வேதாத்திரியம் எனும் வேதம் - 4
வேதாத்திரியம் எனும் வேதம் - 4
3. நேர்மையான நீதிமுறை:
நீதி நெறிமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி வேதாத்திரி மகரிஷி ஐயா அவர்கள் பின்வரும் கவிதையில் சொல்லுகிறார்:
கொலை செய்தான் ஒரு மூர்க்கன் அறிவிழந்து!
கொல்லப்பட்டான் நீதிபதி அளித்த தீர்ப்பால்!
கொலைக்கு கொலை நீதியென்றும் குற்றம் செய்த
கொடுமைக்கே தண்டனைகள் என்றும் சொன்னால்
கொலையுண்டோர் மனைவி மக்கள் பெற்றோர் செய்த
குற்றமென்ன? குடும்பத்தின் தலைவன் ஆங்கே
கொலையுண்ட நிகழ்ச்சி அன்னார் வாழ்வில் என்றும்
கொடுந்துன்பம் தரவில்லையா? நீதி எங்கே?
அறிவிழந்து ஒருவன் கொலை செய்தால், அதற்கு நீதிபதி அளித்த தண்டனையால் அவன் கொல்லப்பட்டால் அவனுக்கும் நீதிபதிக்கும் என்ன வேறுபாடு? ஒருவன் அறிவிழந்து செய்யும் செயலுக்கு ஒரு நீதிபதி அதையே தண்டனையாக அறிவோடு தருவது முறைதானா என்று வினா எழுப்புகிறார் ஐயா!
அப்படி அவன் கொல்லப்படுவதால் அவனது பெற்றோர் மனைவி மக்கள் ஆதரவற்று துன்பம் அடைவார்கள் அல்லவா? அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்? அவர்களுக்கு இந்த துன்பம் அவசியமா? ஒருவன் அறிவிழந்து செய்யும் செயலுக்காக அவரின் குடும்பத்தாரை துன்பத்தில் தள்ளுவது முறைதானா? இதுதான் சரியான நீதியா? என்று கேள்வியை எழுப்பி அதற்கு தக்க விடை தேடிக்கொள்ள ஐயா விட்டுவிடுகிறார்.
அய்யாவின் இந்தக் கேள்விகள் கண்ணுக்குக் கண்; பல்லுக்கு பல் என்று பழி வாங்குவது போல் உயிருக்கு உயிர் என வழங்கப்படும் தண்டனை முறையானது அல்ல என்பதை தெரிவிக்க கூடியதாக உள்ளது. அப்படி என்றால் குற்றங்களை எவ்வாறு தடுப்பது? குற்றம் செய்பவர்களுக்கு தண்டனை வழங்கப்பட கூடாதா? என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.
தண்டனை வழங்குவதற்கு மூன்றுவித கொள்கைகள் உள்ளன: 1. அச்சப் படுத்தும் நோக்கத்திற்கான தண்டனைகள்; 2. தடுத்திடும் நோக்கத்திற்கான தண்டனைகள்; 3. சீர்திருத்தும் நோக்கத்திற்கான தண்டனைகள். கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல்; உயிருக்கு உயிர் என்கின்ற விதத்தில் வழங்கப்படும் தண்டனைகள் அச்சுறுத்தும் நோக்கிலான தண்டனைகள் ஆகும். தடுத்திடும் நோக்கத்தில் ஆன தண்டனைகளும் கடுமையான தண்டனைகளே! சீர்திருத்தும் நோக்கத்தில் ஆன தண்டனைகள் கடுமையானதாக இல்லாமல், அதேசமயம் அவர்களை திருத்துவதற்கான வழிவகைகளை கொண்டு அவர்களைத் திருத்தி மறுவாழ்வு அமைத்துத்தர முயல்வதாகும். ஐயாவின் கவிதை அனேகமாக மூன்றாவது வகையான தண்டனையை வலியுறுத்துவதாக கருதலாம்.
