சாதியம் மறையுமா? - 3

சாதியம் மறையுமா? - 3

சாதி ஒழிப்பு பற்றி பேசுகின்ற போது தனது வாழ்நாள் முழுவதும் அதற்காக தணியாத கனலாக, தளராத வீரனாக போராடிய பீமாராவ் அண்ணல் அம்பேத்கரை பற்றி கூறாமல் யாரும் எதனையும் கூறிவிட இயலாது. அண்ணல் அம்பேத்கரை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவரைப் பற்றி எல்லோரும் அறிவார்கள். அவரைப் பற்றி நான் கூறி அறிய வேண்டிய அவசியம் இல்லை தான். இருப்பினும் இந்த தொடரின் நோக்கத்திற்காக, விக்கிப்பீடியாவில் அவரைப்பற்றி கூறியுள்ளதிலிருந்து அவரின் வாழ்க்கை வரலாற்றை ஓரளவு சுருக்கி தர விரும்புகின்றேன். இது அவரின் உணர்வுகளுக்கும் செயல்களுக்குமான காரணங்களையும், அவரின் போராட்டத்திற்கான பின்னணியையும் ஓரளவு உணரச் செய்யும் என்று நம்புகின்றேன்.

அண்ணல் அம்பேத்கர் அவர்களின்
வாழ்க்கை வரலாறு

அம்பேத்கர்  1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி மாலோஜி சக்பால் - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். அவரின் தந்தை இராம்ஜி சக்பால் இராணுவப்பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இவர் 'சுபேதார் மேஜர்' என்ற தகுதி பெற்றவர். மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த பீமாராவ் இராம்ஜி இளம் வயதில் பல்வேறு துன்பங்களை அனுபவித்தார். டாக்டர் அம்பேத்கர் தனது இளம் வயதில் ஒரு முறை மாட்டு வண்டியில் சகோதரருடன் பயணம் செய்து கொண்டிருந்தபொழுது, இவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வண்டிக்காரன் அறிந்ததும் உடனே மாட்டை அவிழ்த்து விட்டு அச்சிறுவர்களை குப்பையைக் கொட்டுவது போலக் கொட்டிய கொடுமை நிகழ்ந்தது.

1900 ஆண்டில் சாத்தாராவில் உள்ள ஒரு பள்ளியில் தனது தொடக்கக் கல்வியைத் முடித்த அம்பேத்கர் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து பயின்றார். அங்கு தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தனியே அமர்த்தப்பட்டனர். மற்ற மாணவர்களுடன் பேசவோ விளையாடவோ முடியாது. அவர்களின் குறிப்பேடுகளையும் புத்தகங்களையும் தொடமாட்டார்கள். கேள்விகள் கேட்பதும் கிடையாது. தண்ணீர் வேண்டுமென்றாலும் பிறர் ஊற்ற கையால் பருகவேண்டும். அமருவதற்கு இம்மாணவர்கள் ஒரு கோணிப்பையைத் தங்கள் வீட்டிலிருந்தே கொண்டு வர வேண்டும். வடமொழி கற்கவும் தடை இருந்தது.இக்கொடுமைகளைக் கண்ட அம்பேத்காரின் பிஞ்சுமனம் வெம்பியது.

1904 ஆம் ஆண்டு இவரது குடும்பம் மும்பைக்குச் சென்றது. அங்கு எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து தனது கல்வியைச் தொடர்ந்தார் அம்பேத்கர். குடும்பத்தில் மிகவும் வறுமை சூழ்ந்த நிலையிலும் கல்வியை விடாமல் மெட்ரிக்குலேசன் தேர்வில் தேர்ச்சி பெற்றார். கல்லூரியில் சேர்ந்து கல்வியைத் தொடர விரும்பிய அம்பேத்கருக்கு பரோடா மன்னர் உதவி புரிந்தார். சாதிக் கொடுமை கல்லூரியிலும் தொடர்ந்தது. ஆயினும் பேராசிரியர் முல்லர் என்பவர் அன்புடனும் அனுதாபத்துடனும் நூல்கள், உணவு மற்றும் உடைகள் கொடுத்து உதவினார். இவரின் உதவியால் அம்பேத்கர் நன்கு படித்து இளங்கலைப் பட்டதாரியானார்.

