TAVAM (தவம்) என்ற தமிழ்நாடு அன்பு வழி அறப்பணி மன்றம்


அன்புமிக்க அன்பர்களே! நண்பர்களே! வணக்கம்! 

'மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ?' என்று வினாவினான் மகாகவி பாரதி. ஆனால், நம்மைச் சுற்றிலும் சமூக அநீதிகள் பலவும் நடக்கின்றன. தனி மனிதர்களாக நாம் அதனை தடுப்பதற்கோ, மாற்றுவதற்கோ சக்தியற்று மௌன சாட்சிகளாக வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளோம். அன்பு மற்றும் அற உணர்வுகளும், மனிதநேயமும் குறைந்ததால்தான் மேற்படியான அநீதிகள் நடக்கின்றன. 

தேடிச் சோறு நிதந்தின்று, பல சின்னஞ் சிறுகதைகள் பேசி, மனம் வாடித் துன்பமிக உழன்று, பிறர் வாடப் பலசெயல்கள் செய்து, நரை கூடிக் கிழப்பருவம் எய்தி, கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நாம் வீழ்ந்துகொண்டுள்ளோம். 

நமக்கு எத்தனையோ மகான்கள், மகாத்மாக்கள், சான்றோர்கள், பெரியோர்கள் எல்லாம் அன்பு வழியில் இன்பமாக வாழ நல்வழிகாட்டியுள்ளார்கள். ஆனால், அவற்றையெல்லாம் பின்பற்றாமல் பலரும் தீய செயல்களைப் புரிவதால் சமூக அநீதிகள் நாளும் அறங்கேறிக்கொண்டுள்ளன. 

இருட்டு இருட்டு என்று புலம்பிக் கொண்டிருப்பதை விட ஒரு அகல்விளக்கை ஏற்றி வைப்பது மேலானது என்று கூறியுள்ளார்கள் 

சான்றோர்கள். நல்லதை விரும்பும் நல்லோர் எல்லாம் ஒரு அகல்விளக்கை ஏற்றலாமல்லவா? 

சமுதாயத்தில் அன்பும் அற உணர்வும் தழைக்க ஒரு அகல்விளக்கை ஏற்றலாமல்லவா? 

சமுதாயத்தில் வாய்மையும் நேர்மையும் ஆள ஒரு அகல்விளக்கை ஏற்றலாமல்லவா? 

மானுடமும் சமத்துவமும் நிலைக்க ஒரு அகல்விளக்கை ஏற்றலாமல்லவா? 

அன்பான மானுட சேவையில் மகிழ ஒரு அகல்விளக்கை ஏற்றலாமல்லவா? 

அதற்காகத்தான் - இந்த மன்றம்! 

தமிழ்நாடு அன்பு வழி அறப்பணி மன்றம்! 

வாருங்கள்! சேருங்கள்! 

அன்பு வழியில் நல்லதொரு சமுதாயம் அமைப்போம்! --

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தன்னொழுழுக்கம்! தற்சார்பு! தன்னாட்சி! 

தமிழ்நாடு அன்புவழி அறப்பணி மன்றம், 

பதிவு எண்:151/2020 

தாய் தன் குழந்தைக்கு எவ்வித துன்பமும் நேராமல் இருக்க வேண்டுமென்று கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வருகிறார். அதற்கு காரணம் என்ன? அந்த தாய் தன் குழந்தையின் மீது கொண்டுள்ள மாறாத அன்பு! அந்த தாய் அந்தக் குழந்தைக்கு சிறு துன்பமும் ஏற்படுத்த நினைப்பாரா? நிச்சயமாக நினைக்க மாட்டார். அதுதான் அன்பு. 

பாசம், நேசம், நட்பு, காதல், பரிவு, பற்று, நன்றி என அன்பின் வடிவங்கள் பலப்பல. எந்த வகையான அன்பாக இருப்பினும் அன்பு கொண்ட ஒருவர் தனது அன்பிற்குரியவருக்கு துன்பம் நினைக்க மாட்டார். இயன்ற வரையிலும் நன்மைதான் செய்ய விரும்புவார். 

மேற்படியான சில வகையான அன்பை சிலர் மீது மட்டும் கொண்டுள்ளதோடு எல்லா மனிதர்கள் மீதும் அன்பு வைத்தால் சக மனிதர்களை துன்புறுத்தும் எண்ணம் ஏற்படாது அல்லவா? எல்லோருக்கும் நன்மை செய்யும் எண்ணம் மட்டுமே மேலோங்கி நிற்கும் அல்லவா? 

அன்பில்லாத இடத்தில் தானே எல்லாவிதத் தீமைகளும் தோன்றுகின்றன. எல்லோரும் எல்லோரிடமும் அன்பு கொண்டால், எல்லோருக்கும் நன்மை செய்வதை மட்டும் தவமாகக் கொண்டால், தீமை மறைந்துவிடும் அல்லவா? 

புத்தன், இயேசு, காந்தி போன்றோர் எல்லாம் அன்பு வழியைத் தானே காட்டினார்கள்? அன்பே தெய்வம் என்று தானே எல்லா மகான்களும் கூறியுள்ளார்கள். மகாத்மா காந்தியின் ஆத்ம பலமிக்க அன்பு வழி போராட்டம் தானே அரக்க குணத்தவரையும் இறங்கி வர வைத்தது. 

நாமும் அந்த அன்பு வழியில் புதிய பயணத்தை தொடங்குவோம். 

அகத்திலும், புறத்திலும், சொல்லிலும், செயலிலும், வாழ்விலும் அதன் வழியிலும் அன்பு வழியைப் பின்பற்றி வீட்டிற்கும் நாட்டிற்கும் இன்ப ஒளியை ஏற்றுவோம். 

 அன்பின் உயர்ந்த வடிவம் பிறருக்கு உதவும் சேவையாகும்.. ஏற்றத்தாழ்வுள்ள சமுதாயத்தில் சேவையின் அவசியம் மிக அதிகம். சேவை செய்தால் கடவுள் உங்கள் அருகில் வருவார் எனவும், இரு கை கூப்பி கடவுளை வணங்குவதை விட ஒரு கை நீட்டி பிறருக்கு உதவி செய்வது மேல் எனவும் கூறுகிறார் அன்னை தெரசா. 

ஏழை எளியவர்கள் படும் துன்ப துயரங்களைக் கண்டு எவர் உள்ளம் கசிந்து உருகுகிறதோ, அவர்களுக்கு சேவை செய்யும் எண்ணம் எவருக்கு உண்மையாக ஏற்படுகிறதோ அவரே உண்மையான தேச பக்தர் எனக் கூறுகிறார் சுவாமி விவேகானந்தர். 

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என வாழ்ந்து காட்டியவர் மகாத்மா காந்தியடிகள். இவை யாவும் சேவையின் அருமையை விளக்குபவை ஆகும். ஆதலால், தமிழகம் முழுவதும் அன்பு வழியில் அறப்பணிகள் செய்வதற்காக இம்மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. 

 அ. மன்றத்தின் நோக்கம் மற்றும் குறிக்கோள்கள்:

து ஒரு சமூக வாழ்வியல் அமைப்பு. சாதி, மதம் மற்றும் அரசியலுக்கு அப்பாற்பட்டது. காந்திய வழியில் ஒரு புதிய பயணம். அன்பு வழியில் வாழ்வதற்கு போதனையையும், பயிற்சியையும் வழங்கி, சமுதாயத்தின் வறுமை, வேலையின்மை, வளர்ச்சியின்மையைப் போக்க, இலஞ்ச, ஊழல், மது போன்ற சமூக தீமைகளைக் களைய, சமூகத் தேவைகளை நிறைவு செய்ய, சமூக ஒற்றுமை மற்றும் சமூக நீதியை நிலைநாட்ட, இயற்கை வளங்களையும், சுற்றுச் சூழல்களைப் பாதுகாக்க நற்பணிகள் பற்பல செய்ய வேண்டும் என்பது இம்மன்றத்தின் நோக்கம் ஆகும். 

ஆ. காந்திய வழியில் மூன்று இலக்குகள்: 

1. தன் ஒழுக்க சமுதாயம்: 

மகாத்மா காந்தி அவர்கள் சத்தியத்தையும் அகிம்சையையும் போற்றினார். அவை அன்பும் அறமும் ஆகும். நல்லதொரு சமுதாயம் அமைவதற்கு அன்பையும் அறத்தையும் அடிப்படையாகக் கொண்ட தன்னொழுக்க சமுதாயம் முதன்மையான அவசியமாகும். நாடு எவ்வளவு வளமுடன் இருந்தாலும் தன் ஒழுக்கம் இல்லை என்றால் அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படாது. வெறுப்பு, கோபம் போன்ற உணர்வுகள் தான் பல துன்பங்களுக்கு காரணமாக உள்ளன. அவ்விடத்தில் அன்பையும் அறத்தையும் வைத்துவிட்டால் இன்பமே ஏற்படும். ஆதலால் தன்னொழுக்க சமுதாயம் ஏற்படுவதற்கான நற்போதனைகளையும், பயிற்சிகளையும் மக்களுக்கு வழங்குவதை இம்மன்றம் முதன்மை அறப்பணியாக கொண்டுள்ளது. 

2. தற்சார்பு பொருளாதாரம்: 

மகாத்மா காந்தி அவர்கள் முன்வைத்த தற்சார்பு பொருளாதாரம் கிராமத்தையும், கிராமத் தொழில்களையும் அடிப்படையாகக் கொண்டதாகும். மனித குல முன்னேற்றத்திற்கு அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினாலும், அவற்றை மக்களை வறுமை வேலையின்மைக்கு தள்ளக்கூடிய அளவிற்கு பயன்படுத்தாமல், மனிதனின் பேராசைக்காக இயற்கை வளங்களை அழிக்காமல் எல்லோரும் எல்லாம் கிடைக்க பெற்று எளிமையான வாழ்வு வாழ்தலை வலியுறுத்தியதாகும். அதன்படி எல்லோருக்கும் கல்வி, வேலை, வருமானம் கிடைக்கக் கூடிய அளவிற்கு தற்சார்பு பொருளாதாரம் ஏற்படப் பாடுபடுவது இம்மன்றத்தின் முக்கிய பணியாகும். 

3. தன்னாட்சி அரசியல்: 

மகாத்மா காந்தி அவர்கள் மக்களை அதிகாரப்படுத்துவதின்மூலம் கிராம குடியரசுகள் ஏற்படுத்துவதையும், அதிகாரங்களும், நிதியும் மேலிருந்து கீழ் வருவதற்கு மாறாக, கீழிருந்து மேல் செல்வதற்கு ஏதுவான அரசியல் அமைப்பு ஏற்படுவதையும் வலியுறுத்தினார். தற்போது உள்ளாட்சி நிர்வாகம் ஏற்பட்டுள்ள போதிலும், உரிய அதிகாரங்களும், நிதி ஆதரவும் இல்லாத நிலையில் வாசமில்லா மலராகவே காட்சி தருகின்றன. மகாத்மா காந்தி கனவு கண்ட மக்களை அதிகார படுத்துவதற்கான உண்மையான தன்னாட்சி உள்ளாட்சி செயல்படுவதற்கான அரசியல் அமைப்பு ஏற்படுவதற்கு பாடுபடுவதை மூன்றாவது இலக்காக இம்மன்றும் கொண்டுள்ளது. 

அ. 7 வித திட்டப் பணிகள்: 

1. தன்னொழுக்க சமுதாயம் ஏற்படுவதற்காக அன்புவழி நல்வாழ்வு பயிற்சியளித்தல்; 

2. மாணவர்களுக்கு படைப்பாற்றல், தலைமைத்திறன் மற்றும் பண்பாட்டு பயிற்சி அளித்தல்; 

3. இளைஞர்களுக்கு தொழிற்திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல்; 

4. மகளிர் விழிப்புணர்வு மற்றும் குழந்தைகள் நலப் பயிற்சி அளித்தல்; 

5. சட்ட விழிப்புணர்வு பயிற்சி மற்றும் ஆலோசனை அளித்தல்; 

6. சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணி செய்தல்; 

7. நல்ல கலை இலக்கியங்கள் வளரப் பாடுபடுதல். 

