*வேதாத்திரியம் எனும் வேதம் - 2*

*வேதாத்திரியம் எனும் வேதம் - 2* 

 *போரில்லா நல்லுலகம்* 

வேதாத்திரியம் எடுத்துக்காட்டும் 14 அம்ச நெறிமுறைகளை என்னவென்று காண முற்படலாம் என்று நினைக்கின்றேன். இதில் நான் ஒன்றும் புதிதாக எழுதவில்லை. அவர் சொல்லி உள்ளதை அப்படியே எடுத்துக் தருகின்றேன். அவ்வளவுதான். 

 *வேதாத்திரியம் - 14 அம்ச நெறிமுறைகள்:* 

1 . போரில்லா நல்லுலகம்
2 . பொருள் துறையில் சம நீதி
3 . நேர்மையான நீதி முறை
4 . நில உலகுக்கோர் ஆட்சி
5 . சீர் செய்த பண்பாடு
6 . சிந்தனையோர் வழி வாழ்வு
7 . சிறப்புணர்ந்த பெண் மதிப்பு
8 . தெய்வா நீதி வழி வாழ்தல்
9 . தேர் திரு விழா தவிர்த்தல்
10 . சிறுவர்கட்கே விளையாட்டு
11 . செயல் விளைவு உணர் கல்வி
12 . சீர் காந்த நிலை விளக்கம்
13 . பார் முழுதும் உணவு - நீர் பொதுவாக்கல்
14 . பல கடவுள் பழக்கம் ஒழித்து, உண்மை ஒன்றை வழிபடுதல்.
        - அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

          **************

மேற்படி 14 நெறிமுறைகளைப் பற்றியும் வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஒவ்வொரு கவிதை எழுதியுள்ளார்கள். அந்தக் கவிதையின் பொருள் பற்றி மட்டும் நாம் சற்று விரித்து பேச உள்ளோம். அவ்வளவுதான்.

 *1. போரில்லா நல்லுலகம்* 

உலகமென்ற மண்மீது அனைவரும் பிறந்தோம்,

உயிர்காக்கும் காற்று ஒன்றே மூச்சு விடுவதற்கு

உலகெங்கும் ஒளி வீசும் சூரியனும் ஒன்றே

உள்ள கடல் ஒன்றே நீர் ஆவியாகிப் பொழிய

உலகில் இன்று உள்ளோர் இதிலொன்றும் செய்ததில்லை

ஒவ்வொருவரும் பிறந்து வாழ்ந்து செத்துப் போவார்.

உலகில் ஒரு குழுவினர் மற்றவரைக் கொன்று
                                                                 உயிர் வாழ்தல் நீதியெனில் கொலைஞர்களே மிச்சம்.
                        ****************

வேதாத்திரி மகரிஷி ஐயா அவர்கள் கடுமையான சொற்களை போட்டு கவிதை எழுதவில்லை. எளிமையான சொற்களினால் எளிதாக பொருள் விளங்கும்படி எழுதியுள்ளார். அவர் என்ன கூறியுள்ளார்? இப்போது பார்ப்போம்:

உலகில் பிறந்த நாம் யாரும் நாம் சுவாசிக்கும் காற்றையோ, உலகிற்கு ஒளிகொடுக்கும் சூரியனையோ, நம் வாழ்க்கைக்கு அவசியமான நீரையோ, இந்த நிலத்தையோ செய்யவில்லை. ஆனால் அதற்கு உரிமையை மட்டும் அனைவரும் பெற முயற்சியை மேற்கொள்கிறோம். இதன் விளைவே உலகில் போர் உருவாகிறது. போரினால் ஏற்படும் துன்பங்களை ஒரு நிமிடம் உலக மக்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். எவ்வளவு இழப்பு ஏற்படுகிறது. பொருள் இழப்பு, உயிர் இழப்பு, உறுப்புகள் இழப்பு, குடும்ப உறுப்பினர் இழப்பு, இப்படி என்னும் எவ்வளவோ. இவைகளில் எதையும் நம்மால் ஈடு செய்யமுடியுமா? உலகில் ஒரு குழுவினர் மற்றவரைக் கொன்று உயிர் வாழ்தல் நீதி என்று கொண்டால், கொலைகாரர்கள் தானே பூமியில் மிஞ்சுவார்கள். கொலைகாரர்களின் உலகமாகவா இந்த பூமி இருக்கவேண்டும்?

யோசிக்கவேண்டும். உலக அறிஞர் பெருமக்கள் ஒன்றுகூடி ஒரு திட்டம் தயாரிக்கவேண்டும். இந்தப் போரை எப்படி தவிர்ப்பது என்று ஆராய வேண்டும். ஏற்கனவே நம்மிடம் இருக்கின்ற ஐக்கிய நாடுகள் சபையைக் கூட்டி, அச்சபையில் உள்ள பாதகாப்புச் சபையின் பொறுப்பில் எல்லா நாடுகளின் எல்லைப் பாதுகாப்பையும் கவனிக்கும் பொறுப்பையும் கண்காணிக்கும் பொறுப்பையும் அளிக்க வேண்டும். எல்லா நாடுகளும் அதன் அதிகாரத்திற்கு ஒத்துழைப்பு நல்கவேண்டும். போரைத் தவிர்க்க முடியும். போருக்காகும் செலவுகளை நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்கு செலவழிக்க வேண்டும். உலகம் அமைதி பெரும். வறுமை நீங்கும். ஒற்றுமை உருவாகும்.

வேதாத்திரி மகரிஷி ஐயா அவர்கள் கூறும் இரண்டாவது நெறி *பொருள் துறையில் சம நீதி* ஆகும். 

(நாளை தொடரும்...)

**************************************

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பு வழி இன்ப ஒளி 15

தமிழ்நாடு அன்புவழி அறப்பணி மன்றம்

அன்பு வழி இன்ப ஒளி -1