வேதாத்திரியம் என்ற வேதம் - 3
வேதாத்திரியம் என்ற வேதம் - 3
2. பொருள் துறையில் சமநீதி
பொருளியல் துறையில் சமநீதி ஏற்படுவதற்கு வேதாத்திரி மகரிஷி ஐயா அவர்கள் இயற்றியுள்ள கவிதையையும் கருத்தையும் தற்போது காண்போம்:
வீடு தொழிற்சாலை விளைநிலம் வியாபாரம்
விஞ்ஞான இயந்திரங்கள் ஆட்சி பீடம்
பாடுபடும் மக்கட்குப் பொதுவாய் ஆக
பலபடியில் கூட்டுறவு முறை வகுத்து
நாடு வளம் பெற்றுலகத் திணைப்பைக் கொண்டு
நல் வாழ்வு கிட்டுவதற்கு ஏற்றவாறு
ஈடு இணையற்ற ஒரு திட்டம் வேண்டும்
இம் முறையே மக்களுக்கு நலம் பயக்கும்.
வீடு, தொழிற்சாலை, விளைநிலம், வியாபாரம், விஞ்ஞான இயந்திரங்கள், ஆட்சி பீடம், பாடுபடும் மக்கட்குப் பொதுவாய் ஆக வேண்டும் என்கிறார் மகரிஷி அய்யா அவர்கள். தனியுடைமை முழுமையாக நீக்கப்பட்டு பொதுவுடமை ஏற்பட வேண்டும் என்பதை ஐயா குறிப்பிடுகின்றார். ஆனால் அதை அடைவதற்கான வழிமுறைகள் பற்றி ஐயா அவர்கள் இந்த இடத்தில் விரித்து கூறவில்லை. ஆனால் ஐயா அவர்கள் வன்முறை வழியை நாடக் கூடியவர் அல்ல. முதல் நெறியாகவே போரில்லா உலகம் வேண்டும் என்று கூறியுள்ளார். ஆதலால் வன்முறையின் வாயிலாக பொதுவுடைமை அடையவேண்டும் என்பது அய்யாவின் எண்ணமாக இருந்திருக்க வாய்ப்பு இல்லை. அமைதியான வழிமுறையில் அனைத்து உற்பத்தி சாதனங்களும் பொதுவுடமை ஆகவேண்டும் என்ற என்ன கருத்தில்தான் ஐயா கூறியிருப்பார் என்று கருதலாம். ஆதலால் உலகிலுள்ள அனைவரும் பொதுவுடமை சமுதாயம் அமைய வேண்டும் என்று விரும்ப வேண்டும்; அதுதான் உலக மக்கள் அனைவருக்கும் இன்பம் பயக்கக் கூடியது என்பதை உணர வேண்டும். பொதுவுடமை சமுதாயம் தான் மக்கள் அனைவருக்கும் நன்மை தரக்கூடிய சமுதாயம் என்ற அறிவு ஏற்படுகின்றபோது சண்டை சச்சரவு ஏதுமின்றி அத்தகைய நல்லதொரு சமுதாயத்தை அமைத்திட எல்லோரும் அன்பாக ஒத்துழைத்து உருவாக்கிட வேண்டும்.
அவ்வாறு பொதுஉடைமை ஏற்பட்ட பிறகு பல நிலையிலான கூட்டுறவு முறையை ஏற்படுத்தி உற்பத்தியை பெருக்க வேண்டும் என்று ஐயா கூறியுள்ளார். ஆதலால் நாட்டின் எல்லா உற்பத்தியும் கூட்டுறவு வழியைச் சார்ந்தது வளரவேண்டும் என்று கூறியுள்ளார். அதாவது அனைத்து துறையும் அரசுத் துறையாகவும் இல்லாமல் தனியார் துறையாகவும் இல்லாமல் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படக்கூடிய விதத்தில் கூட்டுறவு முறையில் உற்பத்தியில் ஈடுபட வேண்டும் என்று ஐயா கூறியுள்ளார்.
கூட்டுறவு முறையிலான உற்பத்தியை ஏற்படுத்தி நாடு முன்னேற, அதே போன்று உலக நாடுகள் எல்லாம் முன்னேற உலக நாடுகள் எல்லாம் ஒன்று இணைந்து நல்ல முறையில் இருப்பதற்கு ஒரு ஈடு இணையற்ற திட்டத்தை உருவாக்க வேண்டுமென ஐயா கூறுகிறார். இப்படியான உலகம் உருவாவதுதான் மக்களுக்கு நன்மையாக அமைய கூடியதாக இருக்கும் என்று ஐயா அறிவுறுத்துகின்றார்.
எல்லா நாடுகளும் பொதுவுடைமையை ஏற்று கூட்டுறவு முறையில் உற்பத்தியை பெருக்கி எல்லா நாடுகளும் ஒருங்கிணைந்து மக்களுக்கு நன்மை தரும் விதத்தில் அமைந்திட வேண்டும் என்று ஐயா விரும்புகின்றார். அன்பான, அமைதியான வழிமுறையில் உலகிலுள்ள எல்லா நாடுகளும் பொதுவுடமை முறைக்கு மாறிச் செல்ல வேண்டும். கூட்டுறவு முறையில் உற்பத்தியை பெருக்க வேண்டும். உலகமெல்லாம் ஒருங்கிணைந்து மக்களுக்கு நல்வாழ்வை வழங்க வேண்டும் என்ற ஈடு இணையற்ற திட்டம் அய்யாவின் குறிக்கோளாகும். அதை உருவாக்குவதற்கு உலகிலுள்ள அன்பு நெஞ்சங்கள் எல்லாம் ஒன்றிணைய வேண்டும். அன்பான வழியில் அன்பு நிறைந்த ஓர் இன்ப உலகை ஏற்படுத்த வேண்டும். ஓர் உலக ஆட்சி அமைந்து எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க இறை அருளும் குரு அருளும் துணை புரியட்டும். வாழ்க வளமுடன்; வாழிய வையகம்!
வேதாத்திரியத்தின் அடுத்த நெறிமுறை நேர்மையான நீதி முறையாகும். அதனைப் பற்றி அடுத்து காண்போம்
(நாளை தொடரும்...)
--------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக