மகாத்மாவின் 150 ஆவது ஆண்டு நிறைவு விழா - 02.10.2020

 மகாத்மாவின் 150 ஆவது ஆண்டு

நிறைவு விழா - 02.10.2020

அன்பு வழியில் புதிய பயணம்!
அறிவு ஒளி ஏற்றும் வண்ணம்!
அறப்பணி ஆற்றும் எண்ணம்!
அகிலத்தை வெல்வது திண்ணம்!

மகாத்மாவின் 150 ஆவது ஆண்டு
நிறைவு விழா!
மன்ற கிளைகளின் மகத்தான
துவக்க விழா!
மாணவர்கள் போட்டிகளின்  
பரிசளிப்பு விழா!
முப்பெரும் விழாவெனும்
அற்புத திருவிழா!

நவ இந்திய நிர்மானிகள் இயக்கம்!
ஊருக்கு பத்து பேர் இயக்கம்!
தமிழக இலட்சியக் குடும்பம்!
நமது வேலாயுதம் ஐயா படைத்த இயக்கம்!
எல்லாம் தோற்றுவிட்டதாக ஒரு மயக்கம்!
இனி என்ன இயலும் எனக் கலக்கம்!
ஆனால் இது
புதைத்தாலும் விதையாகும்!
சிதைத்தாலும் அணுவாகும்!
ஆறு மாதத்திற்குள் விளைந்துள்ள அற்புதம்!
அத்தனையும் எங்கள் வேலாயுதம் ஐயாவிற்கு
சமர்ப்பணம்!

மகாத்மாவின் 150 ஆவது ஆண்டு
நிறைவு விழா சந்திப்பில் இணைந்துள்ள
அனைவருக்கும்,  
எனது நன்றி கலந்த காலை வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்நாள் ஓர் இனிய நாள்!
தமிழ்நாடு அன்பு வழி அறப்பணிகள் மன்றத்தின்
கிளைகள் பலவும் துவக்கப்படும்
இந்நாள் ஓர் இனிய நாள்!
வரலாற்றில் பொன்னெழுத்துக்களால்
பொறிக்கப்படக்கூடிய நாள்!
இது உயர்வு நவிர்ச்சி அல்ல!
சத்தியமான உண்மை!

ஒரு பழைய திரைப்படப்பாடல்!
அதில் ஒரு விடுகதை!
அந்த விடுகதைக்கு மூன்று பேர்
விடை சொல்கிறார்கள்!
முதலாமவர் நாகேஷ்!
இரண்டாதவர் கே.ஆர். விஜயா!
மூன்றாமர் ஜெய் சங்கர்!
இப்போது உங்களுக்கு படமும் பாடலும்
நினைவிற்கு வந்திருக்கும்!
அந்த விடுகதை என்ன?
அதை பிறகு சொல்கிறேன்!
அவர்கள் சொன்ன விடையை முதலில் பார்ப்போம்!
நாகேஷ் சொல்லும் விடை வட்டி!
கே.ஆர். விஜயா சொல்லும் விடை காதல்!
ஜெய்சங்கர் சொல்லும் விடை தாய்மை!
சரி! இப்ப அந்த விடுகதைக்கு வருவோம்!
என்ன விடுகதை?
உலகத்தில் சிறந்தது எது?
ஓர் உருவம் இல்லாதது எது?
ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு நாட்டிலும்
அனுபவமாவது எது?

வட்டி உருவம் இல்லாதது,
ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு நாட்டிலும்
அனுபவமாவது!
காதல்  உருவம் இல்லாதது,
ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு நாட்டிலும்
அனுபவமாவது!
தாய்மை  உருவம் இல்லாதது,
ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு நாட்டிலும்
அனுபவமாவது!
மேற்படி இரண்டு நிபந்தனையும்
மேற்படி மூன்றுக்கும் பொறுந்தக்கூடியதாக உள்ளன.
மூன்றாவது நிபந்தனைதான் முடிவை நிர்ணயிப்பது!
அது என்ன?
உலகத்தில் சிறந்தது எது?
மேற்படி மூன்றிலும் உலகத்தில் சிறந்தது எது?
வட்டிக்கும் காதலுக்கும் நாகேஷும் கே.ஆர். விஜயாவும்
எவ்வளவோ வாதங்களை முன் வைத்துள்ளனர்.
ஆனால், ஜெய்சங்கர் என்ன சொல்கிறார்?

உள்ளே உயிர் வளர்த்து…
உதிரத்தால் பால் கொடுத்து
அள்ளி இடும்போதெல்லாம்…
அன்பையே சேர்த்தெடுத்து
தொல்லை தனக்கென்றும்
சுகமெல்லாம் உனக்கென்றும்
சொல்லாமல் சொல்லிடும்                          
தேவதையின் கோவிலது
பண்பு தெரியாதமிருகம் பிறந்தாலும்
பால்தரும் கருணை அது – சிலர்
பசித்தமுகம் பார்த்து பதறும்நிலை பார்த்து
பழம் தரும் சோலை அது
இருக்கும்பிடி சோறு தனக்கென எண்ணாமல்
கொடுக்கின்ற கோவில் அது – தினம்
துடிக்கும் உயிர்கண்டு தோளில் இடம் தந்து
அணைக்கின்ற தெய்வம் அது
அது தூய்மை…
அது நேர்மை…
அது வாய்மை…
அதன் பேர் தாய்மை…
உலகத்தில் சிறந்தது தாய்மை… அதை
ஒப்புக் கொள்வதே நேர்மை…
உலகத்தில் சிறந்தது தாய்மை..
உலகத்தில் சிறந்தது தாய்மை..
உலகத்தில் சிறந்தது தாய்மை..
என்று பாடுகின்றார்.

உலகத்தில் சிறந்தது தாய்மை..என்பதை
தாயின் வயிற்றில் பிறந்த எவராலும் மறுக்க முடியாது!

இந்த பாட்டு இதன் கருத்து எல்லாம்
எல்லோரும் அறிந்ததுதான்!
இந்த பாட்டிலிருது நாம் இப்போது
இன்னொரு விசயத்தைப் பார்க்கப்போகிறோம்!
அது என்ன தெரியுமா?

இந்த மூன்றிலும் பொதுவான
ஒரு விசயம் இருக்கு!
அது என்ன?
இந்த மூன்றுக்கும் ஒன்றே ஒன்றுதான்
அடிப்படையாக உள்ளது!
அது என்ன?
வட்டி என்பது என்ன?
அது ஒரு வருமானம்!
பொருளில்லாரை பொருளாகச் செய்வது
பொருளல்ல தில்லை பொருள் என்கிறார் வள்ளுவர்.
எல்லோர் வாழ்க்கைக்கு பொருள் தேவை!
பொருள் தேடுவது எதற்காக?
தன்னை மட்டும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்
என்பதற்காகவா?
மனைவி மக்கள் குடும்பத்தை காப்பாற்றத்தான்
பொருள் ஈட்டுகிறான் அல்லவா?
ஆதலால், பொருள் ஈட்டுவதற்கு
அடிப்படையாக உள்ளது என்ன?
அவனின் குடும்பம்!
குடும்பத்தின் மீது அவன் வைத்துள்ள அன்பு!
ஆதலால், பொருள் ஈட்டுவதற்கு
அடிப்படை ஆவது அன்புதான்!

இரண்டாவது என்ன? காதல்!
காதல் அன்பின் ஒரு வடிவம் என்பது
எல்லோருக்கும் தெரியும்!
தாய்மையும் அன்பின் ஒரு வடிவம் என்பது
எல்லோருக்கும் தெரியும்!
ஆதலால், உலகத்தில்  சிறந்த இம்மூன்றிலும்
அடிப்படையாக உள்ளது அன்புதான்!

இதிலிருந்து தெரிய வருவது என்ன?
அன்புதான் உலகத்திற்கு அடிப்படையானது!
இந்த உலகம் அன்பை ஆதாரமாகக் கொண்டுதான்
இயங்கி வருகிறது!

இந்த அன்பு எங்கு துவங்குகிறது?
மனிதனுக்குள் எப்படி வருகிறது?
எல்லோருடைய வாழ்வும் எங்கிருந்து துவங்குகிறதோ
அங்கிருந்துதான் அன்பும் துவங்குகிறது!
எல்லோருடைய வாழ்வும் எங்கிருந்து துவங்குகிறது?
தாயின் கருவறையிலிருந்து துவங்குகிறது!

தாயின் கருவறையில் குழந்தைக்கு
தேவையான உணவு, காற்று கிடைக்கிறது.
இதமாக பாதுகாப்பாக படுத்திருக்க கூடிய
சுகமான அறையாக அது இருக்கிறது.
கருவறையில் இருக்கும்போது குழந்தைக்கு
எவ்வளவு அரவணைப்பும், பாதுகாப்பும் இருக்கிறது?

குழந்தை கருவறையில் இருந்து
வெளியே வந்தபிறகும்
அந்த அரவணைப்பையும் பாதுகாப்பையுந்தான்
எப்போதும் நாடுகிறது.
அந்த அரவணைப்பும் பாதுகாப்புந்தான்
அன்பின் மூலம்!
ஒவ்வொரு மனிதனும் அதைத்தான் எப்போதும்
தன்னோடு இருக்க தனக்கு கிடைக்க
விரும்பிக்கொண்டே இருக்கிறான்.
அதை தேடிக்கொண்டே இருக்கிறான்.
அது கிடைக்காதபோது ஏங்குகிறான்.
வாழ்வில் வெறுப்பு கொள்கின்றான்.
சிலர் வாழ்வைக்கூட துறந்துவிடுகின்றனர்.

எனது இளம் வயதில்
நான் ஒரு கவிதை
எழுதி உள்ளேன்!
என்ன கவிதை என்று
தெரியுமா?
இளம் வயது என்றால்
என்ன கவிதை வரும்?
நானும் விதிவிலக்கா என்ன?

என் மனம்
கடலலை போல்
ஓலமிட்டுக் கொண்டே உள்ளது!
நெஞ்சம் பள்ளம் விழுந்து
பசியோடு கிடக்கிறது!
என்னுள் உறங்கி போன
கவிதைகளை எழுப்பிடு!
என்னைக் கவ்விக் கிடக்கும்
இருட்டை விரட்டி விடு!
என் ஐம்புலன்களை
செப்பனிடு!
என்னை மீண்டும்
மனிதனாக்கிடு!
மரணத்திடம் இருந்து
என்னை மீட்டிடு!
எப்போதும்
என் மனம்
கடல் அலைபோல்
ஓலமிட்டுக் கொண்டே உள்ளது!
ஆதலால்
என்னை காதலித்திடு!
மொத்தம் எத்தனை பூக்கள்?
இந்தக் கண்ணீர் பூக்கள்!
யாருக்காகவோ
இந்த இரவில்
இந்த நடுச்சாமத்தில்
இத்தனை அழுகிறாயே?
இதே நேரத்தில்
உனக்காக அழுவதற்கு
யாராவது
இருக்கப் போகிறார்களா?
ஏய் இதயமே!
நீ ஏன் ரத்தத்தை வடிக்கிறாய்?
எனது விழி கோப்பையில்
உனக்கு விருப்பமான
கண்ணீர் அமுதம்!
அருந்தி விட்டு
உறக்கம் கொள்!

இந்தக் காதல் கவிதையை
நான் ஏன் இங்கு எடுத்துக் காட்டினேன் தெரியுமா?
இப்படி இளம் வயதில் மட்டுமல்ல!
 எல்லா வயதிலும் நமது மனம்
அன்பிற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது!

அன்பிற்குரியவர் அருகில் உள்ள போது
நமக்கு அவர்களின் அருமை தெரியாது! 
அவர்கள் இல்லாதபோதுதான்
அவர்களின் அருமையும் பெருமையும் தெரியவரும்!
அவர்கள் இல்லாத போது நமது மனதில் ஏற்படும்
ஏக்கமும் வருத்தமும் சோகமும் புரியவரும்!
ஒவ்வொருவருக்கும் அன்பு தான்
வாழ்வின் அர்த்தம் ஆகிறது!
ஒருவனுக்கு அன்பு செலுத்த
ஆள் இல்லை எனில்
அவன் வாழ்வதில் எந்தவித அர்த்தமும் இல்லை!

ஒருவனுக்கு அன்பான வாழ்வு அமைந்து விட்டால்
அது அவனுக்கு சொர்க்கம்!

அதுதான் மண்ணுலக சொர்க்கம்!
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை!
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை!

பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு!
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை!
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை! 
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு!
 அட சின்னச் சின்ன அன்பில்தானே
ஜீவன் இன்னும் இருக்கு!
பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு?
 அட பாசம் மட்டும் போதும் கண்ணே
காசு பணம் என்னத்துக்கு?

அன்பின் சிறப்பை எவ்வளவு வேண்டுமானாலும்
பேசிக்கொண்டே இருக்கலாம்!
அவ்வளவு இருக்கிறது!

ஆனால், ஒரு கேள்வி கேட்டால்
அதற்கு பதில் சொல்ல
மிகவும் தடுமாற வேண்டியிருக்கும்!
ஆனால், அது ஒரு எளிய கேள்விதான்!
என்ன கேள்வி என்று தெரியுமா?
அன்பு என்றால் என்ன?
பதில் என்ன சொல்வீர்கள்?
அது ஒரு உணர்வு! ஒரு ஈர்ப்பு! ஒரு தேவை!
அதுதான் எல்லாம்!
இப்படி பல பதிகள் சொல்வோம்!
ஆனால், அவையெல்லாம்
அன்பின் சரியான பொருளைத்
தரக்கூடியதாக உள்ளனவா?

இல்லை என்றுதான் சொல்லவேண்டும்!

அப்படியானால் சரியான பதில்தான் என்ன?

அன்பை அதன் தன்மைக்கொண்டுதான்
வரையறை செய்ய வேண்டும்!

அன்பு மனதில் இருந்தால் என்ன செய்யும்?
அன்பு இல்லையென்றால் என்ன நடக்கும்?

அன்பு கொண்ட ஒருவன்
தனது அன்பிற்குரியவருக்கு
தீங்கு நினைப்பானா?
தீயது சொல்வானா?
தீமை செய்வானா?

இதற்கெல்லாம் இல்லை என்று
பதில் கிடைத்தால்
அதுதான் உண்மையான அன்பு!

ஆதலால், அன்பு என்றால் என்ன?

தீங்கு நினையா மனமே அன்பு!
தீயது சொல்லா சொல்லே அன்பு!
தீமை செய்யா செயலே அன்பு!
உதவ நினைக்கும் மனமே அன்பு!
ஆறுதல் தரும் வார்த்தை அன்பு!
அன்பின் வடிவே ஆண்டவன்!
அதற்கே தினமும் வேண்டவும்!

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறார்!
அவன் கருணை உள்ள நெஞ்சினிலே
கோவில் கொள்கிறார்!
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே!
ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே!

அன்பு உள்ள மனதைப்பற்றி பார்த்தோம்!
அன்பு இல்லா மனம் என்ன செய்கிறது?

ஆசை கோபம் களவு செய்பவன்
பேசத்தெரிந்த மிருகம்!
அன்பு கருணை நன்றி உள்ளவன்
மனித வடிவில் தெய்வம்!
என்கிறது ஒரு பழைய திரைப்பாடல்.

மனதில் தோன்றும் தீய எண்ணங்களுக்கெல்லாம்
காரணம்
அன்பு இன்மையும், அன்பு குறைவுத்ந்தான்!

கொலை கொள்ளை கற்பழிப்பு என்னும்
மாபாதகங்கள் எல்லாம்
அன்பின் குறைவால் ஏற்படும் தீமைகள்தானே!

மனதில் அன்பு நிறைந்தால், நேசம் வளர்ந்தால்
இந்த தீமைகள் எல்லாம் மறைந்துவிடும் அல்லவா?

அன்பை விதைத்தால் அன்பே விளையும்!
நேசத்தால் மனம் குளிரும்!
நேசத்தால் முகம் மலரும்!
நேசத்தால் கண்கள் ஒளிரும்!
நேசத்தால் வெறுப்பு தொலையும்!
நேசத்தால் வன்மம் மறையும்!
நேசத்தால் யுத்தம் விலகும்!

யாதும் ஊரே யாவரும் கேளிர்
அன்பே எங்கள் உலகத்தத்துவம் என
சங்கத்தமிழ் ஓங்கி ஒலிக்கிறது!

அன்பு மனதில் நிறைந்திருந்தால்,
அமைதி ஏற்படும்!
மனதில் அமைதி குடியேரினால்,
மன அழுத்தம் இல்லை!
மன உளைச்சல் இல்லை!
உடல் பாதிப்பும் இல்லை!

ஆதலால், எப்போதும் மனதில்
அன்பு நிறைந்திருக்க
செய்ய வேண்டும்!

எப்போதும் மனதில்
அன்பு நிறைந்திருக்க
என்ன செய்ய வேண்டும் என்ற
வழிமுறையை நாம் அறிய வேண்டும்!
அதனை நாம் கற்க வேண்டும்!

அதுதான் நாம்
மகிழ்வுடன் வாழ்வதற்கான உபாயம்!
நமது சமுதாயம் அமைதியுடன்
வாழ்வதற்கான வழிமுறை!
நமது பூமி மண்ணுலகில்
சொர்க்கமாவதற்கான மந்திரம்!
நமது உலகம்
நீடித்து வாழ்வதற்கான
உபாயம்!

அதைதான் நாம் கண்டறிய
கற்றுக்கொள்ள
நமது சமுதாயத்திற்கு வழங்க
புதிய பயணம் புறப்பட்டுள்ளோம்!


மகாத்மா காந்தி அடிகள்
அன்பு வழியில், அஹிம்சை வழியில்
நமது நாட்டிற்கு சுதந்திரமே
பெற்றுத் தந்துள்ளார்!
அன்பினால் எதையும் சாதிக்க முடியும் என
வாழ்ந்து காட்டிச்சென்றுள்ளார்.

அவரின் வழிகாட்டுதலில்தான்
நாம் இன்று நமது பயணத்தை துவங்கியுள்ளோம்!

அன்பு வழியில் செல்லக்கூடியவர்கள்
செய்யக்கூடிய பணிகள் எல்லாம்
அறப்பணிகளாகத்தான் இருக்கும் என
நான் விவரித்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை!

பிரார்த்தனை செய்யுங்கள்
கடவுள் அருகே நீங்கள் போகலாம்!
பிரார்த்தனை செய்ய முடியவில்லையா?
அதற்குப் பதிலாகச் சேவை செய்யுங்கள்
கடவுள் உங்கள் அருகே வருவார்… எனவும்,

இரு கை கூப்பி கடவுளை வணங்குவதை விட
ஒரு கை நீட்டி உதவி செய். எனவும் கூறியுள்ளார்
அன்னை தெரசா அவர்கள்!

ஏழைகளும் வறியவர்களும் படும்
துன்பத்தையும் துயரத்தையும் கண்டு
யார் உள்ளம் கசிந்து உருகுகிறதோ,
யாருக்கு அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும்
என்ற எண்ணம் உடனடியாக ஏற்படுகிறதோ
அவர்களே உண்மையான தேச பக்தர்கள்.
தேச சேவை செய்வதற்குத் தகுதியானவர்கள்.
அவர்களே மகாத்மாக்கள். எனவும்,

கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் இருக்கிறார்.
இதைத் தவிட தனியாக வேறு ஒரு கடவுள் இல்லை.
மக்களுக்கு ஒருவன் செய்யும் சேவை
அந்த மகேசனுக்கே செய்யும் சேவை எனவும்
சுவாமி விவேகானந்தா கூறுகிறார்.

இவர்களின் பொன்மொழிகள்
சேவையின் சிறப்பை
நமக்கு உணர்த்தக்கூடியவை!

ஆதலால், அன்பு வழியில் அறப்பணிகள் செய்வோம்!
ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சமுதாயத்தில்
நமக்கான அறப்பணிகள் நிறைய காத்திருக்கின்றன!

அவற்றை எல்லாம் செய்வதற்காகத்தான்
இன்று நாம்
தமிழ்நாடு அன்புவழி அறப்பணி மன்றத்தின்  
கிளைகள் பலவற்றை துவங்குகின்றோம்!

தமிழகம் முழுவதும் நமது மன்றக்கிளைகள்
ஆல்போல் தழைத்து அரும்பு போல் வேரோடி
மூங்கில் போல் உயர்ந்து நிற்கப்போகின்றன
என்பது திண்ணம்!

மாகாத்மா காந்தியின்
அன்பு வழியில் அறப்பணிகள் புரிய
புதிய பயணத்தைத் துவங்கியுள்ள
நமது மன்றக்கிளைகள்
மாகாத்மா காந்தியின் 151 ஆவது
பிறந்ததினத்தில் துவங்கியுள்ளது
சாலப்பொறுத்தமானதாகும்!

மகாத்மா காந்தி நமது பயணத்திற்கு
நம்பிக்கை நட்சத்திரமாக
கலங்கரை விளக்கமாக
ஒளி தருகிறார்.
அவரின் வழிகாட்டுதலில்
நமது பயணம் வெற்றி பெறுவது உறுதி!

நமது மன்றக்கிளைகளை துவக்கி வைக்கும் பேறு
மாபெரும் பாக்கியம்!
அந்த பாக்கியம் எமக்கு வாய்த்தமைக்கு
நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்!

நமது மன்றக்கிளைகளை துவக்கி வைத்து
துவக்க உரை ஆற்ற வாய்ப்பு வழங்கிய
அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும்
நன்றியை தெரிவித்துக்கொண்டு
விடை பெறுகின்றேன்
நன்றி வணக்கம்!
--------------------------------------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பு வழி இன்ப ஒளி 15

தமிழ்நாடு அன்புவழி அறப்பணி மன்றம்

அன்பு வழி இன்ப ஒளி -1