வேதாத்திரியம் என்கின்ற வேதம் 7

வேதாத்திரியம் என்கின்ற வேதம் 7
6. மதிப்புமிக்க மகளிர்

வேதாத்திரி மகரிஷி ஐயா அவர்கள் மகளிர் மதிப்பு குறித்து கூறியுள்ள நெறிமுறையை தற்போது பார்ப்போம்.

வேதாத்திரி மகரிஷி ஐயா அவர்களின் கவிதை:

எல்லையற்ற ஆற்றலுள்ள இறைவன் திருவுள்ளமென்ன
எவ்வுயிரும் தோன்றுதற்கு ஏற்றதொரு திருவழியாய்
வல்லமையாய்ப் பெண்ணினத்தை வடிவமைத்தான் அற்புதமே
வாழுகின்ற மக்களில் இவ்வளம் அறிந்தோர் எத்தனை பேர்?
பெண்ணினத்தின் சிறப்பை உணர்ந்தே உள்ளேன்,
பேருலகில் வாழுகின்ற மக்கள் எல்லாம்
பெண்ணினத்தின் அன்பளிப்பே எனில் இதைவிட
பெருமை வேறென்ன எடுத்துச் சொல்வதற்கு.

விளக்கம்:

எல்லையற்ற ஆற்றலுள்ள இறைவன் எவ்வுயிரும் தோன்றுதற்கு ஏற்றதொரு திருவழியாய் வல்லமையாய்ப் பெண்ணினத்தை அற்புதமாய் வடிவமைத்துள்ளான். வாழுகின்ற மக்களில் இவ்வுண்மை  அறிந்தோர் எத்தனை பேர்? பெண்ணினத்தின் சிறப்பை உணர்ந்தே உள்ளேன். பேருலகில் வாழுகின்ற மக்கள் எல்லாம் பெண்ணினத்தின் அன்பளிப்பு தான்  என்பதைவிட பெண்ணிற்கு பெருமை சேர்க்க எடுத்துச் சொல்ல வேறு என்ன உள்ளது என்கிறார் வேதாத்திரி மகரிஷி ஐயா அவர்கள்.

பெண்மையின் சிறப்பினை அன்றுதொட்டு இன்றுவரை பலர் எடுத்துரைத்தாலும், சிலர் பெண்மையினை இரண்டாம் தரமாகவே நடத்தி வருகின்றனர். இந்நிலையை மாற்றி பெண்மையை போற்றவும், சிறப்பிக்கவும் சில சிந்தனையாளர்கள் முயன்று வருகிறார்கள். அவர்களுள் நமது அருட்தந்தை மிக முக்கிய பங்கு வகிக்கிறார். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருக்கிறாள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஒரு குடும்பத்தினை நடத்துவது, குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது, முதியோர்களை பராமரிப்பது, இப்படி பெண்களின் பங்கு மிகவும் போற்றுதற்குரியது. ஆனால் இவர்களின் சிறப்பு பெரும்பாலும் பலரால் அறிந்துகொள்ளப் படுவதில்லை.  இவ்வுலகில் வாழுகிற  ஜீவராசிகள் அனைத்திற்கும் பிறப்பிடம் பெண்மையே... இத்தகைய பெண்ணினம் கல்வி, பொருளாதாரம், வாழ்க்கை வளம் அனைத்திலும் உயர்வு நிலை பெறுவதே சமுதாயத்திற்கும், குடும்பத்திற்கும் சாலச்சிறந்தது. இன்று உலகில் 700 கோடி மக்கள் இருக்கிறார்கள். இவர்களில் பாதிபேர் ஆண்கள். இவர்களை பெற்றெடுத்தது பெண்களே. ஆண்கள் அனைவரும் பெண்களின் அன்பளிப்பு எனில் அது மிகை ஆகாது. 
பெண்களில் இருந்து தோன்றும் ஆணினம் பெண்மையை இழிவு படுத்தலாமா? பெண்களுக்கு கொடுமை செய்யலாமா? கூடவே கூடாது! பெண்மையை போற்றுவது தான் ஆண் இனத்திற்கு பெருமை சேர்க்கக்கூடிய நற்செயல் ஆகும். இன்றைய காலகட்டத்தில்  கல்வி பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தில் உயர்ந்து விளங்குகின்ற போதிலும், திருமணமான கணவனும் மனைவியும் ஒற்றுமையின்றி சேர்ந்து வாழ இயலாமல் விரோத மனப்பான்மையுடன் வாழ்வதும், விவாகரத்தில் முடிந்து போவதும் அடிக்கடி நடக்கும் விபத்துகள் ஆகி வருகின்றன. 'ஆணும் பெண்ணும் சமம்; அனுசரித்து வாழ்ந்தால் சுகம்!' என்ற சான்றோர் வாக்கு மனதில் கொண்டு இருவரும் ஈருடல் ஓருயிராய் இணைந்து வாழ வேண்டும். இறைவன் பெண்ணின் வடிவில் தான் மண்ணுலகில் உலாவுகிறார். இறை அம்சமாக உள்ள தாயை, மனைவியை, மகள்களை, சகோதரிகளை, தோழிகளை நாம் வணங்க வேண்டாமா? அதனால், பெண்மையை போற்றுவோம். வாழ்த்துவோம். வாழ்க வளமுடன்!  வாழிய வையகம்!
(நிறைவு)
*****************************************

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பு வழி இன்ப ஒளி 15

தமிழ்நாடு அன்புவழி அறப்பணி மன்றம்

அன்பு வழி இன்ப ஒளி -1