வேதாத்திரியம் என்கின்ற வேதம்: 6
வேதாத்திரியம் என்கின்ற வேதம்: 6
5. இறை விளக்கம்
வேதாத்திரி மகரிஷி ஐயா அவர்கள் இறைவன் பற்றி கூறியுள்ள பல நெறிமுறைகளை இன்று இங்கே ஒருங்கே காண்போம்:
வேதாத்திரி மகரிஷி ஐயா அவர்களின் கவிதை:
இறைநிலை என்ற பேராற்றல்
எங்கும் உள்ளது நீக்கமற;
மறைவாய் இருந்து அது ஆற்றும்
மாபெரும் செயலை நினைத்திடுவோம்;
உணவை உண்போம் நாள்தோறும்
உடலாய் அதனை மாற்றுவது யார்?
கணமும் நம்மைப் பிரியாமல்
கருத்தாய் இருந்து ஊக்குவது யார்?
உலகம், நிலவு, சூரியன்கள்,
உயிர்களனைத்தும் படைத்தது யார்?
பலவும் ஒழுங்காய் முறைபிறழா
பாங்கில் இயக்கி வருவது யார்?
அவரே தெய்வம், பேராற்றல்
அறிவைக் கொண்டே வணங்கிடுவோம்.
விளக்கம்:
இறைவன் என்ற பேராற்றல் எங்கும் நீக்கமற மறைவாய் இருந்து மாபெரும் செயல் ஆற்றி வருகிறது. உண்ணும் உணவை நாள்தோறும் உடலாய் மாற்றுவது யார்? கணமும் நம்மைப் பிரியாமல் கருத்தாய் இருந்து காப்பது யார்? உலகம், நிலவு, சூரியன்கள், உயிர்களனைத்தும் படைத்தது யார்? பலவும் ஒழுங்காய் முறைபிறழா பாங்கில் இயக்கி வருவது யார்? அவரே தெய்வம், பேராற்றல். அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்தாலும் இறை சக்தி உள்ளது என்ற தெளிவே ஏற்படும். இறைசக்தி என்பதுதான் என்ன? அது எப்படி செயல்படுகிறது. அதைத்தான் மகரிஷி ஐயா அவர்கள் சீர் காந்த நிலை விளக்கம் எனக் கூறுகிறார்.
சீர் காந்த நிலை விளக்கம்:
வேதாத்திரி மகரிஷி ஐயா அவர்களின் கவிதை:
காந்தநிலை உணர்ந்திடில் கடவுள் மனம் அதனிலே
கண்டிடலாம்; அதன் மாயத் திருநடனக் காட்சியாய்
மாந்தருக்குள் ஊறு, ஓசை, மணம், ஒளி, சுவை, மனம்
மற்றும் இன்பம் துன்பம் யாவும் மாயகாந்த விளைவுகள்
சாந்தமான மன நிலையில் சலனமின்றி ஆய்ந்திட
சந்தேகம் சிக்கலின்றி சாட்சி கூறும் உன் உளம்
வேந்தருக்கும் வேதருக்கும் வணிகருக்கும் பொது இது
விரிந்தறிவில் இறையுணர விளக்கினேன் விளங்கியே.
விளக்கம்:
காந்தம் என்ற ஒன்று இல்லாத இடமோ,பொருளோ, சீவனோ பிரபஞ்சத்தில் இல்லை எனலாம். சுத்தவெளி எனப்படும் இறைநிலை தன்னைத்தானே விட்டுவிட்டு அழுத்துவதால் உருவாகும் இறைத்துகள்கள், அதே சுத்தவெளியின் தொடர் அழுத்தத்தால் தற்சுழற்சி பெற்று, மேலும் அவைகள் இனைந்து விண்ணாகி, அந்த விண்ணும் தற்சுழற்சியோடு இயங்குகின்றது.
அவ்வாறு விண் சுழலும் போது அதன் சுழற்சிக்கு ஈடு கொடுக்க முடியாத இறைத்துகள்கள் அவ்விண்ணிலிருந்து வெளியேறுகிறது. இவைகள் இறைநிலையோடு மோதும்போது தன்னிலை இழந்து காந்தம் என்ற நிலை அடைகிறது. இக்காந்தமே பஞ்ச பூதங்களில் அழுத்தம், ஒளி, ஒலி, சுவை, மணம் என்றும் சீவன்களில் இவைகளை உணரும் மனமாகவும் செயல் புரிகிறது. இக்காந்தமே பிரபஞ்சம் முழுவதும் ஆற்றலாகவும், அறிவாகவும் இருந்து அனைத்தையும் வழி நடத்துகின்றது. இறைவன் என்ற பேராற்றல் இத்தகைய தன்மை உடையதாக இருக்கின்ற நிலையில், நாம் செய்யும் சடங்குகள் சம்பிரதாயங்கள் எத்தகையது என்பதை விளக்குவதற்கு அய்யா பின்வரும் நெறிமுறையை தருகின்றார்.
