாக ஆராய்ந்து ஐரோப்பிய ஆய்வாளர்கள் எழுதும்போது அந்த நூல்களை வாசித்துவிட்டு நம்மில் சிலர் ‘ஆமாம், காந்தி பழமைவாதியல்ல பின் நவீனத்துவர், அவர் சொன்னது ஓர் அறிவியல்பூர்வமான ஆய்வின் ஒரு முடிவையே என்று அங்கீகரிக்கிறோம்.  

காந்தியும் அம்பேத்காரும்:

மகாத்மா காந்தியடிகளுக்கும், அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கும் சாதியம் பற்றி இருந்த எதிரும் புதிருமான கருத்துகள் நீண்டகால விவாதங்கள் மற்றும் போராட்டங்கள் இடையே ஓர் இணைப்பு புள்ளியை நோக்கி காலப்போக்கில் நெருங்கி வந்தன. அதனை இனி காண்போம்.
(இன்னும் ஆராய்வோம்...)

- விடியல்.

**************************

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பு வழி இன்ப ஒளி 15

தமிழ்நாடு அன்புவழி அறப்பணி மன்றம்

அன்பு வழி இன்ப ஒளி -1