வேதாத்திரியம் என்கின்ற வேதம் - 5
வேதாத்திரியம் என்கின்ற வேதம் - 5
4. நிலவுலகுக்கோர் ஆட்சி:
வேதாத்திரி மகரிஷி ஐயா அவர்களின் நான்காவது நெறிமுறை நிலவுலகுக்கோர் ஆட்சி என்பதாகும். அதுபற்றி அவர் கூறும் கவிதையையும் அதன் பொருளையும் இனி காண்போம்:
ஓர் உலக ஆட்சி உயர் ஒழுக்கத்தோடு
உலகினிலே குழந்தைகளை வளர்க்கும் திட்டம்
பார் முழுதும் பொருள் துறையில் சமநேர் நீதி
பல நாடும் ஒன்றிணைந்த பொருளாதாரம்
சீர்திருத்தச் சிக்கனமாம் சிறந்த வாழ்வு
தெய்வநிலை யகத்துணரும் இறைவணக்கம்
நேர் வழியில் விஞ்ஞானம் பயனாய்க் கொள்ளும்
நெறிமுறைகள் இவையிணைந்த வாழ்வு காண்போம்.
ஓடி விளையாடு பாப்பா என்று பாப்பாவிற்கு பாடம் சொன்னார் மகாகவி பாரதியார். வளர்ந்தவர்கள் திருந்த மாட்டார்கள் என்று பாப்பாவிற்கு பாடம் சொன்னார் மகாகவி பாரதியார். மகரிஷி ஐயா அவர்களும் அன்புள்ள ஆட்சிக்கு குழந்தைகளை ஒழுக்கத்தோடு வளர்ப்பது தான் அடிப்படை என்பதை ஆய்ந்து உணர்ந்து கூறியுள்ளார். பார் முழுவதும் சமத்துவமும் நேர்மையும் நீதியும் கொண்ட பொருளாதார முறை ஏற்பட வேண்டும் என்று கூறியுள்ளார். உலக நாடுகள் எல்லாம் ஒருங்கிணைந்த பொருளாதார முறையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்கின்றார். எல்லோரும் சிக்கனமாய் சிறந்த வாழ்வு வாழவேண்டும் என்று கூறுகிறார். வசதி வாய்ப்புகளை ஏராளமாய் பெருக்கிக் கொண்டு இயற்கை வளங்களை அழித்து விடக்கூடாது என்பதால் சிக்கன வாழ்வை சிறப்பாக்கி கொள்ள கூறுகிறார். அவர் எந்த மதத்தையும் குறிப்பிட்டு கொண்டாடவில்லை. உள்ளத்தில் இறைவனை உணர ஓர் இறை வணக்கம் ஏற்படுத்திக்கொள் என்கின்றார். உடலுக்குள் இருக்கும் உயிர் போலே இயற்கைக்குள் இருக்கும் இறைவனை உள்ளத்தில் உணர்ந்தால் அதுவே சிறந்த இறைவணக்கம் என்கின்றார். ஐயா அவர்கள் அறிவியலை வேண்டாம் என்று சொல்லவில்லை. அறிவியலின் நல்ல பலன்களை கைக்கொண்டு நல்வழியில் நல் வாழ்வு வாழ வலியுறுத்துகின்றார்.
மகரிஷி ஐயா அவர்கள் உலகிற்கெல்லாம் ஓராட்சி என்ற உயரிய திட்டம் தீட்டுகிறார். மண்ணுலகில் சொர்க்கம் காண விழையும் அவரின் எண்ணத்தை வெறும் கற்பனை என்றும், கனவு என்றும், உட்டோபியா என்றும் சிலர் வர்ணிக்கிறார்கள். பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்; எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்; என்று ஒரு திரைப்படப் பாடல் உள்ளது. மனிதன் கனவுகளில் இருந்தும், கற்பனைகளில் இருந்தும் தான் விஞ்ஞானத்தை வளர்த்தெடுத்தான் என்பதை மேற்படி பாடல் தெளிவாக்குகிறது. ஆதலால் இன்று கனவாக தோன்றுகின்ற ஒன்று நாளை நனவாகாது என்று கூறிவிட முடியாது. கனவுகளில் தான் பல புரட்சிகள் கருக்கொண்டு உள்ளன. உலகப் போர்களுக்கு முன்பாக சர்வதேசிய சங்கம், ஐக்கிய நாடுகள் சபை என்பதெல்லாம் வெறும் கனவுகளாக தான் இருந்திருக்கும். ஆனால் ஐநா சபை என்ற ஒன்று இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உண்மையானது. ஆனால் அந்த ஐநா சபை உலகையெல்லாம் ஆட்சி செய்யக் கூடிய அளவிற்கான அதிகாரம் கொண்ட அமைப்பாக உருவாகவில்லை. அதனால்தான் உலகிற்கெல்லாம் ஓராட்சி என்பது இன்னும் கனவாக உள்ளது.
விஞ்ஞான வளர்ச்சியில் உலகம் மிகவும் சுருங்கி நெருங்கிக்கொண்டு வருகின்ற நிலையில், உலகிற்கெல்லாம் ஓராட்சி என்பதை நனவாக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்குகிறது. மகரிஷி ஐயா அவர்கள் ஒரு மாநிலத்திற்கோ ஒரு நாட்டிற்கோ விடிவு வந்தால் போதும் என்று தனது எண்ணத்தை குறுகலாக வைத்துக் கொள்ளவில்லை. உலகமெல்லாம் அன்பான ஆட்சி அமைய வேண்டும் என்று திட்டமிட்டார். அதற்காக அவர் அமைத்த அமைப்பு உலக சமுதாய சேவா சங்கம். காரல் மார்க்ஸ் அவர்கள் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் மூலம் உலகில் சமத்துவ சமுதாயம் உருவாக கம்யூனிச அகிலத்தை ஏற்படுத்தினார். நமது மகரிஷி ஐயா அவர்கள் உயர்ந்த அறிவை உலகிற்கெல்லாம் ஏற்படுத்துவதினால் அன்பினால் அமையும் உலக சமத்துவ சமுதாயத்தை உருவாக்க கனவு மட்டும் காணவில்லை. அதனை நனவாக்க உலக சமுதாய சேவா சங்கத்தின் உருவாக்கி வழிநடத்தி வழிகாட்டி சென்றுள்ளார். இன்று உலக சமுதாய சேவா சங்கம் உலகின் பல நாடுகளிலும் அமைந்துள்ளது. அற வாழ்விற்கான அறிவை வளர்த்துள்ளது. அன்பு வழியில் மக்களை இணைத்துள்ளது. இந்த உலக உண்மையை உற்று நோக்கினால் தான் உணர்ந்து கொள்ள முடியும்.
ஐக்கிய நாடுகள் சபைக்குப் போதிய அதிகாரம் அளித்து உலக நாடுகள் ஒன்றிணைந்து உலகிலுள்ள எல்லா ஆட்சி எல்லைகளையும் பாதுகாக்கும் பொறுப்பைக் கூட்டாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்போதுள்ள எல்லைத் தகராறுகளை ஐ.நா. சபை ஏற்படுத்தும் நீதிமன்றத்தின் மூலம் எல்லா நாடுகளும் எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளக்கூடிய திட்டமும் செயலும் மகரிஷி ஐயா கொடுக்கும் திட்டத்தின் சாரமாகும். எல்லைகளின் பாதுகாப்பு ஐ. நா. சபை மூலம் உலகம் ஏற்றுக்கொண்டால் தனித்தனியே எந்நாட்டுக்கும் ராணுவம் தேவைப்படாது. இன்றுள்ள ராணுவ அமைப்புச் செலவையும், போர் வீரர்களின் சேவையையும், பின்தங்கிய நாடு, பின்தங்கிய மக்கள் இவர்கள் முன்னுக்கு வரவேண்டிய சேவைகளில் ஐ.நா. சபை மூலம் ஈடுபடுத்தி விடலாம். ராணுவத்தின் செலவும் ஆற்றலும் மக்கள் நல சேவைக்குத் திருப்பப்பட்டுவிட்டால் பதினைந்து ஆண்டுக் காலத்திற்குள்ளாக உலகிலுள்ள ஒவ்வொரு நாடும் சமமான பொருளாதார வசதியோடும், அன்பு வளம் பெற்ற உள்ளங்களோடும் அமைதியாக வாழ முடியும். உலகெங்கும் ஊர் வாரியாக, நகர் வாரியாக, நாடுகள் வாரியாக இந்த திட்டத்தைப் பற்றிச் சிந்திக்கவும், எந்த பிரிவினருக்கும் இழப்பில்லாத வகையில் உலக அமைதி ஏற்படத் தக்கவாறு முடிவெடுத்துப் பின்பற்றலாம். இந்த பெருநோக்கச் சேவையாற்ற வாக்கு, பொருள், ஆற்றல் என்ற எவ்வகையாலும் உலகுக்குத் தொண்டு செய்ய வாருங்கள். கூடுங்கள். நலம் செய்து நலம் கண்டு மகிழுங்கள் என்று அன்போடு அழைக்கின்றோம் என்று உலக சமுதாய சேவா சங்கம் உலகை அழைக்கின்றது.
எல்லா மனிதர்களிடமும் அன்பும் நல்ல எண்ணங்களும் இருக்கின்றன. எவ்வளவு கொடிய மனிதனாக இருந்தாலும், சிறிதளவாவது அன்பும் நல்லெண்ணமும் இருக்கத்தான் செய்யும். சொல்லப்போனால் இவ்வுலகில் முழு நல்லவர்களும் இல்லை. முழு கெட்டவர்களும் இல்லை. அதனால் தான் மனிதனை கடவுள் பாதி மிருகம் பாதி என்கிறார்கள். மனிதர்களுக்குள் இருக்கும் மிருகத்தை அடிப்படையாகக் கொண்டு வன்முறை வழியில் புரட்சி திட்டங்களை பலர் தீட்டுகிறார்கள். கத்தி எடுத்தவன் கத்தியாலேயே அழிவான் என்பதுபோல அவர்களின் திட்டங்களும் வன் முறையிலேயே முடிந்து விடுகின்றன. மகரிஷி ஐயா அவர்கள் மனிதனுக்குள் இருக்கும் அன்பு மற்றும் நல் எண்ணங்களை ஒருங்கிணைத்து அன்பிலான ஓருலக ஆட்சியை உருவாக்க திட்டமிட்டுள்ளார். மனிதனுக்குள் உள்ள தீய எண்ணங்கள் என்ற வம்பை நல்லெண்ணங்கள் என்ற அன்புதான் வெல்ல முடியும். வம்பால் வம்பை வெல்ல முடியாது. வம்பு வழியில் வென்றது வீழ்வதும் வீழ்ந்தது வெல்வதும் மாறிமாறி தொடரும். நிலையான முடிவு எப்போதும் வராது. ஆனால் அன்பிற்குள் வம்பு கரைந்து விட்டால் உலகெல்லாம் அன்பே ஆட்சி செய்யும். மகரிஷி ஐயா அவர்களின் ஆன்மீக அறிவை வளர்த்து அன்பான உள்ளங்களை உருவாக்கும் திட்டம் விரிவாக விரிவாக ஓர் உலக கனவு ஒருநாள் நனவாகும் என்ற நம்பிக்கை உருவாகிறது. வாழிய வையகம்! வாழ்க வளமுடன்!
***************************
கருத்துகள்
கருத்துரையிடுக