வேதாத்திரியம் என்னும் வேதம் - 1
வேதாத்திரியம் என்னும் வேதம் - 1
வேதாத்திரியம் என்னும் வேதம்!
பூவுலக அமைதி பாடும் கீதம்!
வேதம் என்றால் உயர்ந்த அறிவு என்று பொருள். மனிதன் பூமியில் தோன்றி வாழ்ந்து வரும்போது இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள உறவு பற்றியும், மனிதனுக்கும் மனிதனின் வாழ்வுக்கும் இடையே உள்ள உறவு பற்றியும், உடல் உயிர் மனம் அறிவு ஆகியவற்றின் உண்மை பற்றியும் மனிதனுக்கு ஆராய்ச்சிகள் தோன்றின. அதில் பெற்ற அறிவுதான் மெய்ஞ்ஞானம் ஆக போற்றப்பட்டன. அதில் கண்டறியப்பட்ட தத்துவங்கள் தான் பல்வேறு மதங்கள் உருவாக காரணமாகின. ஒவ்வொரு மதத்தின் மெய்ஞானம் வேதம் எனக் கூறப்படுகின்றன. ஒவ்வொரு மனிதனின் உள்ளும் ஓர் உயிர் இருக்கிறது. எல்லா உயிரினத்திலும் உயிர் உள்ளது. மெய்ஞானம் அந்த உயிரை ஆன்மா என்கிறது. அந்த உயிரின் சுற்றுச்சூழல், இயக்கம், அதற்கான விதிமுறைகள் பற்றிய அறிவு ஆன்மீகம் எனப்படுகின்றன. ஆதலால் ஆன்மீகமும் வேதமும் ஒரே பொருள் பற்றியே பேசுகின்றன. தற்போதைய காலகட்டத்தில் வேதாத்திரி மகரிஷி அவர்களின் தத்துவங்களும் வழிமுறைகளும் புதிய வேதமாக விளங்குகின்றன. அவரின் அறிவுத் திருக்கோயிலில் வழங்கப்படும் மனவளக்கலை எல்லா மனிதர்களும் பின்பற்றத்தக்க செய்முறை வேதமாகும். நாம் செல்லும் அன்பு வழியினுக்கு அவர் வழங்கியுள்ள அறிவு அமுதம் அடித்தளம் என்றே கூறலாம். ஆதலால் அவரின் நவயுக வேதத்தை அன்பர்களுக்கு இரு வார காலத்திற்கு ஒரு தொடராக வழங்கலாம் என்று முனைந்துள்ளேன். அன்புடன் ஆதரவளிக்க வேண்டுகிறேன்.
*********************
வேதாத்திரி மகரிஷி அவர்கள் நவயுக ஞானி எனலாம். நாடு,மதம்,மொழி,இனம் ஆகிய குறுகிய எல்லைக் கோடுகள் அனைத்தையும் கடந்த மாபெரும் தவச் செல்வர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
தனி மனிதன் மட்டும் உய்வு பெறுவதற்கான ஆன்மீகமல்ல வேதாத்திரி மகரிஷிகளின் ஆன்மீகம். இயற்கையையும், சமூகத்தையும் ஒருங்கிணைத்து அவற்றின் ஒத்திசைவில் விளையும் ஒருமைப்பாட்டை யோகமாகக் காணும் வழியே வேதாத்திரியம் காட்டும் வழி.
எல்லாம் வல்ல தெய்வத்தை..எங்கும் நீக்கமற நிறைந்த பரம்பொருளை ‘’சொல்லால் மட்டும் நம்பாதே சுயமாய் சிந்தித்தே தெளிவாய்’’ என்கிறார் மகரிஷி.
புவியியல்,வானியல்,உடற்கூற்றியல் ஆகிய விஞ்ஞானக் கோட்பாடுகளை அடியொற்றி , அவற்றோடு முரண்படாத வகையில் , புலன்களுக்கெட்டாத இறைஞானத்தையும் புகட்ட முயலும் வேதாத்திரியக்கோட்பாட்டை இறை விஞ்ஞானம் என்றே குறிப்பிடலாம்.
நாத்திகவாதிகளும் கூட மறுப்புக் கூற முடியாதபடி, எதிர்வாதம் புரிய இயலாதபடி தெளிவான தர்க்கங்களோடும், அழுத்தமான அறிவியல் பின்புலத்தோடும் முன்வைக்கப்படுபவை வேதாத்திரியச் சிந்தனைகள்.
எளிய உடற்பயிற்சிகள், தியான முறைகள், மனத் தூய்மைக்கான அகத்தாய்வுப் பயிற்சிகள், உயிருக்கு உரம் சேர்க்கும் காயகல்பப் பயிற்சி ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்த வேதாத்திரிய யோகம் எளியமுறைக் குண்டலினி யோகமாகவும், மனதுக்கு வளம் சேர்ப்பதால் மன வளக்கலையாகவும் உலக நாடுகள் பலவற்றிலும் பரவலான வரவேற்புப் பெற்று வருவதோடு தமிழகத்தின் கல்வி,தொழிற்கூடங்களிலும் மதச் சார்பு துறந்த பெருவாரியான தரப்பினரால் கைக்கொள்ளப்பட்டு வருகிறது.
’ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’என்னும் திருமூலர் வழியும், ‘எல்லோரும் இன்புற்றிருக்க ’எண்ணும் தாயுமானார் வழியுமே வேதாத்திரி மகரிஷிகள் கைக் கொண்ட வழி. ‘வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ‘ என்னும் மந்திர வாசகத்தை....எண்ணம் , சொல் ,செயலால் எவருக்கும் தீங்கு செய்யாத பெருவழியைக்காட்டியுள்ளார் மகரிஷி. அதைத்தான் நாம் அன்புவழி என்று சொல்கிறோம். தீங்கு நினையா மனமே அன்பு; தீயது சொல்லா சொல்லே அன்பு; தீமை செய்ய செயலே அன்பு என்கின்றோம்.
இது வேதாத்திரி என்ற தனிமனிதருக்காகக் கிடைத்த மகத்துவம் இல்லை. ’கடையனுக்கும் கடைத்தேற்றம் ’ என்ற காந்திய வழியில் யோகத்தையும் ஞானத்தையும் பண்டிதன் முதல் பாமரன் வரை கொண்டு சேர்த்து அச்சத்துக்கும் ,இருண்மைக்கும் உரியதாக இருந்த தத்துவங்களை இலகுவாகவும் தெளிவாகவும் மாற்றி உலகப் பொது உடைமை ஆக்கியுள்ள அவரது அயராத உழைப்புக்கும் உலக நலனில் அவர் கொண்டிருந்த மாறாத அக்கறைக்கும் கிட்டியிருக்கும் பெருஞ்சிறப்பு.
மனித உறவு மேம்பட வேதாத்திரி மகரிஷி அருளியுள்ள வழிமுறைகள் மிகவும் பாராட்ட படுபவை. அதனை இங்கு காண்போம்;
மனித உறவுகள் மேம்பட.....!!!
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
1. தானே பெரியவன்,தானே சிறந்தவன்
என்ற அகந்தையை விடுங்கள்.
2.அர்த்தமில்லாமிலும், தேவையில்லாமலும்
பின் விளைவு அறியாமலும் பேசிக்
கொண்டிருப்பதை விடுங்கள்.
3. எந்த விடயத்தையும் பிரச்சனையும்
நாசூக்காகக் கையாளுங்கள்.
4. விட்டுகொடுங்கள்.
5. சில நேரங்களில் சில சங்கடங்களை
சகித்துதான் ஆகவேண்டும் என்று உணருங்கள்.
6. நீங்கள் சொன்னதே சரி செய்வதே சரி என்று கடைசிவரை வாதாடதீர்கள்.
7. குறுகிய மனப்பான்மையை
விட்டொழியுங்கள்.
8. உண்மை எது பொய் எது என்று
விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.
9. மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வபடாதீர்கள்.
10. அளவுக்கு அதிகமாய்,தேவைக்கு
அதிகமாய் ஆசைப்படாதீர்கள்.
11. எல்லோரிடத்திலும் எல்லா
விடயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
12. கேள்விப்படுகிற எல்லா விடயங்களையும் நம்பிவிடாதீர்கள்.
13. அற்ப விஷயங்களையும் பெரிதுபடுத்தாதீர்கள்.
14. உங்கள் கருத்துகளில் உடும்புப்பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.
15. மற்றவர் கருத்துக்களை, செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாகப் புரிந்து
கொள்ளாதீர்கள்.
16. மற்றவர்களுக்கு உரிய மரியாதையைக்
காட்டவும், இனிய இதமான சொற்களை
பயன்படுத்தவும் தவறாதீர்கள்.
17. புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரமில்லாதது போல நடந்து கொள்ளாதீர்கள்.
18. பேச்சிலும், நடத்தையிலும்
திமிர்த்தனத்தையும், தேவையில்லாத
மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து
அடக்கத்தையும், பண்பாட்டையும் காட்டுங்கள்.
19. பிணக்கு ஏற்படும்போது, அடுத்தவர்
முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே
பேச்சைத் துவக்க முன் வாருங்கள்.
20. தேவையான இடங்களில் நன்றியையும், பாராட்டையும் சொல்ல மறக்காதீர்கள்.
பாராட்டுக்கு மயங்காத மனிதனே இல்லை..அதுவே உங்களுக்கு வெற்றியாக அமையும்..
மக்கள் நலமுடனும் வளமுடனும் வாழ, உலகம் அமைதி பெற 14 அம்ச நெறிமுறைகளை வழங்கியுள்ளார். அதனை நாம் இனி ஒவ்வொன்றாய் காண்போம்.
( நாளை தொடரும்...)
-----------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக