அறப்பணியில் அப்துல் கலாம் 15.10.2020
அறப்பணியில் அப்துல் கலாம்
15.10.2020
அறப்பணி நாளும் தொடரட்டும்!
அற்புதம் எங்கும் மலரட்டும்!
பொற்பதம் மண்ணில் பூக்கட்டும்!
இப்புவி போற்றி வணங்கட்டும்!
கலாம் கலாம் சலாம் சலாம்!
கல்வி சேவை தொடங் கலாம்!
கலாம் கலாம் சலாம் சலாம்!
காலம் எல்லாம் உழைக் கலாம்!
உறக்கத்தில் வருவது அல்ல கனவு!
உறங்க விடாது உண்மை கனவு!
உந்தன் உள்ளே இருக்குது சிறகு!
விரித்து அசைத்து பறந்து பழகு!
கலாம் கலாம் சலாம் சலாம்!
கனவுகளை நனவாக் கலாம்!
கலாம் கலாம் சலாம் சலாம்!
காலம் உன்னை வணங் கலாம்!
பிறப்பு என்பது சம்பவம்!
இறப்பு ஆகணும் சரித்திரம்!
உனக்கும் வரலாற்றில் ஒரு பக்கம் இருக்கு!
உலகம் படிப்பது உன் கையில்தான் இருக்கு!
கலாம் கலாம் சலாம் சலாம்!
அன்பை எங்கும் நிறைக் கலாம்!
கலாம் கலாம் சலாம் சலாம்!
ஆனந்தம் அமைதி படைக் கலாம்!
---------
இந்த அப்துல் கலாம் பிறந்த நாள் சந்திப்பில்
சங்கமித்துள்ள அன்பர்கள் அனைவருக்கும்
அன்பான வணக்கம் என்று
ஒரு வரியில் சபை வணக்கம் கூறி
பேசுபொருள் குறித்து பேச விழைகின்றேன்!
யாரும் இதற்காக வருந்தாமல்
பொருத்தருள வேண்டுகிறேன்.
எப்போதும் பேச வேண்டிய பொருளுக்கு
முக்கியத்துவம் அளிக்கும் அதே நேரம்
நேர நிர்வாகத்திலும் அக்கறை கொண்டவன் நான்;
ஆதலால், இன்றைய உரையை
15 நிமிடத்திற்குள் முடித்துக்கொள்வேன்
என்று உறுதி கூறுகிறேன்!
யாருக்கும் பதறலோ, உதறலோ வேண்டாம்!
ஒருவேளை ஓரிரு நிமிடம் முன் பின் ஆகலாம்!
ஆனால் தேவைக்கு அதிகமாக ஒரு வார்த்தை கூட பேச மாட்டேன்
என்பதை உறுதியாகக் கூறுவேன்!
------
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்!
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்!
------
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பார் யார்?
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்!
------
பாசம் உள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறார்;
கருணை உள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கின்றார்;
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே!
ஒரே ஒரு புன்னகையில் கண்டானே!
------
இந்த பாடல்களுக்கெல்லாம் இலக்கணமாக திகழ்ந்தவர்
மக்கள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள்!
-------
உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும்
சேராதியல்வது நாடு! - என்று
நாட்டிற்கு இலக்கணம் கூறுகிறார் திருவள்ளுவர்.
வல்லரசு நாடு - வலிமையான நாடு - வளர்ந்த நாடு
என்பது எல்லாம் இதுதான்!
நாட்டில் பசியால் வாடும் மக்கள் இருக்கக்கூடாது!
பிணியால் நோகும் மக்கள் இருக்கக்கூடாது!
கொடும் பகை நாட்டை சூழ்ந்து இருக்கக்கூடாது!
பசி, பிணி, பகை மூன்றும் இல்லாமல்
இருந்தால்தான் வலிமையான நாடு!
பசியால் வாடும் மக்களை எல்லாம் கொன்று விடுவது,
பிணியால் நோகும் மக்களையெல்லாம் கொன்றுவிடுவது!
ஹீரோசீமா, நாகாசாகியில் அணுகுண்டுகளைப் போட்டதுபோல் போட்டு
சூழ்ந்துள்ள நாடுகளையெல்லாம் அழித்து விடுவது!
இதுவா வல்லரசு!
இப்படிப்பட்ட நாடாக்குவதா அப்துல் கலாம் அவர்களின் கனவு!
அப்துல் கலாம் கண்ட வல்லரசு கனவு அதுவல்ல!
பகுத்துண்டு பல்லுயிர் ஓப்புதல் நூலோர்
தொகுத்தவற்றுல் எல்லாம் தலை என்று
உயிர்களை காப்பதுதான்
நூலோர் சொல்லியுள்ள எல்லாவற்றிலும்
சிறந்தது என்கிறார் திருவள்ளுவர்.
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல் என்று
எக்காரணத்தாலும் விடாது
செல்லுமிடமெல்லாம் அறம் செய்க
என்கிறார் திருவள்ளுவர்.
அப்துல் கலாம் அவர்கள் நாட்டை வல்லரசாக்க
சுட்டிக் காட்டியதெல்லாம் அறப்பணிகளைத்தான்!
அணுகுண்டுகளைப்போட்டு மிரட்டி
உலக நாடுகளையெல்லாம் ஆக்ரமித்து
அடிமைபடுத்தி உலக சர்வாதிகாரி ஆவதை
வல்லரசுக்கான திட்டமாகக் கூறவில்லை.
அவரின் தொலை நோக்கு 2020ல்
என்ன சொல்கிறார் தெரியுமா?
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை
இரட்டிப்பாக்குவதற்குாிய நிலை மற்றும்
அதற்குாிய திறன் மேம்பாடு,
இயற்கை வளம், மனிதவளம் மற்றும்
மனிதவளத்தின் இணைந்த செயல்பாடு
ஆகியவை வளர்ந்த இந்தியாவாக
வல்லரசாக மாற்றுவதற்கான வழி என்கிறார்.
1. தற்போதைய வேளாண் விளைச்சல் மற்றும்
உணவு உற்பத்தியை இரட்டிப்பாக்குதல்;
2. நகர்ப்புற வசதிகளுக்கு இணையாக கிராமப்புறங்களிலும்
மின்சார வசதி ஏற்படுத்துதல் மற்றும்
சூாிய சக்தி நடவடிக்கைகளை அதிகப்படுத்துதல்;
3. மக்களுக்கு கல்வியறிவு, சுகாதாரம் மற்றும்
சமூக பாதுகாப்பிணை உறுதிபடுத்துதல்;
4. தொலைதொடர்பு தொழில்நுட்பத்தின் வாயிலாக
பின்தங்கிய பகுதிகளுக்கு கல்வியறிவு
சுகாதாரம் சார்ந்த சேவையை வழங்குதல்;
5. அணு தொழில்நுட்பம், விண்வெளி தொழில்நுட்பம் மற்றும்
பாதுகாப்பு தொழில்நுட்பம் சார்ந்து வியூகம் வகுத்தல்;
6. வறுமை மற்றும் வேலையின்மையைக் குறைத்தல்;
7. ஊடகம் மற்றும் சமூக வலை தளங்களின் வாயிலாக
சமூக குழுக்களுக்கு கல்வியறிவு வழங்குதல்;
8. இந்திய உற்பத்திப் பொருள்களைப் பயன்படுத்துவதன் வாயிலாக
இந்திய நாணய மதிப்பு விகிதத்தை மேம்படுத்துதல்;
இவ்வாறான பணிகளை நிறைவேற்றுவதின் மூலமாக
1. நகர்ப்புறம் - கிராமப்புறம் என்ற வேறுபாடுகளைக் களைந்து
நாட்டிலுள்ள அனைத்து பகுதிகளும் வளர்ச்சியடைய செய்ய இயலும் எனவும்,
2. ஆற்றல் மற்றும் தரமான நீாினை போதுமான அளவு
சமமாகக் கிடைக்க உறுதி செய்ய இயலும் எனவும்,
3. விவசாயம், தொழில் மற்றும் சேவைத்துறை ஆகியவை
இணைந்து இணக்கமாக செயல்படும் எனவும்,
4. நல்ல மதிப்பீட்டு முறையிலான கல்வி
சமூக பொருளாதார பாகுபாடு காரணமாக
எந்த ஒரு மனிதர்களுக்கும் மறுக்கப்படும் நிலை இருக்காது எனவும்,
5. இந்தியாவில் உள்ள அனைத்துக் குடிமக்களுக்கும்
சுகாதார வசதிகளை ஏற்படுத்தித் தரும் எனவும்,
6. வெளிப்படையான மற்றும் ஊழல் இல்லாத தன்மையை
நிலைநாட்டுவதற்கு அரசு முன்வரும் எனவும்,
7. வறுமை ஒழியும் எனவும்,
8. கல்வியறிவின்மை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு
எதிரான குற்றங்கள் களையப்படும் எனவும் கூறியுள்ளார்.
--------
இப்படித்தான் இந்தியா 2020ல்
வலிமை வாய்ந்த வளர்ந்த நாடாக ஆகிவிடும் என
அப்துல் கலாம் அவர்கள் கனவு கண்டார்!
அவர் கண்ட கனவை எல்லோரையும் காணச் சொன்னார்.
இன்று நாம் 2020ன் கடைசி கட்டத்தில் இருக்கிறோம்!
அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகென்று பெயருமிட்டால்
அந்த சாமி சிரிக்கும்! இந்த பூமி சிரிக்கும்!
என்ற நிலையும்,
புன்செய் உண்டு நன்செய் உண்டு
பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லை!
பாரதத்தின் சோத்து சண்டை தீரவில்லை!
இது நாடா? இல்லை வெறும் காடா?
கேட்டுச் சொல்லு தோழா!
என்ற நிலையும் இன்னும் மாறவில்லை!
ஏன்?
அப்துல் கலாமைப் போலவே அவருக்கு வெகு காலம் முன்பாகவே
மாமேதை லெனின் அவர்களும் கனவு காணுங்கள் எனக்கூறியுள்ளார்.
அவர் வெறும் கனவு மட்டும் காணச் சொல்லவில்லை!
அதை நனவாக்க ஒரு அமைப்பையும் கட்டமைத்தார்!
அதனால்தான் அவரால் கனவை நனவாக்க முடிந்தது!
ஆனால், அப்துல் கலாம் அவர்கள்
அமைப்பு எதனையும் ஏற்படுத்தவில்லை!
எண்ண விதைகளை இதயங்களில் தூவிவிட்டால்
சமுதாயம் செழித்து வளர்ந்துவிடும் என எண்ணிவிட்டார்!
சமூக மாற்றம் ஏற்படுவதற்கு அமைப்பு என்ற செவிலித்தாய்
அவசியம் என்பதை இந்த 20 ஆண்டு காலம் மெய்பித்து உள்ளது.
அப்துல் கலாம் பெயரில் இன்று ஆயிரக்கணக்கான
மன்றங்களும், இயக்கங்களும் உருவாகியுள்ளன.
ஆனால், அவை யாவும் தனித்தனியாக
அவற்றால் இயன்றவற்றை செய்துகொண்டுள்ளன.
அவைகளுக்குள் ஒருங்கிணைப்பு ஏதுமில்லை!
ஒருமித்த செயல்பாடு எதுவுமில்லை!
தனி மரம் தோப்பாக்காது!
தனித்தனியான செயல்பாடும்
பெரிதான சமூக மாற்றத்தை ஏற்படுத்தாது!
சிறு துளி பெருவெள்ளம் என்பார்கள்!
உண்மைதான்!
ஆனால், ஒவ்வொரு சிறுதுளியும்
ஒன்றாக சேர்ந்தால்தான்
பெருவெள்ளம் ஏற்படும்!
ஆதலால், ஒரே நோக்கத்தில் ஒரே கொள்கையில்
ஒரே செயல் திட்டத்தில் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்!
அப்போதுதான் காணுகின்ற கனவு நனவாகும்!
சமூக மாற்றம் என்பது சாத்தியமாகும்!
சரியான கொள்கை, சரியான திட்டம் இல்லாமல்
இலட்சம் பேர் ஒன்றாக திரண்டாலும்
பெரிதாக ஒன்றும் சாதிக்க இயலாது!
அதே சமயம் சரியான கொள்கை, சரியான திட்டத்தோடு
1000 வீரர்கள் ஒருங்கிணைந்து நின்றால் போதும்
நிச்சயமாக நினைத்ததை சாதிக்கலாம்!
வலுவான அமைப்பு ஒன்று இருந்தால்தான்
வலுவான நாட்டை கட்டமைக்கமுடியும்!
இல்லையென்றால் தொலை நோக்கெல்லாம்
தொடுவானமாகத்தான் தோன்றும்!
அதனைத் தொடவேண்டுமென்றால்
ஒரே நோக்கில் ஒருங்கிணைந்து செயல்பட
வலுவான அமைப்பு ஒன்று வேண்டும்!
அப்படியான அமைப்பாக
நமது தமிழ்நாடு அன்பு வழி அறப்பணி மன்றம்
செயல்படும்!
தமிழகத்தின் எல்லாக் கிராமங்களிலும், நகரங்களிலும்
ஒரே அமைப்பாக மலர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு,
அன்பு வழியில் அறிவொளி ஏற்றி அறப்பணிகள் புரிந்து
மக்கள் மனதில் என்றும் நீங்காத இடம் பிடித்து,
அபதுல் கலாம் அவர்களின் கனவுகளை நனவாக்கும்!
அவரின் தொலைநோக்கை தொட்டுவிடும் கோடாக்கும்!
அன்பு வழி என்ற நான் சொல்வதை
சம்பிரதாயமாக சொல்லும் ஏதோ அர்த்தமற்ற வார்த்தை என்று
எண்ணிக்கொள்ளாதீர்கள்!
அன்பு வழி என்பது உண்மையானது;
அர்த்தமுள்ளது; அவசியமானது!
அன்புதான்
சமூகத்திற்காக பாடுபடும் நோக்கம் கொண்ட
ஒவ்வொருவருக்கும் அவசியமான
உண்மையையும், நேர்மையையும், ஒற்றுமையையும் வழங்கும்!
நாம் எல்லோரும் அன்புள்ளவர்களாக மாறிவிட்டோம் என்று
நான் சொல்லவில்லை!
ஆனால், நாம் மாறவேண்டும்!
நாம் உண்மையாக இந்த சமுதாயத்தை மாற்ற வேண்டுமானால்
நாம் ஒவ்வொருவரும் அன்புள்ளவர்களாக மாறவேண்டும்!
புத்தரைப்போல், இயேசுவைப்போல், காந்தியைப்போல்
மாறவேண்டும்!
அதற்கான பயிற்சியை நாம் பெற வேண்டும்!
அதற்கான பயிற்சியை உருவாக்க வேண்டும்!
அதனை மக்களுக்கும் வழங்க வேண்டும்!
மக்கள் அனைவரின் உள்ளத்திலும்
அன்பும், உண்மையும், நேர்மையும் உருவாகிவிட்டால்
நாம் விரும்பும் சமுதாயம் உருவாகும்!
நாம் இந்த சமுதாயத்திற்கு அறிவொளி பாய்ச்சவேண்டும்!
சமூக விழிப்புணர்வு, சட்ட விழிப்புணர்வு,
மகளிர் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு,
உடல்நல விழிப்புணர்வு என பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி,
நாம் இந்த சமுதாயத்திற்கு அறிவொளி பாய்ச்சவேண்டும்!
நாம் வெறும் வாய்பேச்சு வீரர்களல்ல!
களத்தில் இறங்கி உடல் திறத்தாலும், உள்ள உரத்தாலும்
பாடுபடும் உண்மை வீரர்கள்தான்!
ஊருக்கு தேவையான நன்மைகள் செய்வோம்!
சீமை கருவேல மரங்களையேல்லாம் வெட்டி விறகாக்குவோம்!
காலி இடங்களையெல்லாம் மரங்கள் நட்டு சோலை வனமாக்குவோம்!
ஏரி குளங்களையெல்லாம் தூர் வாரி, என்றும் நீர் பெருக, ஏற்ற செயல் புரிவோம்!
இயற்கை விவசாயமும், ஏற்புடைய தொழிலும் செய்து நாட்டை வளமாக்குவோம்!
அப்துல் கலாம் அவர்கள் நாட்டை வலிமையுடையதாக்க வளமுடையதாக்க
சொன்ன அறப்பணிகளையெல்லாம் சிறப்பாக செய்து முடிப்போம்!
அன்பு வழி என்பது சிறிது காலத்திற்கு முன்பு
ஒரு உள்ளத்தில் விதையாக விழுந்தது!
ஒரு விதைக்கு காற்று மண் மழை எல்லாம் உதவியாக இருப்பதுபோல்
இன்று அன்பிற்கு நட்பு, அறிவு, அறம் எல்லாம் துணையாகிவிட்டது.
விதை முளைத்து சிறு செடியாக வளர்ந்துள்ளது!
இன்று தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கானோர்
அன்பு வழி அன்பு வழி என சொல்லும் நிலை வந்துவிட்டது!
இந்த செடி இன்னும் இன்னும் வளர்ந்து
கிளை பரப்பி, மரமாகி திறமாகி, பூத்து காய்த்து கனிந்து
உலகை இன்பமடையச்செய்யும் என்பது திண்ணம்!
நமது அமைப்பு இன்னும் 10 ஆண்டுகளில்
இந்நாட்டை வலிமையுடையதாக வளர்ச்சி பெற்றதாக
மாற்றும் என்பது திண்ணம்!
அன்பு மிக்க அன்பர்களே!
குறித்துக்கொள்ளுங்கள் இந்நாளை!
நமது தமிழ்நாடு அன்பு வழி அறப்பணி மன்றம்
இன்னும் பத்தாண்டுகளில்
தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும்!
இது உறுதி!
இந்த நம்பிக்கையை உறுதியை ஊக்கத்தைப் உங்களிடம் பதிவு செய்து
எனக்கு எழுச்சியுரையாற்ற வாய்ப்பளித்த நல்ல உள்ளங்களுக்கும்,
இவ்வளவு நேரமும் அமைதியாக செவி மடுத்த அன்பு நெஞ்சங்களுக்கும்
அன்பான நன்றியை தெரிவித்து எனது எழுச்சியுரையை
நிறைவு செய்து விடை பெருகின்றேன்!
நன்றி! வணக்கம்!
--------------------
கருத்துகள்
கருத்துரையிடுக