சாதியம் மறையுமா? - 6
சாதியம் மறையுமா? - 6
மகாத்மா காந்தியின்
ஆரம்ப கால கருத்துக்கள்
1920ல் காந்தி ”சாதியமைப்பு இந்துமதத்தை அழிவிலிருந்து காப்பாற்றியது எனவும், நால்வருணம் என்ற பிரிவினை அடிப்படையானது, இயல்பானது, தேவையானது எனவும், ஆனால் எல்லா நிறுவனங்களையும்போல அதுவும் சீரழிந்துவிட்டது எனவும், பிறப்பின் அடிபப்டையிலான அடையாளம் என்பது எப்போதைக்கும் உரியது எனவும் அதை மாற்ற நினைப்பதென்பது பெரும் குழப்பத்துக்கே இட்டுச்செல்லும் எனவும், சாதி என்பது குடும்பம் என்ற விதியின் நீட்சிதான். பாரம்பரியம் ரத்தஉறவு ஆகியவற்றின் அடிப்படையில் அவை நிர்வகிக்கப்படுகின்றன எனவும், சாதியமைப்பு மேல் கீழ் என்ற பேதத்தைச் சுட்டுவதில்லை எனவும், அது வாழ்க்கைநோக்கில் உள்ள வேறுபாடுகளையும் அதற்குச் சமானமான வாழ்க்கை அமைப்புகளையும் அடையாளம் காட்டுகிறது எனவும், ஆனால் சாதியமைப்பில் ஒரு சமூக அடுக்குமுறை உருவாகி வந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது எனவும், ஆனால் அது பிராமணர்களின் உருவாக்கம் என எவரும் சொல்லிவிட முடியாது எனவும், அனைவருக்கும் ஒரே வாழ்க்கை லட்சியம் உருவாகி வரும்போது ஒரு சமூக அடுக்கு உருவாவது தடுக்கமுடியாத ஒன்று எனவும், அந்த இலட்சியத்தை எல்லா சாதியும் ஒரே அளவில் உள்வாங்கிக்கொள்ள முடியாது எனவும் கூறியுள்ளார். இவ்வாறு இருந்த காந்தியின் ஆரம்பகால குரல் மெல்ல மெல்ல மாறி வந்தன.
1925ல் காந்தி:
1925ல் காந்தி ”ஒருவர் பிற வருணத்தவர்களால் அவர்களின் பாரம்பரியமாக உருவாக்கப்பட்ட அறிவியல் கலை ஆகிய துறைகளின் அறிவை கற்றறிவதில் எந்த பிழையும் இல்லை எனவும், ஆனால் ஒருவன் அவனுடைய உயிர்வாழ்தலுக்கான தொழிலாக அவனது பெற்றோர் பாரம்பரியமாகச் செய்த அவனது வருணத்தின் அதே தொழிலையே செய்வதே நல்லது எனவும், மேல் கீழ் என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும், தன்னை உயர்வாக எண்ணிக்கொண்டு பிற வருணத்தவரை குனிந்து நோக்கும் ஒரு பிராமணன் பிராமணனே அல்ல எனவும் அவன் முதலிடத்தில் இருக்கிறான் என்றால் ஆன்மீகமான சேவைக்கான உரிமை அவனுக்கு அதிகமாக இருக்கிறது என்பதனாலேயே எனவும் எழுதினார்.
காந்தியின் இந்த மாற்றத்துக்கான காரணம் என்ன? காந்தி இந்தியாவுக்கு திரும்பிவந்தது இக்காலத்திலேயே. ரயிலில் இந்தியாவெங்கும் விரிவான ஒரு சுற்றுப்பயணம் செய்தார் அவர். இத்தருணத்தில் அவருக்கு ஒரு சமூகமாக இந்தியாவை தொகுக்கவேண்டியதன் அவசியம் புரிந்திருக்கக் கூடும். சாதி இந்தியாவை ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத தனி அறைகளாக பிரித்துவிடக்கூடும் என்று அவர் உணர்ந்தார் என தோன்றுகிறது. ஆகவே சாதி என்ற பிரிவினைக்கு மேலாக ஒரு பொதுவான சமத்துவத்தை உருவாக்கியாகவேண்டும் என்று அவருக்குப் பட்டிருக்கலாம்.
1931ல் காந்தி:
1931ல் காந்தி அம்பேத்காரைச் சந்திக்கிறார். காந்திக்கும் அம்பேத்காருக்கும் நடுவே காந்தியின் இறப்பு வரை 17 வருடம் ஓய்வில்லாமல் விவாதம் நடந்திருக்கிறது. சில சமயம் அம்பேத்கார் சினம் கொண்டு அத்து மீறி பேசியிருக்கிறார். ஆனால் அவ்வாறு சினம் கொள்வதற்கான தார்மீகமான ஒரு உரிமை அம்பேத்காருக்கு இருப்பதாகவே மீண்டும் மீண்டும் காந்தி எண்ணினார். ஆகவே காந்தியின் குரல் பொறுமையுடன் மீள மீள அம்பேத்காருடன் உரையாடுவதாகவே இருக்கிறது.
காந்தி பிடிவாதம் மிக்கவர் என்ற ஒரு நம்பிக்கை பலரிடம் உண்டு. அது உண்மை. சாதாரணமாக காந்தி தன் கருத்துக்களை மாற்றிக்கொள்பவரல்ல. ஏன் என்றால் மிக விரிவான ஆராய்ச்சிகள் மூலம் தனக்குத்தானே நிரூபித்துக்கொண்டவற்றை உறுதியாக நம்பக்கூடியவர் அவர். அவற்றை ஒரு ராஜதந்திரமாகவோ பிறர் என்ன நினைப்பார்கள் என்பதற்காகவோ மாற்றிக்கொள்ளக்கூடியவர் அல்ல. சொல்லப்போனால் பிறர் தன்னைப்பற்றி என்ன நினைக்கவேண்டும் என அவர் எப்போதுமே கவலைப்பட்டதில்லை.
ஆனால் காந்தி அவரது கருத்துக்களுடன் அவரளவுக்கே ஆற்றலுடன் மோதியவர்களை கூர்ந்து கவனித்தார். அவர்களுடன் நுட்பமாக விவாதித்தார். காந்தியைப் போன்ற ஒருவரிடம் விவாதிக்கும் மூளைத்திராணியும் ஆன்மபலமும் அம்பேத்காருக்கு இருந்தது. அது நேருவுக்கு இல்லை. ஆகவேதான் காந்தி நேருவால் கொஞ்சம்கூட மாற்றப்படவில்லை. அம்பேத்காரால் தலைகீழான மாற்றத்தை அடைந்தார்.குறிப்பாக சாதி விஷயத்தில்.
1931ல் காந்தி ” நான் நவீன அர்த்தத்தில் சாதி அமைப்பில் நம்பிக்கை கொள்ளவில்லை. அது ஒரு சமூகத்தீங்கு, முன்னேற்றத்துக்கு தடை. மனிதர்கள் நடுவே உள்ள எவ்வகையான ஏற்றதாழ்வுகளையும் நான் நம்பவில்லை. நாமெல்லாம் மூற்றிலும் சமம். சமத்துவம் என்பது ஆன்மாவிலே ஒழிய உடல்களில் அல்ல….புறவயமாக தெரியும் இந்த சமமின்மைக்கு நடுவேதான் அந்த சமத்துவம் உள்ளது என்று நாம் புரிந்துகொள்ளவேண்டும். எந்த ஒரு மனிதனும் சகமனிதனைவிட மேலானவனாக எண்ணிக்கொண்டானென்றால் அது கடவுளுக்கு எதிரான குற்றமாகும். ஆகவே சாதியமைப்பானது மனிதர்களிடையே தரவேற்றுமைகளை சுட்டும்வரை அது ஒரு மாபெரும் தீமையே ஆகும். நான் பாரம்பரியமாக தொழில்களைப் பங்கீடு செய்யும் வருண அமைப்பிலும் நம்பிக்கைகொள்ளவில்லை. நான்கு வருணங்கள் என்பவை நான்கு பொதுவான மானுடச்செயல்பாடுகளைச் சுட்டுகின்றன. அறிவை அடைதல், எளியோரைக் காத்தல், தொழிலையும் வணிகத்தையும் செய்தல், உடலால் பிறருக்குச் சேவைசெய்தல். இந்த பணிகள் எல்லா மானுடருக்கும் பொதுவானவை. ஆனால் இந்துஞானம் அவற்றை நம்முடைய இருப்பின் ஆதார விதிகளாக அடையாளம் கண்டுகொண்டு சமூக உறவுகளையும் நடத்தைகளையும் ஒழுங்குபடுத்த பயன்படுத்திக்கொண்டது…ஆனால் என்னுடைய வரையறையின்படி இப்போதைய இந்துமரபில் வருணப்பிரிவினை செயல்படவில்லை. பிராமணர்கள் எனபப்டுபவர்கள் அறிவை அடைதலை விட்டுவிட்டார்கள். பிறதொழில்களை அவர்கள் செய்கிறார்கள். எல்லா வர்ணத்துக்கும் கிட்டத்தட்ட இது பொருந்தும்” என எழுதினார். 1932ல் காந்தி ”பண்டைய முறை எதுவாக இருந்தாலும் எந்த ஒரு மனிதனும் தன்னை உயர்குலத்தவன் என்று கூறிக்கொண்டு வாழ்ந்துவிடமுடியாது. சமூகம் அத்தகைய உரிமைபாராட்டல்களை இனிமேல் அங்கீகரிக்காது. உலகம் விழிப்புகொண்டுவிட்டது…” என எழுதினார்.
அம்பேத்கரால் காந்திக்கு
ஏற்பட்ட மாற்றம்
காந்திக்கும் அம்பேத்காருக்கும் இடையேயான உரையாடலே காந்தியை தொடர்ச்சியாக சாதியையும் வர்ணத்தையும் மறுபரிசீலனைசெய்ய வைத்தது. காந்தி சாதியமைப்பின் சாதக அம்சங்களைக் கண்டபோது அவர் கிட்டத்தட்ட ஒரு சமூக அறிவியலாளனின் ஆய்வுப்பார்வையை மட்டுமே கொண்டிருந்தார். ஆனால் சாதியின் அடக்குமுறைக் குணத்தை அவர் அடையாளம் கண்டபோது கிட்டத்தட்ட காங்கிரஸ் அவரது கையில் இருந்தது. காங்கிரசுக்குள் இருந்த உயர்சாதிவெறியர்களை அவர் அன்றாடம் சந்தித்துவந்தார். காங்கிரசுக்குள் அவர்களே அவரது முக்கியமான எதிரிகளாக விளங்கினார்கள். சாதி என்பது எத்தனை சாதகமான பங்களிப்பு கொண்டதாக இருந்தாலும் அது ஓர் அடைக்குமுறைச் சாதனம் என்று காந்தி இக்காலத்தில்தான் தெளிவடைந்தார். சொல்லபோனால் காந்தி காங்கிரஸின் உயர்சாதிப்பின்புலத்துக்கு எதிராக அம்பேத்காரை நோக்கி நகர்ந்தார். காந்தி அவரது வாழ்நாள் முழுக்க கொண்டிருந்த கருத்துநிலையை அந்தக் காலகட்டத்தில் தலைகீழாக மாற்றிக்கொண்டார்.
வருண – சாதி அமைப்பின் வரலாற்றுப்பணி என்னவாக இருந்தாலும், அது இப்போதும் முக்கியமான நிறுவனமாக இருந்தாலும் அது சென்ற காலகட்டத்தைச் சேர்ந்தது என்றும் நவீனகாலத்தில் அது சமத்துவத்துக்கு எதிரான உணர்ச்சிகளையே அதிகம் கொண்டிருகிறது என்றும் மக்களில் கணிசமானபேரை அது பிறருக்கு கீழே வைத்திருக்கிறது என்றும் காந்தி அறிந்தார். தான் உருவாக்க எண்ணிய கிராம சுயராஜ்யத்தில் அகிம்சை தழைக்க சமத்துவம் அவசியம் என்றும் அதற்கு சாதி அழியவேண்டும் என்றும் உணர்ந்தார். அவ்வாறு தன் தரப்பை மாற்றிக்கொள்வதென்பது காந்தியைப் பொறுத்தவரை தன் மொத்த வாழ்க்கையையும் அதற்கேற்ப மாற்றிக்கொள்வதே. மேடையில் ஒரு கருத்தை ஏற்றுக்கொள்ளும் மனிதர் அல்ல அவர். சற்றும் தயங்காமல் காந்தி தன் கருத்துக்களை எழுதினார். ஆனால் இக்காலத்தில்கூட அம்பேத்கார் மையப்படுத்தப்பட்ட நிர்வாகம், உயர்தொழில்நுட்பம் போன்ற நவீனத்துவ கருத்துக்கள் கொண்டிருந்ததை காந்தி திட்டவட்டமாக மறுத்தார்.
1935ல் காந்தி:
1935ல் காந்தி ”சாதி அழிய வேண்டும். நடைமுறையில் சாஸ்திரங்கள் சொல்லும் வருணாசிரம தர்மம் இப்போது எங்குமில்லை. இன்றைய சாதிமுறை என்பது சாஸ்திரங்கள் சொல்லும் இலட்சிய வருணாசிரமதர்மத்துக்கு நேர் எதிரான ஒன்று. எத்தனை வேகமாக பொதுமக்களின் பிரக்ஞையில் இருந்து அதை ஒழிக்க முடியுமோ அந்த அளவுக்கு அது நல்லது. சாதியை அழிப்பதற்கு மிகச்சிறந்த மிகவேகமான தடையற்ற வழி என்னவென்றால் சீர்திருத்தவாதிகள் அதை தங்களிடமிருந்தே தொடங்குவதுதான். தேவையென்றால் அதற்காக அவர்கள் சமூகத்தின் புறக்கணிப்பைக்கூட ஏற்றுக்கொள்ளவேண்டும் .மாற்றம் படிபப்டியாக ஆனால் உறுதியாக நிகழும்” என எழுதினார். சொன்னதை தானே செய்வதற்கும் காந்தி தயாரானார். பிறப்பால் பிராமணரான கோரா தன் சாதியை துறந்தார். அதற்காக அவர் வேலையை விட்டு துரத்தப்பட்டார். தலித் மக்கள் நடுவே சேவைசெய்த கோராவை 1944 ல் காந்தி தன் ஆசிரமத்துக்கு அழைத்து தன்னுடன் வைத்துக்கொண்டார். அவரை தன் வழித்தோன்றலாக எண்ணியது மட்டுமல்ல சாதி, வருண அமைப்பை முள்காடு என்று வருணித்த கோராவின் கருத்தை தானும் முழுமையாகவே ஏற்றுக்கொண்டார்
பின்னர் காந்தி அவரது பழைய கருத்தான கிராமசுயராஜ்யத்தின் சாதி அமைப்பை முழுக்க மாற்றிக்கொண்டார். இனிமேல் சாதி இல்லை. அது அடக்குமுறைக்கான கருவி. அது அழிய வேண்டும். வருணத்தைப்பொறுத்தவரை நவீன காலகட்டத்தில் ஒரே வருணம்தான் இருக்க வேண்டும், அது சூத்திர வருணம் மட்டுமே. ஒவ்வொருவரும் உடலால் உழைக்கும் சூத்திரனாக மாறியாக வேண்டும். எந்தவேலை செய்தாலும் ஒருவர் கண்டிப்பாக உடலுழைப்பில் ஈடுபட்டாகவேண்டும் என்றார் காந்தி. அவரது இலட்சிய கிராமசுயராஜ்யம் தங்களை உடலுழைப்பு மூலம் சூத்திரர்களாக ஆக்கிக்கொண்ட மக்களால் மட்டுமே ஆனதாக இருக்கும் என்றார்.
1946 ல் காந்தி:
1946 ல் காந்தி ஒரு அமெரிக்க நிருபரிடம் வர்க்கமற்ற சாதியற்ற ஒரு இந்திய சமூகத்தை உருவாகக் முயல்வதாக்ச் சொன்னார். ஒரே சாதிமட்டும் இருக்கும் ஒரு நிலை வரவேண்டும் என்றும் பிராமணர்கள் தலித்துக்களை மணம்முடிக்கவேண்டும் என்றும் சொன்ன காந்தி சமத்துவமின்மை வன்முறையை உருவாக்கும், சமத்துவமே அகிம்சையை உருவாக்கும் என்றார். அந்தக் காலகட்டம் ஐம்பது வருடங்களுக்குள் வந்துவிடும் என்று தன் நம்பிக்கையை அவர் முன்வைத்தார். ஆரம்பத்தில் கலப்புத்திருமணங்களை ஏற்க மறுத்த காந்தி பின்னர் கலப்புத்திருமணங்களை முழுக்க ஆதரித்தார். கடைசி காலத்தில் கலப்புத்திருமணங்களை மட்டுமே அவர் ஆதரித்தார். தன் ஆதரவாளர்கள் கலப்புத்திருமணம் செய்தாகவேண்டும் என்றும் அதன்மூலம் மட்டுமே சாதியை ஒழிக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார். குறிப்பாக உயர்சாதியினர் தலித் சாதியினரை மணந்துகொள்வதை ஒரு முக்கியமான சமூகச்செயல்பாடாக காந்தி வலியுறுத்தினார்.
தன் கொள்கையை திட்டவட்டமாக வெளியிட்டது மட்டுமல்ல அதை தீவிரமாக நடைமுறைப்படுத்தவும் செய்தார் காந்தி. காந்தியால் உந்தபப்ட்ட ஹரிஜன- உயர்சாதி மணங்கள் அக்காலகட்டத்தில் ஏராளமாக நடைபெற்றன. தமிழகத்தின் புகழ்பெற்ற காந்தியவாதிகளான கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் தம்பதியினர்கூட அவ்வகையான தம்பதியினர்தான்.
கலப்புத்திருமணத்தை காங்கிரஸ் தன் முதன்மை சமூகத்திட்டமாக கொண்டுவருமா என்று 1946ல் ஒரு நிருபரின் கேள்விக்கு தீண்டாமை ஒழிப்பு, சமபந்தி போஜனம், ஹரிஜனங்களுக்கு இட ஒதுக்கீடு போன்றவற்றில் காங்கிரஸ் ஒத்த கருத்து கொண்டிருக்கிறது என்றும் விரைவிலேயே கலப்புமணத்தை நோக்கியும் காங்கிரஸை கொண்டுவந்துவிடலாம் என்றும் காந்தி சொன்னார். அது காங்கிரஸை அவர் தவறாகப் புரிந்துகொண்டு சொன்னது. அப்போது இந்திய சுதந்திரம் நெருங்கிவிட்டிருந்தது. அதிகாரக் கனவுகள் ஆரம்பமாகிவிட்டிருந்தன. காந்தியின் சமூகத்திட்டங்கள் நேருவின் காங்கிரஸ¤க்கு உவப்பாக இருக்கவில்லை. காங்கிரஸ் அரசியல் கட்சியாகச் செயல்படக்கூடாது என்றும் கலப்புத்திருமணம் முதலிய சாதி ஒழிப்புச் செயல்பாடுகளில் அது ஈடுபடவேண்டும் என்றும் காந்தி வாதிட்டார். கிராம சுயராஜ்யம் அமைக்க வேண்டும் என்று கோரினார். நேரு காந்தியை சந்திப்பதையே தவிர்த்தார். காந்தி கொல்லப்படும் வரை. ஒருவேளை மத ஒற்றுமைக்காக காந்தி உயிர்த்தியாகம் செய்யவில்லை என்றால் சாதி ஒழிப்புக்காக அவர் உயிர்தியாகம் செய்ய நேரிட்டிருக்கும். அவர் சென்றுகொண்டிருந்த திசை அது.
மதமாற்றப் பாதையில்
அண்ணல் அம்பேத்கார்
மகாத்மா காந்தியடிகள் மேற்படியாக சமத்துவ சமுதாயத்தை காண கலப்பு திருமணம் போன்ற சமூகத் திட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, இந்து மதத்தில் பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு கருத்தை மாற்றமுடியாது என்று எண்ணத்திற்கு வந்த அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சாதியை ஒழித்து சமூக சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கு மத மாற்றம் ஒன்று தான் சரியான தீர்வு என்று முடிவுக்கு வந்தார். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மத மாற்றத்திற்கான முடிவுக்கு வந்தது ஏன் என்பது பற்றியும், கிறிஸ்துவம், இஸ்லாம், சீக்கியம் ஆகிய மதங்களைப் பற்றி எல்லாம் ஆய்வு செய்த அண்ணல் அம்பேத்கார் அவர்கள் இறுதியில் புத்த மதத்தை தழுவ முடிவு செய்தது ஏன் என்பது பற்றியும் காண்பது அவசியமாக படுகிறது.
இன்னும் ஆராய்வோம்...!
- விடியல்.
கருத்துகள்
கருத்துரையிடுக