சாதியம் மறையுமா? - 7

சாதியம் மறையுமா? - 7

அம்பேத்காரின் மதமாற்ற முடிவு

1935 அக்டோபர் 13ல் இயோலாவில் நடந்த மாபெரும் மாநாட்டில் அம்பேத்கர் 'நான் ஓர் இந்துவாகப் பிறந்துவிட்டேன்; ஆனால், நிச்சயமாக ஓர் இந்துவாக இறக்கமாட்டேன்’ என அம்பேத்கர் முழங்கியதும் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் விண்ணதிரக் கரவொலி எழுப்பித் தங்களின் சம்மதத்தைத் தெரிவித்தார்கள். 'தான் எவ்வளவுதான் இந்துமதத்தில் இருந்துகொண்டு போராடினாலும், இந்த உயர்சாதி மக்கள் திருந்தப்போவதில்லை. தீண்டாமைக் கொடுமை ஒழியப்போவதில்லை. இந்து மதத்தில் இருக்கும்வரை என் மக்கள் தீண்டப்படாதவர்களாகவேதான் வாழப் போகிறார்கள்; சாகப்போகிறார்கள். தீண்டாமை அடிமை விலங்கிலிருந்து விடுவிக்கத் தன்னை நம்பியிருக்கும் இந்த மக்களைக் கண்டிப்பாக விடுவித்தே தீரவேண்டும். அதற்கு ஒரே வழி இந்து மதத்தில் இருந்து விடுதலை பெறுவதுதான் என்ற முடிவுக்கு அம்பேத்கர் வந்திருந்தார். அம்பேத்கரின் இந்த அறிவிப்பு தாழ்த்தப்பட்டவர்களின் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தும் அறிவிப்பு. அது நிச்சயமாக பார்ப்பனர் மற்றும் உயர்சாதி இந்துக்களின் மனங்களை உலுக்கும் என்று அம்பேத்கர் எதிர்பார்த்தார். ஆனால், அம்பேத்கரின் இந்த அறிவிப்பால் உயர்சாதி இந்துக்கள் மனம் மாறவில்லை. மாறாக பார்ப்பனர் பலர் மகிழ்ச்சியடையவே செய்தனர். சீர்த்திருத்த எண்ணம் கொண்ட சில இந்துக்கள் மட்டும் கவலைப்பட்டனர்.

மதமாற்ற முடிவுக்கு முன்பாக

மதமாற்ற முடிவுக்கு முன்பாக அம்பேத்கரின் எண்ணம் இந்து மதத்தைச் சீர்திருத்திவிடலாம் என்றுதான் இருந்தது. அதற்கான செயல்பாடுகளே அவர் நடத்திய சௌதார் குளத்தில் நீர் பருகுதல் சத்தியாகிரகமும், பல ஆலய நுழைவுபோராட்டங்களும் ஆகும். 'இந்துக்கள் அனைவரையும் ஒரே சாதியில் ஒன்றுபடுத்தும் நமது இயக்கத்தில் நாம் வெற்றி பெறவோமேயானால் பொதுவாக இந்திய நாட்டுக்கும் குறிப்பாக இந்து சமூகத்துக்கும் மிகப் பெரிய சேவை செய்தவர்களாவோம்’ என்று 1927ல் சௌதார் குள சத்தியாகிர மாநாட்டில் கூறினார். அதுமட்டுமல்லாமல் அம்மாநாட்டில் 1) அனைத்து இந்துக்களும் ஒரே வர்ணத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்பட வேண்டும். இதற்கான சட்டம் இயற்றப்படவேண்டும். பிராமணன், சத்திரியன் போன்ற வருண இனச் சொற்கள் பயன்படுத்துவது தடை செய்யப்படவேண்டும். 2) இந்து மதக் குருக்களைத் தேர்ந்தெடுப்பதற்கு பரீட்சை நடத்தப்பட வேண்டும். இத்தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கே தகுதிச் சான்றிதழ் வழங்கப்படவேண்டும் என்று இந்து மதத்தைச் சீர் திருத்தக் கூடிய  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

‘நான் நடத்தும் இயக்கம் பிராமணர்களுக்கு எதிரானதல்ல. பிராமணர்கள் எல்லோரும் தலித்துகளுக்கு எதிரிகள் என்று கூறமுடியாது. அது பிராமணியத்தைத்தான் எதிர்க்கிறது. பார்ப்பனிய மனப்பான்மை கொண்டிருப்பவர்களே வெறுக்கப்பட வேண்டியவர்கள். உயர்ந்த சாதி, தாழ்த்த சாதி என்று வேறுபடுத்துவது பிராமணியம். இதுதான் மனிதனைத் தொட்டால் தீட்டு என்ற சிந்தனையை வளர்த்தெடுத்தது. சமூகத்தில் சிலருக்கு இதுதான் சிறப்பு உரிமைகளை அளித்தது. சமனற்ற நிலையைத் தோற்றுவித்தது. சாதியில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் மனப்பான்மை கொண்ட பிராமணரை நான் வெறுக்கிற அதே நேரத்தில் இந்த உயர்வு தாழ்வு உணர்வு இல்லாமல் சிறப்பு உரிமைகளையும் அதிகாரத்தையும் விட்டொழித்த பார்ப்பனரை வரவேற்கிறேன்’ என்று  அம்பேத்கர் அப்போது கூறினார்.

தீண்டப்படாதவர்கள் இந்து மதத்தின் பிரிக்கமுடியாத அங்கம் போன்றவர்கள் என்று நிரூபிப்பதற்காகப் பலமுறை அம்பேத்கர் முயற்சியெடுத்தார். 1929ல் ஆலயப்பிரவேச சத்தியாகிரகத்தைப் பரவலாக ஒரே சமயத்தில் எல்லா இடங்களிலும் ஆரம்பிப்பது எப்படி என்று சிந்தித்து அம்பேத்கர் ஓர் இயக்கத்தைத் தொடங்கினார். ஆலயப் பிரவேசம் மூலம் தீண்டப்படாதவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே இணக்கம் ஏற்படுத்த முடியுமென நினைத்தார். அது சமயம் 'இந்து சமூகத்தில் சமபந்தி போஜனமும் கலப்புத் திருமணமும் அனுமதிக்கப்படவேண்டும். ஆலயப்பிரவேசம் தீண்டாமை ஒழிப்புக்கு முதல் படி போன்றது. மக்களுடைய கருத்துகளில் மாறுதல் கொண்டுவருவதற்காக முதலடி எடுத்துவைப்பது போன்றது இந்த சத்தியாகிரகம். நாம் எங்கும் சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும். நான் ஒரு ஜனநாயகவாதி. அதனால் ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தைக் கொடுமைப்படுத்துவதைக் கடுமையாக எதிர்க்கிறேன்’ என்று அம்பேத்கர் கூறினார். 

சமூக ஏற்பு ஏற்படுமா?

 1930 மார்ச் 2ம் தேதி அன்று காலாராம் கோயில் நுழைவு சத்தியாகிரகத்தை ஆரம்பித்தபோது,  ‘இன்று நாம் ஆலயத்தில் நுழையவிருக்கிறோம். இந்தக் கோயிலில் நுழைவது பிரச்னை முழுவதையும் தீர்த்து வைக்காது. நமது பிரச்னை பன்முகத்தன்மை கொண்டது. நமது பிரச்னை அரசியல், சமூக, மத பொருளாதார, கல்வி இலக்குகளைக் கொண்டது. காலாராம் கோயிலில் நுழைவு இந்துக்களுக்கு ஒரு வேண்டுகோள் ஆகும். காலம் காலமாகச் சாதி இந்துக்கள் நமது உரிமையைப் பறித்தனர். இந்தக் கோயில் நுழைவுச் சத்தியாகிரகம் எழுப்பும் கேள்வி இந்துக்கள் நமது மனிதாபிமான உரிமையை அளிப்பார்களா என்பதுதான். உயர்சாதி இந்துக்கள் நம்மை கேவலப்படுத்தி பூனை, நாய்களைவிடவும் மோசமாக நடத்தினர். மனிதன் என்ற உரிமையை இந்துக்கள் நமக்கு அளிப்பார்களா என்று நாம் அறிந்துகொள்ள விரும்புகிறோம். இந்தக் கேள்விக்கு சத்தியாகிரகம் பதில் அளிக்கும். உயர்சாதி இந்துக்களிடையே ஒரு மன மாற்றத்தைக் கொண்டு வருவதற்காகச் செய்யப்படும் முயற்சிகளில் சத்தியாகிரகமும் ஒன்று. எனவே இந்த முயற்சி வெற்றி பெறுவது இந்து மனோநிலையைப் பொறுத்து இருக்கும்’ என்று கூறினார். தீண்டப்படாதவர்களும் இந்துக்கள்தான் என்ற அடிப்படையில் சமூக ஏற்பு பெறுவதற்காகவே இத்தகைய போராட்டங்களைக் கையில் எடுத்தார் அம்பேத்கர்.

1932 நவம்பர் 14ல் அம்பேத்கர் எழுதிய ஒரு கடிதத்தில், ‘சட்டத்தினாலோ, தனி வாக்காளர் தொகுதிக்குப் பதிலாகக் கூட்டு வாக்காளர் தொகுதியைத் தேர்தல் சட்டத்தின்மூலம் கொண்டுவருவதாலோ தீண்டப்படாதவர்களையும் சாதி இந்துக்களையும் ஒன்றுபடுத்திவிட முடியாது. அன்பு ஒன்றே அவர்களை ஒற்றுமையுடன் வைத்திருக்க வல்லதாகும். தன்னுடைய வழிமுறைகளை மாற்றிக் கொள்ளவேண்டும் என்று சாதி இந்துவை உணரச் செய்யாதவரை, நினைக்கச் செய்யாதவரை தீண்டப்படாத மக்களுக்கு விடிவே இல்லை. சாதி இந்துக்களின் சிந்தனையில் ஒரு புரட்சி தோன்ற வேண்டும் என எதிர்பாக்கிறேன்’ என்று அக்கடிதத்தில் அம்பேத்கர் எழுதியிருந்தார். மேலும் அக்கடிதத்தில் ‘தீண்டப்படாத மக்கள் கிராமத்தில் கிணற்றில் தண்ணீர் எடுத்தல், ஊர்ப் பள்ளிகளில் சேர்ந்து படிக்க இடம் பெறல், சத்திரங்களில் தங்கிட உரிமை பெறல், பொதுவழிகளைப் பயன்படுத்தல் போன்ற குடியுரிமைகளைப் பெறுவதற்காகத் தீண்டாமை எதிர்ப்புக் கழகம் இந்தியா முழுவதும் தீவிரமாகப் போராடவேண்டும். அதுதான் இந்துச் சமூகத்தில் ஒரு சமுதாயப் புரட்சியை ஏற்படுத்தும்’ என்று தாம் நம்புவதாக அம்பேத்கர் குறிப்பிட்டார். 

பூனா ஒப்பந்தம்

1932, செப்டம்பர் 25ல் பூனா ஒப்பந்தத்தை இறுதி செய்ய நடந்த கூட்டத்தில் அம்பேத்கரின் இடைவிடாத போராட்டத்தின் விளைவாக 'இந்துக்களில் எவர் ஒருவரையும் அவரது பிறப்பின் காரணமாகத் தீண்டப்படாதவர் என்று கருதக்கூடாது; இதுவரை அவ்வாறு கருதப்பட்டவர்கள் பொதுக்கிணறு, பொதுப்பள்ளி, பொதுச்சாலைகள் மற்றும் ஏனைய பொது அமைப்புகளைப் பயன்படுத்த மற்ற இந்துக்களைப்போல் இவர்களும் அதே உரிமை பெறுவர். வெகுவிரைவில் இந்த உரிமை சட்டரீதியாக அங்கீகரிக்கப்படும். அவ்வாறு அங்கீகாரம் பெறவில்லை எனில் நாடாளுமன்றம் இயற்றும் முதல் சட்டங்களில் ஒன்றாக இது இருக்கும். தீண்டப்படாத வகுப்பினர் என்று அழைக்கப்படுபவர்கள் மீது பழக்கவழக்கத்தால் சுமத்தப்பட்டுள்ள அவர்கள் ஆலயங்களில் நுழைவதைத் தடுப்பது உள்ளிட்ட எல்லாத் தகுதியின்மைகளையும் விரைவில் நீக்கவேண்டும். அதற்கான அனைத்து சட்டபூர்வமான சமாதான வழிகளில் பாடுபட வேண்டியது எல்லா இந்துத் தலைவர்களின் கடமையாகும் என்று தீர்மானம் இயற்றப்பட்டது.  ஆனால் பூனா ஒப்பந்தத்தம் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை என்பதோடு இந்து மதத்தில் தாழ்த்தப்பட்டவர்களை சமமாக மதிப்பதற்கு உரிய வகையில் சீர்திருத்தம் செய்துவிடலாம் என்று இருந்த அம்பேத்கரின் நம்பிக்கையையும் தகர்த்து விட்டது.

மகாத்மாவின் ஆலய நுழைவு போராட்டம்

சாதிகள் இயல்பானது, அவசியமானது என்ற கருத்தில் இருந்து படிப்படியாக   தாழ்த்தப்பட்டவர்கள் சமமாக மதிக்கப்பட வேண்டும்; இந்து மதத்தின் ஏற்றத்தாழ்வு சீர்திருத்தப்பட வேண்டும் என்ற எண்ணத்திற்கு மாறி வந்த மகாத்மா காந்தியடிகள் தாழ்த்தப்பட்டவர்கள் கடவுளின் பிள்ளைகள் என்று கூறி இந்துக்கள் மத்தியில் அந்த உணர்வு வளர்வதற்காக ஹரிஜன் என தாழ்த்தப்பட்டவர்களை அழைத்ததோடு ஹரிஜன் என்ற பெயரில் பத்திரிகையும் நடத்தினார். மேலும் மகாத்மா காந்தியடிகள் தாழ்த்தப்பட்டவர்களுடன் ஆலய நுழைவு போராட்டங்களை 1933ல் கையில் எடுத்து, அம்பேத்கரின் ஆதரவை  கோரினார். ஆனால் அம்பேத்கர் அதற்கு ஆதரவளிக்கவில்லை. அது சமயம் அவர் பத்திரிகைகளுக்கு அளித்த அறிக்கையில்,  ‘இந்துமதம் தீண்டப்படாதவர்களின் மதமாக இருக்கவேண்டுமெனில் சமூக சமத்துவம் கொண்ட ஒரு மதமாக அது மாறவேண்டும். இந்துமதச் சட்டத்தொகுப்பில் எல்லோரையும் கோயிலில் நுழைய அனுமதிக்கும் ஒரு திருத்தத்தை உட்படுத்தினால் மட்டுமே சமூக அந்தஸ்தில் சமத்துவம் கிடைக்கும். ஆனால் சமூக சமத்துவம் கொண்ட ஒரு மதமாக இந்துமதம் இருக்க வேண்டுமானால், சட்டத்தொகுப்பில் கோயில் நுழைவுக்கு வகை செய்யும் திருத்தம் போதாது. தேவைப்படுவது என்னவெனில், சதுர்வர்ணம் என்ற கோட்பாட்டை அதனின்று அகற்றி தூய்மைப்படுத்துவதுதான். எல்லா சமத்துவமின்மைக்கும் சாதி அமைப்புமுறைக்கும் தீண்டாமைக்கும் ஆணிவேர் அதுதான். இவையெல்லாம் சமத்துவமின்மையின் உருவங்களே. இதைச் செய்யாவிடில், ஒடுக்கப்பட்ட சாதியினர் கோயில் நுழைவை நிராகரிப்பது மட்டுமல்லாமல் இந்துமத நம்பிக்கையையும் நிராகரிப்பர். சதுர்வர்ணமும் சாதி அமைப்பு முறையும் ஒடுக்கப்பட்ட சாதியினரின் சுயகௌரவத்துக்குப் பொருந்தாதவை. அதனுடைய அடிப்படைச் சித்தாந்தமாக அது தொடர்ந்தால், ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் கீழானவர்களாகவே கருதப்படுவர். சதுர்வர்ணம் மற்றும் சாதி அமைப்புமுறை என்ற தத்துவம் கைவிடப்பட்டு இந்து சாஸ்திரங்களிலிருந்து அகற்றப்பட்டால் மட்டுமே தாங்கள் இந்துக்கள் என்ற ஒடுக்கப்பட்ட சாதியினர் சொல்லமுடியும். இதை இந்துக்களின் லட்சியமாக மகாத்மாவும் மற்ற இந்து சீர்திருத்தவாதிகளும் ஏற்றுக்கொள்கிறார்களா?’ என்று கேள்வி எழுப்பினார். 

மதமாற்ற முடிவுக்கான காரணம்

1933, பிப்ரவரி 18ல் அம்பேத்கர் தலைமை தாங்கிய கசரா மாவட்ட மாநாட்டில், '‘இந்து மதத்தில் நமக்கு சமத்துவம் தேவை. நால்வருண முறை வேரோடு துடைத்தெறியப்பட வேண்டும். உயர்சாதி மக்களுக்கே உரிமைகள் யாவுமென்றும், தாழ்சாதி மக்களுக்கு வறுமையே கதியென்றும் இருக்கும் நிலை முடிவுக்கு வரவேண்டும்’ என்று கூறினார். 1935 அக்டோபர் 26ல் நாசிக்கில் நடைபெற்ற நடைபெற்ற இந்து முற்போக்கு குடிமக்கள் மாநாட்டில் பொதுக்கோயில்கள், பொது யாத்திரைத் தலங்கள், தீர்த்தங்கள் ஆகியவற்றில் தாழ்த்தப்பட்டவர்கள் சம உரிமை பெறவும், அரிசனங்கள் அல்லாத இந்துக்கள் வசிக்கும் பகுதிகளில் அரிசனங்கள் வசிக்கவும், நிலையாகக் குடியமர்த்தவும் இந்துக்கள் மத்தியில் கருத்தொற்றுமை ஏற்படுத்த தீவிரமாக பாடுபடுதல் என்று தீர்மானம் இயற்றப்பட்டது. அது சமயம் அம்பேத்கர் ‘ஒரு மதத்தின் மெய்யியல் கோட்பாடு யாதாக இருந்தாலும், அதன் அடிப்படைக் கூறாகக் கருதத்தக்கவை ஒழுக்க நெறியையும் சமுதாய நடைமுறைகளையும் தீர்மானிக்கும் கோட்பாடுகளே. கருத்தியலில் இந்து மதம் பரப்பிரம்மம் எனும் கருத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது எனக் கொண்டாலும், இந்து சமுதாயத்தின் வாழ்க்கை நடைமுறைகள் மனு ஸ்மிருதியில் சொல்லப்பட்டிருப்பதைப்போல் மனிதர்களிடையிலான ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. மனித சமுதாயத்துக்கு மதம் தேவையில்லை என்று கருதுவோர் உண்டு. ஆனால், நான் அந்தக் கருத்தை ஏற்கவில்லை. சீரான வாழ்க்கைக்கும் 
சமுதாயத்தை நன்னெறியில் இருத்தவும் மதத்தின் அடிப்படை தேவையென்றே கருதுகிறேன். இந்து சமுதாய அமைப்பின் வேராக விளங்குவது மனுஸ்மிருதியில் எடுத்துரைக்கப்படும் தர்மமே. இவ்வாறான நிலையில் தற்போதைய ஸ்மிருதி எனும் மத அடித்தளத்தை அடியோடு அகற்றி மாற்று அடிப்படையை நிறுவினாலன்றி, இந்து சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை நீக்குதல் இயலாதென்றே கருதுகிறேன்.' என்று கூறினார். 

மதமாற்ற அறிவிப்பு

'இந்து மதத்தை சீர்திருத்தவே தாம் முயன்றதாகவும் ஆனால் துரதிருஷ்டவசமாகத் தாம் தோல்வியுற்றதாகவும் அம்பேத்கரே பின்னர் கூறியிருக்கிறார். 1942 ஏப்ரல் 26ஆம் நாள் பம்பாய் காம்கார் மைதானத்தில் அவரது பொன்விழா கொண்டாட்ட  நிகழ்ச்சியில் அம்பேத்கர் பேசியபோது ‘நான் எனது பொதுவாழ்வைத் தொடங்கியபோதும், அதற்குப் பலகாலம் பின்பும் நல்லதோ கெட்டதோ நாம் இந்து சமூகத்தின் அங்கம்தான் என்று எண்ணி வந்தேன். இந்து சமூகத்திலுள்ள தீங்குகளைக் களைந்து, தாழ்த்தப்பட்ட வகுப்பினரையும் சமத்துவ அடிப்படையில் அதில் சேர்த்துக் கொள்ளலாம் என்றுதான் நீண்ட காலம் நம்பி வந்தேன். இதுவே மஹட் சௌதார் குளத்து சத்தியாகிரகமும், நாசிக் ஆலயப் பிரவேச சத்தியாக்கிரகமும் நடைபெற உந்துதலாக இருந்தது. இந்த நோக்கத்துடன்தான் மனுஸ்மிருதியை எரித்தோம், வெகுஜன பூணூல் போராட்டம் நடத்தினோம். ஆனால், அனுபவம் எனக்குக் கற்றுக்கொடுத்தது வேறு. இந்துக்களுடன் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சம உரிமையுடன் வாழ முடியாது, இந்து சமுதாயத்தின் அடித்தளமே சமத்துவமின்மைதான் என்று இன்று முழுமையாக நம்புகிறேன். இந்து சமுதாயத்தின் ஓர் அங்கமாக நாம் இருக்க இனி விரும்பவில்லை. பிறகு நாம் என்ன செய்வது? பொருத்தமான ஒரு நேரத்தில் அதை முடிவு செய்வோம். இந்து சமூகத்தின் ஓர் அங்கமாக எந்தக் காரணம் கொண்டும் இருக்க முடியாது என்று மட்டும் இப்போதைக்குச் சொல்ல விரும்புகிறேன்’ என்று கூறி முடித்தார். அம்பேத்கரின் இந்தச் செயல்பாடுகள், சொற்பொழிவுகள் எல்லாமே இந்துமதத்தைச் சீர்திருத்தம் செய்யும்விதமாகவே அமைந்திருந்தன. ஆனாலும் உயர்சாதி இந்துக்கள் மனம் மாறவில்லை. தீண்டப்படாதோரை சகோதரர்களாக தம் சமூகத்தவராக ஏற்றுக்கொள்ளவில்லை. அதனுடைய விளைவுதான் இயோலா மாநாட்டின் அம்பேத்காரின் மதமாற்ற அறிவிப்பாகும். 

இன்னும் ஆராய்வோம்...!

- விடியல்.

----------------------------------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பு வழி இன்ப ஒளி 15

தமிழ்நாடு அன்புவழி அறப்பணி மன்றம்

அன்பு வழி இன்ப ஒளி -1