சாதியம் மறையுமா? -1
சாதியம் மறையுமா? -1
'எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓர் இனம்
எல்லாரும் இந்திய மக்கள்!
எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர் விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்!'
எனவும்,
'சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி உயர்ந்த மதி,கல்வி-அன்பு
நிறை உடையவர்கள் மேலோர்.'
எனவும் பாடியுள்ளார் மகாகவி பாரதி.
ஆனால், சாதிய ஒழிப்பு குரல் நீண்டகாலமாக இந்திய மண்ணில் ஒலித்துக்கொண்டு உள்ளபோதிலும், சாதியம் மக்கி மறைந்து விட்டதாக கருத இயலவில்லை. மேலோட்டமாக சற்று மறைந்து விட்டது போல் தோன்றுகின்ற போதிலும், உள்ளூர மேலும் மேலும் திடமாகி வருவதாக தோன்றுகிறது. அதற்கான காரணங்கள் என்ன? அதனை மக்கி மறைய செய்வதற்கு வழிகள் உண்டா? என்று ஆராய முற்படும்போது, சாதியம் என்பது தானாக வந்ததா, அல்லது தோற்றுவிக்கப்பட்டதா, இந்தியாவின் இரண்டு மாபெரும் ஆளுமைகளாக இருந்த மகாத்மா காந்தியும், அண்ணல் அம்பேத்கரும் சாதிய பிரச்சனையில் எவ்வாறு முரண்பட்டு இருந்தனர்; காலப்போக்கில் அவர்கள் எந்த அளவிற்கு இதில் ஒன்று பட்டனர், சாதியை ஒழிப்பதற்கு அவர்கள் இருவரும் என்னென்ன உபாயங்களை முன்வைத்தனர், தற்போது சாதிய ஒழிப்பு எந்தளவிற்கு முன்னேறி உள்ளது என்பது பற்றியெல்லாம் முதலில் அறிய வேண்டியதாக உள்ளது.
இந்து மதம் குறிப்பாக வேதங்கள் சாதியை ஏற்படுத்தியதாக சாதிய எதிர்ப்பாளர்கள் வலுவாகக் கூறிவருகின்றனர். தானாக உருவாகிய சாதியை வேதங்கள் வரையறை தான் படுத்தின எனவும், ஒரு சமூக ஒழுங்கை ஏற்படுத்துவதற்காக ஏற்கனவே இருந்த சாதிய முறையை ஒழுங்குபடுத்த விதிமுறைகளை வேதங்கள் அமைத்தன எனவும் இந்துமத ஆதரவாளர்கள் கூறுகின்றார்கள்.
வேதங்கள் மற்றும் பகவத்கீதை போன்றவைகளில் சாதி பற்றி என்னதான் சொல்லியுள்ளது என்று முதலில் பார்ப்போம்: மேற்படியானவற்றில் என்ன சொல்லப்பட்டுள்ளன என்பதை நா. சாம்பசிவ சாஸ்திரிகள் என்பவர் 1932இல் இயற்றியுள்ள 'வேதாகம தர்ம வித்யா என்கின்ற இந்துமத தர்ம விளக்கம்' என்ற நூலைப் படித்தால் அறிந்து கொள்ளலாம். அதில் சாதி பற்றி கூறியுள்ள விவரங்கள் பின்வருமாறு:
வர்ண தர்மம்
'பிரம்மாவின் முகம், புஜங்கள் , தொடைகள், பாதங்கள் இவற்றினின்றும் உண்டானவர்கட்கு அந்தந்த உருப்புகளின் கார்யங்களாகிய வேத அத்யயனம், சத்துருக்களை வெல்லுதல், தேச ஸஞ்சாரம் செய்தல், உழைப்பெடுத்தல் என்ற கார்யங்கள் முறையே விதிக்கப்பட்டுள்ளன. அவரவர் தர்மங்களைச் செய்கின்றவர்கட்கு நற்கதியும் , செய்யாதவர்கட்கு துர்கதியும் விதிக்கப்பட்டிருக்கிறது.'
எனவும்,
'அதாவது வேதத்தையும் பிரம்ம ஜ்ஞானத்தையும் உபதேசிக்கத் தகுதியுற்றவன் பிராம்மணன் ஆவன். ஆபத்திலிருந்து காப்பவன் ஷத்ரியன் ஆவான். வியாபார நிமித்தம் தேச ஸஞ்சாரம் செய்கிறவன் வைசியன் ஆவான். முற்கூறிய மூன்று வர்ணத்தார்களுடைய கடமைகள் ஒழுங்கு பெறச் பாடுபட்டு உபகாரம் செய்பவன் சூத்ரன் ஆவான்.'
எனவும்,
'வர்ணம் என்பதற்கு ஜாதி என்று பொருள். ஸ்தாவரங்கள், விலங்குகள் என்பது பொதுவாக இருப்பினும் அவற்றுள் நாம் பற்பல ஜாதிகள் பகவானால் படைக்கப்பட்டிருப்பதை பார்க்கின்றோம். அந்தந்த ஜாதி அவரவர் குணத்தைப் பொறுத்து இருப்பினும், அக்குணம் அந்தந்தச் சாதியின் விதையிலேயே சூட்சுமமாய் அவரவர் கர்மத்தின் படி பகவானால் அமைக்கப்பெற்று இருக்கிறது. அவ்விதமான ஈஸ்வரனின் அமைப்பை மற்றவரால் மாற்றமுடியாது. வேம்பு சந்தனம் ஆகுமா? புலி பசு ஆகுமா? வேப்பம் விதையை எவ்வளவு காலம் தேனில் ஊறவைத்து விதைத்தாலும், தித்திக்கும் பழத்தை உண்டுபண்ண முடியுமா? மிளகாயையும் கரும்பையும் ஒரே மண்ணில் வளர்த்து ஒரே ஜலத்தினால் வளர்க்கப்படினும், மிளகாய் உறைப்பதற்கும், கரும்பு தித்திப்பதற்கும் காரணமாயிருப்பது அவற்றின் விதைகளின் குணங்களே யாம். அவ்விதமே மனிதர்களும் பகவான் அவரவர் கர்மம் ஆகிய விதையின் குணங்களை கருதி பிறவியிலேயே வெவ்வேறு ஜாதியை படைத்திருக்கின்றான்'
எனவும் கூறப்பட்டுள்ளன. பகவத் கீதையில், கண்ணபிரான் "சதுர் வர்ணம் மயா ஸ்ருஷ்டம் அதாவது நான்கு வருணங்களை நான்தான் உருவாக்கினேன்" என்று கூறியுள்ளார். ஆதலால் வர்ணங்கள் மற்றும் ஜாதிகளைப் பற்றி வேதங்களும் பகவத்கீதையும் கூறியுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மைகளாகும்.
சாதிகள் இந்து மதத்தின் தத்துவத்திலேயே அடிப்படையாக அமைந்துள்ளதால், இந்து மதத்தில் இருந்து பிரிக்க முடியாத அம்சமாக கலந்துள்ளதால், சாதிய எதிர்ப்பாளர்கள் சமணர் புத்தர் காலங்களிலிருந்தே அதனை எதிர்த்து வருகிறார்கள். இந்து மதத்தில் இருந்து வர்ணாசிரம தர்மத்தை நீக்கிவிட அல்லது மாற்றிவிட இந்து மதத்துக்குள் இருந்தும் இந்து மதத்திற்கு வெளியிலிருந்தும் பலப்பல மகான்களும் சான்றோர்களும் முயன்றுள்ளார்கள். ஆனால் இந்துமதம் அவைகளையும் உள்வாங்கிக்கொண்டு அவைகளையும் இந்து மதத்தின் ஒரு பிரிவாக்கிக் கொண்டு, வர்ணாஸ்ரம தர்ம எதிர்ப்புகளை நீர்த்துப்போக செய்துகொண்டு, வர்ணாஸ்ரம தர்மத்தை விடாப்பிடியாக தனக்குள் வைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் தழைத்து நிலைத்து நின்று கொண்டுள்ளது. வேதங்களும் கீதையும் வர்ணாசிரம தர்மத்தை அடிப்படை தத்துவமாக கொண்டுள்ள போதிலும், சாதிகளை உருவாக்கியது இந்து மதம் அல்ல எனவும், அவை சமூக வளர்ச்சியில் தன்னியல்பாக தோன்றியதுதான் எனவும் சொல்லப்படுவது எந்தளவிற்கு உண்மையானது என்று பரிசீலிக்க வேண்டியது அவசியமாக உள்ளது.
(இன்னும் ஆராய்வோம்...)
*******************
கருத்துகள்
கருத்துரையிடுக