தேர்த் திருவிழா தவிர்த்தல்:
வேதாத்திரி மகரிஷி ஐயா அவர்களின் கவிதை:
கடவுள்தான் அனைத்தையுமே படைத்தான் என்றேன்;
கண்காது மூக்கு வைத்துக் கதைகள் சொன்னேன்;
கடவுள் என்ற கற்சிலையை அறையில் வைத்துக் கதவு அடைத்துப் பூட்டியும் வைத்தேன்;
பின் அந்தக் கடவுளுக்குப் பசி தீர்க்க பால், நெய், தேங்காய் கனிவகைகள் கற்சிலைமுன் படித்தேன்;
ஆனால் கடவுள் நிலை அறிந்தபோதென் செய்கை யெல்லாம் கண்டு விட்டேன் சிறுபிள்ளை விளையாட்டாக.
விளக்கம்:
இறைவனுக்கு உருவம் உள்ளது என்று நினைத்து நாம் அவனுக்கு, நாம் என்னவெல்லாம் நமக்காக செய்து கொள்கிறோமோ அவையனைத்தையும் அவனுக்கு செய்கிறோம், ரசிக்கிறோம். மேலும் இறைவனிடம் நீ எனக்கு இது செய்தால், நான் உனக்கு அது செய்கிறேன் என்று வியாபாரம் செய்கிறோம். சற்றே சிந்தித்துப் பார்ப்போம். இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்து, கோடானுகோடி கோள்களையும், உயிர்களையும் படைத்து, அவை அனைத்தையும் இயக்கிக்கொண்டும், காத்துக் கொண்டும் இருப்பவன் இறைவன். அவனுக்கு நாம் கொடுத்து அவன் பெறவேண்டிய தேவையென்று என்ன இருக்கப் போகிறது? அப்படியெனில் இவ்வளவு நாட்களாக நாம் செய்துகொண்டிருக்கும் பூஜை, ஆராதனை, திருவிழாக்கள் இவையெல்லாம் எப்படி உருவாகி இருக்கும்? ஒழுக்க நெறி தவறி வாழும் மக்களை நல்வழிப்படுத்தி அவர்களை திருத்துவதற்கும், சமுதாயத்திற்கு அவர்களால் ஏற்படும் துன்பங்களைத் தவிர்ப்பதற்கும் உண்மையான இறையுணர்வு பெற்றவர்களும், சிந்தனையாளர்களும் உருவாக்கியதே ஆகும். இந்த நன்னோக்கத்தைப் பயன்படுத்தி சில வியாபாரிகளாலும், சில சுயநலவதிகளாலும் உருவாகாப்பட்டவைகளே இத்தகைய தேர்த் திருவிழா போன்ற பல. இவைகளால் ஏற்படும் செலவுகளையும், இத்தகைய நேரங்களில் ஏற்படும் சண்டை, சச்சரவு போன்றவைகளை சிந்தித்து தவிர்ப்போம் என்கிறார் மகரிஷி ஐயா அவர்கள்.
செயல் விளைவு உணர் கல்வி:
வேதாத்திரி மகரிஷி ஐயா அவர்களின் கவிதை:
கண், காது, மூக்கு வைத்துக் கதைகள் சொல்லிக்
கருத்துக்குக் கடவுள்தனை சிறுமையாக்கிப்
புண்பட்ட நெஞ்சங்கள் மேலும் புண்ணாய்ப்
போகும் வழி தெரியாமல் தவித்து, வாழ்வில்
கண்கலங்கி நிற்போர்க்கும் கடவுள் தன்மை
கர்மத்தின் விளைவாக எழுந்தியங்கும்
உண்மையினை விளக்குவதே இக்காலத்திற்கு
ஒத்த உயிர்த் தொண்டாகும்; உணர்வோம், செய்வோம். (1)
இறையுணர்வும் அறநெறியுமின்றி மனித வாழ்வு
ஏற்றபடி அமையாது என்ற உண்மை கண்டோர்
மறைமுகமாய் முக்காலத்தோர் அறிவிற்கேற்ப
மதித்திடவும் ஒழுகிடவும் கருணையுள்ளம் கொண்டோர்
குறையெனினும் வேறு வழியின்றி இறைநிலைக்குக்
கொடுத்தார்கள் உருவங்கள், பெயர்கள்.
நிறைவாழ்வுக்கு அறம்புரியும் சொர்க்க ஆசை காட்டி
நெறி பிறழ்வோர் அச்சமுற நரகமும் கற்பித்தார். (2)
செயலிலே விளைவாக தெய்வ ஒழுங்கமைப் பிருக்க
பயனென் தவறிழைத்துப் பரமனைப் பின் வேண்டுவதால்.(3)
விளக்கம்:
அன்றும் இன்றும் என்றும் செயலுக்கேற்ற விளைவுகள் வருகின்றன. இதை அளிப்பவன் இறைவன். இதை மனிதன் அறிவதில்லை. அல்லது அறிந்தாலும் அலட்சியம் செய்கிறான். தவறான செயல்களை செய்கிறான். விளைவாக துன்பம் வருகிறது. வேதனை அடைகிறான். வருத்தப் படுகிறான். கடவுளை குறை சொல்கிறான். கடவுள் என்பது சத்தியமானது. நீதி தவறாதது. அது செயலுக்கு ஏற்ற விளைவை மட்டுமே அளிக்கின்றது. உனக்கு வரும் இன்பம், துன்பம் இரண்டுமே உன்னுடைய செயலைப் பொறுத்தே அமைகிறது. கடவுளைக் குறைகூறுவது அறியாமை. தீதும் நன்றும் பிறர் தர வாரா என கணியன் பூங்குன்றனார் கூறியுள்ளார். மனம் கண், காது, மூக்கு, நாக்கு, தோல் என்னும் ஐம்புலன்கள் மற்றும் கைகள், கால்கள், வாய், குதம், குய்யம் எனும் செயல் உறுப்புகள் ஆகிய பத்து உறுப்புகளோடு சேர்ந்து செயல்களை செய்வதற்கு முன் பலமுறை சிந்தித்து நல்லவைகளை மட்டுமே செயலாற்றினால் இன்பத்தை மட்டுமே பெறலாம். மாறாக செயல் புரிந்தால் துன்பமே மிஞ்சும். முக்காலத்தில் இதை உணராமல் தவறான செயல்களை செய்து தாமும் துன்புற்று, பிறருக்கும் துன்பத்தை அளித்த மக்களை திருத்துவதற்காகவே கோயில், கடவுள், சொர்க்கம், நரகம் போன்றவைகளை கற்பித்து, நல்லது செய்தால் இறைவன் சொர்கத்தை அளிப்பான் என்றும் தீயவற்றை செய்தால் இறைவன் நரகத்தை அளிப்பான் என்றும் மக்களை ஆசை வார்த்தைகளைக் கூறியும், அச்சுறுத்தியும் நல்வழிப்படுததினர் மக்கள் மீது அன்பும் கருணையும் கொண்ட சிந்தனையாளர்கள்.
பல மதங்கள் பல கடவுள் பழக்கம் ஒழித்து உண்மை ஒன்றைத் தேர்ந்திடுதல்:
வேதாத்திரி மகரிஷி ஐயா அவர்கள் கவிதை:
உலக மக்கள் பண்பாடு உருக்குலைந்து போச்சு
ஒவ்வொருவரும் பிறர்க்கு பகைவராகின்றார்கள்
பல மதத்து தலைவர்களும் கூடி ஓர் அரங்கில்
பற்றற்று தெய்வநிலை தேர்ந்தெடுக்க வேண்டும்.
விளக்கம்:
இன்று உலகில் வாழ்கின்ற சீவன்களில் உடல் அமைப்பிலும், அறிவின் உயர்விலும், வாழ்க்கை முறையிலும் மிக உயர்ந்த நிலையில் இருப்பவன் மனிதன். ஆனால் வினைப் பதிவின் காரணமாக, விலங்கினங்களிலிருந்து வித்துத் தொடராக வந்ததனால் மனிதப் பண்புகளை அறியாமலும், அறிந்தும் அலட்சியம் செய்தும், உணர்ச்சி வயப்பட்டு செயல்கள் ஆற்றி துன்புற்றும், துன்புறுத்தியும் வாழ்கின்ற மக்களை நெறிப்படுத்தி பிறவியின் நோக்கமாகிய முழுமைப் பேறை அடைவதற்கு உதவி செய்ய நினைத்த சிந்தனையாளர்கள் ஆங்காங்கே உருவாக்கிய அமைப்புகளே இன்று மதங்கள் என்று அழைக்கப்படுகின்றன. காலப்போக்கில் சுயநலம் எழுச்சி பெற்றதனால் மதங்களுக்குள்ளே சண்டைகளும் சச்சரவுகளும் உருவாகின. இன்று அறிவில் வளர்ச்சி பெற்ற, உண்மைப் பொருளை உணர்ந்த மதத் தலைவர்கள் ஒன்றுகூடி கலந்தாய்வு செய்து இறைநிலை என்பது ஒன்றா? பலவா? என்ற கேள்விக்கு விடை காணவேண்டும். இறைநிலை ஒன்று எனில், அது எது என்றறிந்து உலக மக்கள் அனைவருக்கும் அதை தெரிவித்தல் அவசியமாகும். உலகிலுள்ளோர் அனைவரும் அந்த ஒரே கடவுளை வணங்குவதோடு, சண்டை சச்சரவுகளை ஒழித்து ஒத்தும் உதவியும் வாழ்வது இன்றையகாலகட்டத்தில் சமுதாய மேம்பாட்டிற்கு உதவி புரியும்.
வாழ்க வையகம். வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.
வேதாத்திரி மகரிஷி ஐயா அவர்கள் வகுத்துள்ள மகளிர் மாண்பு மற்றும் உணவும் நீரும் உலகிற்கு பொதுவாக்குதல் போன்று நெறிமுறைகளை அடுத்து காண்போம்.
(நாளை தொடரும்...)
-----------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக