வீட்டிற்கும் நாட்டிற்கும் தேவையானது அன்பின் ஆட்சி

வீட்டிற்கும் நாட்டிற்கும் தேவையானது அன்பின் ஆட்சி

நமது அமைப்பிற்கு அன்பு வழி என்று பெயர் தெரிவு செய்துள்ளது ஏதோ ஒரு புதிய பெயர் வைக்க வேண்டும் என்று ஆழ்ந்த சிந்தனை இன்றி வைக்கப்பட்ட பெயர் அல்ல. அன்பு வழி என்பது தற்போதைய காலத்திற்கு பொருத்தமானதும் அவசியமானதும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான் தெரிவு செய்யப்பட்டுள்ளது. நான் முன்பு செயல்பட்டுக் கொண்டிருந்த ஒரு நண்பர்களின் அமைப்பிற்கு அன்பால் இணைவோம் நட்பால் உயர்வோம் என்ற முழக்கம் வைத்திருந்தோம். அது பெரிய யோசனைகளோடு வைக்கப்பட்டது என்று கூறிவிட முடியாது. ஆனால் அந்த அமைப்பின் கூட்டங்கள் நடக்கின்ற போது அதில் பேசுவதின் பொருட்டு அன்பு பற்றி அதிகம் படிக்கவும் எண்ணிப் பார்க்கவும் எனக்கு வாய்ப்பு ஏற்பட்டது. அப்போதுதான் எனக்கு அன்பின் ஆற்றல் புரியக் கூடியதாக இருந்தது. அன்பு இல்லாததன் காரணமாக, அல்லது உண்மையான அன்பு இல்லாததன் காரணமாக, அன்பு பற்றிய சரியான புரிதல் இல்லாததன் காரணமாக வீட்டிலும் நாட்டிலும் எவ்வளவு தவறுகள் நடக்கின்றன என்று தெரியவந்தது.

நாம் எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படவும், குறை படவும் கோபப்படவும், கடுஞ்சொல் பேசவும் பழக்கப்பட்ட அளவிற்கு அறிவுப்பூர்வமாக பொறுப்புணர்வோடு கோபப்படாமல் நிதானமாக திறந்த மனதோடு சிந்திக்கவும், ஆத்திரப்படாமல் ஆக்கபூர்வமாக பேசவும் பழக்கப் படவில்லை என்றே கூறலாம். ஆதலால் நாம் எதற்கெடுத்தாலும் சட்டு சட்டென்று உணர்ச்சிவசப்பட்டு திரும்பப்பெற முடியாத வார்த்தைகளை கொட்டி உறவுகளை சீர்குலைத்து துன்ப துயரங்களுக்கும் ஆளாகிறோம்.

அன்பில் சிற்றன்பு, பேரன்பு என இரு வகை உண்டு. சிற்றன்பு என்பது குறுகியது - சுயநலமானது. பேரன்பு என்பது பரந்துபட்டது - பொதுநலம் ஆனது. நமது உள்ளங்களில் சிற்றன்பைத்தான் நாம் நிறைய வைத்துள்ளோம். பேரன்பை மிகச்சிறியதாக வைத்துள்ளோம். ஆதலால் நாம் சமுதாயத்தில் காணப்படும் அநீதிகளை காணும்போது அதற்கு சின்ன வருத்தப் படுவதோடு வாய் சப்பலோடு நமது பொது நல விருப்பத்தை நிறைவு செய்து கொள்கின்றோம். அதற்குமேல் நாம் செய்ய என்ன உள்ளது என்று எண்ணிக் கொள்கிறோம். நமக்கு பேரன்பு இல்லை என்பதால்தான்அதை சரி செய்வதற்கான முயற்சி மேற் கொள்ளாமல் இருந்து விடுகிறோம்.

சிற்றன்பு என்பது பேரன்பிற்கு எதிரானது ஒன்றும் அல்ல. சிற்றன்பும் பேரன்பிற்குள் அடக்கம்தான்! நீங்கள் சமுதாய நலனுக்கு பாடுபடுகின்ற போது உங்களின் குடும்ப நலனை துறந்து விடுங்கள் என்று கூறவில்லை. உங்கள் குடும்பமும் சமுதாயத்தில் ஓர் அங்கம்தான். உங்கள் மனைவி மக்களும் பொதுமக்களின் ஒரு பகுதிதான்! அதனால் அவர்களின் நலனை நீங்கள் காக்கவில்லை என்றால் நீங்கள்  சமுதாய நலனை முழுமையாக செய்யவில்லை என்றுதான் பொருள். வீட்டுக்குத் தேவையானதை செய்யுங்கள். அவர்கள் மீது அன்பு பாசம் உள்ளதை உணர வையுங்கள். அதேசமயம் சமுதாய நலனுக்காக பாடுபட வேண்டிய அவசியமும் ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்! பெரிது பெரிதாக பேசி விவாதம் செய்து திருத்த வேண்டும் என்று முயலாதீர்கள்! வீட்டு நலனுக்காகவும் பாடுபடுவேன் அதேசமயம் நாட்டு நலனுக்காகவும் பாடுபடுவேன் என்று உறுதியான செயல்பாடுகள் மூலமாக புரிய வையுங்கள்! நாட்டுக்காக பாடுபடுவது வீட்டுக்கும் நன்மை செய்வதுதான் என்பதை உணர வையுங்கள்!

சிலர் வீடுகளில் எப்போது பார்த்தாலும் சண்டை சச்சரவுகள் ஆகவே இருக்கும். அங்கு ஒவ்வொருவருக்கும் சுயநலமே மிகுந்திருக்கும். அன்பும் பரஸ்பர நம்பிக்கையும் குன்றி இருக்கும். எதிர்க்கட்சி என்றால் எப்போதும் எதையும் எதிர்ப்பது என்று எண்ணிக் கொள்வது போல் ஒருவர் மீது ஒருவர் எப்போதும் குற்றப்பத்திரிக்கை வாசிக்கவே சமயம் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அங்கு அன்போ அமைதியோ, வெற்றியோ, ஆனந்தமோ இருக்காது. ஒருவர் ஒரு தவறு செய்துவிட்டால் அதை திரும்பத் திரும்ப குத்திக்காட்டுவதோ, சுட்டிக் காட்டுவதோ கூடாது. தவறு செய்தவர் அதை தவறு என்று உணர்ந்தாலும் கூட திரும்பத்திரும்ப குத்திக்காட்டும் போது, 'நான் அப்படித்தான் நீ என்ன வேணாலும் செய்துகொள்!' என்று எதிர்த்துக்கொள்ளும் மனநிலைக்கு சென்றுவிடுவார். இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்கிறார் வள்ளுவர். அவ்வாறு செய்வதுதான் தவறு திருத்துவதற்கான சரியான வழியாகும்.  ஆணும் பெண்ணும் சமம் அனுசரித்து வாழ்ந்தால் சுகம் என்பதுபோல அன்புடன் வாழ்ந்தால்தான் ஆனந்தம் இருக்கும். அன்பை வார்த்தைகளால் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அன்பை செயல்களால் உணர்த்த வேண்டும்.ஆயிரம் வார்த்தைகள் பேசுவதை ஒரு செயல் உணர்த்திவிடும். நீங்கள் வண்டி வண்டியாக அன்பு உள்ளது போல் பேசிவிட்டு அன்பில்லாத செயல்களை செய்தீர்களானால் உங்கள் வார்த்தைகள் எந்தப் பயனையும் அளிக்காது என்பதோடு உங்கள் மீது அவநம்பிக்கையை தான் ஏற்படுத்தும்!

நான் அன்பை பற்றி நிறைய சிந்திக்கின்ற போது அன்பு என்றால் என்ன என்று ஒரு வரையறை தர எண்ணினேன். அந்த எண்ணத்தின் விளைவாக தோன்றியதுதான் அன்பிற்கான இந்த வரையறை:
தீங்கு நினையா மனமே அன்பு!
தீயது சொல்லா சொல்லே அன்பு!
தீமை செய்யா செயலே அன்பு!
உதவ நினைக்கும் மனமே அன்பு!
ஆறுதல் தரும் வார்த்தைகள் அன்பு!
சேவை புரியும் செயலே அன்பு!
அன்பின் வடிவே ஆண்டவன்!
அதற்கே தினமும் வேண்டவும்!

இந்த வகையில் அன்பைப் புரிந்துகொண்டு நாம் வீட்டிற்கும் நாட்டிற்கும் அன்பை காட்ட முற்பட்டால், வீடும் நாடும் நலமாக இருக்கும் என்று எனக்கு தோன்றியது. இந்த எண்ணங்கள் எனக்குள் புதுப் புனல் போல் தோன்றியபோதிலும், இவையாவும் புதிய விஷயங்கள் ஒன்றும் அல்ல. ஏற்கனவே எண்ணற்ற அறிஞர்கள் சொல்லி விட்டுச் சென்றுள்ளவைத்தான்! இதைப் போல் யார் யார் சொல்லியுள்ளார்கள் என்று நான் தேடுகின்ற போது எவ்வளவோ பேர் என் முன்னால் வருகின்றார்கள்.  காரல்மார்க்ஸ் முதற்கொண்டு  காந்தி வரை, வள்ளுவர் முதற்கொண்டு வள்ளலார் வரை, புத்தர் முதல் கொண்டு பெரியார் வரை, அசோகன் முதல் கொண்டு அம்பேத்கர் வரை வருகிறார்கள். சொல்லப்போனால் சமூக நலனை பொதுமக்கள் நலனை நாடிய எல்லோரும் அன்பைத்தான் பேசியுள்ளார்கள்! சமயவாதிகள் பகுத்தறிவாதிகள் என்று யாரை கவனித்தாலும் அவர்கள் அவரவர் மொழியில், அவர்களுக்கு தெரிந்த விதத்தில் அன்பைத்தான் போதித்துள்ளார்கள் என்பது தெரியவந்தது.

அன்பின் ஆட்சி வீட்டுக்கு சரி நாட்டுக்கு சரியாகுமா என்று பலரும் எண்ணுகிறார்கள். நாட்டில் நடக்கும் எண்ணற்ற அநீதிகளை காணுகின்ற போது அதனை அன்பு வழியினால் திருத்த முடியுமா என்று கேள்வி எழுப்புகின்றனர். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்ட முடியுமா என்று வினவுகின்றார்கள்! கத்தியை காட்டுபவனுக்கு கத்தியால் தான் பதில் சொல்ல வேண்டும், துப்பாக்கியை காட்டுபவனுக்கு துப்பாக்கியால் தான் பதில் சொல்ல வேண்டும் என்ற கருத்துதான் நம்மிடையே ஓங்கி உள்ளது. நமது நாட்டில் அவ்வப்போது அதீத தேசபக்தியும், போர்வெறி எண்ணங்களும் ஊட்டப்படுகின்றன. போர் என்றால் ஏதோ வீர விளையாட்டு போல் எண்ணப்படுகிறது. நமது பழம்தமிழ் இலக்கணங்கள் காதலும் வீரமும் தமிழர் பண்பாடு என்று கூறி போருக்கான இலக்கணத்தை எல்லாம் வகுத்துள்ளன. முந்தைய காலத்தைப் போல் நாம் இப்போது வாளையும் வேலையும் வைத்துக்கொண்டு சண்டை இடுவதில்லை. ஏவுகணைகளையும் அணு குண்டுகளையும் வைத்துக்கொண்டு இன்று நாடுகள் யுத்தம் செய்ய சித்தமாக உள்ளன. இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா ஜப்பான் மீது போட்ட அணுகுண்டின் அழிவு உலகத்தையே உலுக்கிவிட்டது. இனிவரும் யுத்தங்கள் எத்தகைய அழிவுகளை ஏற்படுத்தும் என்று எண்ணிப்பார்த்தால் சித்தம் கலங்கிவிடும். நாமும் மனிதர்கள்தான் அவர்களும் மனிதர்கள்தான். எத்தரப்பினர் அழிந்தாலும் அது ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் மாபெரும் அழிவு தான். ஆதலால் இனி ஒரு யுத்தம் எந்த ஒரு காரணத்திற்கும் உலகின் எந்தப் பகுதியிலும் ஏற்படக் கூடாது என்பதை நாம் மனதில் ஏந்திக் கொள்ள வேண்டும். நாடுகளுக்கு இடையே ஒரு சச்சரவு ஏற்படுகிறது என்றால் அந்த சச்சரவுகான காரணம் என்ன, ஏற்கனவே இருந்த எதார்த்த நிலை என்ன, யார் தவறு செய்துள்ளார்கள், தவறு சரி செய்யக்கூடிய தீர்வு என்ன என்பதை திறந்த மனதுடன் பரஸ்பர விட்டுக்கொடுத்தல் உடன் பேசி தீர்வு காண்பதுதான் பேரழிவு யுத்தங்களை தவிர்ப்பதற்கான வழிமுறையாகும்.