இன்று பலப்பல கடுமையான குற்றங்கள் நடக்கின்றன. அப்படிப்பட்ட குற்றங்களை செய்யும் குற்றவாளிகளுக்கு உடனடியாக அதே அளவிற்கான கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என்றுதான் மக்கள் விரும்புகிறார்கள். ஆனால் மனிதர்கள் எவரும் குற்றவாளிகளாக பிறப்பதில்லை. எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே! என்பது சான்றோர் வாக்கு. இந்த மண்ணில் பிறந்த பிறகு அவர்களுக்கு கிடைக்கும் அறிவு, அனுபவம், வாழ்க்கை சூழல் அவர்களை குற்றவாளி ஆக்கிவிடுகிறது. ஆக அவர்கள் குற்றங்கள் புரிந்ததற்கு இந்த சமுதாயமும் ஒரு காரணமாக உள்ளது என்பது மறுக்க முடியாதது. ஆதலால் இந்த சமுதாயத்தினால் குற்றவாளி ஆகக்கூடிய ஒருவனை அவன் குற்றம் செய்வதற்கே பிறந்து வந்ததுபோல் கருதி தண்டிப்பது முறையாகாது என்று அய்யா சிந்திக்கிறார். அப்படிப்பட்ட குற்றவாளிகளை திருத்தி சீரமைக்க வேண்டும் என்று கருதுகின்றார்.
ஒருவன் ஆத்திரத்தில் கொலை செய்துவிடுவான். அவன் ஆத்திரம் கொள்வதற்கு நியாயமான காரணமும் இருக்கும். அவன் கொலை செய்து விட்டான் என்பதற்காக அவனுக்கு மரண தண்டனை அளித்து விட்டால், அவன் கொலை செய்வதற்கு காரணமாக இருந்த நியாயமான காரணத்திற்கு என்ன மதிப்பு? குற்றம் செய்யாத ஒருவனையே குற்றவாளி என நீதிமன்றத்தில் நிறுத்தி விடுவார்கள். அவன் குற்றவாளி என்று தண்டனை வழங்கி விட்டால் அந்தத் தண்டனை நியாயமானதாக ஏற்க முடியுமா? கள்வன் அல்லாத கோவலனுக்கு மரண தண்டனை விதித்து அதனால் ஏற்பட்ட தீமைகளை சிலப்பதிகாரம் நமக்குச் சொல்ல வில்லையா?
'சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க்கு அணி.' என்கிறார் திருவள்ளுவர். இரண்டு பக்கமும் உள்ள நியாய அநியாயங்களை ஆராய வேண்டும். அதற்கேற்ப குற்றம் செய்தவனை சீர்திருத்தி நல்ல மனிதனாக சமுதாயத்தில் மீண்டும் நடமாடக் கூடிய விதத்தில் தக்க தண்டனை அளிக்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க நீதி நெறிமுறை என ஐயா கூறுவதிலிருந்து அறிந்து கொள்ளத்தக்கது என கருதுகின்றேன்.
பகைவருக்கும் அருள்வாய் நன்னெஞ்சே! என்று நல்லோர் வேண்டுவார்கள். அன்பை அகிம்சையை வேண்டும் ஐயா அவர்கள் குற்றவாளிகளையும் சீர்திருத்தி நல்ல மனிதர்கள் ஆக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஆத்திரம் கோபம் ஆவேசங்களுக்கு அடிக்கடி ஆட்படும் சுபாவமுள்ள நமக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது தான் நியாயமானதாக தோன்றும். ஆனால் அன்பை அருளும் மகான்களுக்கு குற்றவாளிகளும் அன்பிற்கு உரியவர்களாக தான் உள்ளார்கள். எல்லோருள்ளும் அன்பு ஊற்று பெருக்கெடுத்து ஓடுமானால், கொலை கொள்ளை பாலியல் வன்முறை போன்ற குற்றங்கள் ஏன் நடக்கின்றன? உள்ளத்தில் அன்பு குறைவதாலும், இல்லாமல் போவதாலும் தானே குற்றங்கள் ஏற்படுகின்றன. அன்பு நிறைந்த சமுதாயம் உருவாகிவிட்டால் குற்றங்கள் ஏன் நடக்கின்றன? ஆதலால் குற்றம் இல்லாத சமுதாயம் அமைய அன்பு வழியிலே நடை போடுவோம். வாழ்க வளமுடன்! வாழ்க வாழிய வையகம்!
மகரிஷி ஐயா அவர்கள் எடுத்துக்காட்டும் அடுத்த நெறிமுறை: நிலவுலகுக்கோர் ஆட்சி என்பதாகும். அதனை அடுத்து பார்ப்போம்:
( நாளை தொடரும்... )
-------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக