சாதியம் மறையுமா? - 2

சாதியம் மறையுமா? - 2

'ஆதியில் இல்லை சாதி! பாதியில் வந்தது சாதி! இன்னும் இருப்பது என்ன நீதி! எப்போது மறையும் இல்லாமல் மீதி!' என்று ஒரு கவிதை. சாதி எப்போது வந்தது என்பது பற்றி நிறைய சர்ச்சை உள்ளது. மனிதகுல வரலாற்றை பற்றி பல்வேறு ஆராய்ச்சி மற்றும் வரலாற்று நூல்களை படிக்கின்ற போது மனிதர்கள் எங்கெங்கு தோன்றினார்களோ அங்கங்கே கூட்டமாக வாழ்ந்தார்கள் எனவும், உணவு தண்ணீர் போன்றவற்றுக்காக ஒரு கூட்டம் இன்னொரு இடத்திற்கு இடப்பெயர்வு செய்கின்றபோது அங்கு ஏற்கனவே இருந்த ஒரு கூட்டத்துடன் சண்டையிட்டு வென்று அந்த இடத்தை ஆக்கிரமித்து ஏற்கனவே இருந்த கூட்டத்தை அடிமையாக்கியோ,  அல்லது வெல்லமுடியாத சமயத்தில், சமாதானமாக போய் அங்கிருந்து கூட்டத்தோடு ஒன்றுபட்டோ வாழ்ந்திருக்க கூடும் எனவும்,  வேட்டையாடிய சமுதாயம் கால்நடை வளர்ப்பையும் விவசாயத்தையும் சிறுசிறு தொழில்களையும் கற்றுக்கொண்ட பிறகு கால்நடைகளும் நிலங்களும் உற்பத்திப் பொருட்களும் அவரவர் தனிச் சொத்துக்களான பிறகு குடும்பங்களும், பல குடும்பங்களை கொண்ட குடிகளும், குலங்களும் தோன்றியிருக்கக்கூடும் எனவும் தெரிய வருகின்றன.

ஒவ்வொரு குடியும் ஒரு தொழிலைத் தொடர்ந்து செய்வதின் மூலம் நிபுணத்துவம் பெற்று பரம்பரையாக தொடர்ந்து செய்திருக்க கூடும் எனவும், சொத்துக்களை தத்தமது குடும்பம், குலத்திற்குள் வைத்துக்கொள்ள அகமண உறவு ஏற்பட்டிருக்கக் கூடும் எனவும் தோன்றுகிறது. பல குலங்கள் ஒன்றுசேர்ந்து வாழ்கின்ற போது ஒரு குலத்தினர் மற்றொரு குலத்தினரை சேர்ந்தவரை விரும்பிச் சேரும் நிகழ்வுகளில் இரு குலத்துக் கிடையே  இருந்த கலாச்சார வேறுபாடுகள் ஏற்படுத்திய ஒற்றுமைக் குறைவை தவிர்ப்பதற்கும், ஒரு குலத்தில் உள்ள சொத்துக்கள் அந்தக் குலத்திலேயே இருப்பதை உறுதிப்படுத்துவதற்கும் அகமண உறவை ஒவ்வொரு குலமும் தனக்குத் தானே சுய விருப்பத்தோடு குலப் பாதுகாப்புக்காக ஏற்படுத்திக்கொண்டு தாகவே இருக்கும் என்று தோன்றுகிறது.

 ஆனால் பழம் தமிழகத்தில் காணக்கூடிய இலக்கண இலக்கிய நூல்களிலிருந்து அகமண உறவும், ஒரு தொழில் சார்பும் கொண்டிருந்த குடியும் குலங்களும் இல்லையெனவும், பல தொழில்களை மாறி செய்ததற்கும், புற மணம் நடந்ததற்கும் ஆதரவுகள் உள்ளன எனவும், அதனால், ஒரே தொழில் மற்றும் அகமண உறவுகொண்ட குலங்கள் இருக்கவில்லை எனவும், ஒரே தொழில் மற்றும் அகமண உறவு என்பதை கொண்ட சாதி தமிழகத்தில் இருந்தது இல்லை எனவும், வடபுலத்தில் இருந்து வந்த ஆரியர்கள் வர்ணாசிரம தர்மத்தை காட்டி பல தொழில் செய்யும் உரிமையும், புறமண உறவையும் கொண்டிருந்த குடி மற்றும் குலங்களை ஒரே தொழில் மற்றும் அகமண உறவு மட்டும் வைத்துக்கொள்ளவேண்டும் என்ற நிலைக்கு கொண்டு சென்று ஜாதிகளை உருவாக்கிவிட்டார்கள் எனவும் ஒரு சாரார் வாதிட்டுக் கொண்டுள்ளார்கள். 

எது எப்படி இருந்தபோதிலும் குடிகள் குலங்கள் என்பதெல்லாம் சமூக வளர்ச்சிப் போக்கில் தம்மியல்பாக தோன்றியிருக்கக்கூடும் எனவும், அவையே பின்னிட்டு ஜாதிகள் ஆகியுள்ளன எனவும், ஒவ்வொரு ஜாதியும் ஒரே தொழில் மற்றும் அக மண உறவு என்ற வரையறைக்குள் வாழ்ந்து வந்துள்ளன எனவும் அறிய தக்கனவாக உள்ளன. 

சமூகத்தில் தம்மியல்பாக தோன்றி வளர்ந்த குடிகள் குலங்களை, பிறப்பின் அடிப்படையிலானதாக்கி, ஏற்கனவே செய்துவந்த தொழிலைத் தவிர வேறு தொழில்கள் செய்யாதவாறும், புறமண உறவுகளுக்கு வாய்ப்பு இல்லாதவாறும், சாதியத்தை கெட்டிப்படுத்தி,  சமூகக் கட்டுப்பாட்டை உருவாக்கி, பிராமணர்கள் புரோகிதம் மட்டும் செய்கின்றவாறும், சத்திரியர்கள் போர் தொழிலும், அரசு பணியும் மட்டும் செய்கின்றவாறும், வைசியர்கள் வணிகம் மட்டும் செய்கின்றவாறும், சூத்திரர்கள் அடிமை வேலை மட்டும் செய்கின்றவாறும் நான்கு வர்ணங்களை வேதங்களும் பகவத் கீதையும் ஏற்படுத்தியுள்ளது தவறான ஏற்பாடு என்றே கருதவேண்டியுள்ளது. அது அன்றைய காலகட்டத்திற்கு, அப்போது நிலவிய நிலப்பிரபுத்துவ த்திற்கு இணக்கமான ஏற்பாடாக இருக்கலாம். ஆனால் அது பல்லாயிரம் ஆண்டுகளாக பெரும்பான்மையான மக்களை தாழ்ந்த நிலையிலும் சிறுபான்மையான மக்களை உயர்ந்த நிலையிலும் வைப்பதற்கு வாய்ப்பாக அமைந்து விட்டது என்பது பெரும்பான்மையான மக்கள் பிராமணியத்தை வெறுப்பதற்கும் எதிர்ப்பதற்கும் ஏதுவாக அமைந்து விட்டன. 

இந்த ஏற்பாடு தான் உலக நாடுகளில் இருந்து இந்தியாவை தனித்து பிரித்து காட்டக் கூடியதாக உள்ளது. உலகின் பல பகுதிகளிலும் நிலப்பிரபுத்துவத்தின் தோற்றுவாயான ஆண்டான் அடிமை முறை இத்து நொறுங்கிய போதும், முதலாளித்துவம் வளர சுதந்திரம் ஜனநாயகம் சகோதரத்துவம் என்ற புரட்சி முழக்கங்கள் எழுந்த போதும், தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்று வர்க்கப் போராட்ட அறைகூவல்கள் ஒலித்த போதும், இந்தியாவில் அதற்கான எதிரொலிகள் உயர்ந்து ஒலிக்கவில்லை. இந்திய சமுதாயம் சாதியத்தில் இறுகிப்போய் வர்க்கங்களாக எழாமல் சாதிய போதைக்குள் சிக்கி முட்டிமோதி ஒற்றுமைக்கு உலை வைத்துக் கொண்டுள்ளன. அது ஆளும் வர்க்கங்களுக்கு எப்போதும் வசதியாக உள்ளன. ஓர் உயரிய பிரச்சனைக்காக ஒற்றுமையாக ஓங்கி குரல் கொடுத்தாலும், அதனை ஜாதிய உணர்வுகளால் பிரித்து நீர்த்துப் போக வைத்து விட நல்லதொரு வழிமுறையை வழங்கும் அட்சய பாத்திரமாக ஜாதியம் ஆளும் வர்க்கத்திற்கு நன்கு பயன்பட்டு வருகிறது.

இந்து மதத்தின் நான்கு வர்ண கொள்கையால் கொந்தளிப்பு அடைந்த அடித்தட்டு மக்களின் போராட்டங்கள் ஆதிகாலம் முதலே இருந்துகொண்டேதான் உள்ளன. இந்து மத தத்துவத்திற்கும், பலதெய்வ வழிபாடு மற்றும் சடங்கு சம்பிரதாயங்களுக்கும் எதிராக எழுந்ததுதான் சமணமும் புத்தமும், இன்னும் பல கடவுள் மறுப்புக் கொள்கைகளும். மேலும் இந்து மதத்திற்குள் இருந்தே அதன் நான்கு வர்ண கொள்கையை கைவிட்டுவிட செய்ய, மங்கி விடச் செய்ய, ,  ராமானுஜர், வள்ளலார், விவேகானந்தர் போன்றவர்களெல்லாம் முயற்சி மேற் கொண்டுள்ளார்கள். சமூக அரசியலில் ஜாதிய பிரச்சினைகளில் இரு துருவங்களாக இருந்து முட்டி மோதிக் கொண்டவர்கள் மகாத்மா காந்தியடிகளும் அண்ணல் அம்பேத்கார் அவர்களும். இவர்கள் இருவரும் எதிரெதிரான இருவேறு சமுதாயத்திலிருந்து முகிழ்த்து எழுந்தவர்கள். அவர்கள் பிறந்த சமுதாயத்திற்கான இயல்பான உணர்வுகள் அவர்களுக்குள் இருந்தன. அவரவர் உணர்விலிருந்து அவரவர் கொண்ட எண்ணங்களை அவர்கள் எதிரெதிராக கூறினார்கள். இவர்களின் கருத்து மோதல்கள் நீண்டகாலம் நீடித்தன. இவர்கள் இருவரும் கூறிய கருத்துக்கள் ஜாதிய பிரச்சனையை சரியாக அணுகுவதற்கான ஒரு வழிமுறையை ஏற்படுத்தி தரும் என்று எண்ணுகின்றேன். ஆதலால் இவர்கள் இருவரின் கருத்துக்களை ஆராய்வது அவசியமானது என தோன்றுகிறது. 

(இன்னும் ஆராய்வோம்...)

                                 -------------------------------------------------------------------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பு வழி இன்ப ஒளி 15

தமிழ்நாடு அன்புவழி அறப்பணி மன்றம்

அன்பு வழி இன்ப ஒளி -1