படிப்பு முடிந்ததும் குடும்பச் சுமையை ஏற்பதற்காக சிறிது காலம் பரோடா மன்னரின் அரண்மனையில் படைகளுக்குத் தலைவராக 'லெப்டினன்ட்' பதவியில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கும் நிலவிய சாதி வேற்றுமையால் மனம் நொந்து மும்பைக்கே திரும்பினார். பின்னர் மும்பைக்கு வந்த பரோடா மன்னரை நேரில் சந்தித்து தான் வேலைக்கு வர இயலாத சூழ்நிலையை எடுத்துக் கூறினார். மிகவும் வேதனையடைந்த மன்னர், மிகச் சிறந்த கல்வியாளரான அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் முதுகலை பயில ஏற்பாடு செய்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் உயர்கல்வி பயின்றவர் என்ற பெருமையும் பெற்றார்.

1913ஆம் ஆண்டு சூன் 4 ஆம் நாள் அம்பேத்கர் அமெரிக்கா சென்றார். உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களைப் படித்தார். அங்கு அவர் 1915-ல் 'பண்டைய இந்தியாவின் வாணிகம்’ என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார். இந்தியாவின் சாதிகள் என்ற தலைப்பில் கருத்தாழமிக்க ஒரு கட்டுரையை எழுதினார். பின்னர், 'இந்திய தேசியப்பங்கு விகிதம் ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு’ என்ற தலைப்பில் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஓர் ஆய்வுக்கட்டுரை வெளியிட்டார். இந்த ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக் கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. 

சாதி ஒழிப்பு போராட்டத்தில் 
அண்ணல் அம்பேத்கார்

பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் முனைவர் அம்பேத்கர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதே நேரத்தில், சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று போராடினார். 1930-ல் இலண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில், 'என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்’ என்று கூறிச் சென்றார். இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென முனைவர் அம்பேத்கர் வலியுறுத்தினார். இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் 'இரட்டை வாக்குரிமை" தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. மகாத்மா காந்திஜி இதனை எதிர்த்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப்படக் கூடாது என வலியுறுத்தி காந்திஜி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதன் விளைவாக செப்டம்பர் 24 - 1932-ல் காந்திஜிக்கும், முனைவர் அம்பேத்கருக்கும் இடையே 'பூனா ஒப்பந்தம்’ ஏற்பட்டது. இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி ஒதுக்கீடுகள் ஒத்துக் கொள்ளப்பட்டன. வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து முனைவர் அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார். இறுதியில் 1956-ல் தமது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தில் இணைந்தார்.

சுதந்திர இந்தியாவின் 
அண்ணல் அம்பேத்கார்

இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார். இவரது தலைமையில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது, அதன் ஒரு பகுதியான 'இந்து சட்டத் தொகுப்பு மசோதா'விற்கு பாராளுமன்றத்தில் சட்டமாக்க ஆதரவு கிடைக்காததை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார். (1952 பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னான காங்கிரஸ் அதிக இடங்கள் பெற்றமையினால் 1952-ல் அந்த சட்டம் நிறைவேறியது) சமூக நீதிப் போராளி முனைவர் அம்பேத்கர் 1956 - திசம்பர் 6 அன்று காலமானார். மரணத்திற்கு பின் இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 1990ம் ஆண்டு வழங்கப்பட்டது.

சாதி ஒழிய அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கொண்டிருந்த கருத்துக்கள்

'எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.’ என்று கூறினார்.

சாதி ஒழிவதற்கு இந்து மதத்தின் வர்ணாஸ்ரம கோட்பாடு ஒழிக்கப்பட வேண்டும் என்று முதலில் அம்பேத்கர் கோரினார். இந்து மதவாதிகள் அதனை பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்கின்ற நிலையில், இந்து மதத்தை சீர்திருத்துவது என்ற எண்ணத்தைக் கைவிட்டு,  சாதிய இழிநிலைக்கு அடிப்படையாக உள்ள இந்து மதத்திலிருந்து வெளியேறி அனைவருக்கும் சமத்துவத்தை வழங்குகின்ற வேறு மதத்தில்  தாழ்த்தப்பட்டவர்கள் அனைவரும் இணைவதன் மூலமாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமத்துவத்தையும் விடுதலையையும் கிடைக்கச் செய்வதோடு, இந்து மதத்திற்கு ஓர் அதிர்ச்சி வைத்தியம் அளித்து, அதன்மூலம் இந்துமதம் சீர்திருத்தம் அடைய செய்ய வேண்டும் எனவும் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எண்ணியிருப்பார் என்று கருதுகின்றேன். அவர் எண்ணியது போன்று இந்தியாவில் இருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் அனைவரும் புத்த மதத்திற்கு மாறி இருந்தால், இந்தியாவின் வரலாறு வேறு மாதிரி ஆகியிருக்கும். ஆனால் அவர் புத்த மதத்துக்கு மாறிய பின் ஒரு மாதத்திற்குள்ளாகவே இயற்கை அவரை அழைத்துக் கொண்டது.

இந்தியாவின் துரதிருஷ்டம்!

தீண்டாமை ஒழிய வேண்டும்; தாழ்த்தப்பட்டவர்களும் சமமாக மதிக்கப்படவேண்டும் என இந்தியாவில் போராடிய மற்றொருவர் மகாத்மா காந்தியடிகள். அவரும் இந்தியா சுதந்திரம் அடைந்த சிறிது காலத்திற்குள்ளாகவே கொல்லப்பட்டுவிட்டார்.  சாதிய ஒழிப்பில்  இவர்கள் இருவரும் கொண்டிருந்த தீவிரம், வேகம் அளவில் வேறு படக் கூடியதாக இருந்த போதிலும், தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றத்தில் ஓரளவு ஒற்றுமை உடையதாகவும் இருந்தது. சாதிய ஏற்றத்தாழ்வு மறைவதற்கு தீவிரம் காட்டிய இரு பெரும் ஆத்மாக்களும் சுதந்திரமடைந்த சிறிது காலத்திலேயே மறைந்து போனது சாதி ஒழிப்பு போராட்டத்தில் ஏற்பட்ட பெரிய பின்னடைவு என்பதோடு மட்டுமல்லாமல், இந்திய முன்னேற்றத்திற்கு ஏற்பட்ட பெரிய துரதிஷ்டம் என்றுதான் கூற வேண்டும். 

மகாத்மா காந்தியும் 
அண்ணல் அம்பேத்கரும்

மகாத்மா காந்தியடிகளுக்கும், அண்ணல் அம்பேத்கார் அவர்களுக்கும் இடையே சாதிய ஒழிப்பு பிரச்சினையில் பல சமயங்களில் பலவித முரண்பாடுகள் ஏற்பட்டன. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அது சமயம் மகாத்மா காந்தியடிகளை  “காந்தியை துறவி என்றோ, மகாத்மா என்றோ அழைக்காதீர்கள். அவர் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி. காலத்திற்கேற்ப இவர் குணம் மாறும்; ஆதரவும் மாறும்; ஆனால் இந்து மதத்தில் ஒரு அடிமைகளாக தாழ்த்தப்பட்டவர்கள் காலம் முழுவதும் நீடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் மாறாது”, என்று மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார். 

பஞ்சாபில் ஜாத் பட் தோடக் மண்டல்’ என்று ஒரு சபை சாதி ஒழிப்பு மாநாட்டுக்கு அம்பேத்கர் அவர்களைத் தலைமை வகிக்கக் கேட்டுக் கொண்டார்கள். அவரும் ஒத்துக் கொண்டு தலைமை உரையாக 100 பக்கம் ஆங்கிலத்தில் எழுதினார். அதில் பல ஆதாரங்களை எடுத்துப்போட்டு, சாதி ஒழிய இந்து மதமே ஒழிய வேண்டும் என்று எழுதியிருந்தார். இதைத் தெரிந்து அவரிடம் “உங்கள் மாநாட்டுத் தலைமை உரையை முன்னாடியே அனுப்புங்கள்’ என்று கேட்டு வாங்கிப் பார்த்தார்கள். “உங்கள் தலைமையுரை எங்கள் சங்க மாநாட்டில் படிப்பதற்கு ஏற்றதாக இல்லை. இது சாதி ஒழிப்புச் சங்கமே தவிர, இந்து மத ஒழிப்புச் சங்கமல்ல; ஆகையால் நீங்கள் இந்து மதம் ஒழிய வேண்டும் என்கிற அந்த ஒரு அத்தியாயத்தை நீக்கிவிட வேண்டும்” என்று அம்பேத்கரிடம் கேட்டார்கள். அதற்கு அம்பேத்கர் ” சாதி ஒழிப்பிற்கு இந்து மதம் ஒழிய வேண்டும்’ என்கிறதுதான் அஸ்திவாரம். அதைப் பேசாமல் வேறு எதைப் பேசுவது? ஆகையால் அதை நீக்க முடியாது என்று சொல்லிவிட்டார். பிறகு மாநாடே நடக்காமல் போய்விட்டது. 

அது குறித்து மகாத்மா காந்தியடிகள் 'நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அம்பேத்கரின் கருத்து ஏற்கத்தகுந்த வகையில் இல்லை எனக் கூறி அந்த மாநாட்டையே நிறுத்தியுள்ளார்கள் . இதனை அந்த ஒருங்கிணைப்பாளர்கள் எந்த வகையில் நியாயப்படுத்த முடியும். ஏனெனில் தலைமை தாங்குவதற்காக அழைக்கப்பட்டவர் தங்களின் விருப்பதற்குத் தான் பேச வேண்டும் எனக் கருதுவது எவ்வகையில் நியாயம். மேலும் அவரின் கருத்து நிராகரிக்கப்படுவதோ அல்லது கேள்விக்குறியதாகவோ இருக்கலாம். அம்பேத்கரின் கருத்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் இந்து சமயக் கருத்திற்கு எதிரானது என்றும் அவரின் தலைமை உரையும் எதிர்க்கருத்து கொண்டதாகத் தான் இருக்கும் என்பதையும் அறிந்தே அவர்கள் அம்பேத்கரை அழைத்தனர். இந்தச் சமுதாயத்தில் தன்னைத் தானே செதுக்கி சமூகத்தில் ஒரு உயர்ந்த நிலையில் இருக்கும் ஒரு மனிதனின் சுய பார்வைகளை பொதுமக்கள் அறிவதற்கான அவர்களின் வாய்ப்பினை இந்த ஒருங்கிணைப்பாளர்கள் இழக்க செய்துள்ளதாகவே நான் கருதுகிறேன்.' என கூறியுள்ளார். ஆதலால் அண்ணல் அம்பேத்கருடன் மகாத்மா காந்தியடிகள் பல சமயங்களில் பல கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த போதிலும், அவரின் கருத்துக்களை மதிக்க கூடியவராகத்தான் இருந்தார்.

மகாத்மா காந்தியடிகளின் 
வாழ்க்கை வரலாறு

மகாத்மா காந்தியடிகள் தீண்டாமை ஒழியவும், ஜாதி ஏற்றத்தாழ்வு மறையவும் கொண்டிருந்த கருத்துக்களை பற்றி அறியும் முன்பாக அவரின் வாழ்க்கை வரலாறையும் பின்னணியும் பார்ப்பது அவசியம் என்று கருதுகின்றேன். நான் ஏற்கனவே சொன்னது போல் இதுவெல்லாம் நீங்கள் ஒன்றும் அறியாதது அல்ல. நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டிய அவசியமில்லை தான். ஆனால் இத்தொடரின் நோக்கத்திற்கு இதெல்லாம் அவசியம் என்பதால் எடுத்துக்காட்ட வேண்டியதாக உள்ளது. நீங்களும் உங்கள் அறிதலை சற்று புதுப்பித்துக் கொண்டதாகவவோ,  நினைவுபடுத்திக் கொண்டதாகவோ இருக்கட்டுமே! 

(இன்னும் ஆராய்வோம்...)

                 *************************

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பு வழி இன்ப ஒளி 15

தமிழ்நாடு அன்புவழி அறப்பணி மன்றம்

அன்பு வழி இன்ப ஒளி -1