மேற்படியான அன்பு வழி அறப்பணிகளைத் தொடர்ந்து சமுதாயத்தில் முன்னெடுப்பதை இம்மன்றம் திட்டமாகக் கொண்டுள்ளதின் மூலம் சமூக மேம்பாட்டுக்கு பாடுபடுதலை மக்களுக்கு உறுதிப்படுத்துகிறது. 

அன்பால் இணைவோம்! 

தொண்டால் மகிழ்வோம்! 

ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்! 

இயற்கையைக் காத்து இன்புற்று வாழ்வோம்! 

******************************************************************* 

ன்பே தெய்வம் 


https://youtu.be/VGwHRgKCRk0?si=QJ11tb0YyxEY3jNZ


தீங்கு நினையா மனமே அன்பு! 

தீயது சொல்லா சொல்லே அன்பு! 

தீமை செய்யா செயலே அன்பு! 

உதவ நினைக்கும் மனமே அன்பு! 

ஆறுதல் தரும் வார்த்தை அன்பு! 

சேவை புரியும் செயலே அன்பு! 

அன்பின் வடிவே ஆண்டவன்! 

அதற்கே தினமும் வேண்டவும்! 

அன்பாய் இருக்கப் பழகினால் 

அத்தனை மனமும் விரும்புமே! 

உன்னைப்போலே பிறரையும் நினைத்தால்

எல்லா உள்ளமும் வாழ்த்துமே! 

எண்ணம் சொல் செயலாலே 

யாருக்கும் துன்பம் செய்யாதே! 

இயன்றால் நன்மை செய்திடுவாய்! 

இல்லையென்றால் வாழ்த்திடுவாய்! 

அன்பே தவமாய் வாழ்ந்திட்டால்  

உலகே அன்பு மயமாகும்! 

உலகே அன்பாய் மாறிவிட்டால்  

கலகம் எல்லாம் தீர்ந்துவிடும்! 

எடுப்பாரில்லை கெடுப்பாரில்லை! 

எல்லாம் எல்லாம் பெற்றிடுவார்! 

அடிப்பாரில்லை வெடிப்பாரில்லை! 

ஆனந்தம் மட்டும் கண்டிடுவார்! 

அன்பு சேவை இரண்டுந்தான் 

அகிலமெல்லாம் தேவைதான்! 

இயன்ற மட்டும் செய்திடு! 

இவ்வுலகில் என்றும் வாழ்ந்திடு! 


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


அன்பு வழியில் இணைய: 

https://surveyheart.com/form/64f93d4f58c7e63c9d6ea5fa

அன்புவழியை அறிய: இணையப் பக்கம்: 

https://anbuvazhiinbaoli.blogspot.com/?m=1 

யூடுயூப் சேனல்: தவம்: 

https://www.youtube.com/@tavam212

மன்ற நிறுவனர்: சிற்பி. திரு. கோ. வேலாயுதம், மேனாள் இயக்குனர், நேரு இளைஞர் மையம். மன்ற 

மாநிலத் தலைவர்: பேராசிரியர் திரு. வெ. சுகுமாரன்: 94431 94496; 

மன்ற மாநிலச் செயலாளர்: திரு. G. இராமலிங்கம்: 94438 58911; தலைமை அலுவலகம்: 183/4, இராமமூர்த்தி நகர், காடையாம்பட்டி வட்டம், மாவட்டம் சேலம் மாவட்டம்,; அ. கு. எ. 636354; தொடர்பு எண்: 94438 58911; 

நாமக்கல் மாவட்ட அலுவலகம்: 14, பி.எஸ்.டி. வளாகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலக சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதி, நாமக்கல். அ. கு. எ. 637003. தொடர்பு எண்: 8825560313 (விடியல் குகன் (எ) கு. கருணாநிதி, மேனாள் மாவட்ட நீதிபதி, மாநில இணைத்தலைவர், நாமக்கல்.) 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பு வழி இன்ப ஒளி 15

தமிழ்நாடு அன்புவழி அறப்பணி மன்றம்

அன்பு வழி இன்ப ஒளி -1