சாதியப்பிரச்சனை

அன்புமிக்க நண்பர்களே! சாதிய  ஏற்றத்தாழ்வுகள், மத மோதல்கள் சமுதாயத்தில் ஏற்பட கூடாது என்று நாம் விரும்புகின்றோம். ஆனால் சாதிய உணர்வும், மத நம்பிக்கைகளும் மக்களிடையே உள்ளது என்பதை நாம் மறுத்துவிட முடியாது! நீ அந்த சாதி நான் இந்த சாதி என்று நாம் சொல்லிக் கொண்டே இருக்கின்ற வரை சாதி எப்படி மறையும்! உன் சாதி அது என் சாதி இது என்று நாம் எல்லோரும் மனதில் எண்ணிக் கொண்டும் சொல்லிக்கொண்டும்  இருக்கின்ற வரை சாதி எப்படி மறையும்? ஒடுக்கப்பட்டு விட்டோமே என்று ஒரு பகுதியினர் ஆவேச படுகின்றனர். உயர்ந்திருந்த நம்மை ஒடுத்துகிறார்களே  என்று இன்னொரு பகுதியினர் பொருமுகின்றனர். இருதரப்பிலும் வருத்தங்கள் இருக்கின்றன. இரு தரப்பினருக்கும் உள்ள வருத்தங்களை உணராமல், இரு தரப்பிற்கும் இருக்கக்கூடிய வருத்தங்களை நீக்குவதற்கான இணக்கமான வழிமுறைகளை தேடாமல் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் சாதிய காயங்களை கீறி கீறி ஆறாமல் பார்த்துக்கொண்டே இருந்தால் சாதி என்று தான் மறையும்? நாம் இருதரப்பினரும் பேதங்கள் ஏதுமின்றி அன்புடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதைத்தான் விரும்புகின்றோம்! நாம் நாளைய சமுதாயத்தில் ஆவுது சாதி பேதங்கள் இல்லாத நிலை ஏற்பட என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி ஆராய்வோம்! சாதியை பயன்படுத்துதல் இல்லாமலே எல்லோரும் சமூகம் அரசியல் பொருளாதாரம் எல்லாவற்றிலும் சம அந்தஸ்து பெறுவதற்கு என்ன வழி என்று யோசிப்போம்!  அதனை விடுத்து சாதிய பேதங்களை நாம் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தால் இணக்கமான சூழலுக்கு வழிவகுக்காது! பிணக்கமான நிலையையே  பெருக்கிடும்! நாம் தான் நாளைய சமுதாயத்தின் பொறுப்பாளர்கள் என்று எண்ணிக்கொள்ளுங்கள்! நாம் அப்படிப் பொறுப்பாளர்களாக இருந்தால் என்ன செய்வோம் என்று எண்ணிப்பாருங்கள்! அனாவசியமாக பொதுமக்களிடையே பேதங்களை வளர்த்து அமைதியின்மையை ஏற்படுத்துவது ஏற்புடையதா என்று பொறுப்புடன் எண்ணிப் பாருங்கள்!

அதேபோன்றுதான் மத பிரச்சனைகளும்! நாம் மதச்சார்பின்மை கொள்கையை விழைகின்றோம்!  நமது அமைப்பிற்கு எவ்வித சாதி மத சார்பும் இல்லை என்பதை உறுதியாகச் சொல்லிக் கொள்ள விழைகின்றேன்.

இரு தரப்பையும் ஆராய்ந்து நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்குகின்ற போது, அதனைப் படித்துப் பார்க்காமல் கூட ஒரு தரப்பாக அது சரியில்லை என்று நாம் பேசுவது கண்டிப்பது கூடாது! அன்பு வழியில் அதற்கு ஒரு கருத்து சொல்லப்படவில்லை என்று ஆதங்கப் படுவது ஏற்புடையதல்ல! நாம் வருங்காலத்தில் சாதி மத மோதல்கள்  இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்குவது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறோம்! அதற்காக ஒரு அமைப்பை வலுப்படுத்துவதற்கு முனைந்து கொண்டிருக்கின்றோம்! அதற்காக அனைத்து தரப்பினரையும் அமைப்புக்குள் கொண்டுவந்து அன்பு வழியின் கொள்கைத் திட்டங்களை சொல்லிக்கொடுத்து அதற்கான அகச்சூழல் களை ஏற்படுத்த விழைகின்றோம்! அதற்கு மாறாக அன்றாடும் வரும் நிகழ்ச்சிகள் குறித்து கருத்துக்களைக் கூறி அணிகளுக்கிடையே சாதிமத கருத்து மோதல்களை உருவாக்குவதற்கு நாம் விரும்பவில்லை! அதற்காக இந்த அன்பு வழி எதோ ஒரு பக்கம் சார்ந்து இருப்பதாக அனாவசியமாக ஐயப்பாடு கொள்வது, இது என்ன அன்பு வழி அறவழி என அங்கலாய்ப்பு கொள்வது அவசரத்தில் ஆத்திரத்தில் கொள்ளும் முடிவு என்றுதான் சொல்ல வேண்டும்! இப்படிப்பட்ட சாதி மத கருத்து மோதல்கள் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் சாதி மத அரசியலுக்கு ஆதரவான எதிரான கருத்துக்களை பதிவிட வேண்டாம் என்று அவ்வப்போது கேட்டுக் கொண்டுள்ளோம். அதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் அவ்வப்போது ஏதேனும் ஒரு பதிவை வெளியிட்டு கருத்து மோதல்களை உருவாக்கி இது அன்பு வழியா அற வழியா என்று அங்கலாய்த்து மன சங்கடங்களை உருவாக்குவதால் நமது நோக்கங்கள் சீர்குலைந்து போகவே வழிவகுக்கும் என்பதை நான் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்! இதற்குமேல் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்! அனைவருக்கும் மிக்க நன்றி!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பு வழி இன்ப ஒளி 15

தமிழ்நாடு அன்புவழி அறப்பணி மன்றம்

அன்பு வழி இன்ப ஒளி -1