மதமும் மனிதமும்
நேற்றைய பதிவில் மதம் தொடர்பான கருத்துக்கள் விடுபட்டு விட்டன. அதனை தெரிவிப்பதற்காக இதனை தற்போது பதிவிடுகிறேன். மதம் என்பது கடவுள், கடவுளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள உறவு, மனிதர்களின் வாழ்வு குறித்த நம்பிக்கைகளாகும்! ஒரே கடவுள் என்பதும், பல கடவுள்கள் என்பதும், கடவுள் இல்லை, இயற்கை தான் மூலம் என்பதும், இயற்கை தான் கடவுள் என்பதும் அவரவர் நம்பிக்கை சம்பந்தப்பட்டது ஆகும்! நாத்திகம் உட்பட நமக்கு எம்மதமும் சம்மதம் தான்! கிருஷ்ணனோ அல்லாவோ, ஏசுவோ இயற்கையோ ஏதோ ஒன்று இறைவன்! ஆம்! 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்! அன்பே அனைத்திலும் ஜீவன்!' இதுதான் நமது மதம் சம்பந்தப்பட்ட கொள்கையாகும்! இங்கு குலம் என்று சொல்வது சாதியை அல்ல. மனிதகுலம் என்பதைக் குறிப்பதாகும். எம்மதம் ஆயினும் மனித நேயம்தான் அடிப்படை! மனித நேயத்துக்கு மீறிய மதம் இல்லை! மனிதநேயத்தை போற்றாத வளர்க்காத மதம் தீமையானது! மாற்று மதத்தினர் மீது வெறுப்புணர்ச்சியை வளர்கின்ற எந்த ஒரு மதமும் நெறிதவறி செல்வதாகவும், அதன் நோக்கத்திற்கு விரோதமாக செயல்படுவதாகவுமே கருதத் தக்கதாகும். மதங்களில் உயர்வு தாழ்வு எதுவும் இல்லை! அது தோன்றிய பகுதிகளில் இருந்த சூழ்நிலைக்கு தகுந்தார்போல் மனிதகுல ஒற்றுமைக்கு மனிதகுல அமைதிக்கு ஏற்புடைய விதிமுறைகளை வகுத்துள்ளது! அதில் குற்றம் குறை காண்பதோ, உயர்வு தாழ்வு பேசுவதோ முறை அற்றதாகும். சில சமயம் சிலர் தமது மதம் தான் எல்லாவற்றையும்விட உயர்ந்தது எனவும், தமது மதம் தான் விஞ்ஞானத்தின் தாய் எனவும், தமது மதத்தில் இல்லாத விஞ்ஞானமே எதுவுமில்லை எனவும், மதக் கருத்துக்களை எல்லாம் விஞ்ஞானம் என்பதுபோல் இட்டுக்கட்டி மதத்தின் பேரிலான நம்பிக்கையை வளர்க்கிறேன் என்ற பெயரில் மத பேதங்களுக்கு அவ்வப்போது வித்திடுகிறார்கள். மனிதர்கள் கற்பனை மிகுந்தவர்கள்! மனிதனுடைய கற்பனைகள் தான் உலகை தினந்தினமும் புதுமை ஆக்கிக் கொண்டுள்ளன. அன்றைய மனிதர்கள் தங்களின் கற்பனைகளை மத இதிகாசங்களில் கூறியுள்ளனர்.அப்போது கற்பனையாக கூறியுள்ள சிலவற்றை விஞ்ஞானம் உண்மையாக்கி இருக்கலாம். அதனால் மத இதிகாசங்கள் கூறியுள்ள அனைத்தும் விஞ்ஞானம் என்ற கருத்துக்கு செல்வது அஞ்ஞானமாகும். மதத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் முடிச்சு போட்டு மத உயர்வு தாழ்வு பேசுவது தீய நோக்கத்திற்கானது என்றுதான் கூற வேண்டும்.
இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் என்பதைவிட நாமெல்லாம் மனிதர்கள் என்பதுதான் முக்கியமானது! நம்மை ஒழுங்கமைத்து கொள்வதற்குத்தான் மத நம்பிக்கைகள்! ஒழுங்கின்றி காட்டுமிராண்டித்தனமாக செயல்படுவதற்கு ஒரு மதம் தூண்டுகிறது என்றால் அந்த மதத்திற்கு மதம் பிடித்துக் கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும்! மதத்துக்கு மதம் பிடிக்காமல் மனிதம் மட்டும் பிடித்திருந்தால் அம்மதம் எல்லாம் நமக்கு சம்மதம்தான்!
இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் என்பதைவிட நாமெல்லாம் மனிதர்கள் என்பதுதான் முக்கியமானது! நம்மை ஒழுங்கமைத்து கொள்வதற்குத்தான் மத நம்பிக்கைகள்! ஒழுங்கின்றி காட்டுமிராண்டித்தனமாக செயல்படுவதற்கு ஒரு மதம் தூண்டுகிறது என்றால் அந்த மதத்திற்கு மதம் பிடித்துக் கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும்! மதத்துக்கு மதம் பிடிக்காமல் மனிதம் மட்டும் பிடித்திருந்தால் அம்மதம் எல்லாம் நமக்கு சம்மதம்தான்!
கருத்துகள்
கருத்துரையிடுக