இன்று எங்கு பார்த்தாலும் லஞ்சம் ஊழல் எந்தக் கட்சி ஆட்சி என்றாலும் அதுவே காட்சியாக உள்ளது இன்று மக்கள் வெதும்புகிறார்கள். இவையெல்லாம் அன்பு இல்லாததன் விளைவுதான்! பொதுமக்கள் மீது பொது நலத்தின் மீது பரந்துபட்ட அன்பு இருக்குமானால் மனிதநேயம் இருக்குமானால் அதில் உறுதி இருக்குமானால் இத்தகைய தவறுகள் நடக்காது. காமராஜரும் கம்யூனிச தோழர்களும் ஊழலற்ற ஆட்சி செய்து மக்களுக்கு நன்மை செய்தார்கள் என்றால் அது அவர்களின் அன்பின் உறுதிப்பாட்டை தான் காட்டுகின்றன. அவர்கள் சமூகத்தின் மீதும் மக்களின் மீதும் வைத்திருந்த நேர்மையான அன்பு சுயநலத்தோடு செயல்பட விடாமல் மக்கள் நலனில் அக்கறையோடு செயல்பட வைத்துள்ளன. அத்தகைய நேர்மையான உறுதிமிக்க சமூக அன்பைத்தான் நாம் நமது குணாம்சம் ஆக மாற்றிக்கொள்ள கடும் தவம் செய்ய முற்பட்டு உள்ளோம். நான் நீண்ட காலமாக ஊழல் மயமான சமூகத்தில் வாழ்ந்து பழக்கப்பட்டு விட்டோம். இதிலிருந்து மீண்டு புதிய கலாச்சாரத்தை உருவாக்குவது கடினமான பணிதான். அதற்கு நமக்கு கடினமான புதிய பயிற்சிகள் அவசியமாகின்றன. நாம் நமது உள்ளத்தை நன்கு திருத்தி உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது.

நமது அமைப்பு அன்பு வழியை முன்மொழிந்து உள்ளது. அன்பு வழி என்றால் நமது வழியும் அன்புதான். நமது கொள்கையும் அன்புதான்! இரண்டையும் குறித்து சொல்லத் தான் நாம் அன்பு வழி என்ற பெயரை தெரிவு செய்துள்ளோம். ஆதலால் நாம் அன்பில்லாத கொள்கையையோ திட்டத்தையோ வைத்துக்கொள்ள முடியாது. நமது கொள்கையையும் திட்டத்தையும் சரியானதா என்பதை அளப்பதற்கான அளவுகோல் சமூகத்தின் பால் கொண்ட மக்களின் பால் கொண்ட உறுதியான நேர்மையான பரந்துபட்ட அன்புதான்! மக்களுக்கும் சமூகத்திற்கும் நமது ஒரு செயல் துன்பம் தரும் ஆனால் அது நமது செயல் தவறானது என்பதையே சுட்டிக் காட்டக் கூடியதாகும். அன்பு வழியில் செல்வதற்கு நமக்கு முன்மாதிரிகள் இல்லையே என்று சிலர் நினைக்கலாம். ஆனால் அசோகர் முதல் கொண்டு  மகாத்மா காந்தி வரை அன்புவழி ஆட்சிக்கு முன்னுதாரணங்கள் பலப்பல உள்ளன. நமது மதங்களிலும் தத்துவங்களிலும் அது ஏராளமாய் இருக்கின்றதா. ஆதலால் அன்பு வழி இன்ப ஒளி தரும் என்பது திண்ணம். அதற்கு வேண்டும் நமக்கு நேர்நிலை எண்ணம்! நம்பிக்கையுடன் புதிய பயணத்தை தொடங்குவோம்! அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!
  - என்றும் அன்புடன் விடியல் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பு வழி இன்ப ஒளி 15

தமிழ்நாடு அன்புவழி அறப்பணி மன்றம்

அன்பு வழி இன்ப ஒளி -1