அன்பு வழி பயணம்

அன்புமிக்க நண்பர்களே!
இருட்டு இருட்டு என்று கூறிக் கொண்டிருப்பதை விட ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது சிறப்பு என்று கூறுவார்கள் சான்றோர். நம்மைச் சுற்றிலும் சமூக அநீதிகள் பலவும் நடக்கின்றன. தனி மனிதர்களாக நாம் அதனை தடுப்பதற்கோ,  மாற்றுவதற்கோ சக்தியற்று இருக்கிறோம். ஆதலால், நாம் மௌன சாட்சிகளாக வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளோம்.

தேடிச் சோறு நிதந்தின்று-பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி-கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்-பல
வேடிக்கை மனிதரைப் போலே -நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ? என்று பாடுகிறார் மகாகவி பாரதி.  ஆனால், நாம் அப்படித்தான் விழுந்து கொண்டு இருக்கிறோம்.

நமது சமுதாயம் நல்லவர்களும் கெட்டவர்களும் நிறைந்து காணப்படுகின்றது. நல்லவர்களும் முழு நல்லவர்கள் இல்லை. கெட்டவர்களும் முழு கெட்டவர்கள் இல்லை. மனிதர்களே கடவுள் பாதி மிருகம் பாதி என கலந்து செய்த கலவையாக தான் உள்ளார்கள். எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே! அவர்கள் நல்லவர்கள் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே! என்றொரு பாடல் உண்டு. ஆனால் ஒருவர் தீயவர் ஆவதற்கு அன்னை மட்டுமல்ல. அவரைச் சூழ்ந்துள்ள இந்த சமுதாயமும் பொறுப்புதான்!

'வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;
ஒண்மை இல்லை, பல் கேள்வி ஓங்கலால்' என்கிறார் கவிச்சக்கரவர்த்தி கம்பர். இல்லாமை இல்லாத எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கின்ற ஒரு நல்லதொரு சமுதாயம் அமைந்தால் அங்கு கெட்டவர்கள்  உருவாக மாட்டார்கள்.

எல்லோர் உள்ளும் கொஞ்சமாவது நல்ல அம்சம் இருக்கும்! அன்பு இல்லாதார், அன்பை விரும்பாதார் யாரும் இருக்க மாட்டார்கள். மனிதர்கள் விரும்பும் அன்பு என்பது இறை அம்சம். அன்புதான் இறைவனின் சக்தி. அன்புதான் இவ்வுலகின் வெளிச்சம்! அன்பு தான் பாசம் ஆகிறது; நட்பா ஆகிறது; காதலாகிறது; விசுவாசம் ஆகிறது; சேவையாகிறது; பக்தி ஆகிறது; கருணை ஆகிறது; மனிதநேயம் ஆகிறது; அறம் ஆகிறது. பாசம், நட்பு, காதல், விசுவாசம், பக்தி, கருணை, சேவை, மனிதநேயம், அறம், அனைத்துக்கும் அடிப்படை அன்பு.

இந்த அடிப்படை அம்சம் இல்லாமல் எந்த உயிரும் பிறந்திருக்க முடியாது. ஆதலால் எல்லோர் உள்ளும் இருக்கக்கூடிய நல்ல அம்சமாகிய அன்பை ஒருங்கு திரட்டி ஒரு பெரும் சக்தியாக வளர்த்து அதன்மூலம் எல்லோரும் எல்லாம் பெற்று இன்புறும் நல்லதொரு சமுதாயம் அமைத்திடுவோம். தனிமரம் தோப்பாகாது. தனி மரமாக நின்று குமைந்து குமைந்து உருக்குலைந்து போனது போதும். நாமும் நல்ல சக்திக்கு கைகொடுப்போம். நம்மால் ஒரு பெரும் சக்தி உருவாக நாமும் துணையாய் இருப்போம்.

அன்பு வழியில்  இணைவோம்! அன்பு வழியில் நாம் செல்லும் புதிய பயணம் நாளைய உலகை அன்பு நிறைந்த இன்ப உலகமாக  உருமாற்றம் செய்வதற்கு துணையாக இருக்கட்டும்! 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பு வழி இன்ப ஒளி 15

தமிழ்நாடு அன்புவழி அறப்பணி மன்றம்

அன்பு வழி இன்ப ஒளி -1